வாக்காளர்களாக ஒவ்வொருவரும் தம்மை பதிவு செய்துகொள்வதானது பல்வேறு விடயங்களுக்கு முக்கியமானதாகவுள்ளதால் இவ்விடயம் தொடர்பில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் கழக ஒன்றியத்தின் சார்பாக தாவீது விக்டோரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
ஜூன் மாதம் முதல் வாக்களர் பதிவு ஆரம்பமாகிறது. எமது பெற்றோர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்யாததால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எமது பெற்றோரின் இந்த தவறு காரணமாக பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. நாங்கள் வாக்களிப்பதால் எங்களுக்கு என்ன பயன் என்று அனேக பெற்றோர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். வாக்குரிமை இல்லாததால் தான் ஒரு சமூகமாக நாம் எமது எல்லா உரிமைகளையும் இழந்தோம். வாக்காளர்களாகப் பதியாவிட்டால் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே பாதிக்கப்படும் என பல பெற்றோர்கள் தவறாக நினைக்கிறார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நமது மூதாதையர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்து அரசியலில் அநாதைகளாகியதால் கல்வித்துறை, தொழில்வாய்ப்பு, சுகாதாரம், காணி உரிமை ஆகிய எல்லாவற்றிலும் எமது சமூகம் உரிமைகளை பெறமுடியாமல் பின்னடைந்துவிட்டது. நமது சமூகத்தின் கல்வித்துறைக்கு நிதி மற்றும் வளங்கள் கிடைக்காததால் அன்றைய சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இன்று நாம் ஏனைய சமூகத்தவரை விட எல்லா விதத்திலும் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவேயாகும். நமது சமூகத்தினருக்கு நீண்டகாலமாக வாக்குரிமை இல்லாமல் இருந்ததாலேயே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எங்கள் சமூகத்தின் அரசியல் பலம் குறைந்து எங்கள் கல்வித்துறைக்கு கிடைக்கும் வளங்களை கேட்டு பெறுவதில் சிரமம் ஏற்படும். உயர்கல்வி நிலையங்களுக்கும் செல்லுதல், தொழில் வாய்ப்பு, அரசாங்கத்திடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் உரிமைகளை பெறுதல் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் கூட சிறுவர்களாகிய எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இந்த விடயங்களை புரிந்துகொண்டு நமது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
இதுவரை வாக்காளராக பதிவுசெய்வதன் முக்கியத்துவம் குறித்து அரசியல் தொழிற்சங்கங்கள் என்பனவே வலியுறுத்தி வந்தன. ஆனால், பெற்றோர் வாக்காளராகப் பதிவு செய்யாவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினராகிய சிறுவர்களே என்ற கருத்தை எவரும் இதுவரை வலியுறுத்தவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வாக்காளராக தம்மைப்பதிவு செய்து கொள்வதும் மிக மிக முக்கியமாகும். . இது விடயத்தில் பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை ஊக்குவிக்கும் பணிகளில் ஜூன் மாதம் முதல் பிரிடோ நிறுவத்தின் கீழ் இயங்கும் சிறுவர் கழகங் களும் நுவரெலியா மாவட்ட சிறுவர் ஒன்றியத்தின் எல்லா சிறுவர் கழக உறுப்பினர்களும் அக்கறையுடன் செயற்பட முடிவு செய்யப்பட்பட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி - 04.06.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...