தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில் லிந்துலை நகரசபையினால் முன்னெடுக்கப்பட்ட கடைத்தொகுதியின் கட்டட நிர்மாணப்பணிகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட செயலகத்திலுள்ள ஆச்சர்ய மண்டபத்தில் இடம் பெற்றது. இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி தொடர்பில் அறிவித்திருக்கின்றார்.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில் லிந்துலை நகர சபையினால் கடைத்தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டட நிர்மாணப் பணிக்கு எதிராக பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான போராட்டம் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், கடைத்தொகுதி அமைக்கும் பணி இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பெரும் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஸ்தலத்திற்கு வந்து உறுதிமொழி வழங்கவேண்டுமெனக்கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நல்லதொரு முடிவு காணப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே லிந்துலை நகரசபையினால் முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப்பணிகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் ஜி.பி. ஜி. குமாரசிறி தன்னிடமும் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாக கூறியுள்ளார்.
உண்மையிலேயே தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில் லிந்துலை நகரசபையினால் கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கு பெற்றோர்கள், மாணவர்கள், பெரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவர்களின் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் முயற்சியை அடுத்து இந்த விடயத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
மேல்கொத்மலை திட்டம் காரணமாக தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயம் பெரும் பாதிப்புக்களை சந்தித்திருந்தது. இந்தத் திட்டத்திற்கென பாடசாலையின் கட்டடங்கள் அகற்றப்பட்டிருந்தன. இதற்குரிய முழுமையான கட்டடங்கள் இன்னமும் பாடசாலைக்கு அமைத்துக்கொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் பாடசாலைக்கு சொந்தமான காணியில் கடைத்தொகுதி அமைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு பாடசாலையை வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில் சகல தரப்பினரும் அக்கறை செலுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றபோதிலும் இதில் பெருமளவான அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பங்கேற்காத அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையிலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்பது அந்த மாவட்ட மக்களின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்காக கூட்டப்படுகின்றது. இந்த கூட்டங்களில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் உயரதிகாரிகளும் பங்குபற்ற வேண்டியது இன்றியமையாததாகும். இதன் மூலமே திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும்.
ஆனால், நீண்டகாலத்திற்குப் பின்னர் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதில் பல அரச திணைக்களங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பங்கேற்காமை உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனையடுத்து பங்கேற்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த நடவடிக்கையானது சரியானதாகும். ஏனெனில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறும் போது அதில் அதிகாரிகள் நிச்சயமாக பங்கேற்கவேண்டியது இன்றியமையாததாகும். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தகையவர்கள் இத்தகைய முக்கிய கூட்டங்களில் பங்கேற்காவிடின் அதற்கு காரணங்களை முன்னரே தெரிவிக்கவேண்டும். இதனைவிடுத்து கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பது என்பது மாவட்ட மக்களுக்கு செய்யும் அநீதியாகவே அமையும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் உடைகள் தொடர்பிலும் அமைச்சர் விசனம் தெரிவித்திருக்கின்றார். அடுத்த கூட்டத்தில் இத்தகைய தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் பணித்திருக்கின்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் உரிய வகையில் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அது வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களாக இருக்கலாம். அல்லது மலையகத்தில் உள்ள மாவட்டங்களாக இருக்கலாம். சகல மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்கள் ஒழுங்கான முறையில் நடத்தப்படவேண்டும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் அரச தரப்பு எம்.பி.க்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கும் நிலை இதுவரை காணப்பட்டது. ஆனால் வடமாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வடமாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் தற்போது எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன் வடமாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இவ்வாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தீர்மானங்களை உரிய வகையில் எடுத்து மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இரு தரப்பும் இணைந்து தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இத்தகைய போக்கில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
இதேபோல் நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தில் சிறுபான்மையினர் அதிகமாக உள்ள மாவட்டங்களிலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்மானங்களை எடுத்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானதாகும்.
நன்றி - வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...