வரலாற்றில் தேசபக்தர்கள் துரோகிகளாக்கப்பட்டதும், துரோகிகள் தேசபக்தர்களாக ஆக்கப்பட்டதும் வரலாறு நெடுகிலும் வந்து போகின்ற சம்பவங்களே. “வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் அதிபுனைவு” என்பார்கள். இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஒரு முக்கிய பிரகடனம் அப்பேர்பட்ட ஒரு வெளிப்பாடு தான். அது பலரின் கவனத்தை ஈர்த்திருக்காது. முக்கியமாக தமிழ்ச் சூழலில் அந்தச் செய்தி கவனிப்புக்கு உட்பட்டிருக்காது.
1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை |
ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட கெப்பட்டிபொல உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் தேசத்துரோகிகளாக அன்றைய ஆளுநர் பிரவுண்ரிக் நோர்த் அறிவித்தார். அந்த சம்பவம் நிகழ்ந்து இன்னும் இருவருடங்களில் 200 ஆண்டுகளாகப் போகிறது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுப் போய் 68 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை தேசத் துரோகிகளாகவே உத்தியோகபூர்வ ஆவணங்களின் மூலம் இருந்து வந்துள்ளார்கள்.
19 பேரை மாவீரர்களாக்கிய ஜனாதிபதியின் பிரகடனம் |
கெப்பட்டிபொல திசாவ,
|
ஊவா
|
கொடகெதர ரடே அதிகாரம்,
|
ஊவா
|
கெட்டகால மொஹொட்டாலே,
|
ஊவா
|
மகாபெத்மே ரட்டேரால (கத்தரகம),
|
ஊவா
|
குடாபெத்மே ரட்டேரால (கத்தரகம),
|
ஊவா
|
பலங்கொல்ல மொஹொட்டாலே,
|
ஊவா
|
வத்தக்காலே மொஹொட்டாலே,
|
ஊவா
|
பொல்காகெதர ரெஹனராலே,
|
ஊவா
|
பொசேரேவத்தே விதானே,
|
ஊவா
|
கிவுலேகெதர மொஹொட்டாலே,
|
வலப்பனை
|
களுகமுவே மொஹொட்டாலே,
|
வலப்பனை
|
உடுமாதுர மொஹொட்டாலே,
|
வலப்பனை
|
கொஹுகும்ரே வளவ்வே ரட்டேரால,
|
வெல்லஸ்ஸ
|
கொஹுகும்ரே வளவ்வே மொஹொட்டாலே,
|
வெல்லஸ்ஸ
|
புட்டேவே ரட்டேரால,
|
வெல்லஸ்ஸ
|
பகினிஹாவெல ரட்டேரால,
|
வெல்லஸ்ஸ
|
மகாபதுள்ளே கம்மானே ரட்டேரால,
|
வெல்லஸ்ஸ
|
புலுபிடியே மொஹாட்டாலே,
|
வெல்லஸ்ஸ
|
பல்லேமல்ஹெயாயே கமதிராலே,
|
வெல்லஸ்ஸ
|
அந்த கரையை நீக்கும் படி சிங்கள தேசியவாத சக்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக ஒரு கோரிக்கையை பிரசாரப்படுத்தி வந்தன. அதன் விளைவாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அந்த பரிந்துரையை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு போகவே ஜனாதிபதி முன்னைய பிரகடனத்தை ரத்து செய்யும் புதிய விசேட பிரகடனத்தில் கையெழுத்திட்டு டிசம்பர் 8 ஆம் திகதி வெளியிட்டார். (அந்த பிரகடனமும் சிங்களத்தில் மட்டும் தான் வெளியானது என்பதையும் கவனியுங்கள்)
1818 ஜனவரி 10 ம் திகதியிட்ட மேற்படி ஆணையை ரத்து செய்வதுடன் அவர்கள் “அனைவரும் சுதந்திர இலங்கைக்காகப் போராடிய அந்த சிங்கள தலைவர்களும் மாவீரர்களாக பிரகடனப்படுத்தப்படுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
கெப்பட்டிபொல தேசத்துரோகி இல்லை என்று விடுவிக்கப்பட்டது போல அதே காலனித்துவ காலத்தில் தண்டிக்கப்பட்ட ஏனைய தலைவர்களின் மீதான குற்றங்களிலிருந்தும், துரோகப் பட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்களா. குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் விடுவிக்கப்படுவார்களா.
நேரடியாக விடயத்துக்கு வந்தால் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இன்றும் என்றும் குற்றவாளி தானா, துரோகி தானா..
