இந்திய வம்சாவளித் தமிழர் அவர்களுக்கே உரிய வரலாற்றையும் தனித்துவ அடையாளங்களையும் கொண்டவர்கள். நாட்டின் சில பகுதிகளில் செறிவாகவும், மற்றைய பகுதிகளில் செறிவு குறைவாகவும் பல இடங்களில் பரந்தும் வாழ்கின்றார்கள். ஆனால் அனைவருக்குமே இந்திய வம்சாவளி தமிழர் அல்லது மலையக தமிழர் என்ற ஒரு அடையாளம்தான் உண்டு.
நுவரெலியா மாவட்ட மக்கள் தொகையில் 57 சதவிகிதமாகவும், பதுளையில் 22 சதவிகிதமாகவும் செறிவாக உள்ளனர். கண்டி, இரத்தினபுரி, கொழும்பு போன்ற மாவட்டங்களில் 11 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ளனர். மற்றும் சில மாவட்டங்களில் 8, 4, 3, 2 என்ற சதவிகிதங்களில் உள்ளனர். இவ்வாறு இலங்கையின் பல பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுடைய உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது, உறுதிப்படுத்துவது அவர்கள் எவ்வாறு சமத்துவ நிலையை அடைவது என்பதுவே பெரும் சவால்களாக உள்ளன.
இந்த கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன் னர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலே இடம்பெற்ற ஒரு முக்கிய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையாகும். இது திருத்தப்பட்டு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.
18ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தி லும், 19ஆம் நூற்றாண்டிலும் அறிவியற் துறையில் தோன்றிய சிந்தனைப் புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு கள், போக்குவரத்து சாதனங்களின் அபார முன்னேற்றம், கட்டண வீழ்ச்சி, இவையெல்லாம் பெரும் மாற்றங்களை தோற்று வித்தன. வர்த்தகக் கட்டுப்பாடுகள், Mercarntilism) நீக்கப்பட்டு தடையற்ற வர்த்தகப் பரிமாற்றங்கள் (Free trade) ஏற்பட்டன. இதனையடுத்து முன்னர் ஒரு போதும் இல்லாத அளவு மனித இடம்பெயர்வும் துரிதமடைந்தது. நாட்டிற்குள்ளேயும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்வதும் மிகப் பெரிய அள வில் நடைபெற்றது.
காலம் காலமாக ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வ தும், அங்கே குடியேறுவதும் மனித குலத் தின் ஒரு பண்பாக எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் நடந்த இந்த இடம்பெயர்வு வரலாறு காணாத அளவில் நடைபெற்றது.
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்கள் சென்று குடியேறினார்கள். இதே சமயத்தில் புதிதாக ஏற்பட்ட மாற்றங்களினால் மற்றும் பல காலனித்துவ நாடுகளுக்கு பெருமளவில் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது. பிரித்தானியா மிகப் பெரிய மக்கள் தொகை உடைய இந்தியாவை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பின்னர். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதாவது மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆபிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு மக்கள் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்கும் வேறு தொழில்களுக்காகவும் இடம்பெயர்ந்தனர். இதனால் நாடுகளின் இனத்துவ அமைப்புகள் மாற்றம் பெற்றன.
இந்த காலகட்டத்தில் புதிய நாடுகளை கைப்பற்றுவதற்கும், அவைகளை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் ஐரோப்பிய நாடுகளிடையே போட்டா போட்டிகள் நிகழ்ந்தன. 19ஆம் நூற்றா ண்டில் வர்த்தகத்தில் ஏற்பட்ட போட்டியும், நாடுகளை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற அவாவும், ஐரோப்பிய நாடுகளை குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளை போருக்கு இட்டுச் சென்றது. போருக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் நாடுகளை எவ்வாறு பிரித்துக்கொள்வது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒல்லாந்தரிடம் இருந்து இலங்கை ஆட்சி பிரித்தானியாவுக்கு கைமாறியது.
