மலையக தொழிற்சங்கத்
துறையில் சுமார் 60 ஆண்டுகள்
தொடர்ச்சியாகப் பணியாற்றி அனைவராலும் மதிக்கப்படும் மனிதராக திகழ்ந்தவர் அமரர் ஓ.
ஏ. இராமையா ஆவார். இடதுசாரிக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட அவர், எந்தச் சந்தர்ப்பத்திலும் அதைக் கைவிடாமலும்,
யாருக்கும் விலை போகாமலும்
இறுதி மூச்சு வரை “சிகப்பு மனிதனாகவே”
வாழ்ந்து வந்த அவர்
மறைந்து இன்றோடு ( 2014.05.18 ) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
1938.07.24 இல் பூண்டுலோயாவில்
ஆறுமுகம் – பேரிச்சி தம்பதியரின்
மகனாகப் பிறந்த இராமையா இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடிச் சங்கத்தில் சாதாரண
நிலையில் ஈடுபட்டு படிப்படியாக உயர்ந்து அதன் பொதுச் செயலாளராக இருந்து தொழிற்சங்கப்
பணிக்கு முன்னோ டியாகவும், உதாரணமாகவும் விளங்கினார். இன்று தொழிற்சங்கங்களில் உள்ள பலருக்கு தொழிற்சங்கத்தின்
தோற்றம், நோக்கம், தொழிற்சட்டங்கள் முதலான எதுவும் தெரியாத
நிலையில் தொழிற்சங்கங்களுக்குத் தலைமை தாங்கி வருகின்றார்கள். ஆனால், ஆரம்ப காலத்தில் அன்றிருந்த கிழக்கு ஜேர்மனியில்
தொழிற்சங்கக் கல்வியைத் தொட ர்ந்து, தொழிற் சட்டங்களைப் பயின்று 60 ஆண்டுகள் தொழிற் சங்கவாதியாகக் கடமையாற்றி
சிறந்த அனுபவசாலியாக விளங்கினார்.
சகல துறைகளையும்
சார்ந்த நண்பர்களை அதிகமாகக் கொண்டிருந்த அவர் எல்லோராலும் “ராம்” என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். அவரின் திறமை ஏனைய தொழிற்சங்கவாதிகளுக்கு
பேருதவியாக இருந்ததோடு, புதிதாக தொழிற்சங்கத் துறை க்கு வருபவர்களும், தொழிற் சட்டங்களில் சந்தேகம் கொள்பவர்களும்
அவரை அணுகி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள் ளக் கூடியதாகவும் இருந்தது. மேலும்,
இலங்கையில் வெளிவரும்
தமிழ், சிங்கள, ஆங்கில தினசரிகள் அனைத்தையும் வாசித்து உள்நாட்டு
வெளிநாட்டு அரசியல் நிலவரங்களைத் தெரிந்து வைத்திருந்தார். எனவே, அவர் ஒரு தகவற் களஞ்சியமாகவே விளங்கினார். எந்த
நேரத்தில் யார் எந்த சந்தேகத் தைக் கேட்டாலும் தகுந்த விளக்கம் தந்து புரிய வைப்பதில்
தனித்துவம் நிறைந்தவராகவே அவர் காணப்பட்டார்.
இலங்கையில் முதன்முதல்
மாகாண சபை நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஐக்கிய சோசலிஸ முன்னணியின்
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1989 இல் மத்திய மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு தொழிற்சங்க, அரசியல் பணிகளில்
தம்மை உள்வாங்கிக் கொண்டு மலையக தொழிற்சங்க வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்ட ஓ.ஏ.
