Headlines News :
முகப்பு » , » சி.வி.யின் முதற்படியும், பாரதியாரின் எங்கள் காங்கிரஸ் யாத்திரையும் - சாரல் நாடன்

சி.வி.யின் முதற்படியும், பாரதியாரின் எங்கள் காங்கிரஸ் யாத்திரையும் - சாரல் நாடன்


சுப்பிரமணிய பாரதி 1906 ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டபின் சுதேச மித்திரன் பத்திரிகையை விட்டுவிட்டு 'இந்தியா' பத்திரிகையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இந்தியா பத்திரிகையில் தான் சுப்பிரமணிய பாரதியின் அரசியல் தீவிரமடைந்தது. சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று திரும்பி யதை பயண நூலாக எங்கள் காங்கிரஸில் எழுதினார். அந்தப்படைப்பிலும் வெறும் பயணச்செய்திகளையும் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் சொல்லாமல் சரித்திர பூர்வமான உண்மைகளையும் தொகுத்தளித்திருந்தார். 1907/ 1908ஆம் ஆண்டுகளில் பாரதி யாரின் தீவிரமான அரசியலையும் மனப்போக்கை யும் அதன் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

பாரதியார் தாம் சென்னையிலிருந்து சூரத் தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரயாணப்பட்டது முதல் மறுபடியும் சென்னை வந்து சேர்ந்தது வரையில் நடந்த விஷயங்களையெல்லாம் இந்தியா பத்திரிகையில் புதிய சுவையுடன் புதிய நடையழகுடன் எழுதினார். இதனையே பின்னர் எங்கள் காங்கிரஸ் யாத்திரை என்ற தலைப்பில் நூலாகப் பிரசுரம் செய்தார்.
இந்த நூல் முதற்பதிப்பாக மார்ச் மாதம் 1908இல் வெளிவந்தது. 36 பக்கங்களில் அச் சான இந்த நூலை இரண்டணா விலை யில் வெளியிட்டிருந்தார். இது சிறு பிரசுரமானாலும், காங்கிரஸில் ஏற்பட்ட பிரிவினை யைத் துலாம்பரமாக மக்களுக்கு விளக்கும் பணியை முன்னெடுத்து வரலாற்றுத் தேவை யை நிறைவேற்றியிருந்தார்.

சி.வி.வேலுப்பிள்ளை 1946இல் இலங் கை இந்திய காங்கிரஸில் பொதுச் செயலா ளராக இருந்தபோது ஹட்டன் காங்கிரஸ் காரியாலயத்திலிருந்து எழுதி வெளியிட்ட நூல்தான் 'முதற்படி.' 32 பக்கங்களில் ஒரு தமிழ் நூலை சி.வி.எழுதியிருக்கிறார் என்பதே ஆச்சரியம்தான். ! இலங்கை இந்திய காங்கிரஸ் போராட்டத்தைப்பற்றிய ஆதார பூர்வமான நூல் இது ஒன்றுதான் என்பதை அறியும் போது சி.வி.யின் எழுத்தாற்றல் மீது அப்போதிருந்த இலங்கை இந்திய காங்கிரஸ் கொண்டிருந்த நம்பிக்கை வெளிப்படு கின்றது.
இலங்கை இந்திய காங்கிரஸ் ஜனநாயக முறையில் அமைக்கப்பட்டிருந்த இயக்கம், பலதரப்பட்ட அபிப்பிராயமுடையவர்கள் இருந்தாலும் அது இயக்கத்துக்கு குறையாகாது. அத்தனை அபிப்பிராய பேதங்களும் ஒன்றிணைந்து இயக்கத்தின் வளர்ச்சியை தூண்டியது.

