முன்னெப்போதும் இல்லாத வகை யில் தற்போது மலையக மக்களுக்கான வீடமைப்பு, காணி, கல்வி அவசியம் பற்றி அனைத்துத் தரப்பினராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. வீடமைப்பு, காணி கல்வி இவை மூன்றுமே மலையக மக்களின் முக்கிய பிரச்சினைகளாக இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.
தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மலையக மக்களிடையே ஆரம்பக் காலத்தில் தொழில் பிரச்சினை, சம்பளப்பிரச்சினை, வறுமை, நோய், மதுபான பாவனை போன்ற பிரச்சினைகளே முக்கிய இடத்தினை பெற்றிருந்தன. இந்த பிரச்சினைகளுடன் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் அதிகமாக தொடர்புபட்டிருந்தனர்.
இன்று மலையக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் என்றால் என்ன அதன் தாக்கம் எவ்வாறிருக்கும் அதன் மூலம் நாம் பெறக்கூடிய உரிமை என்ன என்பதை மலையக மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டுக்கே உரித்தான வாக்குரிமையின் பலத்தைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையிலேயே இன்று நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது விருப்புக்குரிய அல்லது தமது உரிமை, தேவை என்பவற்றுக்குக் குரல் கொடுக்கக்கூடிய உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றனர்.
கல்வியில் இன்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது ஏற்பட்டு வருகின்றது. கல்வியினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர் சமூகம் அளப்பரிய சேவை செய்து வருகின்றது. மாணவர்களும் கல்வியின் அவசியம் பற்றி உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டனர். இந்த நிலைமை தொடர வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் அயராது உழைக்க வேண்டும். அதன் மூலமே இந்தக்குறிக்கோளை எட்ட முடியும்.
அதேபோன்று இரண்டு நூற்றாண்டுகளாக லயன் காம்பிராக்களிலேயே அடைக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த மலையக சமூகம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடே லயத்து வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு காற்றோட்டமுள்ள சுகாதாரமான வசதியுள்ள தனித்தனி வீடுகளில் வாழ வேண்டும் என்று அவர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆர்வமாகும்.
இவ்வாறு லயத்து வாழ்க்கையிலிருந்து வெளியேறத் துடிப்பதில் தவறில்லை. அது அந்த மக்களின் உரிமை. அடிப்படை உரிமைகளில் ஒன்றான வசிப்பிட உரிமையை நியாயமான முறையில் பெறுவதற்கு அவர்களுக்கு எல்லா விதமான தகுதிகளும் இருக்கின்றன. அதேயே அவர்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.
ஜனாதிபதி தனது வரவு – செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்காக 50 ஆயிரம் மாடி வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதேபோன்று இந்திய அரசாங்கம் 5 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ளது. இவற்றையெல்லாம் விரைவுபடுத்தி பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு மலையக அரசியல் தலைவர்கள் கைகளிலேயே இருக்கிறது.
காணிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் இந்த நாட்டில் மலையக மக்களே காணி உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் வாழ்ந்து வரும் லயன் காம்பிராவை தவிர அவர்களுக்கு வேறேதும் இல்லை. அதாவது ஒரு துண்டு காணி கூட அவர்களுக்கு இல்லை.
அவர்கள் தற்போது வசித்துவரும் லயன் காம்பிராக்கூட தோட்ட நிர்வாகத்துக்கே சொந்தமானது. எனவே காணியற்ற அவர்களுக்கு காணியைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மலையகத்தில் கைவிடப்பட்டுள்ள தேயிலை பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத தரிசு காணிகளை மலையக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மத்திய மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களால் மேடைகளில் இது பற்றி முழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதுபற்றிய கதையே இல்லை. அதை மறந்து விட்டவர்களாகவே மலையகத் தலைவர்கள் காணப்படுகின்றனர்.
அரசினால் அல்லது நாட்டின் தலைவரினால் ஒரு திட்டம் அறிவிக்கப்படும்போது அதனை விடாப்பிடியாக அவ்வப்போது வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களிடமே உள்ளது. ஆனால் அவ்வாறான ஒரு திட்டத்தை மலையகத் தலைவர்கள் எவரும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எந்தவொரு தலைவரும் இதுபற்றி பேசுவதில்லை. பேசியதுமில்லை.
மலையக இளைஞர்களுக்கு தரிசுக் காணிகளைப் பெற்றுக்கொடுத்தால் தங்களது இருப்புக்கே ஆபத்து வந்து விடும் என்று அஞ்சுகின்றனரா? அல்லது மலையகத்தில் அரசியல் செய்ய முடியாமல் போகுமென்று நினைக்கின்றனரா தெரியவில்லை.
தமது மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ வேண்டுமென்று நேர்மையாகவும் சமூக பற்றுடனும் சிந்திக்கும் தலைவர்கள் இதுபோன்று கிடைத்த சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடமாட்டார்கள். அரசையும் நாட்டுத் தலைவரையும் தொடர்ச்சியாக வலியுறுத்திப் பெற்றுக் கொடுத்திருப்பார்கள்.
இவ்வாறு பல முக்கிய தேவைகள் இன்று மலையக மக்களுக்கு உள்ளன. இவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த மேதினத்தில் மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உறுதி கொள்ள வேண்டும். இதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும். ஆனால் மலையக சமூகத்துக்கென மத்திய மாகாணத்தில் வழங்கப்பட்டு வந்த தமிழ்க் கல்வியமைச்சு பறிக்கப்பட்டமை பெரும் அநீதியாகும். அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் குரல் கொடுக்காமல் மௌனம் சாதித்து வருவது மலையக சமூகத்துக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
இந்த தமிழ் கல்வியமைச்சைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யாதது சமூகத்தை ஏமாற்றும் செயலாகும். முதலில் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு பறிக்கப்பட்ட போதே அதற்கு எதிராக மலையக அரசியல் தலைமைகள் குரல் கொடுத்திருந்தால் மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு பறிக்கப்பட்டிருக்காது. இதனை புரிந்து கொண்டிருந்தும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் போனது ஏன்? உண்மையாக சமூகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்க்கல்வி அமைச்சைப் பெற்றிருக்க முடியும்.
நன்றி - வீரகேசரி 04.05.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...