ஒல்லாந்தரின் ஆதிக்கத்தில் இருந்த கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியாவின் ஆட்சிக்கு கீழ் கொண்டுவரப்பட்டாலும் கூட நீண்டகாலமாக கண்டிய இராஜ்யம் ஆட்சி செய்த மத்திய மலையக பிரதேச த்தை ஒல்லாந்தரினாலோ அல்லது அதற்கு முன் செல்வாக்கு செலுத்திய போர்த்துக்கேயரினாலோ கைப்பற்ற முடியாதிருந்தது. இந்த காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட பிரித்தானியா மத்திய மலையக பிரதேசத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியில் 1815 ஆம் ஆண்டு வெற்றி கண்டு தன் அதிகாரத்தின் கீழ் கண்டிய இராச்சியத்தை கொண்டு வந்தது.
கண்டிய இராச்சியத்தை கைப்பற்றிய போதிலும் இதற்குப் பின்னர் பல கலவரங்களும் எதிர்ப்பு அலைகளும் உருவாகின. இவை அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டி முழு இலங்கையையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சில வருடங்கள் ஆகின.
முழு இலங்கையிலும் பிரித்தானிய அதிகாரம்; கோல்புறூக் – கமரோன் சீர்திருத்தம்
முழு இலங்கையையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த பின்னர் இத ற்கு முன்னர் நிலவி வந்த நிர்வாக முறை புதிய சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கவில்லை. எனவே அதை முற்றிலுமாக மாற்றி அமைத்து புதிய ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பிரித்தானிய அரசு கோல்புறூக், கெமரோன் (Colebrook, Cameron) ஆகிய இருவர் தலைமையில் நிலையை முழுவதுமாக ஆராய்ந்து புதிய நிர்வாக மாற்றங்களுக்கான சிபாரிசுகளை செய்வதற்கு ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது.
இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் இலங்கையின் வரலாற்றையே மாற்றியமைத்தன. நிர்வாக சீர்திருத்தத்திற்காக முக்கியமான பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. இலங்கையின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்து 16 அலகுகளில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டன. இவ்வாறு குறை க்கப்பட்ட ஒவ்வொரு அலகிற்கும் ஒரு அரசாங்க அதிபரை (Government agent) நியமித்து அவருக்கு நிர்வாக பொறுப்பு கொடுக்கப்பட்டது. உயர்மட்ட நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு இரண்டு சபை களை அமைக்க வேண்டும் என ஆணைக்குழு சிபாரிசு செய்தது. இந்த சபைகளாவன:
நிர்வாக சபை
சட்ட சபை
இவ்விரண்டு சபைகளும் கவர்னருக்கு கீழ் செயல்பட்டாலும் சட்டசபையில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டமை ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். ஆர ம்பத்தில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் கவர்னராலேயே நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி அதிகார முடிவுகள் செய்யப்படும் போது அவர்களுக்கு தங் கள் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இது பிரதிநிதித்துவ முறையின் சிறிய அளவிலேனும் ஒரு ஆரம்ப கட்டமாக கருதப்பட்டது.
1833ஆம் ஆண்டு சிபாரிசின்படி நிறுவப்பட்ட சட்டசபை ஆரம்பத்தில் 16 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது. சட்டசபையில் 10 உத்தியோகப்பூர்வ அங்கத்தவர்களும் 6 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர் (3 ஐரோப்பியர்கள், 1 சிங்களவர், 1 தமிழர், 1 பர்கர்).
1860ஆம் ஆண்டில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் 8ஆக அதிகரிக்கப்பட்டது. (3 ஐரோப்பியர்கள், 1 கீழைத்தேய சிங்களவர், 1 கண்டிய சிங்களவர், 1 தமிழர், 1 முஸ்லிம், 1 பர்கர்) உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களின் தொகை 6லிருந்து 8ஆகக் அதிகரிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும்.
மக்கலம் (McCallum) சீர்திருத்தம்
1860ஆம் ஆன்டின் இந்த சிறிய மாற்றத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின்னர் 1910ஆம் ஆண்டில் சட்டசபையின் அங்கத்துவ தொகை 21ஆக உயர்த்தப்பட்டது. இதில் 11பேர் உத்தியோகப்பூர்வ அங்கத்தவர்களாகவும், 10 பேர் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களாகவும் இடம்பெற் றனர். உத்தியோகபற்றற்ற அங்கத்தவர்க ளின் எண்ணிக்கை கூட்டப்பட்டமை கவனத்திற்குரியது. 1911 ஆம் ஆண்டில் முதல் தடவையாக தேர்தல் மூலம் சில உத்தியோகபற்றற்ற பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை அறிமுகமாகியது. இவ்வாறு தேர்தல் அடிப்படையில் அங்கத்தவர்களை சேர்த்தது பிரதிநிதித்துவ முறையின்; முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது. இம்முறையின் கீழ் 4 தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெற்றன. ஏனைய உத்தியோக பற்றற்ற அங்கத்தவர்கள் நியமனம் மூலமாகவே தொடர்ந்தனர்.
மானிங் (Manning) சீர்திருத்தம்
1920இல் சட்டசபையின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டன. சட்டசபையின் அங்கத்துவம் 21இல் இருந்து 37ஆக உயர்த்தப்பட்டது. இதில் 14பேர் உத்தியோகப்பூர்வ அங்கத்தவர்களாகவும், 23பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் செயற்பட்டனர். உத்தியோகப்பற்றற்றவர்களின் தொகை வெகுவாக அதிகரிக்கப்பட்டது.
1920ஆம் ஆண்டிலேயே முஸ்லிம், இந்திய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக புதிய தொகுதிகளை ஏற்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 16 ஆகும். அவையாவன:
ஐரோப்பியர் தொகுதி (நகர்ப்புறம்)
ஐரோப்பியர் தொகுதி (கிராமப்புறம்)
வர்த்தகர் தொகுதி
பர்கர் தொகுதி
கீழ் பகுதி பொருள் உற்பத்தியாளர்கள் சங்க தொகுதி
மேல் மாகாணம் (பிரிவு அ)
மேல் மாகாணம் (பிரிவு ஆ)
கொழும்பு நகரம்
மத்திய மாகாணம்
வட மாகாணம்
தென் மாகாணம்
கிழக்கு மாகாணம்
வடமேல் மாகாணம்
வட மத்திய மாகாணம்
ஊவா மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களுள் 1921ஆம் ஆண்டு ஈ.ஜி.ஆதமலி என்ற ஒரு வர் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார்.
1923ஆம் ஆண்டு நடந்த சீர்திருத்தத்தின்போது 2 இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்வது என்பது நடைமுறைக்கு வந்தது. இந்த அடிப்படையிலேயே திவான் பகதூர், ஐ.எக்ஸ்.பெரேராவும், முஹமது சுல்தானும் தெரிவா கினர். முஹமது சுல்தான் 6 மாதங்களில் காலமாகிவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் நடேசய்யர் மூலம் நிரப்பப்பட்டது.
“தேர்தல் முறை எந்தவொரு இனப்பிரிவினருக்கும் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது”
(கவர்னர் சேர். வில்லியம் மானிங் (Sir Willam manning) எச்சரிக்கை)
1920 – 1930க்கும் இடையிலான காலப்பகுதியில் இலங்கையின் இனப்பிரிவினருக்கிடையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இது பற்றி அன்றைய கவர்னர் சேர். வில்லியம் மானிங் (Sir Willam manning) கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 1833ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி பெற்று வந்த பிரதிநிதித்துவ முறை பற்றி அவர் இவ்வாறு விமர்சிக்கிறார். “இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலையில் பல்வேறு இனப்பிரிவினராக நாட்டின் மக்கள் இருப்பதால் தேர்தல் முறையில் எத்தகைய மாற்றங்கள் செய்தாலும் தொகுதிவாரி தேர்தல் நடத்தினாலும் இனத்துவ அடிப்படையிலேயே தான் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்” என்று கூறியதோடு “தேர்தல் முறை எந்தவொரு இனப்பிரிவினருக்கும் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த முக்கியமான எச்சரிக்கை இலங்கை நிர்வாக சீர்திருத்தங்களின் போது கற்றறிந்த அனுபவங்களை தெளிவாக பிரதிபலித்தது. கவர்னர் மானிங்கினுடைய கருத்து இலங்கையின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அத ற்கு தகுந்த இடத்தையும் கொடுக்க வேண்டியது பற்றியும் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்தியது.
1920ஆம் ஆண்டுகளில் சட்டசபை அமை ப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் இது இப்போது ஒரு எல்லையை எட்டி மேலதிகமான மாற்றங் கள் அவசியமாகிவிட்டது இந்த சபையின் கட்டமைப்புக்குள்ளேயே இதை செய்ய முடியாத ஒரு நிலை உள்ளதை அன்றைய இலங்கைத் தலைவர்களும், பிரித்தானிய அரசும் உணர்ந்தனர். உரிய பிரதிநிதித்துவ மும் அதிகாரங்கள் நிறைந்த ஒரு பிரதிநிதித்துவ சபை அமைக்கப்படுவது அவசியமாயி ற்று. இந்த சமயத்திலேயே பல அரசியல் சீர்திருத்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. கண்டிய சிங்களத் தலைவர்கள் கண் டிப் பிராந்தியத்திற்கென சுயாட்சியோடு கூடிய கூட்டாட்சி கோரிக்கையை முன் வைத்தனர். இதுபோல் வேறு பல ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டன.
டொனமூர் ஆணைக்குழு
அரசியல் சீர்த்திருத்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து 1927ஆம் ஆண்டு பிரித்தானியா ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. டொனமூர் பிரபு தலைமை வகித்த இந்த ஆணைக்குழு தன்னுடைய பிரதான சிபாரிசுகளாக சர்வஜன வாக்குரிமையையும் தனி அங்கத்துவ தேர்தல் முறையையும் முன்வைத்தது.
சர்வஜன வாக்குரிமை என்பதனால் இப் புதிய தேர்தல் முறை மூலம் இந்திய தமி ழருள் பெரும்பான்மையாக இருந்த சாதா ரண தோட்ட தொழிலாளர்கள் அரசியலில் இணைவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாறு கல்வி அல்லது செல்வம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாது சாதா ரண மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஆனால் இந்த முறையில் ஒரு பலவீனமும் இருந்தது. அதாவது பெரும்பான்மையினராக சிங்களவர்கள் இருந்ததால் அவர்களுக்கு அதிக அளவு ஆசனங்களை பெற்று இனங்களுக்கிடையே சமச்சீரற்ற நிலையை உருவாக்கி சிங்கள பிரதிநிதிகளின் மேலாதிக்கத்திற்கு இம்முறை வழி வகுத்தது.
1931ல் இலங்கைக்கு வந்த டொனமூர் ஆணைக்குழு இலங்கையின் பல்லினத் தன்மை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த போதிலும் இந்த விடயத்தில் பிரித்தானியாவுடைய நீண்ட கால நிர்வாக அனுபவத்தையும் கவர்னர் மாணிங் (ஆயnniபெ) செய்த எச்சரிக்கையையும் சரிவர கவனத்திற்கு எடுத்துக்கொள்ள தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இதுபற்றி பின்னர் (1946) சோல்பரி ஆணைக்குழுவில் ஒரு அங்கத்தவராக செயற்பட்ட சேர். ப்ரெட்ரிக் ரீஸ் (ளுசை குசநனசiஉ சநநள) பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார் “மேலை நாட்டு முறை இலங்கை போன்ற ஒரு நாட்டில் அறிமுகப்படுத்தும் போது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை டொனமூர் ஆணைக்குழு சரிவர சிந்திக்கவில்லை ” சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் தேர்தல் முறையை பற்றி டொனமோர் ஆனைக்குழு சரிவர கவனம் செலுத்தி இருக்கலாம்.
நன்றி - வீர்ரகேசரி - 08-06-2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...