இயக்கத்தலைவர்களாக அதுவரை இனம் காணப்பட்டிருந்த லெட்சுமண செட்டியார், பெரிசுந்தரம், அஸிஸ், தொண்டமான் தேசாய், மோத்தா, தானுப்பிள்ளை, சோமசுந்தரம், இராசலிங்கம், சின்னையா, மேனன், மாதவரம், வைத்திலிங்கம் ஆகியோரின் சேவைத்திறனை பொது மக்கள் அறிந்திருந்தனர். அதனால்தான் மகாயுகத்தின் நெருக்கடியிலும் கூட மக்கள் இலங்கை இந்திய காங்கிரஸின் பின்னால் அணிவகுத்து நின்ற னர்.

இவ்விதம் எழுதிய சி.வி அழியாத சேவை செய்தவர்களை நன்றியோடு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள மறந்த எந்த சமூகமும் வளர்ச்சியடைவது 'துர்லபம்' என்றும் எச்சரித்திருக்கிறார். பணிசெய்யும் ஆற்றலுடை யவர்களைத் தெரிவு செய்தல், அவர்களு க்கு சம அந்தஸ்து அளித்தல் என்ற இரண்டி லும் இலங்கை இந்திய காங்கிரஸ் கவனம் செலுத்துவது போதாது என்றும் கூறியுள்ளார் (பக்.7)

இக்குறைகளை நீக்குவதில் நாம் பிரயாசை செய்யவேண்டும். அறிஞர்கள் அபிப்பிராய ப்படி குறைபாடுகள் இருப்பதால் காங்கிரஸ் உயிருள்ள இயக்கமாக விளங்குகின்றது என் றும் தன்னம்பிக்கையுடன் எழுதியுள்ளார்.
எங்கள் காங்கிரஸ் யாத்திரை நூல் எழுதி யதற்கு முன்னர், அதே 1908இல் புதிய கட்சியின் கொள்கைகள் என்ற 30 பக்க நூலை யும் வெளியிட்டிருந்தார் பாரதி. அவர் அரசியலில் குருவாக ஏற்றுக்கொண்டிருந்த திலகமகரிசி 1907ஆம் ஆண்டில் செய்த முதல் பிரசங்கத்தை, புதிய கட்சியின் கோட்பாடு என்ற பெயருடன் நூல் வடிவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தார். தமிழ் நாட்டில் திலகருக்கு ஆதரவு தேடும் பணியில் பாரதி தீவிரமாக முனைந்தார் என்பதை இந்த நூல் விளக்குகின்றது. இதையடுத்து காங்கிரஸ் யாத்திரையில் தான் கொண்டிருந்த குரு பக்திக்குச் சான்று கூறும் இன்னொரு நூலாக அதையமைத்திருந்தார்.

கவிஞராக செயற்பட்டுக்கொண்டிருந்த பாரதியார் அரசியல் களத்திலும், கருத்துக்களத்திலும், கனல்பரப்பும் வீரராக செயற்பட்டிருந்ததை இந்த இரண்டு நூல்களும் வெளிப்படுத்துகின்றன.

1945, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி சோல்பரி அறிக்கை வெளியாயிற்று. அதிலிருந்த சிபாரிசுகள் சிறுபான்மையினருக்கு பாதகமாயிருந்தது. ஏற்கனவே, இந்தியருக்கு டொனமூர் திட்டத்தில் காட்டப்பட்டிருந்த உரிமைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

எனவே,ஒருமுகமாக ஒரு வாரத்துக்கு 211045 முதல் 28.10.45 வரை மலைநாடெங்கும் சோல்பரி அநீதிக்கூட்டங்கள் நடத்துவதென்று தீர்மானித்து கூட்டங்கள் நடைபெற்றன.

பொதுக்கூட்டங்கள் கண்டனத் தீர்மானங்கள் அவசர தந்தி என்றெல்லாம் மக்கள் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இந்த மக்களின் ஒற்றுமையை வெளிப்ப டுத்த இந்தியப்பிரச்சினையை கவனப்படுத்தவும் இந்தியருக்கு சம வாக்குரிமையும் பிரஜா உரிமைகளையும் வற்புறுத்தவும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதென்று தீர்மானித்தனர்.

மலையகத் தோட்டப்பகுதிகளில் தனிக்கா ட்டு ராஜாவாக நடேசய்யர் உலாவித் திரிந்த காலப்பகுதியில் கூட இந்தியர்கள் ஏகோபித்த குரலில் இப்படி ஒரு தீர்மானம் செய்திருக்கின்றனர்.
27.5.1939இல் கதிரேசன் கோவில் காம்பவுண்டில் கூடிய கூட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம், அஸீஸ், ஐ.எக்ஸ். பெரேரா, நடேசய்யர், மீனாட்சியம்மை ஆகியோர் கூடி இப்படி ஒரு தீர்மானத்தை மேற்கொண்ட னர்.
அத்தீர்மானத்தை பெப்ரவரி 12, 1946இல் வெற்றிகரமாகச் செயற்படுத்திய மலையக மக்கள் முழு தோட்ட நிர்வாகத்தையும் ஆட்டுவித்தனர்.
அதன்பலன் அன்று நடத்திய வேலை நிறு த்தம் அரசியற் சார்பானது என்பதால் அத்தனை தொழிலாளர்களும் அன்றிலிருந்து புதிய தொழிலாளர்களாக கணிக்கப்பட்ட னர். அல்லது அத்தனை பேரும் வேலையினின்றும் விலகிக்கொண்டதாக கணிக்கப்பட்டனர்.

அதையே 'முதற்படி' என்று சி.வி எழுது கிறார். அன்றைய போராட்டத்தை முதற் படியாகக் கொண்டு மக்கள் தம் போராட்டத்தை முன்னிறுத்தவேண்டும் என்று சி.வி வலியுறுத்துகிறார்.

இப்போராட்டம் குறித்து இந்தியாவிலிருந்து வெளி வருகின்ற தினமணி தனது 17.2.1946 இதழில் ஆதரவு தெரிவித்து எழுதி இருந்தது.

ஜீவாதாரமான பிரஜா உரிமைகள் தங்களுக்குக் கிடைத்தாக வேண்டுமென்று இலங்கையிலுள்ள இந்திய மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சென்றவாரம் இதை அறிவுறுத்தும் வகையில் அத்தீவிலு ள்ள ஏழு இலட்சம் இந்திய மக்களும் கட்டுப்பாடாக ஹர்த்தால் செய்து தங்கள் மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.
இந்தச் சம்பத்தின்போது காண்பிக்கப்ப ட்ட ஒற்றுமை சரிவர வளர்ந்தால் மட்டுமே நோக்கமே கைகூடும். இதேபோக்கு நீடிக்குமாயின் தம் உரிமைகளுக்காக இலங்கை இந்தியர்கள் போரிடுவது திண்ணம் என்று அது எழுதி இருந்தது.
இந்த எண்ணம் நிறைவேறியதா? உரிய முறையில் நிறைவேற்றப்பட்டதா? என் பதை சி.வியின் பிற்பட்ட படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. பாரதியார் அரு ளிய அருட்கொடைகள் என அவர்தம் படை ப்பிலக்கியங்களை தொகுத்து பாகுபடுத் துகையில் கவிதைகள் 20, கட்டுரைகள் 8, புனைகதைகள் 4, சிறுகதைகள் 2, நீதி இலக்கியம் 3, மொழியாக்கம் 3, மொழிப பெயர்ப்பு 7, பிரயாண நூல் 1 என்று அச்சில் வந்திருக்கின்றன.

அவரெழுதிய பிரயாண நூல் வரலாற்று ஆதாரமாக சுடர்விடுகிறது.
சி.வியின் படைப்புக்களிலும் கூட கவிதை களும் கட்டுரைகளும் நாவல்களும் மலிந்தி ருந்தாலும் இந்த ஒரு படைப்பு, இந்த நாட் டில் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் ஆர்த்தெழுந் ததை ஆவணமாக்கியுள்ளதைக் காணலாம்.

நன்றி - வீரகேசரி 15.06.2014


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates