Headlines News :
முகப்பு » , » 969 : இது முடிவல்ல... முடிவின் தொடக்கம்! - என்.சரவணன்

969 : இது முடிவல்ல... முடிவின் தொடக்கம்! - என்.சரவணன்


மியான்மார் : திகதி – 20 மார்ச் 2012.
முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவருடன் வாய்த் தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார்.

இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரகணக்கானோர் உடமைகளை இழந்து இடம்பெயர்ந்தார்கள்.

இராணுவம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது. அந்த ஊரடங்கு சட்டம் தம்மை பாதுகாக்கும் என்று நம்பினார்கள் முஸ்லிம்கள். ஆனால் அவர்களை தமது பகுதிக்குள் முடங்கச் செய்து முஸ்லிம்களை வேட்டையாட காடையர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இனப்படுகொலையும், சொத்துக்கள் அழித்தொழிப்பும் சுலபமாக நடந்தேறின. இராணுவமும், போலிசும் தமது மறைமுக ஆதரவை வழங்கின. இதனை நிகழ்த்த மியன்மார் அரசு பூரண அனுசரணையை வழங்கியது.

இதனை தலைமையேற்று நடத்தியது யார் என்று நினைக்கிறீர்கள். “969 இயக்கம்”. மேற்படி சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மியன்மார் அரசு முஸ்லிம்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்வதற்காக ஒரு நடவடிக்கை எடுத்தது. அங்கிருக்கும் வங்காள முஸ்லிம்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இவர்கள்) நாடுகடத்துவது அந்த திட்டங்களில் ஒன்று. இதனை ஆதரித்து ஆயிரகணக்கான பௌத்த பிக்க்குளைத் திரட்டி “969 இயக்கம்” பாரிய பேரணியொன்றை நடத்தியது. அந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பௌத்தர்களின் நிலம் பறிபோகிறது, முஸ்லிம்களுடன் கலப்புமணம் புரிவதால் பௌத்தர்களின் தூய்மை கெடுகிறது. முஸ்லிம்கள் பல்கிப் பெறுகிறார்கள். இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்குவதை புறக்கணியுங்கள். தேசத்தின் உடனடி பிரச்சினை மதத்தையும், இனத்தையும் காப்பதே என பிரச்சாரம் செய்தார்கள். துண்டுபிரசுரம் கொடுத்தார்கள்.
"..உங்கள் இனத்தையும் மதத்தையும் காத்துக்கொள்ளுங்கள். 786 என்று பதித்தவற்றை வாங்காதீர்கள். அவை "ஹலால்". முஸ்லிம்களுடன் திருமண, வியாபார, நட்பு எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளாதீர். மியன்மார் ஒரு முஸ்லிம் நாடாவதை தடுப்பது எல்லோரதும் பொறுப்பு,.."

“969 இயக்கம்” ஒரு பௌத்த தலிபான் இயக்கம் என்றும், நவ நாஜி இயக்கம் என்றும் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகிறது. அந்த இயக்கத்தின் தலைவர் “அஸின் விராத்து”ஒரு பௌத்த பின்லாடன் என்றும் பௌத்த பயங்கரவாதி என்றும் விமர்சிக்கப்படுகிறார். அந்த இயக்கம் துணிச்சலாக முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை மதத்தின் பேரால் தொடர்ந்தும் நிறைவேற்றி வருகிறது. அங்குள்ள பௌத்தர்கள் பலர் அவர்கள் செய்வது சரி என்று நம்புகிறார்கள். அரச அனுசரணையுடன் அந்த இயக்கம் இன்று நாட்டுக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் பௌத்த வலைப்பின்னலை இன்று பலமாக ஏற்படுத்தி வருகிறது.

இப்போது மேற்படி நிகழ்வுகளை அப்படியே இலங்கைக்கு பொருத்தி கண்முன் கொணருங்கள் அப்படியே அச்சில் வார்த்தாற்போல மியான்மார் சம்பவமும் சமீப கால இலங்கை நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியான அளுத்கம சம்பவமும் அப்படியே பொருந்தும்.

“969” என்பது பௌத்த அடிப்படை மூலங்களைக் குறிக்கும் எண்கள் அவை பௌத்தம், தர்மம், சங்கம். எனவே இந்த “969” என்கிற நாமத்தை முதன்மைபடுத்த பௌத்தர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற சுலோகங்களை உலக பௌத்தர்களுக்கு விரிவாக்குகிறது இந்த இயக்கம்.

இதன் நீட்சி தான் இன்றைய பொதுபல சேனாவின் துணிச்சல்மிக்க நிகழ்ச்சிநிரல்.

“969 இயக்கம்” பொதுபல சேனா சந்திப்பு
இந்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் திகதி பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் மியன்மார் சென்று “969 இயக்கம்” இயக்கத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல.  969 இயக்கத்தின் தலைவர் அஸின் விராத்து ஞானசாரவுக்கு பிறந்த நாள் பரிசொன்றையும் வழங்கினார். ஞானசாரவை அங்கு அழைத்துச் சென்றவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் நடத்தப்பட்ட BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரின் குழுவில் ஞானசாரவையும் உள்ளடக்கியிருந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் குறித்த மாநாடொன்றில் ஞானசார உட்பட பொதுபல சேனா தலைவர்களையும் அழைத்துச் சென்றது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது.
அளுத்கம கூட்டத்தில் ஞானசாரவின் ஆவேசம் பொங்கிய உரை

இந்த சந்திப்பின் பின் நாடு திரும்பிய ஞானசார தனது வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்துகின்றார். 969 இயக்கத்தின் செயற்பாடுகளின் வெற்றி பொதுபல சேனாவுக்கு முன்னுதாரணமாக ஆகிறது. முன்னைய நிகழ்ச்சிநிரல் புதிய பரிமாணம் பெறுகிறது. (அது குறித்து விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியிடுகிறேன்)
ஹலால் பொருட்களை வாங்குவதை தவிருங்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள், முஸ்லிம்களுக்கு நிலம் விற்பதை தவிருங்கள், முஸ்லிம்களுக்கு கடைகள் வாடகைக்கு கொடாதீர்கள்.
(பொதுபல சேனா வின் சுவரொட்டி)
1933இல் ஜெர்மனில் நாசிகள் யூதர்களுக்கு எதிராக பாவித்த சுலோகங்கள்.
"உன்னை தற்காத்துக்கொள்.  யூதர்களின் கடைகளில் எதையும் வாங்காதீர்"
பொதுபல சேனா இயக்கம் (தமிழில் இதனை பௌத்த அதிகாரப் படை/சேனை எனலாம்) தனித்த ஒன்றல்ல மிக தெளிவான, திட்டமிடப்பட்ட இயக்கம். அதன் கீழ் வேறு பெயர்களில் பல முன்னணி அமைப்புகளை (front organisations) வலைப்பின்னலாகக் கொண்ட இயக்கம் அது. அப்படிப்பட்ட முன்னணிகளில் “ராவண பலகாய” (ராவண படை), “மகாசென் 969” போன்றவை அவற்றில் சில. “மகாசென் 969” (*)  (மகாசேனன்) அமைப்பு வன்முறைக்காகவே தயார் செய்யப்பட்ட அமைப்பாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சிவசேனா போல பொதுபல சேனாவுக்கு “மகாசென் 969”. ஆனால் பொதுபல சேனா இப்படியான பெயர்களை நிரந்தரமாக வைத்திருப்பதில்லை என்று அதன் வளர்ச்சியை அவதானிக்கும் போது தெரிகிறது. இந்த பெயர் மியன்மாரின் “969 இயக்கத்தை” ஆதர்சமாக கொண்டது.

இந்த 969 இயக்கமே 15ஆம் திகதி அழுத்கமவில் கட்டவிழ்த்த காடைத்தனத்தை ஒழுங்கமைத்தது என்று தெரியவருகிறது. 18ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அமைதி திரும்பியபோது மீண்டும் மிச்ச நடவடிக்கைக்கு தயாராகும் வகையில் அது ஒரு துண்டுபிரசுரத்தை வெளியிட்டிருந்தது.  அதில் 
15ஆம் திகதி யூன் 2014 பிற்பகல் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பௌத்த விகாரைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
தேசப்பற்றுள்ளவர்களே பௌத்த சீருடைகளுக்கு கை வைக்குமளவுக்கு எதிரிகள் விளைந்துள்ளார்கள். கௌரவம், பயம், வெட்கம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது சிறு விடயமல்ல நாளை நம்மெல்லோரையும் பாதிக்கப்போகும் விடயம்.
இது நம் சிங்கள நாடு
நாம் பிறந்து... இறக்கும் நாடு...
இதற்கு எதிராக மாவனல்லை நகரத்தில் நடத்தப்படும் விசேட சத்தியாகிரகம் நடக்கவிருக்கிறது.
தேசத்தின் இக்கட்டான காலப்பகுதியில் உங்களனைவரையும் அழைக்கிறோம்.
“மகாசென் 969”
இந்த “மகாசென் 969” என்கிற பெயரில் வெளியிடப்படுபவை வன்முறைக்கான ரகசிய அழைப்பாக கருதப்படுகிறது. இந்த வகை அழைப்பே 15ஆம் திகதியும் அழுத்கமவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இப்போது இடம்பெற்று வருபவை எதுவும் தற்செயல் அல்ல அனைத்துமே முன்கூட்டிய, முறையாக திட்டமிடப்பட்ட நிகழ்வுகள். அரசின் அனுசரணை முழுமையாக கிடைப்பதால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த உத்தரவாதமுமில்லை. பாதகர்களுக்கு எந்தத் தடையுமில்லை.

