Headlines News :
முகப்பு » , » சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்

சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கை ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியம் குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி உரையாட முற்படும்போது யாருமே தவிர்த்துவிட்டுப் போக முடியாத ஆளுமையாக திகழ்பவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். இந்த வருடம் அவரது நூற்றாண்டு ஜனன நினைவு. இருக்கின்ற போது சிலர் நூறு வயதை கடந்துவிடுகிறார்கள். இறந்த பிறகு எல்லோருமே 100 வயதை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைந்து ஒரு சில வருடங்களிலேயே பலரையும் மறந்து விடுகிறோம். நமது குடும்ப உறவுகளைக் கூட. அதே நேரம் சிலரை ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மறக்க முடிவதில்லை. அவர்களை ஏதாவது ஒரு வகையில் நினைவு கூருகிறோம்.

அந்த வரிசையிலேயே இன்று தகவம் அமைப்பினரால் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் நினைவு கூரப்படுகிறார். அவரது நினைவாக ஒரு உரையை ஆற்றுமாறு வேண்டப்பட்டுள்ளேன். எனவே சி.வி அவர்கள் பற்றிய நினைவுகளை இந்த நாளில் மீண்டும் கொண்டு வரும் முயற்சியாக எனது உரையை அமைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சி.வி.அவர்கள் இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியாக பெரிதும் அறியப்பட்டாலும் படைப்பு இலக்கியம் தவிர்ந்த இன்னும் பல துறைகளில் ஆளுமையாக விளங்கியவர். அதனால் எனதுரைக்கு ‘சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும்;’ என தலைப்பிட்டுக் கொண்டேன்.

சி.வி. வேலுப்பிள்ளை பற்றிய நினைவுரையை ஆற்றுவதற்கு எனக்கு வாயப்பளித்த தகவம் அமைப்பினருக்கும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் ஆரம்பத்திலேயே நன்றி சொல்லிவிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.

 ஏனெனில் நான் வாழ்நாளில் சந்தித்திராத ஒரு ஆளுமையை அவரை சந்தித்து உறவாடிய பெருந்தகைகளின் முன்னே நினைவுப் பகிர்வது என்பது ஒரு சவாலான பணிதான். ஆனாலும் சி.வி. அவர்கள் பிறந்த அதே மடகொம்பரை மண்ணில் பிறக்கக்கிடைத்த பாக்கியமும் என் அம்மா பாக்கியம் பெயரில் பதிப்பகம் ஒன்றை நிறுவி அதன் முதல் வெளியீடாக சி.வியின் ‘இலங்கை தேயிலைத் தோட்டத்திலே’ எனும் நெடுங்கவிதைத் தொகுப்பின் ஆங்கில மூலத்தினையும் அதன் தமிழாக்கத்தினையும் ஒரேடியாக தொகுத்து பதிப்பாக்கி மறுமதிப்பாக வெளியிட்டமைக்கான வெகுமதியாகவே எனது பெயர் இந்த உரைக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
என்னைப் பொருத்தவரை சி.வி. அவர்கள் பிறந்த மடகொம்பரை மண்ணில் பிறந்திருக்காவிட்டால் இந்த இலக்கிய மேடையில் உரையாற்றும் ஒருவனாக இருந்திருக்க மாட்டேன் என திடமாக நம்புகிறேன். ஏனெனில் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தை ஏற்படுத்தியது ‘ஒரு நூலகம்’ என்பதை விட ‘ஒரு கல்லறை’ என்பதே மிகப்பொருத்தமானது. 

கொழும்பில் இருந்து சுமார் 200கி.மீ தொலைவில் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை நகரில் இருந்து தவலந்தன்னை நகரை இணைக்கும் பூண்டுலோயா வழியில் பயணிக்கும் எவரும் வட்டகொடை எனும் ரயில் நிலையம் அமையும் நகருக்கு அண்மித்த ‘மடகொம்பரை’ எனும் பெருந்தோட்டத்தை கடக்காமல் பயணிக்க முடியாது. 

அவ்வாறு கடக்கும் போது வட்டகொடை நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் கடக்கும்போது ஒரு வளைவில் இடது பக்கமாக தேயிலை மலைகளுக்கு இடையே அமைந்த சிறு புல்வெளிப்பகுதியில் ஒரு கல்லறை இருக்கும். இப்போது அது பெயரிடப்பட்டு இருந்தாலும் முன்பு தனியே ஒரு கல்லறை. வட்டகொடை சிங்களப்பள்ளிக்கும் தமிழ்ப் பாடசாலைக்கும் செல்லும் போதெல்லாம் என்னை உறுத்துவது இந்த கல்லறை. சிறுவர்களாக இருந்த காலத்தில் பாதையில் அந்த வளைவு வந்ததும் பயததில் ஓடி மறைவோம். பின்னாளில் விசாரித்த போது அது ‘கங்காணி புதைகுழி’ என்றார்கள். எங்களுரில் ஏகப்பட்ட கங்காணிகள். அது என்ன ? ஒரு கங்காணிக்கு மட்டும் ‘ஸ்பெஷல்’ புதைகுழி என தேடியபோது அதில் புதைக்கப்பட்டிருப்பது ஒரு பெரியாங்கங்காணி எனத் தெரியவந்தது. பெரியாங்கங்காணி என்றாலே தோட்டத் தொழிலாளிகளுக்கு வில்லன். பின்னர் அவர்கள் பெயரில் ஏன் கல்லறை? 

இந்த பெரிய கங்காணிகள் பற்றி சி.வி.வேலுப்பிள்ளை அவர்களே ‘நாடற்றவர் கதை’ எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘தோட்டத்துரைக்கும் தோட்டத் தொழிலாளிக்கும் எவ்வித தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து’. தோட்டங்களில் ஜமீன்போல் அல்ல ‘ரட்ட மாத்தியா’ போல் சுகபோக வாழ்க்கை நடாத்தினார்கள். பட்டிணங்களில் வட்டிக்கடை தாய்நாட்டில் (இந்தியாவில்) நிலம் வீடு சிறு தோட்டங்களை வாங்கினார்கள்.

 2000 பெரிய கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் ஜமீன்தார்கள் போல தோட்டப்பெயர்களோடு சேர்த்து அழைக்கப்பட்டார்கள். அதாவது தெமோதர ராமநாதன், மஸ்கெலியாசெட்டியப்பன், பூச்சிக்கடை கருப்பையா, பாமஸ்டன் சண்முகம், திஸ்பனை சுப்பையா பிள்ளை, தலவாக்கலை பாண்டியன், ஊவாக்கலை தைலாம் பிள்ளை, டன்பார் ரெங்கசாமி, மடகொம்பரை குமரன், தெல்தொட்டை சங்கரன், மெய்காகொலை முனியாண்டி, நாப்பனை பொக்கு செல்லன், ஆகியோர் முக்கியஸ்தர்கள். இவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் சேர்த்து ஆங்கிலம் படித்தார்கள். படிப்பை முடித்துக்கொண்ட பின் தங்கள் தகப்பன்களுக்கு உதவியாய் தோட்டத்தில் கணக்கப்பிள்ளை, கண்டக்டர், டீமேக்கர், கிளார்க் வேலை செய்தனர். (நாடற்றவர் கதை பக் 43)

சி.வி. குறிப்பிடும் இந்தப்பட்டியலில் வரும் ‘மடகொம்பரை குமரன்’ எனும் பெரியாங்கங்காணியின் புதைகுழிதான் எங்கள் ஊரில் உள்ள அந்த புதைகுழி. 
பல பெரிய கங்காணிகள் வட்டிக்கடைக்காரர்களாகவும், சிறுதோட்டங்களை வாங்கி அதன் உரிமையாளராகவும் இருந்துள்ளார்கள். அது பற்றி குறிப்பிடும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள்,

‘கடைகளை ஸ்தாபித்த கங்கானிகள் பட்டரையில் உட்கார்ந்து வியாபாரம் செய்யமாட்டார்கள். உதாரணமாக பூச்சிக்கொடை கருப்பையா கங்காணி பல வட்டிக்கடைகளை வைத்திருந்தார். அவர் எந்தக் கடையிலாவது உட்கார்ந்து வியாபாரம் செய்ததாக தெரியவில்லை. இவர் தேயிலைத் தோட்டம் வாங்கியவர்’ (பக் 45) என குறிப்பிடுகின்றார்.

இன்றும் கூட கூட பூச்சிக்கொடை கருப்பையா கங்காணியின் பல வட்டிக்கடைகள் வடிவம் மாறி மலையகப்பகுதிகளில் வியாபாரம் நடாத்திக் கொண்டிருப்பதும் இந்தியாவில் சொத்துக்கள் குவித்;திருப்பதும் பலரும் அறிந்த செய்தி.

ஆனால், 1914 ஆம் ஆண்டு செப்தெம்பர் 14ம் திகதி பிறந்த சி.வி.வேலுப்பிள்ளை அவர்களோ ஆங்கில வழிக்கல்வி கற்று ஆசிரியத் தொழிலை தெரிவு செய்கிறார். பல்வேறு உலக இலக்கியங்;களை வாசிக்கிறார். 1934 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற வங்கக் கவி தாகூர் அவர்கள் இலங்;கை வந்தபோது அவரைச் சந்தித்து தான் தாகூரின் தாக்கத்தில் படைத்த ‘விஸ்மாஜினி’ என்ற ஆங்கில கவிதை படைப்பைக் கொடுத்து ஆசிபெறுகிறார். இவர்தான் பின்னாளில் சி.வி.வேலுப்பிள்ளை எனும் மக்கள் கவிஞனாக பரிமாணம் பெறுகிறார்.

இவரது ஆரம்ப கால படைப்புகள் தாகூரின் பாதிப்புக்களில் எழுந்தவையாயினும் பின்னாளில் தன் மக்கள் குறித்த பார்வைக்குள் செல்லும் இவரது தேடல்கள் அவரை ஒரு ‘மக்கள் இலக்கிய’ படைப்பாளியாகவும் செயற்பாட்டாளராகவும் மாற்றிவிடுகிறது. இலங்கை பெரும இன வன்முறைக்கு உட்பட்டிருந்த 1983/1984 காலப்பகுதியில் கொழும்பில் நெருக்கடியான சூழ்நிலையில் காலமான (1984 -11-19) சி.வி. வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இவரின் இறுதிக்கிரியைகள் போது வெறும் ஏழு எட்டு உறுப்பினர்கள் மட்டும் இணைந்து நடாத்திய ‘பாரதி’யின் இறுதிக்கிரியையே நினைவூட்டுகிறது.

பின்னர் அவரது ‘அஸ்தி’ மடகொம்பரை மண்ணில் உள்ள அவரது குடும்ப புதைகுழியான ‘மடகொம்பரை குமரன்’ அவர்களின் ‘கங்காணி’ புதைகுழி யில் சேர்க்கப்படுகிறது. புதைகுழி புதுவடிவம் பெறுகிறது. கங்காணியின் புதைகுழி – கவிஞனின் கல்லறையாக மாற்றம் பெறுகிறது. இந்தக் கல்லறை என் போன்ற இளைய சமூகத்துக்கு ஒரு உந்துததலைத் தருகின்றது. 

அதே சிறுவனான காலத்தில் மடகொம்பரை மேற்பிரிவில் வசித்த, இப்போதும் பத்திரிகையாளராக பணியாற்றும் சி.எஸ் காந்தி அவர்களிடம் ஆங்கிலம் கற்கச் செல்வதுண்டு. அவர் வசித்த வீடு லயங்களுக்கு மத்தியில் அமைந்த தனிவீடு ‘பெரியவீடு’ என்றே அழைக்கப்பட்டது. அதுவே சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்து வாழ்ந்த வீடு.

ஒரு நாள் அரசாங்க தரப்பில் இருந்து ஐந்தாறு பேர் வருகிறார்கள். இந்த வீடு அரசாங்கத்துக்கு சொந்தமானது. நீங்கள் வெளியேற வேண்டும். இது கோர்ட்டு உத்தரவு என தமிழ் சினிமா பாணியில் அந்த வீட்டு உடமைகளை தூக்கி எறிகிறார்கள். நான் புத்தகத்தை வைத்து பாடம் எழுதும் ஒரு மரப்பெட்டியும் தூக்கி எறியப்படுகிறது. உள்ளேயிருந்து பல நூறு காகிதங்கள் காற்றில் பறக்கின்றன. கையெழுத்திலும் தட்டச்சு செய்தும் உலகின் பல பாகங்களில் இருந்தும், நாட்டில் பல பாகங்களில் இருந்தும் எழுதப்பட்டிருந்த பல்வேறு கடிதங்களும் படைப்புகளும் பொறுக்கி சேகரிக்கப்பட்டன. அவைதான் ‘மடகொம்பரை குமரன்’ பெரியாங்கங்காணியின் பரம்பரையில் (தாய்வழி பாட்டனார்) வந்த  சிவி.வேலுப்பிள்ளையின் உடமைகளாக எஞ்சின. அதனையே அவரது உறவான சி.எஸ்.காந்தி அவர்கள் பராமரித்து வந்தார்.

தூக்கியெறியப்பட்ட உடமைகளுக்கு தாங்கள் வாழும் ‘லயத்துச்சிறையில்’ ஒரு அறை ஒதுக்கிறார்கள் அந்த தோட்டத் தொழிலாளர்கள். எனக்கு சிவி பற்றிய அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது அந்த கடிதங்கள்தான். ஏன் இவ்வாறு தூக்கியெறியப்படுகிறார் என்பது அப்போது புரியவில்லை. ஆனால் சற்றே வளர்ந்த பின்னர்தான் அதன் அரசியல் தெரிய வந்தது. 

அரசாங்கத்துக்கு எங்கே தெரிந்தது எங்கோ ஒரு தோட்ட மூலையில் இருந்த தனது உடமை? அரசாங்கத்தில் பங்கு வகித்த பெரியாங்கங்காணி பரம்பரை தன் பெயர் தவிர்ந்த வேறு யார் பெயரும் மலையக வரலாற்றில் வந்துவிடக்கூடாது என்ற குரூரமான எண்ணத்துடன் ஏற்பாடு செய்த நாடகமே அது. 

 ஆனாலும் அதெ மண்ணில் அவரது கல்லறையை பார்த்து வளர்ந்தவர்கள் ஒரு பக்கம் இலக்கியத்திலும் மறுபக்கம் அரசியலிலுமாக திட்டமிட்டு மறைக்க முற்படும் சி.வியின் ஆளுமையை மீள நிறுவும் பணி போராட்டமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிவியின் பன்முக ஆளுமைகளை பின்வருமாறு பட்டியலிடலாம்.
ஆசிரியர்- அரசியல்வாதி- தொழிற்சங்கவாதி- கவிஞர்- நாவலாசிரியர்- நடைச்சித்திர படைப்பாளர்- நாட்டார் பாடல்களின் சேகரிப்பாளர்- கட்டுரையாளர் - பத்திரிகையாசிரியர்- சமூகத் தொடர்பாளர்

மேற்படி துறைகளில் ஆளுமையாளராக திகழ்ந்த சி.வி. அவர்களின் சிறப்பு அவரது கல்விப்புலமை. ஆங்கலத்தில் நேரடியாக படைப்புகளை செய்யும் பணியை 1930 களியே மலையகத்தில் மேற்கொண்டுள்ளார் என்பது பெரும் வியப்புக்குரிய செய்திதான். 

இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தபோது ஆங்கில வழிக்கல்வி சாதாரணமானதுதான் என்ற போதும் மலையகத் தோட்டம் ஒன்றிற்குள் இருந்து ஒரு இளைஞன் அந்த நாளிலேயே கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு கல்வி கற்க வந்துள்ளார் என்பதும் வங்கக்கவி ‘தாகூரை வாசித்து’ இலங்கையின் தாகூர் என இந்திய ஏடுகள் புகழும் இலக்கை அடைந்துள்ளார் என்பதும் அவரது கல்விப்புலமையின் ஆழத்தையே காட்டுகிறது.
சி.வி இவர்களும் தலாத்து ஓயா கே.கணேஸ் அவர்களும் சம காலத்தவர்களாக மலையக இலக்கிய பரப்பில் அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்கள் இருவரினதும் முக்கியத்துவம் என்னவெனில் இருவரும் ஆங்கிலப்புலமையுடன் இலக்கியப்பரப்பில் செய்றபட்டமை. கே.கணேஷ் அவர்கள் ஆங்கில புலமையூடாக தமிழுக்கு பல்வேறு உலக இலக்கியங்களை மொழிபெயர்த்துத்தர சி.வி அவர்களோ ஆங்கிலத்திலேயே தனது படைப்பகளை உலகிற்கு தந்துள்ளார். குறிப்பாக 1952ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘In Ceylon’s Tea Garden’ என்கிற நெடுங்கவிதைத் தொகுப்பு மலையக மக்கள் பற்றிய ஒரு காவியமாகவே அமைந்துவிட்டது எனலாம்.

பெரியாங்கங்காணி வழிவந்த இவர் தோட்ட உத்தியோகத்தராகவோ அல்லது வட்டிக்கடை உரிமையாளராகவோ ஆசைபடாது ஆசிரியராகவே தனது தொழிலை தொடங்குகிறார். அப்போது இருந்த போக்கிற்கு அமைவாக இந்திய தேச பக்த சிந்தனைகளுடன் ஒரு தேசியவாதியாக காந்திய சிந்தனைகள் கொண்ட அகிம்சாவாதியாகவே தனது பொதுவாழ்வை ஆரம்பிக்கிறார். அவரது அந்த நாளைய அவரது உடைகளும் தலையிலிட்ட குல்லாவும் அதனை உறுதி செய்கின்றன.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட பொதுவாழ்வு அவரது நண்பர் கே.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டலுடன் அரசியல் வாழ்வுக்கு இட்டுச் செல்கின்றது. 1948 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அமர்ந்த ஏழு மலையகப்பிரதிநிதிகளில் ஒருவராக தலவாக்கலை தொகுதி உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றார். அதே காலப்பகுதியில் மலையக மக்களின் குடியுரிமையும் பறிக்கப்படுகின்றது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயமாகிறது. 

இந்நாளில் அமைக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸில் உள்வாங்கப்பட்ட சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றபோது அதன் உறுப்பினராகவும் முக்கியஸ்தராகவும் செயற்பட்டுள்ளார். தொழிலாளர்களுக்காக எனச் சொல்லப்பட்ட காங்கிரஸ் அவ்வாறு செயற்படாதபோது அதிலிருந்து காலத்திற்கு காலம் அதன் முக்கிய உறுப்பினர்கள் வெளியேறத்தொடங்கினர். அப்துல் அஸீஸ், வி.கே.வெள்ளையன், சோமசுந்தரம், கே.ராஜலிங்கம் போன்ற ஆளுமைகளின் வெளியேற்றத்தோடு தானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேற நேர்கிறது. 

1965 ஆம் ஆண்டு வி.கே. வெள்ளையன் அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆரம்பித்த பின்னர் அதில் இணைந்துகொள்கின்ற சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் வெள்ளையன் அவர்களுக்குப் பிறகும் தலைமைப் பொறுப்பை ஒரு தொழிலாளி கையிலேயே கொடுத்து ஆலோசகராக இருந்து அதனை வழிநடாத்தியுள்ளார். இறுதிவரை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆலோசகராகவே செயற்பட்டார். அவரது கல்லறையை இன்றும் அந்த சங்கத்தினரே புனர்நிர்மாணம் செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்த ஆசிரிய, அரசியல், தொழிற்சங்க ஆளுமைக்கு அப்பால் ஒரு பத்திரிகை ஆசிரியராகவும் சி.வி. அவர்களை நோக்க முடியும். ‘கதை’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராகவும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாதாந்த இதழான ‘மாவலி’ பததிரிகையையும் ஆசிரியராக இருந்து வழிநடாத்தியுள்ளார். தவிரவும் பல்வேறு பத்திரிகைகளிலும் அவரது படைப்புகளும் எழுத்துக்களும் வெளிவந்துள்ளன.

கவிஞர் எனும் ஆளுமை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவருக்கு பெரும் புகழை ஏற்படுததியது அவரது கவிதைகள்தாம். அவரது Wishmajini, Wayferer, Tagore at A Glance, Ananda’s Dream, In Ceylon’s Tea Garden போன்ற நெடுங்கவிதைகளும் கவிதை நாடகங்களும் ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதப்பட்டவை. அவர் தமிழில் கவிதைகள் எழுதவில்லை. ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே’ எனும் கவிதைத் தொகுப்பு கவிஞர் சக்தீ பாலையா அவர்களினால் தமிழாக்கம் செய்யப்பட்டது. 