1739 தொடக்கம் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739-1747), கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1781), ராஜாதி ராஜசிங்கன் (1781-1798), ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798-1815) ஆகிய நாயக்க வம்சத்து தமிழ் அரசர்கள் மொத்தம் 76 வருடங்கள் ஆண்டிருக்கிறார்கள். இந்த காலப்பகுதியில் பௌத்த மத வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய பாத்திரம் அளப்பெரியது என்று சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அதுமட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையும் 1505 இல் இருந்து அன்னிய காலனித்துவத்துவத்தின் பிடியில் சிக்கியிருந்தும் 1815 வரை தம்மை எட்டவிடாமல் இலங்கையின் கடைசி அரசையும் பாதுகாத்து வந்தவர்கள் இந்த தமிழ் அரசர்கள். அவர்கள் மலபார்கார்கள், தமிழர்கள், வடுகர்கள், தெலுங்கர்கள், நாயக்கர்கள் என்றெல்லால் தூற்றப்பட்டாலும் அவர்கள் சிங்கள மன்னர்களாகவே இறுதி வரை ஆண்டார்கள். தமிழுக்கோ, தமிழர்களுக்கோ கூட எதுவும் செய்தது கூட கிடையாது. மாறாக சிங்கள ஆட்சியின் அரசர்களாக அவர்கள் சிங்கள பௌத்தத்துக்கே தலைமை தாங்கினார்கள் என்பதை சிங்கள வரலாறுகளே சாட்சியம் பகர்கின்றன. “கடைசியாக ஆண்ட சிங்கள மன்னன்” என்றே சிங்கள வரலாறு எங்கும் காணக் கிடைக்கின்றன.
அப்பேர்பட்ட மன்னரை அதிகார பேராசைகொண்ட பிரதானிகள், மந்திரிகள் “சிங்களத் தலைவரை” ஆட்சியிலிருத்த வேண்டும் என்கிற சதியின் ஊடாக தாமே அரசாள தமக்குள் போட்டியிட்டனர். அதன் விளைவு அரச கவிழ்ப்பு சதி செய்து ஆங்கிலேயர்களுக்கு மன்னரைக் காட்டிக் கொடுத்தனர். அதன் மூலம் ஆங்கிலேயர்களுடன் சமரசம் பேசி தாம் ஆட்சி செலுத்தலாம் ஒப்பந்தத்தையும் செய்து கொண்டனர்.
அதன்படி 02.03.1815 செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் 12 விடயங்களில் முக்கிய உடன்பாடுகள் உள்ளடக்கப்பட்டன. அதில் முதல் மூன்று விதிகளும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் உள்ளிட்ட அவர் இரத்தவழி உருவினர் எவரும் ஆட்சியில் அமரக்கூடாத வகையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
மூன்றாவது விதியின்படி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இரத்த உறவைச் சேர்ந்த அனைவருக்கும் அரச உரிமை இரத்துச் செய்யப்படுவதுடன், கண்டி ராஜ்ஜிய எல்லைக்குள் அவர்கள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதனை மீறுவோர் அரசாங்கத்தின் எதிரிகளாக கருதப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஊவா வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி ஆரம்பித்ததன் காரணம் பிரித்தானியர் அந்த பகுதிகளுக்கு முஸ்லிம் முகாந்திரம் ஒருவரை பொறுப்பாக நியமித்ததன் விளைவு தான். இந்த நியமனத்தால் கண்டிப் பிரதானிகள் கடும் அதிருப்திக்குள்ளானார்கள்.
ஆக ஆங்கிலேயர்களிடம் தமை காத்து வந்த தமிழர் வேண்டாம் என்றவர்கள் அதற்குப் பதிலாக ஆட்சியை அந்நிய வெள்ளைக்காரர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் பதவிக்காக மண்டியிட்டிருந்தனர். பதவிகள் பிரிக்கப்பட்ட போது முஸ்லிம் ஓருவருக்கு கொடுக்கப்பட்டதற்காக மீண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினர் என்பது தான் கதைச் சுருக்கம்.
ஆளுநர் பிரவுன்றிக் மேற்கொண்ட அடக்குறையின் விளைவாக அந்த கிளர்ச்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இப்போது கூறுங்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள், இனவாதிகள், சதி காரர்கள் என்போரல்லவா இன்று ஜனாதிபதியால் தேசிய மாவீரர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஹெலபொல உள்ளிட்ட 28 பேர் மொரிசியஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே செத்தும் போனார்கள். அவர்கள் எவரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படாதது ஏன்.
கண்டி ஒப்பந்தம் இன்று வரை இரத்து செய்யப்படவில்லை. அதுவும் சட்டப்படி எழுத்தில் இருப்பது தான். எந்த ஒப்பந்தத்தில் அன்றே கூறப்பட்ட படி பௌத்தத்திற்கு உரிய இடம் வழங்கப்படவேண்டும் என்று இன்றும் இனவாத தரப்பு கூறுவது வழக்கம். அதே ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு இல்லாது செய்யப்பட்ட மரியாதை இன்று சரி செய்யப்படாததேன். உரிய மன்னிப்பு கோரப்படாததேன். மீளவும் இறுதி மன்னராக உத்தியோகப்பூர்வமாக பிரகடனப் படுத்தாததேன். கண்டி ஒப்பந்ததின் மூலம் தாரை வார்த்த இறைமையும், அதிகாரங்களும் இரத்து செய்யப்படாததேன்.
கெப்பட்டிபொல உள்ளிட்ட பலர் 1818 நவம்பர் 26 அன்று கண்டி போகம்பர வாவிக்கருகில் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றியதால் மட்டும் தான் மாவீரர்களாக ஆக்கப்பட்டார்களா?
இலங்கை முழுமையாக அந்நியர் கைகளுக்கு போய் சேர காரணமாக இருந்தவர்கள் தேச பக்தர்களாகவும், தேசிய மாவீரர்களாகவும் ஆக்குவர்களுக்கு, நான்கு பரம்பரைகளாக அந்நியர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்து, சிங்கள பௌத்தத்துக்கு விசுவாசமாக இருந்த மன்னர் குற்றவாளியாக்கப்பட்டது மட்டும் கவனிப்புக்கு வராமல் போனதன் அரசியல் என்ன. இது வெறும் இன அரசியலன்றி வேறென்ன. மன்னரும் அவர் குடும்பத்தினரும் குற்றவாளிகளாகவே சிறையில் சாகும்வரை இருந்து செத்தே போனார்கள். சுதந்திரத்தின் பின்னர் எஞ்சியிருந்தவர்களும் வேலூரில் வறுமையில் வாடி அழிந்தே போனார்கள்.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்து, மன்னரைக் காட்டிக்கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களாலேயே அழிக்கப்பட்டார்கள்.
சக சகோதர இனத்தவர்களுக்கு அரசாட்சி போய்விடக்கூடாது என்பதற்காக தாம் செய்த சதியில் தாமே விழுந்த கதை தான் 1815 இல் நிகழ்ந்தது. சொந்தச் செலவில் தமக்கே செய்த இந்த சூனியத்தில் நாடிழந்து, அதிகாரமிழந்து, இறைமை இழந்து இறுதியில் உயிரையும் இழந்தனர்.
சிங்களத் தலைவர்கள், சிங்கள ஆட்சியாளர்களால், சிங்கள மொழி மூலம் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கெப்பட்டிபொலவை விடுவித்தவர்களால் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை விடுவிக்க முடியாது போனது வெறும் தற்செயல் நிகழ்வல்ல.
அது மட்டுமல்ல கெப்பட்டிபொலவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டியவர்கள் இலங்கையர்கள் அல்ல. பிரித்தானிய மகாராணியே. ஏனென்றால் அது பிரித்தானிய ஆட்சியாளர்களின் முடிவே அது. முடிந்தால் அப்படி ஒரு தேசத்துரோக குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும்படி இலங்கை ஜனாதிபதி மகாராணியிடம் வேண்டுகோள் விடுவிக்கட்டும் பார்ப்போம். ஆனால் மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கதை அப்படியல்ல. அவரை கைது செய்து குற்றவாளியாக்கி, நாடு கடுத்தும் தேவை இலங்கையர் தரப்புக்கு தான் அதிகம் தேவைப்பட்டிருந்தது. இலங்கை தரப்பு தான் அது குறித்த ஒப்பந்தத்திலும் கைச்சாதிட்டிருந்தது.
இவர்களில் உண்மையான தேசபக்தன் கெப்பட்டிபொலவா, ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனா என்பதை வாசகர்களே தீர்மானிக்கட்டும். வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதில்லை என்பதை உறுதிசெய்வோம்.
11.03.1812
|
கண்டி ஆக்கிரமிப்பு போர்
|
01.10.1814
|
கண்டிக்கு எதிராக
ஆங்கிலேயர் போர்ப் பிரகடனம்
|
10.01.1815
|
படைச் சேனாதிபதி வில்லியம் விலர்மான்
மலைநாட்டுமக்களின் மனங்களை ஈர்ப்பதற்காக பிரகடனம் ஒன்றை வெளியிடல்
|
அரசரின், வாள்,
அரச இலட்சினை, கொடி, ஆவணங்கள் மற்றும் புனித தாதுப்பல் அனைத்தையும் கொண்டு
கொண்டு சென்றார்கள்
|
|
02.02.1815
|
சிங்களவர்களின் சுதந்திரத்தை
உறுதிசெய்வதாக பிரகடனம்
|
12.02.1815
|
பிரித்தானிய
சேனைகள் கண்டிக்குள் நுழைந்தன. எரிந்துபோன நகரத்துக்குள் நுழைகையில் நகரத்தில் மனிதர்கள்
எவரும் இருக்கவில்லை.
|
18.02.1815
|
தலைமறைவாக இருந்த மன்னர் ஸ்ரீ
விக்கிரம ராஜசிங்கன் காட்டிக்கொடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் பிடிபட்டார்.
|
19.02.1815
|
மலபார்காரர்களை
(தமிழ் - நாயக்கர் மன்னர் பரம்பரையினரை)பிடித்து சிறையிடும்படி கட்டளை
|
02.03.1815
|
மாலை 4க்கு கண்டி ஒப்பந்தம் நிகழ்வு கூட்டப்பட்டது.
அந்த ஒப்பந்தம் சிங்களத்திலும்,
ஆங்கிலத்திலும் கண்டி பிரதானிகளுக்கு வாசித்து காட்டப்பட்டு விளக்கம்
கொடுக்கப்பட்டது.
|
02.03.1815
|
இலங்கையில்
இறுதியாக அரச கோடி இறக்கப்பட்டு பிரித்தானிய கொடி ஏற்றப்பட்டது. வாரியபொல சுமங்கல
தேரர் கண்டியில் ஏற்றப்பட்ட அந்தக் கொடியை இழுத்து எறிந்தார். ஆனால் கைது
செய்யப்பட்ட அவருக்கு எதிரான குற்றச்சாட்டு அவர் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு
வழங்கியதும், புனித தாதுப்பல்லை கொண்டு சென்றதும் தான். அவர் யாழ்ப்பான சிறையில்
வைக்கப்பட்டு அவரது முதுமை காரணமாக விடுவிக்கப்பட்டார்.
|
10.03.1815
|
கண்டி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பௌத்த மதத்தைப் பாதுகாப்பது தொடர்பான விதிகளை இணைப்பதற்காக அஸ்கிரி
மகாநாயக்கரின் முடிவைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே 10 பேர் அதில்
கையெழுத்திட்டார்கள்.
|
18.03.1815
|
எஹெலபொல,
பிலிமத்தலாவ, கலகொட உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டார்கள்.
இரு தரப்பும் உடன்பட்ட
விடயங்களுக்குப் புறம்பாக பல சட்டவிதிகளும் சேர்த்து பிரகடனமாக வெளியிடப்பட்டது.
|
டிச.1816
|
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஊவா
வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆரம்பம்
|
01.11.1817
|
கெப்பட்டிபொல
கிளர்ச்சியாளர்களுடன் இணைவு
|
21.02.1818
|
இராணுவச் சட்டம் பிரகடனம்
|
01.09.1818
|
01-20 திகதிக்குள்சரணடைந்தால்
போது மன்னிப்பு என அறிவிப்பு
|
28.10.1818
|
கெப்பட்டிபொல உள்ளிட்ட பலர்
சுற்றிவளைத்து பிடிபடல்
|
21.11.1818
|
இராணுவ
நீதிமன்றம் தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை தீர்ப்பு
|
26.11.1818
|
கண்டி போகம்பரை வாவியருகில் கெப்பட்டிபொல
உட்பட பலருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம். பின்னர் தலை மட்டும்
இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
|
22.05.1819
|
கெப்பட்டிபொலவின்
சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது.
|
1948
|
கெப்பட்டிபொலவின் மண்டையோடு
பிரித்தானிய அரசால் மீண்டும் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது
|
நன்றி - தினக்குரல்
மேலதிக வாசிப்புக்கு சில பரிந்துரைகள்:
"நவம்பர் மாவீரர் மாதம்" கெப்பட்டிபொல - சங்கர் – விஜேவீர - (என்.சரவணன்)
இலங்கையின் இறுதி அரசன் காட்டிக்கொடுக்கப்பட்டு 200 வருடங்கள் - என்.சரவணன்
1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்
தேசியக் கொடியா? சிங்களக் கொடியா?: வரலாற்று சர்ச்சை! - என்.சரவணன்
சிங்கள சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும் - என்.சரவணன்
நினைவுகளையும் ஆயுதங்களாக்கும் பேரினவாதம் - என்.சரவணன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...