கடந்த புதுவருட விடுமுறையில் நீண்ட நாட்களுக்கு பின், அதிக
நாட்கள் ஹட்டனில் தங்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. எங்காவது வெளியில் சென்று வருவோம்
என்பது எனது மனைவியின் நச்சரிப்பு. எங்கு செல்வது என்பதறியாமல் திணறிய போது எனது ஆசிரிய
நண்பியிடம், எங்கு சென்று இன்றைய நாளை கழிக்கலாம் எனக் தொலைபேசியினூடாக கேட்டேன். அவள்
மஸ்கெலியாவில் அமைந்துள்ள சமன் தேவாலயத்திற்கு சென்று வாருங்கள் எனக் கூறினார். நேரம்
கடந்து விட்டதால் அங்கு செல்லமுடியாத நிலை. சரி டெவன் நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு
வருவோம் எனத் தீர்மானித்தோம். இந்த இடம் எனக்கும் என் மனைவிக்கும் பரிட்ச்சயமான இடம்
தான். என்றாலும் எனது மகனுக்கு அது மகிழ்ச்சி தரும் இடம் என்ற நிலையில் சென்றோம்.
சரியாக மாலை ஒரு மணியளவில் டெவனை அடைந்த போது பசி வாட்டியது.
உணவருந்துவதற்காக இறங்கிய போது அந்த இடத்திற்கு கீழ்தான் சிவனு இலட்சுமணனின் புதைக்குழி
இருந்தது. நாங்கள் சிரிப்பதற்காகவே மாண்ட அந்த தோழனுக்கான எதை என்னிடமிருந்து கொடுப்பது?
சரி நான் சாப்பிட போவதில் எதையாவது அத் தோழனின் புதைமேட்டில் வைப்போம் என்ற நினைப்பில்
புதைக்குழியை நெருங்கினேன். என் மகனும் என்னை தொடர்ந்து வந்ததை சற்று தாமதமாக தான்
பார்த்தேன். சாப்பாட இங்க ஏன் வைக்கிறங்க அப்பா என்றான். நமக்காக செத்துப் போன ஒருத்தருக்காக
வைக்கிறேன் என்றேன். அவரு நல்லவரா அப்பா எனக் குறுக்கிட்டான் அவன். இடையில் இதையெல்லாம்
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மனைவி சிவனு லெட்சுமணனின் புதைக் குழி என்று கூறினால்
புரியும் தானே என்றாள். யாரே என் மீது பூக்களை அள்ளித் தெளித்தது போன்ற குதுகலம். அவள்
ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயின்ற காலத்தில் சில விரிவுரையாளர்கள் மூலமாக சிவனு
இலட்சுமணன் பற்றி அறிந்திருக்கிறாள்.
பின் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நீர்வீழ்ச்சியை பார்க்க
சென்றோம். அதனருகில் ஒரு ஓவியர் மானுடத்தின்
இயற்கையின் இதயத்துடிப்பை அதன் அழகுசிதையாத வகையில்- அந்த நீர் வீழ்ச்சியை வரைந்துக்
கொண்டிருந்தார். அவர் பெயர் வணிகசிங்ஹ என்பதை அறிய முடிந்தது. இந்த ஒவியரை பல தடவைகள்
பார்த்திருக்கின்றேன். ஏதோ டெவன் நீர் வீழ்ச்சியை வரைகின்றார் என்றளவில் அவர் பொறுத்த
நினைப்யிருந்தது.
என் மகனுக்கு ஓவியத்தில் நாட்டமிருப்பதை பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன்.
இயல்பாகவே என் மகன் அந்த ஓவியரைக் கவர்ந்து விட்டான். அந்த சிறுது நேரத்தில் அவன் எங்களை
மறந்திருக்ககூடும். தன்னை வரைவதற்கு அனுமதி வழங்குமாறு அந்த ஓவியரை வரையவிடாமல் நச்சரித்துக்
கொண்டிருந்தான். அவரும் அவனைக் கருணையோடு அணுகி வரைவதற்கு அனுமதி அளித்தார். பின் வெயிளின்
கொடுமை தாங்க முடியாது( சுட்டெரிக்கும் அந்த வெயிளில் தான் அந்த ஓவியர் வரைந்துக் கொண்டிருந்தார்)
அவ்விடத்திலிருந்து அகன்றோம். கிட்டதட்ட நாங்கள்
கொட்டக்கலையை தாண்டி ஹட்டனை அண்மித்துக் கொண்டிருந்தோம். ஏதோ அழுகை சந்தம் கேட்டு பின்னால்
திரும்பி பார்த்தேன். என் மகன் மீண்டும் அந்த ஓவியரை பார்க்க வேண்டும் என ஆர்பாட்டம்
செய்துக் கொண்டிருந்தான். அவன் அழுகையை நிறுத்துவதாக இல்லை. சரி ஒன்றும் செய்ய முடியாத
நிலையில் அவனை அழைத்து செல்ல வேண்டியதாகி விட்டது. நான் சற்றும் எதிர்பார்காத நிலையில்
அந்த ஓவியர் மகிழ்ச்சி அடைந்திருந்ததாகவே பட்டது. அந்த ஓவியர் ஏதோ பிழைப்புக்காக மட்டும்
ஓவியம் வரைவர் அல்ல. தன் உயிரிலும் மேலாக அந்த ஓவியங்களை நேசித்து தீட்டுகின்றார்.
ஒரு சிறுவனுடைய ஒவிய ஆர்வம் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை வழங்கியது. என் மகனை அன்போடு
அரவனைத்து தன்னிடமிருந்த தூரிகையில் ஒன்றையும் அவனுக்கு பரிசாக கொடுத்தார். அவர் என்னை
நோக்கி நீங்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த தந்தையாக நடந்துக் கொள்ளுவது நல்லது. எல்லா பெற்றோர்களுமே
தன் பிள்ளைகளிள் ஆர்வத்தை மறந்து தங்கள் தங்கள் பெருமையை பாதுகாத்துக் கொள்ள என்ஜியர்களாகவும்
டாக்டர்களாகவும் வரவேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கின்றனர். கல்வி அமைப்பிலும்
அதற்கே முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது. என்னை பொறுத்த மட்டில் ஓவியம் தீட்டுவது
எனக்கு தொழில் மட்டுமல்ல இலட்சியமும் கூட. என்னையும் என் ஓவியங்களையும் மக்கள் நேசிக்கின்றார்.
நான் ஒரு போதும் வியாபார நிறுவனங்களில் சிக்கி பொது மக்களுக்கும் எனக்கும் உள்ள உறவை
சிதறடிக்க விரும்ப வில்லை. நான் சுதந்திரமானவன் என்றார். எவ்வளவு பெரிய தத்துவத்தை-
மனித குலத்தின் நாகரிகத்தை இவ்வளவு இலகுவாக கூறிவிட்டார். மனிதர்களுக்கிடையிலான காதலே
உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக அமைந்திருந்தது அவரது ஓவியங்களும்
உணர்வுகளும்.
என் மகனில் நான் அறியாத பக்கத்தை அந்த ஓவியர் புரிந்து வைத்திருக்கின்றார்
என்பதில் என்னையறியாமலே என் மீதான கோபம் வெறுப்பும் வந்தது உண்மைதான். ஒரு சமயம் மீண்டும்
என் மகனை அந்த ஓவியரிடம் அழைத்து செல்லாதிருந்தால் எந்த பெரிய தவறை இழைதிருப்பேன் என்பதை
அப்போதுதான் உணரமுடிந்தது.
என் மகனை பெருமிதத்துடன் பார்த்தேன் தன் குறும்பு நிறைந்த
முகத்துடன் ”பாய் மாமா” என அந்த ஓவியரிடமிருந்து தற்காலிகமாக விடைப்பெற்றான். வரும்
போது நினைத்துக் கொண்டேன். மகனே நீ ஒரு ஓவியானக வருவாயாக? எம் மக்களின் வாழ்வை, அவர்களின்
கலகங்களை சிவனு லட்சுமணன் போன்ற நம் முதாதையர்களின் போராட்டங்களை உண்மையின் பக்கமிருந்து
தீட்டுவாயா? உன் ஓவியத்தை தரிசிக்கின்ற எந்ததொரு மனிதனும் இதயமுள்ளவனாக மாறுவானா? அப்படியானல்
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட மகிழ்வோடு வாழ்வேன். சில தூரிகைகளையும் வர்ணங்களையும்
வாங்கிக் காண்டு சென்றேன் என் மகனுக்காக அல்ல வரும் காலத்தில் எனக்கு தோழனாக போகும்
ஒருவனுக்காக என்ற நினைப்பில். வீட்டிற்கு வந்ததும் அந்த ஓவியர் போல் பாவனை செய்து டெவன்
நீர் வீழ்ச்சியை வரைய முயற்சித்துக் கொண்டிருந்தான்.
இனிவரும் விடுமுறைகளின் போதும் என் மகனை அந்த ஓவியரிடத்துக்கு
அழைத்துச் செல்வேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...