Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 06- இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 06- இரா சடகோபன்

மரணம் பத்தடி தள்ளி பின்னால் வந்தது
இலங்கையின் கோப்பித் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை வந்தபோது, (1850 களில்) அவர்கள் தலைமன்னாரிலிருந்து கம்பளை வரை 150 கிலோ மீற்றர்  நடைப்பயணமாகவே அழைத்து வரப்பட்டனர்.

இந்த நடைப்பயணம் அவர்களைப் பொறுத்தவரையில் மரணப் பொறியாகவே இருந்தது.

தென்னிந்திய மாவட்டங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது அதில் இருந்து தப்ப இவர்கள்  இலங்கை வந்தனர். இவர்கள் வந்த பாதையில் மரணமும் ஒரு பத்தடி தள்ளி இவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது. 

இவர்களின் வரலாற்றை ஆராயும்போது இவர்களின் அதிகரித்த மரணத்தைப் பற்றி இலங்கையில் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கைக்கு வந்த இவர்களில் நான்கில் ஒருவர் வரும் வழியில் மரணித்து விடுவது வழக்கமாக இருந்தது.

இவர்களின் எண்ணற்ற இந்த மரணங்கள் தொடர்பில் நீதி வழங்க வரலாறு ஒரு போதும் முன்வரவில்லை. இது தொடர்பில் இலங்கையின் எல்லா ஆளுநர்களும் துரைமார்களும் கங்காணிகளும் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது இவ்வரலாற்றைப் படிப்பவர்களுக்கு பல இடங்களில் புலப்படும்.

அக்காலத்தில் இலங்கையின் கோப்பித் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைபற்றி பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அத்தகைய எழுத்தாளர்களில் வில்லியம் நைட்டன் (ஙிடிடூடூடிச்ட் ஓணடிஞ்டவணிண), சி.ஆர். ரிக், (இ.கீ. கீடிஞ்ஞ்), வில்லியம் சபோனாடியர் (ஙிடிடூடூடிச்ட் குச்ஞணிணச்ஞீடிழூணூழூ), பி.டி. மில்லி (க.ஈ. ஆடிடூடூடிழூ), ஜோன் கெப்பர் (ஒணிடண இச்ணீணீழூணூ), எட்வர்ட் சுலிவன் (உஞீதீச்ணூஞீ குதடூடிதிச்ண) முதலானவர்கள் மிகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் கூற்றுப் படி இயற்கை கூட இத்தொழிலாளர்களுக்குக் கருணை காட்டவில்லை. இவர்கள் பல சமயங்களில் கருமையான நீரில் ஓட்டைப் படகுகளில் பாக்கு நீரிணைக்கூடாக பயணம் செய்து காணாமல் போயினர். 

வரண்ட தென்னிந்திய பூமியிலும் பின் இலங்கையின் வடக்கு, வட மேற்கு மாகாணங்களின் காட்டுப் பாதையிலும் குடிக்க நீரின்றி, வாந்தி பேதியால் பீடிக்கப்பட்டு மாண்டெõழிந்து போயினர். 

எப்படியோ இவர்கள் தப்பிப் பிழைத்து மத்திய மலைநாட்டின் மலைப் பிரதேசத்தை அடைந்தபோது, மழையும் குளிரும் அவர்களை மேலும் வாட்டி வதைத்து உயிரைப் பறித்தன. வரும் வழியில் பதுங்கியிருந்த புலியும் சிறுத்தைகளும் ""ஊர்ந்து வந்த பாம்புகளும் கூட அவர்கள் உயிரைப்  பறித்துக் கொண்டன'' என இவர்கள் தம் எழுத்துகளில் தெரிவித்துள்ளனர்.

----

கோப்பிப் பெருந்தோட்டங்களில் தொழில் பார்த்த ஆண்களை "ராமசாமி'கள் அல்லது "கறுப்பன்' கள் என்று தோட்டத்துரைமாரும் வெள் ளைக்கார அதிகாரிகளும் அழைத்ததைப் போல் இங்கு தொழில் புரிந்த பெண்களை "மீனாட்ஷி' அல்லது "மீனாக்ஷி' என்றே அழைத்தனர்.

தமிழ் நாட்டிலிருந்து வந்து மலைநாட்டில் குடியேறிய எல்லாப் பெண்களும் அவர்களுக்கு "மீனாட்சி'களாகவே  தெரிந்தனர். ஆரம்பத்தில் கோப்பித் தோட்டங்களில் வேலை செய்ய ஆண்களே அதிகமாக வந்தனர்.  பின்னர் 1860, 1870 களையொட்டிய தசாப்தங்களிலேயே பெண்கள் குறிப்பிட்ட அளவு பிரசன்னமாகி இருந்தனர். 

கோப்பித் தோட்டங்களில் வேலை செய்த ஆண்களையும் பெண்களையும் பற்றிக் கருத்துத் தெரிவித்த கோப்பித் தோட்ட முன்னோடிகளில் ஒருவரான ஆர். டபிள்யூ. ஜென்கின்ஸ் (கீ.ஙி. ஒழூணடுடிணண்) என்பவர் கோப்பித் தோட்ட மலைகளில் அவர்கள் வேலை செய்தபோது ஆண்களையும் பெண்களையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்றும் அவர்கள் ஒரே மாதிரியான கருத்த செம்மறியாட்டு மந்தைபோல் இருந்தனரென்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மனிதர்களாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. குளிரானதும் மழைக் காலங்களிலும் இவர்களை தடிமனும் இருமலும் தொற்றிக் கொள்ளும். அப்போது இவர்களைப் பாதுகாக்க  உடல் முழுவதும் போர்த்தியிருந்த கருப்பான கம்பளிகள் (செம்மறியாட்டு மயிரால் நெய்யப்பட்ட போர்வை) மாத்திரமே இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.மலைநாட்டுக் கோப்பித் தோட் டத்து பெண்களைப் பற்றி வேறு சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் நாட்டில் இருந்து வந்திருந்த  இயற்கைச் சூழலியலாளர் எர்னஸ்ட் ஹெக்கல் (உணூணழூண்வ ஏச்ஞிடுச்டூ) ஜென்கின்ஸ{க்கு விரோதமாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

""கோப்பித் தோட்ட இளம் பெண்களின் உடல், உருவமைப்பு கிரேக்க நாட்டு அழகிகளின் உருவ அமைப்பை ஒத்திருந்தது. எனினும் அவர்கள் முகத்திலும் கண்களிலும் அப்படியொரு சோகம். அப்பிப் போயிருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் வழக்கமாக இருந்த புன்னகையும் சிரிப்பும் இவர்கள் எவரிடமும் காணமுடியவில்லை.''

மற்றுமொரு கோப்பித் தோட்ட சொந்தக்காரரான வில்லியம் பொயிட் (ஙிடிடூடூடிச்ட் ஆணிதூஞீ) என்பவர் கூறியிருப்பதாவது:
""இப்பெண்கள் இளமையின் தோற்றுவாயில் இருக்கும்போது இனி இல்லை எனும்படிக்கு மிக அழகாக இருக்கின்றனர். ஆனால் ஆங்கிலப்பெண் தன் இளமையின் உச்சத்தை அடையும் வயதில் இவர்கள் உடல் சுருங்கிக் கிழடு தட்டிப் போய் விடுகிறார்கள். இந்த நிலையில் இவ்வுலகில்அருவருக்கத்தக்க ஜந்துக்களாக இவர்கள் மாறிப் போய் விடுகிறார்கள்.'' 

இவர்களின் கடின உழைப்பு, வெயில், மழை, கடுங்குளிர் என்பன இவர்களை எவ்வாறு குரூபிகளாக ஆக்கிவிடுகின்றன என்பதைப் பற்றி இவர்கள் எவரும் ஒன்றும் கூறவில்லை. நமக்கு  ஏன் வம்பு என்று நினைத்திருக்கக் கூடும்.      
ழூழூழூ

கோப்பிக் காலத்து தமிழ் தொழிலாளர்கள் தொடர்பில் அக்காலத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சியே இடம்பெற்றது. 
இவர்களின் குணம், நிறம், தோற்றம், பழக்கவழக்கங்கள், உணவு முறை, நம்பகத் தன்மை, பார்வை, கீழ்ப்படிவு, போராட்ட குணம், அப்பாவித் தனம் போன்ற அம்சங்கள் பற்றி அப்போதைய ஆளுநர், அவரின் அரச செயலாளர்கள், சமூக ஆய்வாளர்கள், தோட்டத்துரைமார்கள் பலவகைகளில் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆய்வு எல்லாமே இவர்களை வைத்து எந்தளவுக்கு இலாபம் சம்பாதிக்கலாம் என்பதைக் குறியாகக் கொண்டிருந்தது.
இந்தத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு உபயோகமானவர்கள், இவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் விவாதம் எழுந்த போது சேர் வில்லியம் கிரகெரி (குடிணூ ஙிடிடூடூடிச்ட் எணூழூஞ்ணிணூதூ) (1872  1877)  என்ற ஆளுநர் கூறியதாவது:

""இவர்கள் என்னதான் தவறுசெய்தாலும், இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் யாரும் விரும்பாமல் இருக்க மாட்டார்கள். 

இவர்களின் சுறுசுறுப்பு, குறைந்த வசதிகளில் திருப்தியடைதல், எதற்கும் உடனடியாகப் பணிந்து போதல், ஓர் அன்பான எஜமானுடன் ஐக்கியப்பட்டு இரண்டறக் கலந்து போதல் என்பன இவர்கள் மீது பல பாவங்களைச் செய்ய துணைபோயின.''

இவருக்கு முன்பிருந்த ஆளுநர் சேர் ஹெர்குலிஸ் ரொபின்ஸன் (குடிணூ ஏழூணூஞிதடூண் கீணிஞடிணண்ணிண) இவர்களைப் பற்றி குறிப்பிடும்போது, 

""உலகிலேயே மிக எளிமையானவர்கள் இந்தத் தமிழ் கூலிகள்தான். இவர்கள் நினைத்த மாத்திரத்தில் தம் நடத்தையை மாற்றிக் கொள்வர். ஏனைய கீழ்த்திசை மக்களைவிட நல்லவர்கள். இவர்களது குழந்தைத்தனம் காரணமாக, ஓர் அதிகாரத்துவ வழிகாட்டல் எப்போதும் தேவைப்படுகின்றது. பெற்றோர் குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துவது போல அவர்கள் மீதும் அதிகாரம் செலுத்தப்பட வேண்டும்''
ஆளுநர்களின் இத்தகைய சாதகமான கருத்துகளுக்கு மத்தியில் வில்லியம் சபோடினேயர் (ஙிடிடூடூடிச்ட் குச்ஞணிஞீடிணச்டிணூ) என்ற கோப்பித் தோட்ட துரை கூறியதாவது:

""இவர்கள் நம்பத்தகாதவர்கள். இந்த "நம்பத்தகாத தன்மை' இவர்களுக்கு தாய்ப்பாலில் இருந்தே வந்து விடுகின்றது. இவர்களது கூற்றுகள் எப்போதும் பொய்கலந்தவையாகவே இருந்தன. அவற்றை நம்பி ஒன்றுமே செய்ய முடியாது''

""இவர்களின் காட்டுமிராண்டித் தன்மை, மடமை, அப்பாவித்தனம் என்பவற்றை உயர் நாகரிகம், புத்திசாதுரியம் ஆகியவற்றை, உயர் கல்வி பெற்ற பிரித்தானியர் அபகரித்துக் கொண்டனர்'' என அப்போது கொழும்பு கிறிஸ்தவ மேற்றிராணியாருக்கு (ஆடிண்டணிணீ) செயலாளராகக் கடமையாற்றிய எச்.டபிள்யூ. கேவ். (ஏ.ஙி.இச்திழூ) கூறியுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அப்போது புகழ்பெற்ற மிஷனரியாக இருந்த வண. சி.எப். அன்×வ்ஸ் (கீழூதி.இ.ஊ. அணஞீணூழூதீண்) கூறியுள்ள கூற்று கவனிக்கத்தக்கது: 
""நான் அவர்களின் சோகக்கதைகளை அவர்களின் வாய் மூலமே கேட்டிருக்கிறேன். இவர்களது கண்களும் பார்வையும் வேட்டையாடப்படும் மிருகத்தை ஒத்திருக்கும். இவர்கள் நைந்து போனவர்களாக, விரக்தியடைந்தவர்களாக, பயந்தவர்களாக, அதிர்ச்சியடைந்தவர்களாக, மனங்குன்றிப் போனவர்களாக இருந்தனர். இவர்களின் கதையை எழுதினால், அதனை எழுதிய பக்கங்கள் கோபத்தால் தீப்பிடித்து எரிந்து போய் விடும்''

---

தூரதேசத்தில் இருந்து வந்து தமக்கு முற்றிலும் புதிதான சூழலிலும், காலநிலையிலும் வாழப் பழகிக் கொண்ட மலையக மக்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. 
ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒரு பிரச்சினை பூதாகரமாக வந்து இவர்களை அச்சுறுத்தியது. ஒரு முறை வாந்திபேதி வந்தால் மறுமுறை ஜன்னி காய்ச்சலால் நடுக்கமுற்றனர்.

வதந்திகளை நம்பி அல்லலுற்ற சந்தர்ப்பங்கள் ஏராளம். 1860களைத் தொடர்ந்து கோப்பிப் பயிர்ச் செய்கை உச்சநிலை அடைந்திருந்தது. 

இதனால், மலையகத்தை நோக்கிய புகையிரதப் பாதைகளும், பெருந்தெருக்களும் விஸ்தரிக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டு கண்டிக்கும் மாத்தளைக்குமான ரயில் பாதையை விஸ்தரிக்க ஏற்பாடுகள் ஆரம்பமாகின. 
இச்சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களிடையே ஒரு வதந்தி பரவியது. இவ்வீதி அமைப்பை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், பாலங்களை பாதுகாக்கவும் 1000 தொழிலாளர்கள் தெய்வங்களுக்குப் பலி கொடுக்கப்படவுள்ளனர் என்பதே அந்த வதந்தி. இதனால், இப்பகுதியிலிருந்த தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாகத் தாயகத்துக்குக் கிளம்பினர்.

இவர்களை நிறுத்த தோட்டத் துரைமார் பெரிதும் சிரமப்பட்டனர். கிபோன் (எடிஞஞணிண) என்ற கம்பளை, உடவளையைச் சேர்ந்த தோட்டத்துரை, இந்த வதந்திகளுக்குக் காரணமான ஒரு தொழிலாளியைப் பிடித்து, விசாரித்து தண்டனை வழங்கியதாகத் தெரிகின்றது. 1861 ஆம் ஆண்டு ஒரு சமயம் இவர்கள் கோப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மன்னாரில் வந்திறங்கியவுடன் இவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்றும்,  இப்படிக் கடத்தப்படுபவர்களை பிரிட்டிஷ் இராணுவம் வேறு நாடுகளுடன் யுத்தம் செய்யும் போது படையினருக்கு சிறு பணிகள் செய்வதற்காக அனுப்புவதாகவும் வதந்தி பரவியதால் தொழிலாளர்கள் கலவரமடைந்துள்ளனர் என்றும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்கும்படியும் மன்னார் உதவி அரசாங்க அதிபருக்கு கொழும்பிலிருந்த ராஜாங்கச் செயலாளர் செய்தி அனுப்பி இருந்தார். 

ரொபின்சன் (கீணிஞடிணண்ணிண) என்பவர் கவர்னராக இருந்தபோது இத்தகைய வதந்தி ஒன்று பரவியது. 

இச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் இரõணுவத்துக்கும் சீனாவுக்குமிடையில் யுத்தம் மூண்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் படைகளின் முகாம்களில் பணி புரிவதற்காக அரசாங்கம் பலாத்காரமாக தொழிலாளர்களை அனுப்புவதாகவும் வதந்தி பரவியிருந்ததாக தனது குறிப்பில் ரொபின்சன் எழுதி வைத்துள்ளார். இதனால், தொழிலாளர் பதற்றமடைந்து தமது தாய் நாட்டுக்கு ஓடிச் சென்றனர் என்றும் முன்பு 1861ஆம் ஆண்டு ஏற்பட்ட சம்பவம் போன்றதே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி வதந்திகள் இவர்களின் வாழ்வைப் பிடித்து ஆட்டின. 
எனது சிறு வயதில் நான், தொலஸ்பாகை என்ற இடத்தில் வசித்தபோது, அத்தோட்டத்தில் ஆற்றுக்குக் குறுக்கே ஒரு பாலம் அமைத்திருந்தார்கள். அந்தப் பாலத்தின் அடியில் சுவரில் சிறு பெட்டி போன்ற அமைப்பு கொங்கிறீட்டால் பதிக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் நாங்கள் அதைப் பற்றி கேட்ட போது, அதில் கன்னிகழியாத சிறுமி ஒருத்தி பலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். எங்களுக்கு பயமாக இருந்தாலும் ஒருநாள் அதை உடைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம்.

முன்பு பாலங்கள் கட்டும் போது அதனைப் பாதுகாக்க இவ்விதம் சிறுவர் சிறுமியரை பலியிட்டார்கள் என்று இப்போதும் இம்மக்கள் மத்தியில் கதைகள் உள்ளன. 

தொடரும்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates