முன்னாள் போர் வலயத்திலும் மலையகத் தோட்டங்களிலுமே ஊட்டச்சத்துக் குறைபாடும் இரத்தச் சோகையும் அதிகமானோரிடம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் சிறார்களில் மூவரில் ஒருவரும் வளர்ந்தவர்களில் நால்வரில் ஒருவரும் இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்தச் சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐநாவுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு நடத்தியிருந்த ஆய்வொன்றில் அண்மையில் தெரியவந்திருந்தது.
இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்தச் சோகையை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனை என்று கூறியிருந்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இரும்புச் சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதன் மூலம் நாட்டின் தேசிய உற்பத்தித் திறனை 20 வீதத்தால் அதிகரித்துக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மலையகத் தோட்டப்புறங்களிலும் வடக்கு கிழக்கில் முன்னாள் போர் வலயங்களிலுமே கூடுதலான சிறார்களும் கர்ப்பிணிப் பெண்களும் ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலையகத்தில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலும் வடக்கில் முன்னாள் போர் வலயப் பிரதேசமான கிளிநொச்சியிலும் சிறார்களிடத்தில் போஷாக்கின்மையும் இரத்தச்சோகையும் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சைச் சேர்ந்த சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
'வறுமையே காரணம்'
அண்மைய ஆய்வுத் தரவுகளின்படி, இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களில் 25 வீதமானோர் நிறை குறைந்த தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த நிலைமை 40 வீதத்துக்கும் அதிகமாக காணப்படுவதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.
அதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் சிறார்கள் நால்வரில் ஒருவர் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
கர்ப்பிணித் தாய்மார் மரணம் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
முன்னாள் போர் வலயங்களிலும் மலையகத் தோட்டப்புறங்களிலும் காணப்படும் வறுமை நிலையே அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடும் இரத்தச் சோகையும் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
இரத்தச் சோகையால் பாதிக்கப்படும் தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைந்த நிறை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தக் குழந்தைகள் சிசுவாக இருக்கும்போதோ அல்லது சிறு பராயத்திலோ உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.
உரிய காலத்துக்கு முன்கூட்டிய பிறப்புகள், தாமதமான வளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் இரும்புச் சத்துக் குறைபாட்டினால் வரும் இரத்தச் சோகை காரணமாக ஏற்படலாம்.
நன்றி - பி.பி.சி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...