நாவல் என்று வரும்போது எல்லைப்புறம் (Borderland), வாழ்வற்ற வாழ்வு, காதல் சித்திரம், வீடற்றவன், பார்வதி, இனிப்படமாட்டேன்.. போனறன. இதில் வீடற்றவன், பார்வதி, இனிப்படமாட்டேன் போன்றன நேரடியாகவே சி.வி அவர்கள் தமிழில் எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையவை ஆங்கில மூல நாவல்கள். பொன்.கிருஸண்சாமி அவர்களினால் மொழிபெயர்க்கப்பட்டவை. 

சிறுகதை பாணியில் அமைந்த நடைச்சித்திரம் எனும் இலக்கிய வடிவத்தின் ஊடாக மலையக மாந்தர்களை ஆங்கிலத்தில் Born To Labour எனும் தலைப்பில் எழுதியவர் சி.வி.வேலுப்பி;ள்ளை அவர்கள். மலையகத் தொழிலாளர்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதில் இந்த நடைச்சித்திரம் முக்கிய பங்கு வகிப்பதாக பிரபல சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்க விதந்துரைத்துள்ளார். எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்கள் ‘தேயிலைத் தேசம்’ எனும் பெயரில் இந்த நடைச்சித்திரத்தை தமிழாக்கம் செய்துள்ளார்.

மலையக மக்களின் வரலாற்று விபரங்களையும் அரசியல் சமூக நிலைப்பாடுகளையும் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தியவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். ‘நமது கதை’ எனும் பெயரில் அவரால் எழுதப்பட்டு பின்னர் ‘நாடற்றவர் கதை’ என நூலுரு பெற்றுள்ள அவரது கட்டுரைகள் மலையக மக்களின் வரலாற்றை பேசுகின்றன. 

அந்த நூலை வெளியிட்ட மு.நித்தியானந்தன் அவர்களும் அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய இர.சிவலிங்கம் அவர்களும் ‘மலையகத்தமிழரின் இன்றைய பிரச்சினைகள்’ எனும் தலைப்பில் ஈழநாடு பத்திரிகையின் 25வது ஆண்டு மலரில் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் சேர்த்துள்ளனர். சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் எந்தளவுக்கு மலையக மக்கள் குறித்தும் அவர்களது பிரச்சினைகள் குறித்தும் தெளிவான சிந்தனைiயைக் கொண்டிருந்தார் என்பதற்கு அந்தக் கட்டுரை ஒன்றே சான்று பகரும்.

நாட்டார் பாடல்களின் சேகரிப்பாளர் என்று வருகின்றபோது அதனைச் செய்த முதல் தனிமனிதர் என்ற வகையில் சி.வி.அவர்களின் முக்கியத்துவம் மகத்துவம் பெறுகிறது. சி.வி யின் மனித நேயத்திற்கும் தொழிலாளர் பாற்பட்ட சிந்தனைக்கும் எடுத்துக்காட்டாக அமைவன இந்த ‘நாட்டார் பாடல்களின்’ சேகரிப்பு. ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்; எனும் தொகுப்பாகவும் இது வெளிவந்துள்ளது. தோட்டத்தில் லயத்தில் ‘பெரிய வீட்டில்’ பிறந்த பிள்ளையாக சி.வி.வேலுப்பிள்ளை தமது மூதாதையின் வருகையோடு பிணைந்த வாய்மொழி இலக்கியங்களை தொகுக்கவேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவராகவே வளர்ந்துள்ளார். 

தொழிலாளர்கள் தமது உடல் உழைப்பு மீது மட்டுமே நம்பிக்கை வைத்து கடல்கடந்து பிழைப்பு தேடிவந்தபோது தங்களுடன் கூடவே கொண்டு வந்த நாட்டார் பாடல்களே. இற்றை வரைக்குமான மலையக இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்கின்றது. அந்த நாட்டார் பாடல்களை தொகுக்க வேண்டும் என்கிற சி.வியின் எண்ணம் போற்றுதற்குரியது. அவர் சாதாரணமாக மேடையில் பேசும் பொது இந்த நாட்டார் பாடல்களையும் அதன் அர்த்தங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வாராம். அதேபோல் சந்தோஸமான பொழுதுகளில் இந்த நாட்டார் பாடல்களை பாடச்சொல்லி நடனமாடி மகிழ்வாராம் என அவருடன் கூடவே நாட்களைக் கழித்த மாத்தளை ரோகிணி அய்யாத்துரை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 ‘இனிப்படமாட்டேன்… என்கிற நாவலுக்கு அவர் முன்னுரை எழுத விளைந்த போது குறிப்பிடும் சி.வி. அவர்கள் எழுதியுள்ள வரிகளை இங்கு குறிப்பிடுவது பொருந்தும் என நினைக்கிறேன்.