இராமையா சுமார் 10 வருடங்களுக்கு
முன்னர் “சர்வதேச தேயிலை
தினம்” பிரகடனம் வெளி
வருவதற்கு முக்கிய பங்கை வகித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின்
சம்பள உயர்வு தொடர்பாக செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்
அமைப்புகளில் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்குவதில் அமரர்
ஓ.ஏ.இராமையா பெரும் பங்கை ஆற்றியிருந்ததோடு அதில் உப தலைவராகவும், செயலாளர் நாயகமாகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்த பெருந்தோட்ட சமூக மாமன்றத்தில் அங்கம் வகித்த அவர் “சர்வதேச தேயிலை தினம்” மாத்திரமல்லாது மலையக மக்கள் தொடர்பாக பல்வேறு
ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைப்பதில் மிகுந்த கரிசனை காட்டி வந்துள்ளார். மலையக
மக்கள் சம்பந்தமான வெளிநாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டு ஆணித்தரமான
கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அமரர் இராமையா
தொழிற்சங்கத் துறையில் திறமை காட்டியது போல, இலக்கியத் துறையிலும் கைதேர்ந்தவராக இருந்தார்.
அவர் “செங்கொடி” என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து எழுச்சி
மிக்க தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாக
தனது இலக்கியப் புலமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். அவர், இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் எந்த ஒரு
வெளியீடு வந்தாலும் வாங்கி வாசித்து அதில் உள்ள குறைநிறைகளைச் சுட்டிக் காட்டுவதில்
வல்லவராகவும் இருந்தார்.
வாழ்க்கையில்
நிறைந்த அனுபவங்களைப் பெற்றிருந்த இராமையா இடதுசாரி இயக்கங்களோடு நெருக்கமான உறவுக
ளைப் பேணி வந்தார். எமது நாட்டில் ஏற்பட்ட 1971 ஏப்ரல் கிளர்ச்சியின்போது இடதுசாரித் தலைவர்கள்
கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதில் செங்கொடிச் சங்கத்தின் தலைவராக இருந்த
என்.சண்முகதாசனோடு அதன் பொதுச் செயலாளராக இருந்த ஓ.ஏ.இராமையாவும் கைது செய்யப் பட்டு
இரண்டு வருடங்களுக்கு மேலான காலம் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
“நிஜமும் நிழலும்”
இலங்கையில் வெளிவந்த
அனைத்து பத்திரிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. எனினும் ஏராளமான தகவல்களை
வைத்திருந்த அவர் ஒரு புத்தகத்தையாவது வெளியிடவில்லை. இந் நிலையில் “கேசரி” யின் சகோதர வெளியீடான “சூரியகாந்தி” யில் சுமார் மூன்று ஆண்டுகள் “நிஜமும் நிழலும்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி
வந்தார். இதில் அரிய பல தகவல்கள் வெளிவந்து பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் கூட அவரது எழுத்துப் பணி தொடர்ந்து
வந்தது. அந்தத் தொடர் கட்டுரைகளும் அவரது மறைவுக்குப் பின்னர் பூர்த்தியாகாமலேயே
நின்று விட்டன.
அமரர் இராமையா
எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக
முன்வைப்பார். அவரது சட்ட நுணுக்கமான ஆலோசனைகள் பலர் பிரச்சினைகளிலிருந்து விடுபடவும்,
வெற்றி பெறவும் உதவியாக
இருந்துள்ளன. அத்தகைய பெறுமதி மிக்க சிரேஷ்ட தொழிற்சங்கவாதி இராமையா. அவரது 50 ஆண்டுகளுக்கு மேலான தொழிற்சங்கப் பணிகளுக்காக
ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை அவ ருக்குக் கிடைத்திருந்த
மிகப் பெரிய அரசி யல் ரீதியிலான அங்கீகாரமாகவும் அமைந்திருந்தது.
மலையக தொழிற்சங்க
வரலாற்றில் தனியிடத்தைப் பெற்றுள்ள ஓ.ஏ. இராமையாவின் அரசியல், தொழிற்சங்க அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாக
வெளியிட்டால் அதன் மூலம் மலையக வரலாற்றை ஓரளவு எதிர்காலத் தலைமுறையினர் தெரிந்து
கொள்ள உதவியாக இருக்கும். அடுத்த வருடம் அவரது இரண்டாவது சிரார்த்த தினம்
நினைவுகூரப்படுவதற்கு முன்னர் அந்த கைங்கரியம் நிறைவேற்றப்படுவதற்கு அவரது
குடும்பத்தாரும், நண்பர்களும் முன்
வர வேண்டியது அவசியமாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...