பொறுப்புக் கூறுவதிலிருந்து மலையக அரசியல்வாதிகள் தப்ப முடியாது…
பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மண்ணில் புதையுண்டவர்கள் சடலங்களாக மீட்கப்படுகின்ற அவலம் தொடர்கின்ற போதும் எத்தனை பேர் இவ்வாறு புதையுண்டார்கள் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த பலர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்து விட்டார்கள் என்பதனை எவறும் மறுக்க முடியாது.
இந்தச் சம்பவமானது இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டதாக இருந்தாலும் உயிரிழப்புகளை சமூக கொலையாகவே கருத வேண்டியுள்ளது.
இதன்படி இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அந்தப் பொறுப்புக் கூறும் தன்மையை தட்டிக் கழித்து உயிரிழந்தவர்கள் மீது குற்றத்தை சுமத்தவே முனைகின்றனர்.
உண்மையில் மலையக பெருந்தோட்டப்புற மக்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் மற்றும் காணப்பட்ட தாமதம்தான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. சொந்த காணியுடனான தனி வீட்டுத் திட்டத்தை செயற்படுத்தியிருந்தால் இன்று இத்தகைய அவலத்தை சந்தித்திருக்க மாட்டோம்.
அரசும் சரி, மலையக மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறும் அரசியல்வாதிகளும் சரி, இந்த வீடமைப்பு விடயத்தில் அக்கறையின்றியே செயற்பட்டனர். அத்துடன், லயன் முறையிலிருந்து தனி வீட்டு முறைமைக்கு தொழிலாளர்கள் செல்வதனை பெருந்தோட்ட கம்பனிகளும் விரும்பவில்லை.
இத்தகையதொரு நிலைமையில்தான் மண்சரிவு அபாய எச்சரிக்கையிருந்தும் செல்வதற்கு இடமின்றி இருந்த மீரியபெத்த தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்தோர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். 2005ஆம் ஆண்டு முதல் மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவது தொடர்பாக அறிவித்து வந்துள்ள கட்டட நிர்மாண மற்றும் ஆய்வு நிறுவனம் 2011இல் அந்த அபாயம் நிலவும் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிப்போரை அங்கிருந்து வெளியேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், அவர்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்தில் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசோ, மலையக அரசியல்வாதிகளோ, தோட்ட நிர்வாகங்களோ, தொழிற் சங்கங்களோ கவனம் செலுத்த தவறிவிட்டன. அன்று தனி வீட்டுத் திட்டத்தின் படி அவர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று அந்த மக்கள் உயிருடன் இருந்திருப்பார்கள். எவ்வாறாயினும், பணம் செலவழிக்க முடிந்த சில குடும்பங்கள் மாத்திரம் ஏற்கனவே வெளியில் வீடுகளை கட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தன. ஆனால், மற்றைய குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களை பாதுகாக்க எவரும் முன்வந்திருக்கவில்லை என்பதனை எண்ணும் போது அது வேதனையையே உண்டு பண்ணுகிறது.
இந்நிலையில், இன்று மண்சரிவில் புதையுண்டவர்களின் மேல் நின்று மலையக அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடும் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது. நிவாரணம் என்ற போர்வையில் அரசியலையே செய்கின்றனர்.
ஆனால், அந்த அரசியல்வாதிகளினாலோ அல்லது அதிகாரிகளினாலோ எத்தனை பேர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளார்கள் என்பதனை அறிவிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. பல மாதங்களுக்கு முன்னர் 300 பயணிகளுடன் காணாமல் போயிருந்த மலேசிய விமானத்தை இன்னும் உலக நாடுகள் தேடிக் கொண்டிருப்பதைப் போல் கண்முன்னே புதையுண்டு காணாமல் போயுள்ள மீரியபெத்த தோட்டத் தொழிலாளர் குடும்பம் எத்தனையென இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உண்மையில் எத்தனை பேர் புதையுண்டார்கள் என்பதனை இன்னும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் எந்த நிலைமையில் எமது நாடு இருக்கின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை, எத்தனை பேர் மண்ணுக்குள் புதையுண்டார்கள் எனும் புள்ளி விபரங்களில் குழப்ப நிலை காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் தரப்போ 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று கூறும் நிலையில், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அது 50இற்கும் குறைவாக இருக்குமென கூறுகின்றனர். இதில் எது உண்மையாக இருக்குமென இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அரசியல்வாதிகளும் அரசும் காணாமல்போனோர் எண்ணிக்கையை குறைத்து கூறுவது மக்களின் கேள்விகளிலிருந்தும் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவா? என்ற கேள்விகள் மலையக மக்கள் மத்தியில் நிலவுகின்றன. ஆனால், இங்கு எது உண்மையென எங்களால் உறுதியாகக் கூற முடியாது. எப்படியும் இறுதியில் தெரியவந்துதான் ஆக வேண்டும். எதனையும் மூடி மறைத்து தப்பிக்க முடியாது என்பது உண்மையே.
இந்நிலையில், ஆபத்து இருந்த நேரத்தில் கண்டுகொள்ளாத அரசும் அரசியல்வாதிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு ஆபத்து வந்து முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று தமக்கு எதுவும் தெரியாததைப் போல் வெட்கமின்றி நடித்து தமது தவறுகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியில் ஒரு அமைச்சர், 3 பிரதியமைச்சர்கள் உட்பட 5 உறுப்பினர்கள் இருப்பதுடன், எதிர்க்கட்சியில் மூன்று உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால், எவரும் அப்போது ஆபத்து வருமுன் இந்த மக்களை காப்பாற்றத் தவறிவிட்டனர். அத்துடன், ஊவா மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இந்த மக்களின் பிரதிநிதிகளும் அதனை செய்யத் தவறிவிட்டனர். இந்நிலையில், அந்த அபாயம் தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லையென அந்த மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூறுவார்களாக இருந்தால் அது பொறுப்பான பதிலாக இருக்காது. மக்கள் பிரச்சினைகளை தேடிப் பார்த்திருக்காதவர்கள் மற்றும் அறிந்திருக்காதவர்கள் ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. அப்படி தெரியாது என கூறுபவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற பதவியிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்ததாக அமையும்.
இதேவேளை, தொழிற்சங்கங்கள் தோட்ட தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் சந்தாவைப் பெற்றுக் கொள்கின்ற போதும் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக கதைக்க தவறிவிடுகின்றன. இதன்படி மீரியபெத்த தோட்ட மக்களுக்கு இருந்த ஆபத்து தொடர்பாக கவனம் செலுத்துவதிலிருந்து அவை விலகிச் செயற்படுகின்றன.
மலையகத்தில் அதிக தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சங்கமாக திகழும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டது. அந்த காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் தொடர்பான சர்வதேச ஊடகமொன்றின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஏற்கனவே அந்தப் பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து தொடர்பாக தாம் எதனையும் அறிந்திருக்கவில்லையென தெரிவித்து பொறுப்புக்கூறும் தன்மையிலிருந்து விலகிக் கொண்டதை அறியக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில், பிரச்சினைகளை தீர்ப்பதை விட அதை வெளியே தெரியாமல் மூடி மறைத்த செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என்பதனை இப்போது தெளிவாக மக்களுக்கு புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தைத் தொடர்ந்து மேலும் பல தோட்டக் குடியிருப்புகளுக்கும் இதுபோன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் நிலவுவது தெரியவந்துள்ளதுடன் அவ்வாறு அபாயம் நிலவும் பகுதிகளைச் சேர்ந்தோர் தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மக்கள் தமது அரசியல்வாதிகளின் இத்தனை கால சுயநல அரசியல் என்ற சுயரூபத்தை புரிந்து கொண்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கோரி நிற்கின்றனர். இப்போது அதனை சமாளிக்கும் வகையில் புதிய வீட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கும் அரசும் மலையக அரசியல் வாதிகளும் முதலில் மீரியபெத்தவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்த பின்னர் மற்றையவர்களுக்கான வீடுகளை கட்ட நடவடிக்கையெடுப்பதாகக் கூறுகின்றனர்.
உண்மையில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதலில் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன், அந்த வீடுகள் பாதுகாப்பான இடங்களில் அமைய வேண்டும் என்பதே சகலரின் கோரிக்கையாகவுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கான வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், எங்கே என்பது தொடர்பான தகவல் தெரியவரவில்லை.
எவ்வாறாயினும், இவர்களுக்கான வீட்டுத் திட்டம் முடிந்த பின்னர் அபாயம் உள்ள பகுதிகளை சேர்ந்தோருக்கு உடனடியாக அந்த வீட்டுத் திட்டம் அமைக்கப்படுமா என்பது சந்தேகமே. அத்தகைய அபாயம் மிக்க பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு வேறு இடத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மழையுடனான காலநிலை குறைந்த பின்னர் அபாயம் மிக்க பகுதிகளிருந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பும் திட்டமே உள்ளது. அப்படி வீடுகளுக்குச் செல்லும் அவர்கள் அபாய நிலையுடனேயே அங்கு வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால், மீரியபெத்த போன்ற அனர்த்தம் மீண்டும் ஏற்பட்டு விடலாம்.
ஆகவே, அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தையும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய அவசியம் நிலவுகின்றது. இதனை செய்ய அரசோ, அரசியல்வாதிகளோ தவறுவார்களேயானால் மீண்டும் மனித இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.
இதன்படி மண்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் அதேவேளையில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிப்போருக்கும் வீடுகளை கட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் தாமதிக்காது ஆரம்பிக்க வேண்டும்.
இதேவேளை, மற்றைய தோட்டப் புறங்களிலும் லயன் முறைகளை இல்லாது செய்து சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் சொந்த, தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் குடும்பங்கள் வரை லயன் குடியிருப்புகளில் வாழ்கின்றன.
50 ஆயிரம் வீடுகளை அமைக்கவுள்ளதாக 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையின்போது தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலேயே அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது சந்தேகமே. சிலவேளை மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை அமைக்கும் நடவடிக்கையோடு இது முற்றுப் பெற்றுவிடுமோ என்ற சந்தேகமே நிலவுகின்றது. மலையக மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டம் என்பது தொடர்பாக பல வருடங்களுக்கு முன்பிருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதும் அது இன்னும் செயற்படுத்தப்படாத நிலைமையிலேயே இருக்கின்றது. இந்நிலையில், லயன்கள் மக்கள் வசிக்க முடியாத இடங்களாக தற்போது காணப்படுகின்றன. காரணம் 200 வருடங்களுக்கு மேல் பழமையானதாக அவை காணப்படுவதேயாகும். இதனால், எப்போது வேண்டுமானாலும் அவை இடிந்து விழலாம். ஆனால், இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது. அரசினதும் மலையக அரசியல் தலைமைகளினதும் கடந்த கால செயற்பாடுகளினால் வீட்டுத் திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகமான நிலைமையே காணப்படுகின்றது.
இந்நிலையில், இந்த வீட்டுத் திட்டத்தை செயற்படுத்தும் போது தோட்ட நிர்வாகங்களின் அனுமதியை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வீடுகளை அமைப்பதற்காக தோட்ட காணிகளைக் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் இந்த அரசினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளை சுவீகரிக்க முடியுமாக இருக்கையில் மலையக தோட்டப்புற மக்களுக்கான வீடமைப்புகளுக்கு தோட்டங்களில் காணிகளை சுவீகரிக்க முடியாது போவது ஏன் என புரியவில்லை.
உண்மையில் மலையக அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பாக அக்கறையுடன் செயற்பட்டால் காணிகளை பெற்று வீடுகளை கட்டிக் கொடுக்க முடியும். வீடமைப்புத் துறையில் சாதனை படைத்து வருவதாக கூறிக்கொண்டு கொழும்பில் சேரிப்புறங்களைச் சேர்ந்தோரை பலவந்தமாக வெளியேற்றி மாடிவீட்டுத் தொகுதிகளில் குடியமர்த்தும் அரசு தனியான வீடுகள் வேண்டும் என கோரும் மலையக மக்கள் தொடர்பாக கவனம் செலுத்தத் தவறுகின்றமை கவலைக்குரியதாகவே உள்ளது.
குறிப்பாக தற்போதைய பெருந்தோட்ட குடியிருப்புகள் மனித வாழ்வுக்கு பொருந்தாத, பாதுகாப்பற்றவையாகவே காணப்படுகின்றன. இவற்றை மாற்றியமைத்து காணி உரிமையுடன் அங்குள்ள மக்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் மீரியபெத்தவில் நடந்ததைப் போன்று மீண்டுமொரு அனர்த்தம் நிகழலாம். அது மண்சரிவாக மாத்திரமன்றி வேறு வடிவிலும் அமையலாம்.
இந்நிலையில், தனி வீட்டுத் திட்டத்திற்கான அழுத்தங்களை அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தரப்புக்கு கொடுக்க வேண்டும். அப்போதே வெற்றி காண முடியும்.
மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தை தொடர்ந்து மலையக மக்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் மலையகமெங்கும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மீரியபெத்தவில் குறிப்பிட்ட எண்ணிக்கையான சடலங்களை எடுத்த பின்னர் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு விடும். அதன் பின்னர் சகலதும் மறக்கடிக்கப்பட்டு போராட்டங்கள் இல்லாது போகும். நிச்சயமாக போராட்டங்களை தடுக்கும் முயற்சிகளை அரசியல்வாதிகள் முன்னெடுப்பார்கள். ஆனால், மக்கள் எந்த நிலைமை வந்தாலும் போராட்டத்தை கைவிடக் கூடாது. கடந்த காலங்களில் செய்த தவறுகளை மலையக மக்கள் இனியும் செய்யக் கூடாது. போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, வாக்களித்து சபைகளுக்கு அனுப்பும் பிரதிநிதிகளிடம் கேள்விகளை கேட்க வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இதனை செய்யத் தவறினால் அடிமைத்தனம் தொடர்வதை நிறுத்த முடியாத நிலைமையே ஏற்படும்.
மீரியபெத்தவில் மண்ணுக்குள் புதையுண்டவர்கள் தனி வீட்டுத் திட்டத்திற்கான போராட்டத்தின் விதையாகத்தான் புதைந்துள்ளனர். இதனை மனதில் கொண்டு சகலரும் வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டும்.
08.11.2014-தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...