‘எனது இளம் பராயத்தில் மாலை வேளைகளில் எனது பாட்டியின் அருகில் இருந்தவாறே கதைகளைச் சொல்லுமாறு நச்சரிப்பது எனது வழக்கம். பாட்டியும் எனக்கு எண்ணற்ற கதைகளை மறுக்காமல் சொல்லியிருக்கிறார். இருந்தும் ஒவ்வொரு முறை கதை சொல்லும் முன்பும் அவள் மெல்ல முனகிக் கொள்வது வழக்கம்…

‘…ம்…ம்… நான் பொறந்த கதைய சொல்வேனா… இல்ல நான் பட்ட கதைய சொல்வேனா…’ எனறு.

அன்று அவளின் அந்த புலம்பலுக்கு நான் எந்த அர்த்தததையும் கண்டேனில்லை. ஆனால் இன்றோ அது அவளது குரலாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் குரலாகவும் எனக்குப் படுகின்றது.

இன்று கதை கூற வரும் நானும் பாட்டியில் இருந்து சற்று வேறுபட்டு ..இனிப்படமாட்டேன்… என்று கதை சொல்ல வருகிறேன் போல தோன்றுகிறது.

என எழுதிச் செல்கிறார் சி.வி. தனது மூதாதையர் பட்ட அவலத்தை நான் ‘இனிப்படமாட்டேன்…’ என நெஞ்சுறுதியை உருவாக்குவதாக அமைந்துள்ளது அவரது தலைப்பு.
இத்தகைய இலக்கிய நெஞ்சத்தோடு எழுந்த சி.வியின் எழுத்துக்களும் படைப்புக்களும் வேறு சமூகத்தினருக்கும் சர்வதேசத்தக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் சி.வி அவர்கள் காட்டியிருக்கும் அவரது பண்பட்ட ஆளுமையை அவரை ஒரு ‘சமூகத் தொடர்பாடலாளர்’ எனும் ஆளுமையாளராகவும் பார்க்கத் தூண்டுகிறது.

மேலே காட்டப்பட்ட பல்வேறு ஆளுமையாக தனது செயற்பாடுகளை பிற சமூகத்தக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கக்கூடிய கடிதப்பரிமாற்றங்கள் பெரும் ஆதராங்களாகவுள்ளன. 

குறிப்பாக இந்தியாவில் டெல்லி பம்பாய் கல்கத்தா போன்ற வடமாநிலங்களில் இருந்தும் சென்னையிலிருந்தும் வெளிவரும் பல்வெறு பத்திரிகைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தனது படைப்புக்களையும் அந்த படைப்பின் உள்ளடக்கம் பற்றிய ஒரு விளக்கக் கடிதத்தையும் சி.வி. அவர்கள் அனுப்பியுள்ளார். அவ்வாறு அவர் எழுதுகின்ற கடிதங்களில் தனது படைப்புகள் சுமந்துவரும் மக்கள் கூட்டத்தின் அவல வாழ்வு தொடர்பாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனும் வேண்டுகோளை அவர் முன்வைக்கத் தவறவில்லை. அத்தகைய கடிதங்களுக்கு பதிலாக அவர் பெற்ற கடிதங்களும் சி.வியின் படைப்புகள் அந்த தரப்பினரை எவ்வாறு உணரச்செய்துள்ளது என்பதை எடுத்துச் சொல்வதாக உள்ளது. 

இந்தியாவின் ஜக்மோகன் வாச்சானி பி.லால் போன்ற பத்திரிகை ஆளுமைகளுடனும் பேராசிரியர் வி.சூரிய நாராயணணன், பேராசிரியர் எஸ்.ராமகிருஸ்ணன், திருமதி.லக்ஸ்மி கிருஸ்ணமூர்த்தி போன்றோருடன் அதிகளவான கடிதப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்;.

புகழ்பெற்ற ஓவியரும் கவிஞருமான ‘ஜோர்ஜ் கீற்’ அவர்கள் நெருங்கிய நட்புடன் சி.வியுடன் கடிதப்பரிமாற்றங்களைச் செய்துள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் மார்ட்டின் விக்கரமசிங்க அவர்களுடன் தமது படைப்புகள் குறித்த அதிகம் கருத்து பரிமாறியுள்ளார். சி.வி. யின் Born To Labour தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் ‘தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்த முக்கியமான பதிவு’ என பாராட்டியுள்ளார்.

அதேபோல கலாநிதி குமாரி ஜயவர்தன, ஆன் ரணசிங்க, யெஸ்மின் குணரட்ன, போன்ற ஆளுமைகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது.

தனது படைப்புக்களை நூலுருவாக்கம் செய்வது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்த திரு. பத்நாப அய்யருடனும், மு.நித்தியானந்தனுடன் அதிகமான தொடர்புகளை மெற்கொண்டுள்ளார். இனிப்படமாட்டேன் நாவலை இந்தியாவில் வெளிக்கொணர சிதமபர ரகுநாதன் அவர்களுடாக் அந்தனி ஜீவா அவர்கள் எடுத்த முயற்சிகள் தொடர்பாக கடிதங்களில் பிரஸ்தாபித்துள்ளார். இந்தக் கடிதப்பரிமாற்றங்களின் போது the Hundredth day’ மற்றும் Human Cargo போன்ற படைப்புகள் பற்றி எழுதியுள்ளார். Human Cargo என்ற படைப்பின் ஒரு பகுதியை பேராசிரியர் கைலாசபதி அவர்களக்கு பிரசுரத்துக்கு முன்னான வாசிப்புக்காக அனுப்பியதாக ஒரு கடிதம் கூறுகிறது. 

