இந்த நாட்டுக்கு சுமார் பதினெட்டு தசாப்தங்களுக்கு மேலாக அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்த மலையக பெருந்தோட்ட சமூகம் இன்னும் முழுமையான உரிமைகளை பெறாதுள்ளது. வஞ்சிக்கப்பட்ட இந்த சமூகத்தின் அவலத்தைப் போக்க அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மலையக மக்கள் 1823ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்நாட்டின் பெருந்தோட்டத் தொழிற்றுறைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டனர். 1864இல் இந் நாட் டுக்கு தனுஷ்கோடியிலிருந்து தலை மன் னாருக்கு ஆதிலெட்சுமி என்ற கப்பலில் அழைத்து வரப்படுகையில் கப்பல் கடலில் விபத்தில் சிக்கியது. அன்றைய தினம் 120 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஆதிலெட்சுமி கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 7 பயணிகள் மற்றும் 13 மாலுமிகள் மட்டுமே உயிர் தப்பினர். ஏனையோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
1912 இல் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் ஆதிலெட்சுமி கப்பல் தொடர்பிலும் ஆய்வை மேற்கொண்டால் பல இரகசியங்களை வெளிக் கொணரலாம்.
1931 ஆம் ஆண்டு காலகட்டத்தின் சனப்பரம்பல் புள்ளி விபரப்படி இந்த நாட்டில் 8,18,500 இந்தியர்கள் இருந்துள்ளனர். இவ ர்களில் தமிழ் மக்களுடன் இந்திய வியாபாரிகள், மார்வாரிகள், குஜராத் வியாபாரிகள் என பல தரப்பினர் அடங்குவர். இம்மக்களில் தோட்டத் தொழிலாளர்களாக 1931இல் 6,92,540பேர் பதிவாகியுள்ள னர். இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதில் பெருந்தோட்ட பயி ர்ச்செய்கை பெரும் பங்கு வகித்த காலம் அது.
இலங்கையை 1860ஆம் ஆண்டளவில் உலக பொருளாதார சந்தை வரை இழுத்துச் சென்றதின் பெரும் பங்கை மலையகத் தமிழர்களே வகித்திருந்தமை மறுக்க இயலாத உண்மையாகும். அன்று பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட நாட்டின் இதர துறைக ளான துறைமுகம், கட்டட நிர்மாணப் பணி கள், நகர சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மலையகத்தவர்களின் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது. ஆனாலும், மலையக சமூகத்தின் பிரச்சினைகள் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படாத நிலைமையே மேலோங்கி இருந்து வந்துள்ளது.
19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு இந்தியத் தமிழர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதை மலையக அரசியல்வாதி களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண் டும். இந்நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பிய மலையக சமூகம் எவ்வித பலனையும் அடையாத சமூகமாகும். மலையக சமூகத்துக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. காலத்துக்கு காலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஐ.தே.கட்சியின் அரசால் 1948 இல் பிரஜா உரிமை பறிக்கப்பட்டு மலையக சமூகத்தின் அங்கீகாரத்தையும் அரசியல் விடிவையும் இல்லாதொழித்தனர். 1960களுக்குப் பின் னர் பேரினவாத சக்திகளின் தூண்டுதலி னால் இந்திய அரசுடன் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோவின் தலைமையிலான அரசு இந்நாட்டில் இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. அதற்கமைய இரு ஒப்பந்தங்கள் இந்திய அரசுடன் 1964இலும் 1974இலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களும் பெரும் அரசியல் பின்னணிக்கு மத்தியிலேயே நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீ மாவோ –சாஸ்திரி ஒப்பந்தம் 30.10.1964 இல் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஒப்பந்தங்கள் இரண்டுமே மலையக மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்கவில்லை. கையிலிருந்த அற்ப சொற்ப சலுகைகளை யும் இழக்க வேண்டி ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் கீழ் 1968ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டுக்கு திரும்பிய மலையக மக்கள் தமிழகத்தின் நீலகிரியிலும் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மிகவும் துயரத்திற்கு மத்தியிலேயே இன்றும் வாழ்கின்றனர். அம்மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை. சொந்த நாட்டை நம்பிச் சென்றவர்கள் அங்கும் அந்நியர்களாக்கப்பட்டனர். அவர்கள் மீது சிலோன்காரர்கள் என்ற அவல முத்திரையும் குத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளை சமமாக அனுபவிக்கும் உரிமையை இழந்து பெருந்தோட்ட மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்கின்றனர். இந்நாட்டின் தேசிய இனங்களின் மலையக மக்களும் ஒரு பிரிவு என்பதை எவரும் மறுக்க இயலாது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுடன் செய்து கொண்ட இரு ஒப்பந்தங்களினதும் ஷரத்துக்கள் அனைத்தும் சிங்கள இனத்துக்கு சார்பாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலையகத்தின் அரசியல் கட்சிகள் ஆதிக்கம் மறைய வேண்டும். மலையக கட்சிகள் இணைந்து ஒரு தலைமையின் கீழ் செயற்பட வேண்டும். இக்கூட்டணியானது மக்களை தலைமையாகக் கொண்டு அமை யவேண்டும். முதலாளித்துவம் இல்லாத தலைமையே மலையகத்திற்கு தேவையா கும். இந்திய அரசின் 4000 வீடமைப்புத் திட்டத்தை இன்று அரசியல் மயமாக்க மலையக கட்சிகள் முனைப்போடு செயல்படுகின்றன. இவ்வீடமைப்புத் திட்டம் முறையாக செயற்படுமா என்பதை காலமே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இந்திய அரசின் நேசக்கரம் எமக்குத் தேவை. உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவின் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளி தமிழ் மக்களான மலையக மக்களின் வாழ்வில் புதியதோர் அத்தியாயத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மலையக மக்கள் தொடர்ந்து இந்நாட்டை ஆட்சி செய்தோரால் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகளும் சிதறிப் போகாது பேசப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதிகாரப்பகிர்வு பற்றி இந்தியாவின் கடந்த காலத்து அரசுகளுடன் பேசுகையில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றியே பேசப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தைகளின் போது மலையக மக்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மலையக அரசியல்வாதிகளும் ஆர்வம் செலுத்தவில்லை. தென்னிந்திய தமிழர்களை இந்நாட்டின் பெருந்தோட்டங்களுக்கு அழைத்து வந்தமைக்கு அன்றைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரே காரணமாகும். அவர்களும் எமது மூதாதையர்களின் உழைப்பை மட்டுமின்றி, எமது சமூகத்தின் நலனில் கருணை காட்டாது புறம் போக்கு காணியைப் போன்று தனிமைப்படுத்தி இந்நாட்டை விட்டு ஓடிவிட்டனர். இன்று எமது சமூகத்துக்கு இந்திய அரசின் தேவை அவசியமாக உள்ளது.
மலையகத் தமிழர்கள் இலங்கை – இந்தியாவுக்கிடையில் பயணம் செய்த இராமனுஜன் கப்பலின் சேவையும் 1984 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது. தூத்துக்குடி செட்டியார் ஒருவருக்கு சொந்தமான இக்கப்பல் இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தில் பதிவாகி இருந்தது. பல வரு டங்களாக பல இலட்சம் மக்களை இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அழைத்து வந்த கப்பல் இது. 1984க்குப் பின்னர் இக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மும்பாய் வர்த்தகருக்கு விற்கப்பட்டது. இக் கப்பல் மூலமாகவே ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு மலையக சமூகத்தினர் திரும்பிச் சென்றனர்.
1984இல் நிறுத்தப்பட்ட தனுஷ்கோடி – தலைமன்னார் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இன்று இந்திய அரசின் உதவியோடு மதவாச்சியிலிருந்து மன்னார் வரையிலான ரயில்பாதை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ் வேளையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பது இலகுவானதாகும்.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்தி வம்சாவளி தமிழர்க ளான மலையக மக்களை கைவிடாது என் பது தீர்க்கமான செய்தியாகும். மலைய கத்தின் வீடமைப்புத் திட்டம், பல்கலைக் கழகம், கப்பல் சேவை, நலன்புரி விடயங் கள், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி நிலையங்கள், கணனி கூடங்கள் என்று எமது சமூகத்தின் எழுச் சிக்கான திட்டங்களை கோரிக்கையாக பிர தமர் மோடியின் அரசிடம் முன் வைக்க வேண்டும். அரசில் கலவை இல்லாத புத்திஜீவிகளால் இக்கோரிக்கை இந்திய அரசிடம் முன்வைக்கப்படல் அவசியமா கும். இந்திய அரசிடமிருந்து எமது கோரிக் கைகளை சமூகம் பெற்றுக் கொள்ள அனை வரினதும் ஒருமைப்பாடு அவசியம். இதை உரியவர்கள் உணர்ந்தால் மலையக சமூகத் தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி - வீரகேசரி
+ comments + 1 comments
அது உண்மைதான்
Thanks "Sara"
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...