அடிமை, அரையடிமை, கொத்தடிமை, கூலி என்ன வேறுபாடு?
பெருந்தோட்டங்களில் தொழில் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட இந்திய கூலித் தொழிலாளர்களின் சமூக நிலைப்பாடு தொடர்பில் பல்வேறு சமூக, பொருளாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கருத்துத் தெரிவித்தனர். "கூலி' என்ற பதத்துக்கும் "அடிமை' என்ற பதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காணப்பட்டது என்பதை ஆராய்ந்து அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
"கூலி' என்ற பதப் பிரயோகம் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களை மாத்திரம் குறிக்கும் ஒரு சொல்லாகவே இனங்காணப்பட்டுள்ளது. மொறீசியஸ், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் இவர்களை "கூலி'கள் என்றே இனங்கண்டுள்ளனர்.
பண்டைய ரோம அடிமைகள், 17ஆம் நூற்றாண்டின் கறுப்பின அடிமைகள் ஆகியோர் எந்தவித உரிமைகளும் வழங்கப்படாத, சந்தையில் விலைக்கு விற்கப்படும் அடிமை நிலையிலேயே இருந்தனர்.
ரோம அரசில் அதிக அடிமைகளை வைத்திருப்பவன் செல்வந்தனாகக் கருதப்பட்டான். இவர்கள் அடிமைகளையும் பண்டங்களாகவே கருதினர். இத்தகைய அடிமை நிலையில் இருந்து 19ஆம் நூற்றாண்டில் இந்தியத் தமிழ் "கூலி'கள் சிறிதளவிலேயே வேறுபடுகின்றனர். 1872 ஆம் ஆண்டில் கூலித்தொழிலா ளர் தொடர்பில் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்த தோட்டத் துரை ஒருவர் அடிமைகளில் இருந்து கூலித் தொழிலாளர்களின் நிலை மிகச் சிறியளவிலேயே வேறுபடுகின்றது என்று தெரிவித்துள்ளார். இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து சுதந்திரமாக வருவதற்கும் போவதற்கும் அனுமதிக்கப்பட்டபோதும்,அவர்களின் சுதந்திரம் கங்காணிகளாலும் கடனாலும் கட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளரை அரையடிமைகள் அல்லது கொத்தடிமைகள் என்று அழைப்பது என்பது, இலங்கையில் அவர்களின் வரலாற்றுக் காலம் முழுவதும் இடம்பெற்றுள்ளது. எனினும், ஐரோப்பிய நாடுகளில் இருந்த முறை போல் இவர்கள் அடிமை எஜமான் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை.
1833ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்றிய அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தால் பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் இருந்த 770,000 அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்தச் சட்டம் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எட்டவில்லை. எனினும், 1844 ஆம் ஆண்டின் கிழக்கிந்திய கம்பனிச் சட்டத்தின் ஒரு பிரிவின் மூலம் இந்நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
எது எப்படி இருந்தபோதும் கங்காணி, கன்டாக்கு, ஏனைய தோட்டத்து அதிகாரிகள், துண்டு முறை, பத்துச் சீட்டு, பிரஜாவுரிமை ஒழிப்புச் சட்டம் போன்றவற்றால் 1980கள் வரையில் ஏதோ ஒரு வகையில் இவர்கள் மத்தியில் அடிமைத்தனம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதன் எச்ச சொச்சங்களே இன்றும் இவர்களை சமூக உயர்வு நோக்கிய அசைவியக்கத்தில் இருந்து தடுத்து வருகின்றது.
----
முதுகில் அடித்தால் பரவாயில்லை வயிற்றில் அடிக்க வேண்டாம்!
இலங்கையின் பெருந்தோட்ட வரலாற்றில் கங்காணிமாரின் காலடிச் சுவடுகள் மிகக் கொடூரமாக பதிந்து கிடக்கின்றன. இவர்கள் இதயமே இல்லாத படுபாதகர்களாக இருந்திருக்கின்றனர். சபிக்கப்பட்ட மனிதர்கள் என்று கூட கூறலாம். இச் சமூகத்தை இறுக்கமாக ஒட்டிக் கொண்ட இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் இவர்கள். இச்சமூகத்தினர் மீது மிகுந்த கட்டுப்பாட்டை இவர்கள் கொண்டிருந்தனர். தொழிலாளர் எல்லா வகையிலும் கங்காணிமாரில் தங்கியிருந்ததால் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் தொழிலாளர்கள் இவர்களின் கிடுக்கிப் பிடியில் சிக்கித் தவித்தனர்.
தென்னிந்திய மாவட்டங்களில் இருந்து கூலித் தொழிலாளர்களை தொகையாக அழைத்து வந்து தோட்டங்களில் விடுவது, தோட்டங்களில் அவர்களை மேற்பார்வை செய்வது, தோட்டத் துரைமாருக்கும் தொழிலாளருக்கும் இடையில் தரகராகப் பணிபுரிவது, தொழிலாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் சுக துக்க நிகழ்வுகளில் ஈடுபடுவது முதலான பல்வேறு பணிகளை கங்காணிகள் மேற்கொண்டனர். எனினும், இத்தகைய பணிகளின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பையும் சேமிப்பையும் சுரண்டினர்.
நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கங்காணிமார் தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்தனர். அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாத தொழிலாளி வாழ்நாளெல்லாம் கங்காணிக்கு உழைக்கும் கொத்தடிமையாக மாறி விடுவான்.
தோட்டத்தில் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு தொழிலாளியின் சார்பிலும் தலைக்கு இவ்வளவென கங்காணிக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. வேறு பல விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. ஆரம்ப காலங்களில் தோட்டத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதத்துக்கு கங்காணிக்கு ஒரு "பென்ஸ்' வீதம் வழங்கப்பட்டது. இதனை "பென்ஸ் மனி' என்றார்கள். அவர்கள் அன்றாடம் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவருக்கிருந்தது.
பல சந்தர்ப்பங்களில் தொழிலாளி வேலை செய்திருப்பதாகக் கணக்குக் காட்டி அதற்கான கொடுப்பனவை கங்காணி துரையிடமிருந்து திருட்டுக் கணக்குக்காட்டி பெற்றுக் கொள்வார். மறுபுறத்தில் அவ்விதம் வேலை செய்வதாகக் காட்டியதால் பொய்ப் பெயர் போட்டதற்காக தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையைக் கழித்து அதனையும் பிடுங்கிக் கொள்வார். தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்வதாகக் காட்டி தனது வேலைகளை செய்ய வைப்பார்.
தொழிலாளி வேலை செய்யாமல் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கங்காணி ""அவன் கம்பளி வாங்கப் போயிருக்கிறான்'', ""திடீர் சுகவீனம் வந்து விட்டது'' என்று கூறி அவர்களைத் தப்புவிப்பார். அதற்காகவும் கங்காணி பின்னர் காசு பறித்துக் கொள்வார். தொழிலாளிகள் செய்யும் தவறுகளுக்கு பல்வேறு தண்டனை முறைகள் அமுல்படுத்தப்பட்டன. அவர்களிடம் தண்டப் பணமும் அறவிடப்பட்டது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தமக்கு முதுகில் அடித்தால் பரவாயில்லை என்றும் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும் தொழிலாளர்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.
----
வேலை செய்ய முடியாதென்றால் முப்பது கசையடிகள்
கோப்பிப் பெருந்தோட்டங்கள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டபோது தொழிலாளர் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது. என்ன முயற்சி செய்த போதும் உள்நாட்டு சிங்களவர்களை பெருந்தோட்டங்களில் வேலை செய்ய ஈடுபடுத்த முடியாமல் இருந்தது. இதற்கு என்ன காரணம் என பல விவாதங்கள் எழுந்தன. இலங்கையை அவ்வப்போது நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநர்கள், இராஜாங்க செயலாளர்கள், தோட்டத் துரைமார்கள் இங்கிலாந்தில் இருந்து அதிகாரிகளுடன் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றங்களில் இது பற்றி தெரிவித்துள்ளனர்.
இதற்கு பொதுவான காரணமாக சிங்களவர்கள் வேலை செய்ய மிகச்சோம்பேறிகள் என்றே அநேகர் தெரிவித்தனர். ஆனால், அதற்கும் மேலாக இதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று பலர் ஆராய்ந்து பார்க்காமல் இல்லை. ஏனெனில், கோப்பித் தோட்டங்களில் ஒரு நாள் வேலை செய்வதற்கு ஒன்பது பென்ஸ் அல்லது ஒரு சிலிங் வரை கூலி வழங்கப்பட்டது. இது அக்காலத்தில் ஒரு நாளில் உழைக்கக் கூடிய உயர் வருமானமாக கருதப்பட்டது. அப்படி இருந்தும் சிங்களவர்கள் தோட்டங்களில் வேலைக்கு வர மறுத்தனர்.
ஆரம்ப காலங்களில் இலங்கையின் வருவாய்த்துறை ஆணையாளராக இருந்த வில்லியம் பொய்ட் (ஙிடிடூடூடிச்ட் ஆணிதூழூஞீ) என்பவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் வாழ்க்கையில் பண ரீதியில் முன்னேற வேண்டுமென்ற அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை. தமது விளை நிலங்களில் ஒரு தடவை விதைத்து, அறுவடை செய்து அடுத்த அறுவடை வரை உண்ணுகிறார்கள். இடையில் அவர்களுக்கு பணத் தேவைகள் இருக்க வில்லை என்று கூறியுள்ளார்.
ரால்ப் பீரிஸ் (கீச்டூணீட கடிழூணூடிண்) என்பவர் சிங்களவர்களுக்கு பணம் உழைக்க வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. சொத்து சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கருதவில்லை. அவர்களின் வாழ்க்கை எதிர்பார்ப்பு மிகக் குறைவானதாக இருந்தது. இதற்கு அவர் 1660 முதல் 1679 ஆம்ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தில் சிறைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ரொபர்ட் நொக்ஷின் வார்த்தைகளை உதாரணமாகக் காட்டுகிறார். ரொபர்ட் நொக்ஷின் கூற்றுப்படி அவர்களுக்கு வாழ்க்கையில் உணவும் அன்றாடத் தேவைகளையும் தவிர வேறு தேவைகள் இருக்கவில்லை. சொத்துகள் அதிகரித்தால் அதற்கு கப்பம் கட்ட வேண்டிய வரிகளும் அதிகரித்தன என அவர்கள் கருதினர்.
இக்காலத்தில் வேலை செய்ய மறுப்பவர்களுக்கு தண்டனையாக கசையடிகள் வழங்கப்பட்டன. பிரித்தானியர் இத்தண்டனையை அடிக்கடி வழங்கினர். 1828, ஏப்ரல் 28, ஆம் திகதி அப்போதிருந்த பிரதம செயலாளர் ரொ÷பர்ட் அர்புத்நொட் (கீணிஞழூணூவ அணூஞதவடணணிவ) என்பவரால் அழைத்தபோது வேலைக்கு வர மறுப்பவர்கள் பாதி வேலையில் விட்டுச் செல்பவர்களுக்கு 30 கசையடிகள் வரை வழங்கப்படவேண்டுமென்று சட்டம் ஒன்று கொண்டு வந்தார். ஒரு சமயம் மத்திய மாகாணத்தின் வலப்பனை என்ற இடத்தில் 100 பேர் வேலை செய்வதற்கு ஒப்பந்தப்படி அமர்த்தப்பட்டிருந்தபோதும் வேலைக்கு வரவில்லை. அவர்கள் வேலைக்கு வராததால் கசையடி வழங்க உத்தரவிடபட்டது. முதலில் அவர்களின் தலைவனுக்கு கசையடி வழங்கப்பட்டது. வழங்கப்படவிருந்த 30 கசையடிகளில் 16 கசையடிகள் நிறைவேற்றப்பட்ட போது அவர்கள் அனைவரும் தாம் ஒழுங்காக வேலை செய்வதாக ஒத்துக்கொண்டதை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
பொது வேலைகள் செய்வதற்கு உள்நாட்டுத் தொழிலாளர் கிடைக்காமையால் முதன் முறையாக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களை தருவித்தவர் ஆள்பதி பிரட்டரிக் நோர்த் (ஊணூழூஞீழூணூடிடு Nணிணூவட ) (இலங்கையின் முதல் பிரித்தானிய ஆள்பதி) 17981805 இவர் மேற்கொண்ட கண்டிப் படையெடுப்பின்போது இராணுவத்துக்கு உதவுவதற்காக 5,000 தென்னிந்திய கூலித் தொழிலாளர்கள் கொண்ட உப படையொன்றை இவர் அமைத்தார்.
தொடரும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...