இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் இருநூறு வருட வரலாற்றுப் பாரம்பரியத்தில் அவர்கள் தம் வாழ்வியலோடு தொடர்புபட்டதாக பல்வேறு கலையம்சங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.
ஒரு மொழி பேசுகின்ற இனத்தின் வரலாறு மொழியோடு மட்டுமன்றி அம்மொழி சுமக்கின்ற கலைகளோடும் தொடர்புபட்டதாகவே காணப்படும். பொதுவாக தமிழர்களின் நாடக வரலாறு பாரம்பரியக் கூத்துக் கலையின் தொடர்ச்சியான வளர்ச்சியிலேயே பதியம் போட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து சுமந்து வந்த பல்வேறு கலைகளில் கூத்து, நாடகம், நாட்டார்பாடல்கள், கிராமிய நடனங்கள், சடங்கு முறைகள் என்பன இன்றளவும் பேணப்பட்டுவரும் நிலையானது, அவர்கள் தம் வாழ்வியலை அறிய எப்போதும் முக்கியத்துவம் பெறுவதாக அமையும்.
மலையகத்தில் பெரிதும் ஆடப்பட்டு வருகின்ற காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் என்பனவும் ஒரு சில பெருந்தோட்டங்களில் ஆடப்படுகின்ற குறவஞ்சி, காத்தவராயன் கூத்து, லவகுசா என்பனவும் பரவலாக அறியப்பட்ட ஒன்றாக காணப்படும் அதே வேளை பெரிதும் அறியப்படாத நிலை ஒரு சில தோட்டங்களில் ஆடப்படுகின்ற கெங்கையம்மன் ஆட்டம் பற்றி ஓர் அறிமுகக் குறிப்பைத் தருவதன் மூலம் மலையக மக்களின் வாழ்வியல் பற்றி மேலும் அறிய ஓர் வழிகாட்டலை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மத்திய மலைநாட்டில் எல்லா தோட்டங்களிலும் கொண்டாடப்படுகின்ற மாரியம்மன் திருவிழாவைப் போன்றே கெங்கையம்மன் திருவிழாவும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தோட்டங்களில் மட்டும் ஆடப்படுகின்றது. இதுவும் ஒரு சடங்கு முறையான விழாவாகவே நடாத்தப்படுகின்றது. எனினும், இவ்விழா நடைபெறுவதற்கு முன்னர் ஒரு மாதமளவுக்கு பாட்டுடன் கூடி தப்பிசையுடன், வேடமிட்டு வீதிதோறும் ஆடப்பட்டுவரும் கெங்கையம்மன் ஆட்டமே வெளிப்படுத்தப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.
கெங்கையம்மன் (கங்கையம்மன்) திருவிழா மாசி மாதத்தின் வளர்பிறை நாளொன்றில் காப்பு கட்டி பின்னர் ஒரு மாதமளவில் வீதிதோறும் ஆடி, காணிக்கை படியரிசி சேர்த்து, ஒரு வெள்ளிக்கிழமை கரகம் பாலித்து மூன்று நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
கெங்கையம்மன் ஆட்டம்
•கெங்கையம்மன் ஆட்டம் ஓர் குளிர்த்தி சடங்குடன் கூடியதாக நீர் வேண்டி ஆடப்படுகிறது.
•ஏப்பிரல் மாதத்தில் (மாசி) வளர்பிறை முதல் வெள்ளியன்று காப்பு கட்டப்படும்.
காப்பு கட்டல் என்பது, 7 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட ஆண், பெண் சிறார்களைத் தேர்ந்தெடுத்து (அல்லது கெங்கையம்மனுக்கு பல்வேறு காரணங்களுக்காக நேர்த்தி வைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை தாமாகவே ஆட்டத்திற்கு சேர்ந்து விடுவர்) மஞ்சளை நூலில் கட்டி பின்னர் கைகளில் கட்டி அவர்களை கெங்கையம்மனாக வரித்துக் கொள்ளும் சடங்காகும்.
•நேர்த்தி உள்ளவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுமாக ஒற்றை எண்ணிக்கையில் (9,11,13,15) காப்பு கட்டுவர்.
•காப்பு கட்டியதன் பின்னர் இருபத்தொரு நாட்களுக்குக் குறையாமல் வீடுதோறும் காணிக்கைகளைப் பெறும் வகையில் வீதிதோறும் ஆடுவர்.
•தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்களுக்கு முகத்திலே முகப்பூச்சு செய்து, பல நிறங்களில்முகத்தில் பொட்டுகளிட்டு, தலையில் வெள்ளை, மஞ்சள் துணிகளால் வேடு கட்டி (முக்காடு போல) கைகளில் பொன்னாவரை இலை (மாரியம்மன் இலை) கொண்டு கெங்கையம்மன் பாட்டுக்கு ஆடவிடுவர்.
•கெங்கையம்மன் பாட்டுக்கு இசைக்கருவிகளாக தப்பு, சேமக்கலம், மணி என்பன பயன்படுத்தப்படும்.
•இருபத்தோர் நாட்கள் ஆடியப்பின் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை கரகம் பாலிப்பர், சனிக்கிழமை கூழ் காச்சுதல், மாவிளக்கு எடுத்தல், அன்னதானம் இடல் என்பனவும் விசேடமான நேர்த்திக்கடன் செலுத்தும் பூசைகளும் ஆலயத்தில் இடம்பெறும். ஞாயிற்றுக் கிழமை மஞ்கள் நீராடி குடிவிடுதலுடன் திருவிழா நிறைவுபெறும்.
கெங்கையம்மன் சடங்கு விழா
இவ்வாட்டம் அம்மக்களின் பல்வேறு நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக அமைகிறது. நீரின்றி அமையாது உலகம் என்பது போல் தேயிலைத் தோட்டங்கள் ஏப்பிரல் மாதத்தின் வெயிலால் வாடும் நிலையைப் போக்க நீர் வேண்டுதல், நோய், வறுமை நிலையினை ஆன்மீக நம்பிக்கையோடு போக்கிக் கொள்ளவும் இச்சடங்கு முறைகள் அவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.
கெங்கையம்மன் ஆட்டத்தின் நாடகத்தன்மை
கெங்கையம்மன் ஆட்டமானது ஒரு கூத்துக்குரிய பூரண அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை எனினும் ஆட்டமும் பாட்டும் கலந்து ஆடப்படுகின்ற வகையில் கூத்துக்குரிய அடிப்படை இயல்பை கொண்டிருக்கிறது. அதே நேரம் கிராமிய நடனங்களான கும்மி, கரகாட்டம், கோலாட்டம் என்பன போல் மிகவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் இது அமையவில்லை.
ஆட்டத்துக்குரிய (நடிகர்கள்) ஆட்டக்காரர்களின் தெரிவு வேடமிடல் ஒப்பனை செய்தல், வேட உடைகள் புனைதல், கெங்கையம்மன் வரலாற்றுப் பாடல்கள் பாடுதலும் அதற்குறிய இசைக்கேற்ப ஆடுதலும் எனும் வகையில் இது ஓரளவு நாடகத் தன்மையும் பெறுகின்றது.
கெங்கையம்மன ஆட்டம் பற்றிய அதன் சமூக பின்னணி, வரலாறு, ஆட்ட நுணுக்கங்கள், நாடகத் தன்மை என்பன பற்றி முறையான ஆய்வுகள் செய்யப்படும் போது அதன் முக்கியத்துவம் உணரக்கூடியதாக அமையும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...