15 ஆம் திகதி அலுத்கமவில் பொதுபல சேனாவால் நடத்தப்பட்ட கூட்டத்தின் தலைப்பு “விழித்தெழு”. இது பல ஆண்டுகளுக்கு முந்திய அநகாரிக்க தர்மபாலாவின்  பிரசித்திபெற்ற இனவெறியூட்டும் உரையின் தலைப்பு. சிங்கள பௌத்தர்களை இனவெறியூட்டும் அந்த உரையின் தலைப்பை சமீப காலமாக பொதுபல சேனா சகல கூட்டங்களிலும் பாவித்துவருகிறது.

இந்த கூட்டத்தின் முழு விடியோவையும் அவதானிக்கும் போது அங்கு உள்ள மாபெரும் கூட்டத்தையும் ஞானசாரவின் இனவெறி பேச்சுக்கு கிடைத்த பலத்த கரவொலியையும், கோஷத்தையும் அவதானித்திருப்பீர்கள்.

கூட்டத்தில் இனவெறியேற்றப்பட்ட மக்களும், பிக்குகளும், வெளியிடங்களில் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய காடையர்களும் திட்டமிடப்பட்டபடி களத்தில் இறக்கப்பட்டார்கள். போலீசார் இவற்றை கண்டும் காணாததுபோலிருக்க பணிக்கப்பட்டிருந்தார்கள் என்றே அங்கிருந்த சாட்சியங்கள் கூறுகின்றன. கண்துடைப்புக்காக தாம் தமது கடமையை செய்வதைப்போல காட்டிக்கொண்டார்கள் என்றும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறையில் ஈடுபட்ட காடையர்கள் கட்டுமீறி இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அசாத் சாலி குறிப்பிடுகையில்...
“பொதுபல சேனா இன்று கூட்டம் முடிந்து ஊர்வலமாக தர்கா நகருக்கு செல்லவிருக்கின்றனர் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கலாம் உடனேயே தடுத்து நிறுத்துங்கள் மீறி நடக்கும் அத்தனை அசம்பாவிதங்களுக்கு நீங்களும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தோம். அப்படி இருந்தும் இதனை அனுமதித்தார்கள். இன்று இந்த படுகொலைகளுக்கும், சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் இப்போது யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்....
பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகளுக்காகவும், சாதாரண அரசியல் கட்சிகள் தமது சிறிய கூட்டங்களுக்காகவும் அனுமதி கேட்டால் மறுப்பு தெரிவிக்கும் பொலிசாரும் அரசும் எப்படி இது போன்ற ஒரு இனவாத நடவடிக்கைக்கு அனுமதித்தார்கள். இப்படி நடக்கும் என்று புலனாய்வு தகவல்கள் கூட உறுதிசெய்திருந்தும். நாங்கள் எச்சரித்திருந்தும் பொலிசார் எப்படி அனுமதித்தார்கள்..."
என்று தெரிவித்தது குறிப்படத்தக்கது.
ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொணரப்பட்டு மக்களுக்கு உணவு கூட உள்ளே நுழையவிடாது தடுத்த போலீசார் காடையர்களை அனுமதித்தது எப்படி. வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு, அழிக்கப்படும் வரை எங்கிருந்தார்கள். முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் படையினர் ஈடுபடுத்தப்படாதது ஏன். வடக்கிள் யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது மக்களை தேவாலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்குள் சென்று இருக்குமாறு கூறிவிட்டு அவற்றை குறிவைத்து தாக்கி மக்களைக் கொன்றொழித்த அரச படையினர் இம்முறை அந்த வேலையை இனவெறியூட்டப்பட்ட சிவிலியன்கள் கைகளுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
“பொலிஸ் அதிகாரியொருவர் இன்னொரு அதிகாரிக்கு தொலைபேசிமூலம் சொல்கிறார் ‘அவன்களுக்கு சொல், நாங்கள் குறித்த நேரத்துக்குள் வேலையை முடிக்கும்படி கூறியிருந்தோமே. இன்னமும் முகத்தை காட்டிக்கொண்டு அங்கு என்ன செய்கிறார்கள்’ என்று கதைத்திருக்கிறார். அந்த ஆதாரங்களை நாங்கள் விரைவில் வெளியிடுகிறோம்” என்கிறார் அசாத் அலி.
சிலவேளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பில் இருந்து சில எதிர்வினைகள் நிகழ்ந்தால்; நடந்தவற்றிற்கு அவற்றை சமப்படுத்தி அடியோடு சம்பவத்தை மூடிப்போடவும் கூடும். கண்துடைப்புக்காக விசாரணைக் குழு அமைத்து காலத்தை இழுத்து திசைதிருப்பவும் கூடும். ஆனால் இந்த சம்பவம் இத்தோடு முடிவடையப்போவதில்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் பொதுபல சேனா மேலும் பலமடைந்துள்ளது. இனி வரும் நாட்களில் பொதுபல சேனா அரசியல் நிர்பந்தம் காரணமாக சில வேளை தண்டிக்கப்படலாம், ஞானசார கைதுசெய்யப்படலாம், அல்லது கொலையும் செய்யப்படலாம். பொதுபல சேனா தடை கூட செய்யப்படலாம்.
ஆனால் அதற்காக இவை எதுவும் நின்றுவிடப்போவதில்லை. இது வெறும் விதை அல்ல ஏற்கெனவே நின்று நிதானமாக பலமாக வளர்ந்த விஷ விருட்சம். ஒரு கிளையை வெட்டினால் இன்னொன்று காரியம் சாதித்து விட்டுப்போகிறது.

நாளை ஞானசாரவோ அல்லது மகிந்தவோ அல்லது வேறெவரேனும் 'இனி போதும் நிறுத்துங்கள்' என்றால் நிற்கவா போகிறது. இல்லாமல் போகவா போகிறது. அது மக்கள்மயப்படுத்தப்பட்டதன் பின். தலைமையால் கூட கட்டுப்படுத்தமுடியாது. தன்னியல்பாக அனைத்தும் நடேந்தேறும். அப்போது தனக்கும் அத்தகைய அட்டூழியங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பார்கள். தனி நபர்களிடமும், சிறிய அமைப்புகளிடமும் பழியை போட்டு தப்பி விடுவார்கள்.

"நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த  பேரினவாதம்" தனித்து இயங்கவில்லை. அதற்கு அரச தயவு இருக்கிறது. அரச தலைமை இருக்கிறது.  அது பேரினவாதமயப்பட்ட அரசின் அனுசரணையில் இயங்கி வருகிறது. இன்று ஒரு பெயரிலும், நாளை இன்னொரு பினாமி பெயரிலும் இயங்கும். காலத்துக்கு காலம் அதற்கு தலைமை தாங்க தலைவர்களும் வந்து போவார்கள். அவையெல்லாம் நிரந்தரமல்ல. ஆனால் இனவாத அமைப்புமுறை நிலையானது. அதனை பாதுகாக்கும் சித்தாந்தம் நிறுவனமயப்பட்டது. அதற்கு அரசின் பக்கபலம் என்றென்றும் நிலைத்திருக்கிறது.

அதன் வடிவம் மாறும், அதன் எள்ளலின் அளவு மாறும், பண்பு ரீதியில் கூட வேறுபடலாம். ஆனால் அந்த சித்தாந்தம் உறுதியாகவே இருக்கிறது.

ஞானசாரவை கைது செய். பொதுபல சேனாவை தடை செய். என்கிற கோஷம் நிலையான தீர்வை தரப்போவதில்லை என்பதை தூரநோக்குடன் விளங்கிக்கொள்வோம்.

ஏனென்றால் இது ஒரு ஒத்திகை மட்டும்தான். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான்.  முடிவல்ல. முடிவின் தொடக்கம் நண்பர்களே.

*மகாசேனன் (கி.பி. 334 - 362) : பௌத்த அந்தஸ்தை நிலைநிறுத்த  தமிழர்களுக்கு எதிராக போராடியதாக துட்டகைமுனுவுக்கு நிகராக மகாவம்சத்தில் போற்றப்படும் மன்னன் மகாசேனன். அக்காலத்தில் இருந்த சைவ கோயில்கள் பலவற்றை இடித்து விகாரைகளைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரம் மகாசென் மன்னனால் அழிக்கப்பட்டு பின்னர் மீளகட்டப்பட்டது வரலாறு.  மகாசேனனை சிலர் கடவுளாகவே வணங்குகின்றனர்.

17.06.2014
Share this post :

+ comments + 1 comments

மிக அருமையான வரலாற்றுப் பதிவு..........நன்றி சரவணா..

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates