2014, யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினம்.
உலகில் வாழ்கின்ற மக்களில் 13% பங்கினர் சிறுவர்களாகக் காணபடுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.
எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
உலகலாவிய ரீதியில் நோக்கின் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்புணர்ச்சி, சிறுவர் தொழிலும் வேலைப்பளுவும், சிறுவர்களை ஆயுதப் போராட்டங்களில் இணைத்துக்கொள்ளுதல், கடத்துதல் மோசடிகள், உள ரீதியான பாதிப்புள்ளாக்குதல் என பல்வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
இத்தகைய நிலைமையில் இரண்டாம் உலகப் போரின் பின்னணியுடன் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. சிறுவர்கள் தொடர்பாக ஐ. நாவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம், ஒகடோபர் முதலாம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தியமை யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமையும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா சபை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும், காப்பீடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன.
இலங்கையைப் பொருத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பங்கள், கடத்தல்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பிள்ளைத் தாய் பிரச்சினை போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் கடந்த காலங்களில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. நகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனிப்பட்ட குரோதங்களுக்காகவும், பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும், குறிப்பாக வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றன. பெருந்தோட்டங்கள், கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு செல்வந்த வீடுகளுக்கும், கடைகள், ஹோட்டல்கள், கராஜிகள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர்.
பெருந்தோட்டங்களில் கடந்த வருடங்களில் ஹட்டன் வெலிஓயா தோட்ட சிறுவன் அர்ச்சுனன் லோகநாதன் பத்தனை, போகவத்தை புவனேஸ்வரன் லிங்கேஸ்வரன், கெட்டபுலா கிருஷ்ணவேணி, மஸ்கெலியா லக்ஷபான, சென் அன்றூஸ் தோட்ட சிறுமியர் ஜீவராணி, சுமதி, லுல்கந்துர தோட்டத்தை சேர்ந்த ராமையா குமுதிலி, தற்போதைய தகவல்படி தலவாக்கலை மில்டன் தோட்டத்தை சேர்ந்த ஆனந்தன் நந்தனி ஆகியோர் வீட்டு வேலைக்கு சென்று மரணமடைந்த சம்வங்கள் மலையகத்தில் சிறுவர் தொழிலாளர்களின் நிலையை பறைசாட்டுகின்ற அதேவேளை சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதனால் எதிர்கொள்கின்ற பாதிப்புக்களை சுட்டிக்காட்டுகின்றன.
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்றும் உறுப்பரை 28 சிறுவர்களின் கல்வி உரிமையையும் வலியுறுத்துகின்ற போதிலும் இலங்கையில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் கூட மேற்குறித்த சம்பவங்கள் சிறுவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய சிறுவர் கொலைகள் சம்பவங்களுக்கு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதலே காரணம் என்று ஒரு சாரார் வாதாடுகின்ற அதேநேரம் வறுமையும் பொருளாதார நெருக்கடியும் காரணம் என இன்னொரு சாரார் வாதாடுகின்றனர்.
பெருந்தோட்டங்களில், இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழும் பிரதேசங்களில் குடும்பத்தின் பொருளாரத்தைக் கவனத்திற்கொண்டு பிள்ளைகள் பல்வேறு வேலைகளுக்கு இடைத்தரகர்கள் ஊடாக அனுப்பப்படுகின்றனர். மேலும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகள் தொடர்பான அன்பு, அக்கறையின்மை, பெற்றோர்களின் குறைந்த கல்வியறிவு, சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியன சிறுவர் தொழிலை ஊக்குவிக்கும் காரணிகளாகவும் அமைகின்றது.
இலங்கையில் தேசிய ரீதியான கல்வி வளர்ச்சி 92.5 வீதமாகவுள்ள அதேநேரம் நகர்ப்புறக்கல்வி 94.8 வீதமாகவும் கிராமப்புற கல்வி வளர்ச்சியும் பெருந்தோட்ட கல்வி வளர்ச்சியும் முறையே 92.8, 81.3 வீதமாகக் காணப்படுகின்றது. ஏனைய துறைகளை விட பெருந்தோட்டத்துறையின் கல்வி வளர்ச்சி வீதம் குறைவடைந்திருக்கின்றமைக்கு சிறுவர் தொழில் பிரதான காரணமாகின்றது.
மேலும் தேசிய ரீதியாக பாடசாலைக்கு செல்லாதோர் 7.9 வீதமாகவுள்ள அதேநேரம் பெருந்தோட்டத்;தில் 19.9 வீதமாகக் காணப்படுகின்றது. எனவே பெருந்தோட்டங்களில் மாணவர் இடைவிலகல் அதிகரித்து வருகின்றதென்பது உறுதியாகின்றது.
இத்தகைய நிலையில் இலங்கையின் கிராமப்புறங்களிலும் சிறுவர் உரிமை மீறல்கள் இடம்பெற்றே வருகின்றன. மேலும் அண்மைக்காலங்களில் அதிகமாகப் பேசப்பட்ட சிறுவர் தற்கொலை முயற்சிகளும் தற்கொலைச் சம்பவங்களும், பாடசாலைகளில் மாணவர் மோதல்களும் சமூகத்தில் ஏற்கனவே இருந்த கட்டமைப்பை முறியடித்துக்கொண்டு மாறுபட்ட புதியதொரு போக்கிற்கான பிரவேசத்திற்கு அடித்தளமிட்டுள்ளது எனலாம். தொலைபேசியை தகாத முறையில் பாவித்த பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டமை, ஆசிரியர் அடித்தார், திட்டினார் என்பதால் தூக்கிட்டுகொண்ட மாணவர்கள், நஞ்சறுந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த மாணவர்கள், பரீட்சை பெறுபேறுகள் சரியில்லை, படிக்கமுடியவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் உள்ளிட்ட சம்பவங்களோடு, போதைப்பொருள் பாவனை, கொள்ளைச் சம்பவங்கள் ஆகியனவும் சிறுவர்களால் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்ற பாதிப்புக்களாகும்.
மேலும் சிறுமியர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு தாய்மையடைகின்றமையால் ஏற்படும் சகல சமூகப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய செயல்கள் அனைத்தும் கலாசாரம் என்ற போர்வையில் மறைக்கப்படுகின்றன. இவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதனால் சிறுவர் உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றதோடு, அதிகரித்தும் வருகின்றன.
அத்தோடு சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதன் முலம் ஏற்படும் பாதிப்புகளை சர்வதேச யுனிசெப் நிறுவனம் 3 வகையாக பரித்துள்ளது. அவை உடல் ரீதியான பாதிப்பு, உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு, உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு என்பனவாகும். இதில் உடல் ரீதியான பாதிப்பு என்னும் போது கொடிய வறுமை, ஊட்டசத்துக் குறை கல்வியறிவு பெற முடியாதா நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் பல நோய்களுக்கும் உள்ளாகின்றனர்.
அதில் முக்கியமாக ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அத்தோடு உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு என்று கூறும் போது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையா பாதிக்கின்றன.
மேலும் உணர்வு, சமூக ரீதியான பதிப்பை நோக்குவோமானால் கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலையை அடைய முடியாமல் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு பல சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு குறிப்பாக மலையக பெருந்தோட்ட சிறுவர்கள் உள்ளாகின்றனர்.
இவ்விடயங்களை கருத்திகொண்டு மனித அபிவிருத்தி தாபனம் சிறுவர்கள் தொடர்பான பல செயற்திட்டங்களை கண்டி, கேகாலை, நுவரெலியா, அம்பாறை பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் அடிப்படையில் சிறுவர் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்த மேற்படி இந்நாள் அனுஷ்டிக்கப்படுவதோடு, வீடு, சாலையோர கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி பாரிய குற்றம் என்பதை பெற்றோர், பொதுமக்கள், தொழிலில் அமர்த்துபவர்கள் இவர்களுக்கு உணர்த்துவதோடு, அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது பிரச்சினைக்குள்ளானவர்களுக்கு சட்டரீதியான உதவிகள், வழிகாட்டல்கள், விழிப்பணர்வு செயற்திட்டங்களை மனித அபிவிருத்தி தாபனம் மேற்கொண்டு வருகின்றது.
அரச நிறுவனங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக நல சேவையாளர்கள், தோட்ட அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை திணைக்கள அதிகாரிகள், தேசிய சிறுவர் உரிமை அதிகார சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மலையக கல்விமான்கள் போன்றோர் இடையே விளக்க உரைகளை ஏற்பாடு செய்து நடாத்துவதுடன் கல்வி உரிமை, சிறுவர் துஷ்பிரயோத்தை தவிர்போம் என்ற கருப்பொருளில் மலையக மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சிறுவர்களிடையே சித்திர போட்டி, கண்காட்சியும், சித்திரபோட்டிக்கான சான்றிதழ் வழங்கும் வைபவங்களையும் நடாத்திவருகின்றது.
சிறுவர் தொழிலை ஒழிப்போம் என்று கருப்பொருளில் மக்கள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பதாதைகளும், துண்டுப்பிரசுர விநியோகம், வீதிநாடகம், சுவரொட்டிப் பிரசாரம் ஆகியவற்றின் மூலமாக மக்களை, சிறுவர்களை விழிப்புணர்வுப் படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன. அத்தோடு மலையகப் பிரதேசங்களில் கடந்த சில வருடங்களில் சிறுவர்கள் விருப்புக்கு மாறாக சிறுவர் சிறுமிகளின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மறுக்கப்பட்ட நிலையில் நகர்ப்புறச் செல்வந்தர்களின் வீடுகளிலும் விற்பனை நிலையங்களிலும் தொழிற்சாலைகளிலும் தொழில்களில் அமர்த்தப்படும் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிலவேளைகளில் மர்மமான முறையில் இறந்தும் விடுவது இலங்கையில் சிறுவர் உரிமைகள் வரலாற்றில் கவலை தரும் நிகழ்வுகளாக்கியுள்ளன.
தொடர்ந்து இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதற்காக மனித அபிவிருத்தி தாபனம் சட்ட ஆலோசனை, நியயப்பிரச்சாரம், சட்ட ரீதியான உதவி என்பவற்றையும் மனித அபிவிருத்தி தாபனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - http://www.akkinikkunchu.com/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...