இந்த கட்டத்தில் சி.வி. கொண்டிருந்த அரசியல் தொழிற்சங்க தத்துவார்த்தத்துடன் ஒப்பிடும்;போது மார்க்சிய முற்போக்கு சிந்தனைகளில் தீவிரமாக இருந்த பேராசிரியர் கே.கைலாசபதி அவர்களுடனான உறவு முக்கியத்தும் உடையது. அவர்களுக்கு இடையேயான உறவு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளதை தொடர்பாடலை வைத்து புரிந்து கொள்ள முடிகின்றது. சி.வியின் பல்வேறு படைப்புகள் குறித்தும் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கருத்துக்களை பரிமாறியுள்ளமை மாத்திரமின்றி அவற்றை வெளியீடு செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை தெரியவருகின்றது. 

1981 ஆம் ஆண்டு சி.வி. அவர்களுக்கு பேராசிரியர் கைலாசபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தானும் நண்பர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்திருக்கும் சீன எழுத்தாளர் லூசுன் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வில் (26.09.1981) ‘நினைவுப் பேருரையாற்ற’ அழைப்பு விடுத்துள்ளார். இன்னுமொரு கடிதத்தில் சி.வி அவர்கள் விழாவுக்கு வந்து உரையாற்றியதையம் அதில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டதாகவும் சி.வியின் பதில் பதிவு செய்கின்றது. மலையகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அந்த நாளில் ‘நினைவுப் பேருரைக்காக’ சி.வி அழைக்கப்பட்டுள்ளார் என்பது சிவியின் ஆளுமையை காட்டி நிற்பதாகவுள்ளது.

அதேபோல 1982 ஜுலை 7ம் திகதி சி.வி அவர்கள் மு.நித்தியானந்தன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விழா எடுக்க சீன கொமியுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் என்னிடம் கூறினார். அதோடு திரு. நடன சபாபதியும் அதுபற்றி என்னிடம் கூறினார்’ என எழுதியுள்ளார். 

இந்த தொடர்பாடல்கள் மூலம்; சி.வி அவர்கள் இடதுசாரியாக இல்லாதபோதும் இடதுசாரி மாக்சிய கம்யுனிச செயற்பாட்டாளர்கள் இடையே நெருக்கமான உறவு கொண்டிருந்ததை அறிய முடிகின்றது. அவரது இலக்கிய படைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இடது சாரி தோழர்களும் உறவுகளைப் பேணியுள்ளமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மலையக மக்களின் வருகையையும் வரலாற்றையும் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ள Donovan Mouldrich அவர்கள் சி.வியின் Born to Labour தன்னை கண்ணீரில் ஆழ்த்தியாதாக குறிப்பிட்டுள்ளார். 

1988 ஆம் ஆண்டு Donovan Mouldrich அவர்கள் திருமதி வேலுப்பி;ள்ளைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
I had the privilege of knowing your husband for many years. He encouraged me in the writing of Two books about the plantation workers .

அதேநேரம் தனது நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில்
‘Mr.Vellayan who killed himself through overwork died on 2nd November 1971 at the age of 52. Mr.Velupillai died on 19 November 1984 at the age of 71. I hope this Book and its sequel on the tea workers will help to perpetuate their lifelong dedicated service to the working class movement.’ 

என கூறி தனது நூலை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். பறங்கிய இனத்தவரான டொனவன் மோல்ரிச் அவர்களை மலையக மக்கள் சார்ந்து வரலாற்று பதிவை எழுத வைத்த சக்தி சி.வியின் ஆங்கில எழுத்துக்களுக்கு இருந்துள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது.

எது எவ்வாறு அமைந்த போதும் சி.வி.அவர்களது எழுத்துக்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. ‘நாடற்றவர் கதை’ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள இர.சிவலிங்கம் அவர்களும், ‘சி.வியின் இலக்கிய நோக்கு - காலமும் கருத்தும்’ எனும் தலைப்பில் ஆய்வாளர் லெனின் மதிவானம் அவர்கள் எழுதியுள்ள விமர்சன குறிப்பிலும் ஏறக்குறைய ஒரே விதமான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதாவது சி.வியின் எழுத்துக்கள் மலையக வாழ்வியலின் துன்பியல் அம்சங்களை முன்னிறுத்திய அளவுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த போராட்டங்களையோ முனைப்புற்ற மக்கள் எழுச்சிகளையோ அவர் பதிவு செய்யவில்லை என்பதுதான் அந்த விமர்சனமாகும்.

 இர.சிவலிங்கம் தனது விமர்சனத்துக்கு தானே சொல்லும் பதிலாக இவ்வாறு எழுதுகிறார். ‘தொழிற்சங்க வாழ்க்கையில் சுரண்டும் சக்திகளை இனம் கண்டும் அவற்றை வெல்ல முடியாமல் தாமாகவே ஒதுங்கிச் செல்லவேண்டிய அனுபவத்தைப் பெற்ற கவிஞனின் கவிதைகளில் வேதனையையும் விம்மலையும்தான் காண முடியுமே தவிர எக்காளத்தையம் அறைகூவலையும் காணமுடியாது போனதில் வியப்பில்லை’ என்கிறார்.

அதேநேரம் 1971 ஆம் ஆண்டளவில் மாத்தளையில் நடைபெற்ற பிராந்திய இலக்கிய மாநாட்டில் மலையக இலக்கியம் குறித்த கட்டுரை ஒன்றை வாசித்த சி.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய பணிகள் பற்றி குறிப்பு ஒன்றை எழுதியிருக்கும் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

CV Velupillai writes for the last 35 years and yet he says that he is not a poet nor a writer, 
‘the subject I have chosen made me what I am’
சி.வி அவர்கள் தானே தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் மதிப்பீடு பற்றி எழுதியிருக்கும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதியிருக்கும் இந்தக் குறிப்பு முக்கியமானது. 

அதேநேரம்
1982 ஆண்டு துரநெ 15 ஆம் திகதி பேராசிரியர் கைலாசபதி அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில் சி.வி. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
;…… The wayfarer verses which you have read were written in 1946 when I led the famous Kneversmere Harthal of 75000 workers in Hatton Region’
‘In Ceylon’s Tea Garden was written during and after the 1952 satyagragaha performed before the prime ministers office.

எனவே அவரது நோக்கில் தானே முன்னின்று வழிநடாத்திய தொழிலாளர் ஹர்த்தால் ஒன்றை முன்னிறுத்தி எழுதிய ‘வழிப்போக்கன்’ என்கிற கவிதை நாடகம் மற்றும் குடியுரிமை பறிப்புக்கு எதிராக தான் பங்குகொண்ட பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தினையும் தான் படைப்பாக்கியுள்ளதாகவே கருதுகின்றார். அவரது பார்வையில் அவர் தனது சமூகத்திற்கான பேராட்டத்தை பதிவு செய்துள்ளதாகவே கருதுகின்றார் என்று கொள்ளலாம். 

அவரும் ஒரு தொழிற்சங்க, அரசியலைச்  சார்ந்தவர் என்றவகையில் அவர் சாராத அரசியல், தொழிற்சங்க பண்பாட்டு இயக்கங்களின் செயற்பாடுகளையோ போராட்டங்களையோ குறிப்பிடுவதில் இருந்து தன்னை தவிர்த்துக்கொண்டிருக்கலாம். இதனை ஒரு இலக்கிய நேர்மையாக கொள்வதா? அல்லது இருட்டடிப்பாகக் கொள்வதா என்பது விவாதத்துக்கு உரியது.

எவ்வாறு அமைந்தபோதும் 
சி.வி அவர்களே எழுதி வைத்ததுபோல் 
ஆழப் புதைந்த 
தேயிலைச் செடியின் 
அடியிற் புதைந்த 
அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் 
ஏறிமிதித்து 
இங்கெவர் வாழவோ 
தன்னுயிர் தருவன்

என மலையக மக்களின் நிலைமையை அந்த அந்த கவிஞனின் கல்லறையை பார்த்து வளர்ந்த பல ஆளுமைகளை மடகொம்பரை மண் கண்டுள்ளமை சி.வியின் இனிப்படமாட்டேன்…. என்ற கனவின் பெறுபேறாகக் கொள்ளலாம்…..

சிவி வேலப்பிள்ளை அவர்களுக்குப்பின்  இ.தொ.கா வில் இருந்து எம்.எஸ். செல்லச்சாமி, ரமேஸ் போன்ற அரசியல் வாதிகளும்  மலையக மக்கள் முன்னணியில் இருந்து வி.டி.தர்மலிங்கம் எனும் கல்வி, கலை, இலக்கிய, அரசியல் ஆளுமையும் தொழிலாளர் தேசிய சங்கத்தை மீளக்கட்டியெழுப்பியதில் பங்கேற்று பாராளுமன்ற உறுப்பினராகவம் திகழும் திகாம்பரம் போன்ற அரசியல்வாதியும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உபபீடாதிபதியான செல்வராஜா போன்ற கல்வியியல் சமூக கலை இலக்கிய ஆய்வாளர்களையும்  உருவாக்கித் தந்த மண்ணாக மடகொம்பரை மண்ணின் மைந்தர்களான எங்கெளுக்கெல்லாம் ‘ஹீரோவாக’ திகழும் சி.வி.வேலுப்பிள்ளையின் அர்ப்பணிப்பான வாழ்வும் பணியும் இன்று 100 வது ஆண்டில் நினைவு கூரப்படுவதுபோல் இன்னும் பல நூறு ஆண்டுகள் நினைவுகூரப்படுவது திண்ணம்.

(சி.வி.வேலுப்பிள்ளை நூற்றாண்டு நினைவை முன்னிட்டு – தமிழ் கதைஞர் வட்டம் நடாத்திய நிகழ்வில் ஆற்றிய நினைவுரை - 15-06-2014 கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
Share this post :

+ comments + 1 comments

வலைச்சரம் சிகரம் பாரதி மூலமாக தங்களின் பதிவினைப் பற்றி அறிந்தேன். தங்களின் பதிவு மூலமாக பல அரிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். நன்றி.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates