Headlines News :
முகப்பு » » நூற்றாண்டை எட்டும் ஸி.வி. - சாரல் நாடன்

நூற்றாண்டை எட்டும் ஸி.வி. - சாரல் நாடன்


மலையக இலக்கியத்தின் கொடுமுடி என பலராலும் அறியப்பட்ட ஸி.வி. வேலுப்பிள்ளைக்கு இது நூற்றாண்டாகும். செப்டெம்பர் பதினான்கு அவரது பிறந்ததினம்.

ஒரு திறமையான படைப்பாளி தான் பிறந்து நூற்றாண்டு ஆனதன் பின்னாலும் வாசகனோடு பேசிக் கொண்டிருப்பான் என்று கூறப்படுவது எவ்வளவு உண்மையான வாசகம். ஸி.விக்கு இது பொருந்துமா? நிச்சயம் பொருந்தும்.

கவி அரசர் தாகூர் இலங்கை வந்த 1934ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தன்னுடைய 'விஸ்மாஜினி' இசை நாடக நூலை அவரிடம் கையளித்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்த ஸி.வி. 1984 நவம்பர் 19இல் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் மரணமுறும் வரை ஓயாதுழைத்தார். அவரது கடும் உழைப்பில் நாவல்கள் தோன்றின கட்டுரைகள் உருவாகின. அவரது தேடுதலால் தோட்டங்களில் தொழிலாளர் நாவில் உறங்கிய பாடல்கள் ஆங்கில உருவெடுத்து அகிலத்தின் கண்களுக்கு விருந்தாகின. அவரது எழுத்தில் தெரிந்த உண்மை ஒளி பத்திரிகை வாயிலாக படித்த சிங்களவர்களையும் கற்றறிந்த தமிழர்களையும் ஒருங்கே கவர்ந்திருந்தன. பத்திரிகாசிரியர்கள் அவரின் எழுத்தைச் சிலாகித்தனர். ஆர். ஆர். குரோசட் தம்பையா, தம்பிமுத்து, ஜோர்ஜ்கீட், விக்டர் லூயிஸ், தேவர் சூர்யசேனா, எஸ்.ஏ. விஜயதிலக்க, எஸ். ஜே. கே. கிரவுத்தர் அவர்களில் சிலராவர். சிங்கள இலக்கியத்தில் அதிகம் மதிக்கப்படுகிற மார்டின் விக்கிரமசிங்கா இவரின் நூலுக்கு அணிந்துரை நல்குவதை விரும்பி மேற்கொண்டார்.

இலங்கை தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் மலையக இலக்கியத்தின் அதோரிட்டியாக அவரையே அங்கீகாரம் செய்தனர். அவர்களின் காலத்தில் வட இலங் கையிலும் கிழக்கிலங்கையிலும் நடைபெற்ற விழாக்களில் அழைக்கப்பெற்று கெளரவம் தந்தனர்.

அவரைப்பற்றிய புரிதலும் அறி வும் தெளிவும் இன்றைய காலத்து இளம் இலக்கிய கர்த்தாக்களுக்கு இல்லாமலிருப்பதற்கு அவர் படைப்புகள் அதிகம் இல்லாதிருப்பதும் அவரைப்பற்றிய ஆக்கபூர்வமான அறிமுகங்களைத்தரும் நூல்கள் இல்லாதிருப்பதும் பிரதான காரணிகளாகும்.

ஸி.வியின் நாவல்கள் மூன்று அச்சில் வெளியாகியுள்ளன. அவை இப்போது கிடைப்பது அரிதாகி விட்டன. அவை மீள் பிரசுரம் செய்யப்படல் வேண்டும். 'மலையக மக்கள் பாடல்கள்' என்ற அவரின் நாட்டுப் பாடல்கள் தொகுப்பு நூலும் இப்போது பார்வைக்கு கிடைப்பது இல்லை. அவரது பங்களிப்புத் தெரிவதற்கு அதுவும் மீள் பிரசுரம் செய்யப்படல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரைப் பற்றி அறிவதற்கு நூல்கள் எதுவும் கிடைப்பதில்லை. சென்ற ஆண்டு இறுதியில் இலங்கைத்தமிழர் சுடர்மணிகள் வரிசையில் அவரைப்பற்றிய குமரன் புத்தக இல்லம் வெளியிட்டிருக்கும் நூல் இது சம்பந்தமான ஒரு ஆரோக்கியமான பதிவாகும். அவரைப் பற்றிய தேவையான தகவல்களை இந்த நூலில் கண்டறிய முடியும். இத்தகவல்கள் இல்லாமல் வெறுமனே அவரைப்பற்றி விமர்சன பூர்வமான கருத்துக்களை வார்த்தை ஜாலங்கள் மூலம் பிம்பமாக்கிக் காட்டுவது ஸி.வியை வாசகனிடம் எடுத்துச் செல்ல உதவாது.

ஸி.வி. மடகொம்பறை தோட்டத்தில் பிறந்தார் என்பதற்கு அங்குள்ள நினைவுக் கல்லறை ஒன்றுதான் அத்தாட்சி. அக்கல்லறை தலங்கமையிலிருந்து மடகொம்பறைக்கு வந்தமைக்கான காரணத்தை அறிவதன் மூலம் அவரின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். வீடற்றவன் நாவல் மூலம் ஒரு சமுதாயத்தின் வரலாற்றை எழுத்தில் வடித்த ஒருவரின் வரலாறு சொந்த வீடில்லாத காரணத்தால் இவ்விதம் வீதிக்கு வந்திருப்பதை அறிந்து எவரும் விசனிக்காமல் இருக்க முடியாது.

அவரை இலங்கை 'நவஜீவன்' பத்திரிகையிலும் 'ஈழநாடு' பத்திரிகையிலும் பார்த்து படித்து மகிழ்ந்தவர்கள் இன்று அவரது நினைவுக்கூரலைக் குறித்தெழுதுவதற்கு இல்லாமற் போய்விட்டார்கள். அவரது ஆங்கில எழுத்துக்கள் கூட உரிய அங்கீகாரம் இல்லாதிருப்பதை அவதானிக்க முடிகிறது.

காலனித்துவ காலத்தில் அவர் ஆங்கில இலக்கிய உலகில் பிரகாசித்ததையும் சுதந்திர இலங்கையில் அவர் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்ததையும் குறித்து பெருமைப்படுகிற நாம் அவரின் ஆங்கில படைப்புகள் உரிய கெளரவத்தைப் பெற்று ஆவணப்படுத்தப்படாததை கவனத்தில் எடுத்தல் நலம்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு இருபதாண்டு கால இலக்கிய அனுபவத்துடன் ஒருவர் எழுதிய நூலொன்றை பார்க்க நேர்ந்தது. ஸி.வியைப் பற் றிய தவறான தகவல்கள் தரப்பட்டு பிழையான முடிவுகளை எடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. எதிர்கால இலக்கிய உலகம் இத்தகு தவறான தகவல்களை வைத்துதான் ஸி.வியை எடை போட நேரிடும்.

அவருக்கு மக்கள் கவிமணி பட்டத்தை சூட்டியவர் அமரர் கைலாசபதியாவார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 1983ஆம் ஆண்டு நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் மலையகக்கலை இலக்கிய பேரவையின் முன்னெடுப்பால் நடந்த நிகழ்ச்சியிது. இந்நிகழ்ச்சி கூட சரியாகப் பதிவாகவில்லை.

தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை நான் இப்போது உணர்ந்து வருகிறேன் என்று 1893இல் சிறையிலிருந்த போது எழுதிய மகாத்மா காந்தி தன்னுடைய சத்திய சோதனை நூலில் (பக்கம் 200) தமிழ் படிப்பதற்கு தனக்கு கிடைத்த தமிழ்ச்சுயபோதினி நூல் மிகவும் உதவியாக இருந்தது என்று கூறுகிறார். இந்த சத்யசோதனை நூல் மூலம் தான் தமிழ்ச் சுயபோதினி என்ற ஆங்கில நூலைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.

ஒரு கட்டுரை நூலில் தரப்படுகிற தகவல்கள் சரியாக இருக்க வேண்டுமென்பதற்கு காந்தியின் சத்திய சோதனை ஓர் உதாரணம் மாத்திரமே. ஸி.வியின் ஆங்கில கவிதை ஒன்றை எடுத்தாளுகின்ற போது ஆங்கிலத்தில் இல்லாத ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் இக்கட்டுரையாசிரியர் பாவித்திருக்கிறார்.

இந்தக்கட்டுரை மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இக்கட்டுரைகளை படிக்கும் இன்றைய இலக்கிய கர்த்தாக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? என்பதை ஸி.வியைப்பற்றி எழுதுபவர்கள் கவனித்திட வேண்டும்.

ஓர் ஆக்கபூர்வமான சிந்தனைவாதியாக நடைமுறைக்கு இணங்கிய இலட்சியவாதியாக அல்லும் பகலும் மனித ஜாதியின் மேம்பட்ட வாழ்க்கைக்காக தனது எழுத்தை பாவித்தவர் அவர்.

1947இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆறு இலங்கை இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களின் ஸி.வியின் பேச்சுகள்தான் ஹன்சார்டில் தெளிவாக இருக்கின்றன.

'நாம் அநகாரிக தர்மபாலாவைப் பற்றிய ஒரு புத்தகம் போட வேண்டும். சிங்கள மொழியில் அகராதி இல்லை. அகராதியும் வெளியிட வேண்டும்' என்ற அவரது 9.12.1947இல் பேசிய பேச்சை இப்போது படிக்கும் போது எந்தவித ஐயமுமின்றி இந்த நாட்டுக்காகச் சேவை செய்ய தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உன்னத தேச ஊழியனின் உள்ளத்தை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

ஸி.விக்கு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு அரசாங்கத்தில் விண்ணப்பம் ஒன்றை ஹட்டன் தமிழ்ச்சங்கம் செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து வலியுறுத்திச் செயற்படுத்துவதற்கு இலங்கை நாடாளு மன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும் என்று ஸி.வியின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறோம்.

நன்றி - வீரகேசரி 04.05.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates