ஒரு தொழிலாளியால் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. அவனுக்கென்று ஒரு பின்பலம் இருக்க வேண்டும். அந்தப் பின்பலம்தான் தொழிற்சங்கம்! மலையகத்தில் இன்று தொழிற்சங்கங்கள் அதிகரித்து விட்டதால் 'தொழிற்சங்கப்பலம்' பலவீனமடைந்துள்ளது. ஒரு சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் தோட்ட நிர்வாகம் தோட்டத்திலுள்ள வேறு சங்கத்தைப் பயன்படுத்தி, தொழிற்சங்க நடவடிக்கையை முறியடிப்பதையும் காண முடிகிறது.
பலம்வாய்ந்த தொழிற்சங்கம் உள்ள தோட்டத்தில் தொழிலாளர் பிரச்சினையை தலைவர்மார் ஊடாக பேசித் தீர்க்க முடியும். அதுவும் இயலாவிட்டால் உதவித் தொழில் ஆணையாளர் மூலமாக பேசமுடியும். அது வும் தோற்றுப்போனால் தொழில் நீதிமன்றம் மூலமாய் தீர்வு காண முடியும். இவை அனைத்தையும் தொழிற்சங்கமே மேற்கொள்கிறது. எனவே, தோட்டத் தொழிலாளர் ஏதாவது ஒரு பலம்வாய்ந்த சங்கத்தில் அங்கத்துவம் பெறுதலே சாலவும் நன்று.
தொழிற்சங்கம் இருந்தும் தொழிலாளர் பிணக்குகள் தீர்க்கப்படாத தோட்டங்களும் உள்ளன. அநேகமாக அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கம் அல்லது நிர்வாகம் அரசு ஆதரவைப் பெற்றிருப்பின் இத்தகைய நிலையை தொழிலாளர்கள் எதிர்கொள்ள நேரிடக்கூடும்.
அவிசாவளை –ஹட்டன் பிரதான வீதியில் தெஹியோவிட்ட நகரை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. ஆனால் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் சுமார் 60 பேர் மட்டுமே! இத்தோட்டம் ஒரு கம்பனி யால் நிர்வகிக்கப்படுகின்றது.
வெளியிலிருந்து நோக்கும்போது தோட் டம் பொலிவுடன் உள்ளதாக தோற்றமளி த்தாலும் தொழிலாளருடன் பேச்சு கொடு த்தால் அவர்கள் பிரச்சினைகளோடு மூழ்கிக் கிடப்பதை உணரமுடிகிறது. மேற்படி தோட்டத்தில் மூன்று லயன்களும், இரண்டு குடும்பங்கள் வதியும் வீடுகள் மூன்றும் உள்ளன. இலங்கை சமசமாஜக் கட்சியின் காலஞ்சென்ற பிரமுகர் வி.எஸ்.ராஜாவின் முயற்சியால் சில தனி வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டன. தொழிலாளர்களும் அவர்களாகவே தனி வீடுகளை அமைத்துள்ளனர். இதற்கு இடமளித்த தோட்ட நிர்வாகத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
மின்சாரம்
2011ஆம் ஆண்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இத்தோட்டத்துக்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டார். இங்கே ஆட்சி மாற்றத்திற்கேற்ப தொழிற்சங்கங்களும் மாறி வருவதைக் காணமுடிகிறது. தொழிலாளர்கள் இலங்கை சமசமாஜக் கட்சியில் இருந்தபோது தனிவீடுகள் அமைக்கப்பட்டன. இவர்கள் இ.தொ.காவில் இருந்தபோது மின்சாரம் கிடைத்தது. இப்போது அரசு சார்பான சங்கத்தில் உள்ளனர். சந்தாப்பணம் வழங்குவதோடு சரி. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொழிலாளர் தெரிவிக்கின்றனர். இவர்களால் வேறு சங்கங்களில் சேரவும் முடியாத நிலை காணப்படுகிறதாம்.
நீர் விநியோகம்
இந்த மக்கள் முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினை குடிநீர் வசதியின்மையாகும். பல வருடங்களுக்கு முன்னர் மலைப் பகுதியில் உள்ள ஊற்றிலிருந்து குழாய்கள் மூலமாய் நீரைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் விஷமிகள் குழாய்களைத் திருடுவதும், சேதப்படுத்துவதுமாய் இருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் குறித்த பகுதியிலுள்ள பொறியியலாளர் காரியாலயத்துக்கு சொந்தமான கிணற்றிலிருந்து இயந்திரத்தின் உதவியால் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. மின்சார செலவு அதிகமானதால் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டதென தெரிய வருகிறது. தற்போது இங்குள்ள தனியார் வீடுகளிலிருந்து நீர் பெற்றுக்கொள்கின்றனர்.
வடிகால்
இருப்பிடங்களைச் சுற்றி வடிகால் இல்லாததால் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கி பாதைகளை மூடிவிடுகிறது.
குப்பைக் கூளம் கொட்டுவதற்கான வசதி கிடையாததால் குப்பையை பிரதான பாதை யோரம் கொட்ட வேண்டியுள்ளது. கால் நடை மற்றும் பறவைகளால் குப்பை கிளற ப்பட்டு பரவலாக்கப்படுவதுடன், அதனால் நுளம்புகள், ஈக்கள் பெருகுகின்றன. துர்நாற்றமும் வீசுகிறது.
வைத்திய சேவை
நோயாளிகளுக்கான முறையான வைத்திய சேவை கிடையாது. ஒரு வைத்தியர் மாதத்துக்கு இரண்டு நாட்கள் வந்து இங்குள்ள ஒரு சிறு அறையில் சிகிச்சையளித்துவிட்டு சென்று விடுவார். மற்றைய நாட்களில் நோயாளிகள் நான்கு மைல் தூரமுள்ள அவிசாவளை அல்லது கரவனல்ல மருத்துவமனைகளுக்கு அல்லது தனியார் வைத்திய நிலையங்களுக்கு செல்ல வேண்டும். இதன் காரணமாய் மேலதிக செலவால் பாதிக்கப்படுகின்றனராம்.
தொழிலின்மை
இளைஞர்களுக்கு தோட்டத் தில் தொழில் வழங்கப்படாததால் இவர்கள் வெளியிடங்களுக்குச் சென்று தொழில் புரியவேண்டிய நிலையில் உள்ளனர்.
கல்வி
இங்குள்ள பிள்ளைகள் நகரிலுள்ள தமிழ்ப் பாடசாலைக்குச் செல்கின்றனர். ஆனால் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை கற்கும் பிள்ளைகள் சுமார் மூன்று மைல் தொலைவிலுள்ள ஆரம்பப் பாடசாலைக்கே செல்ல வேண்டும். அப்பாடசாலையில் இடப்பிரச்சினை காரணமாக அடுத்த வரு டம் முதலாம் வகுப்புக்கு சேர்வதில் பிரச் சினை ஏற்படக் கூடுமென்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு எப் போது தான் தீர்வு கிடைக்கும்? அரசியல் வாதிகள் கவனிப்பார்களா?
நன்றி - வீரகேசரி 18.05.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...