Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 08 - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 08 - இரா சடகோபன்


தோட்டத்தொழிலாளரை வரைவிலக்கணப்படுத்திய சட்டம்
1977 ஆம் ஆண்டுகளில் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தும் வரை தேயிலையே இலங்கையின் தேசிய வருமானத்தின் ஆணி வேராக இருந்தது. அதனைத் தவிர இறப்பர், தெங்கு, கொக்கோ என்பனவும் சிறிய அளவில் பங்களிப்புச் செய்தன.

ஆரம்பத்தில் கோப்பிப் பயிர்ச் செய்கையும் பின் அது அழிவுற்றதும் தேயிலையும் மற்றப் பயிர்களும் அதன் இடத்தைப் பிடித்தன. இத்தொழிலாளரின் தொழிற்சங்க, அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1949ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1940களில் இலங்கை  இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பு இம்மக்களுக்காக குரல் கொடுத்தது. 1848ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இந்திய வம்சாவழி மக்களின் பிரஜா உரிமை , வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்பு இதனை மீளப்பெற பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வருடாந்த மாநாடுகள் இப்பிரச்சினையை மையமாகக் கொண்டே அமைந்தன. அத்தகைய மாநாடொன்று 1963ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் திகதி ஹட்டன் இராஜலிங்க நகரில் நடைபெற்ற போது, அப்போது அதன் வரவேற்புக்  கமிட்டித் தலைவராக இருந்த பி.எஸ். முருகையா அவர்கள் நிகழ்த்திய உரையை அண்மையில்  படிக்க நேர்ந்ததால் அதனை வாசகர்களுடன் பகிர நினைத்தேன். இவ்வுரையில் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. அவர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

""தோழர்களே! பண்டை நாட்களிலே, புனித மலையைச் சுற்றி பரவியிருந்த காடுகளில் ஒரு பகுதியாகவே இந்த ஹட்டன் நகர் இருந்தது. காடுகள் நாடுகளாகிய வரலாறு, தொழிலாள வர்க்கத்தின் துயர வரலாற்றோடு ஒன்றியைந்ததாகும். நாடு நகரமான வரலாறும், நமது நலிவு கூறும் வரலாறாகும். இன்று ஹட்டன் நகரம் தேயிலைத் தோட்டங்களின் இதயமாகும். சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு ஒரு மையமாகவும் விளங்குகிறது. எண்ணற்ற காலங்களுக்கு ஒரு புனித மலையாக விளங்கிவரும் சிவனொளிபாதமலை, நமது முன்னோர்களான தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கும், துயர்நிறைந்த போராட்டங்களுக்கும் தியாகத்திற்கும் ஒரு மௌன சாட்சியாக இன்றும் நின்று நிலவி வருகிறது. 

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கண்டிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் நமது வரலாறு ஆரம்பமாகிறது. இலங்கை நாடு முழுவதும் தங்களது சொந்த பூமியாக்கிய ஆங்கிலேயர்கள் வளத்திற்கு வழி வகுக்கும் பாதைகளை அமைக்கவும் மலைநாட்டுக் கன்னிக் காடுகளை அழித்து பயிர்ச்செய்கையைப் பரப்பி, ஆங்கில வர்த்தகத்தை வளர்க்கவும் நாட்டின் வருமானத்தைப் பெருக்கவும் திட்டமிட்டனர். மலைநாடும் கோப்பிப் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற நிலமாக கருதப்பட்டது. இப்பெரும் முயற்சிக்குப் பெருந்தொகை தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். 1821ஆம் ஆண்டு முதன்முதலாகப் பாதைகள் அமைக்க, இந்தியõவிலிருந்து தொழிலாளிகள் சிலர் அழைத்து வரப்பட்டனர். 1823ஆம் ஆண்டு கம்பளைக்கருகிலுள்ள சிங்ஹபிட்டியாவில் கோப்பித் தோட்டமொன்றை ஜோர்ஜ் பேர்ட் என்பவர் ஆரம்பித்தார்.

இந்நாட்டுத் தொழிலாளர்கள் போதியளவு கிடைக்காதபடியால் 1828ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலிருந்து 150 தொழிலாளர்களை பேர்ட்  அழைத்து வந்தார். இக்காலத்தில் தென்னிந்தியப் பொருளாதார வாழ்க்கை நிலப் பிரபுத்துவ அடிப்படையில் சாதிப்பிரிவுகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்திருந்தது. வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடின. குறைந்த சம்பளத்திற்கும் குற்றேவல் செய்யும் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு இது ஏற்ற இடமாக இருந்தது. 

தென்னிந்தியா இலங்கைக்கு அண்மையில் இருந்ததாலும் அவர்களைத் திரட்டுவதற்கும், இங்கு அழைத்து வருவதற்கும், செலவு குறைவாக இருந்ததாலும் , அங்கிருந்தே தொழிலாளர்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தார்கள். கோப்பிப் பயிர்ச்செய்கையின் எதிர்காலம், செல்வம் குவிப்பதற்கு நம்பிக்கையூட்டியதால் மேலும் மேலும் அதிக தொழிலாளர்கள் பயிர்ச்செய்கையை மேலும் பரப்புவதற்காக அழைத்து வரப்பட்டார்கள். 1837ஆம் ஆண்டு முதல் இங்கு தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவது சட்டபூர்வமாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் 1839ஆம் ஆண்டின் 14 ஆவது சட்டம் தொழிலாளர்கள் வெளியேறுவதைத் தடை செய்தது.

---

இலங்கையில் 1843ஆம் ஆண்டில் இராஜகாரிய முறை நீக்கப்பட்டும் கூட, தோட்டங்களில் வேலை செய்வதற்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. 
இங்குள்ள விவசாயிகள் தோட்டங்களில் வேலை செய்வதிலும் பார்க்க, கிராமத்திலுள்ள தங்கள் சொந்த நிலங்களில் பாடுபடுவதையே விரும்பினர். வேறுசிலர் தோட்டங்களில் கூலிக்கு உழைப்பது கௌரவக் குறைவென்றும் கருதினார்கள்.

இலங்கையின் ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை போதிய தொழிலாளர்கள் இல்லாததனால், அபிவிருத்தியடைய முடியாமல் தடைப்பட்டு நின்றது. இதனால் இலங்கை அரசாங்கம் தனது 1847ஆம்  ஆண்டின் 13 ஆம்  சட்டத்தினால் இலங்கையிலுள்ள இந்தியர்கள் வேலைக்காக வேறிடம் செல்வதைத் தடுத்தது. 

இதைப் பின்பற்றி, இந்திய அரசாங்கமும், 1847ஆம் ஆண்டின் 13ஆம் சட்டத்தினால் தொழிலாளர்களின் வெளியேற்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.

இலங்கையின் பயிர்ச்செய்கை வளர்ச்சியின் காலத்தில் முதலில் கோப்பிக்கும் பின்னர் தேயிலை, இறப்பர்,தென்னை முதலிய பயிர்ச் செய்கைகளின் அபிவிருத்திக்கும், 1939ஆம் ஆண்டு வரையில் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.  1939ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறுவதற்கு இறுதியாக தடைவிதிக்கப்பட்டது. 

இந்த நூற்றாண்டு காலத்தில் (18371939) பல தடவை தொழிலாளர்கள் வெளியேறுவதை இந்திய அரசாங்கம் தடைப்படுத்தியும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தடைகள் பலமுறை நீக்கப்பட்டன. 

இலங்கை அரசாங்கம் காலத்திற்குக் காலம் இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல், சம்பளம் வழங்குதல், வேலை ஒழுங்குகள், கல்வி, சுகாதாரம், குடி உரிமை, அரசாங்க மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்கல் முதலிய துறைகளில் இயற்றிய சட்டங்களினால் இந்தியத் தொழிலாளர்கள் இந்நாட்டில் நிலையாகக் குடியேறுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. 1841இன் 5ஆம் இலக்க சட்டம், 45இன் 14ஆம் இலக்க சட்டம், 1858இன் 13 ஆம் இலக்க சட்டம், 1861இன் 20ஆம் இலக்க சட்டம், 1863இன் 15ஆம் இலக்க சட்டம், 16ஆம் இலக்க சட்டம் ஆகிய சட்டங்கள் திருத்தியும் மாற்றியும் தொகுக்கப்பட்டு, 1865இன் 11ஆம் சட்டமாகவும் 1889இன் 16 ஆம் சட்டமாகவும் திரட்டப்பட்டன.

இலங்கையில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கும் இந்தியத் தொழிலாளர்களைப் பற்றிய சட்டங்களைத் திருத்தும், 1889ஆம்  ஆண்டின் 13ஆம் இலக்க சட்டம் தோட்டத் தொழிலாளர்களைப் பின்வருமாறு வரையறுக்கிறது : 

""தொழிலாளிகள் எனப்படுவோர் இந்தியத் தொழிலாளர்கள் என்று வழக்கமாக அழைக்கப்படும், கங்காணிகளும் தொழிலாளர்களுமாவர். அவர்களின் பெயர்கள் தோட்டப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இப்புத்தகம் சட்டத்தின் 22ஆம் விதியின்படி வைக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டத்தின் 22ஆம் விதி பின்வருமாறு :

""ஒவ்வொரு தோட்ட உரிமையாளரும் எல்லாத் தோட்ட தொழிலாளிகளின் பெயரடங்கிய பதிவுப் புத்தகம் ஒன்றை வைத்திருக்க வேண்டும். அப்பதிவுப் புத்தகத்தின் நகல் ஒன்றை சரியென உறுதிப்படுத்தி, சட்டம் ஆரம்பித்த 3 மாதங்களுக்கிடையில் அந்தந்த மாகாண அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். அப்படிச் செய்யத் தவறும் ஒரு உரிமையாளர், குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு, தண்டம் விதிக்கப்படவும் கூடும்''

இதிலிருந்து 1889ஆம் ஆண்டு முதலே தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய விபரங்களைத் தோட்ட உரிமையாளர்கள் மட்டுமல்லாது அரசாங்க கச்சேரிகளும் வைத்திருந்தன என்பது தெளிவாகின்றது. 

இந்த நீண்ட வரலாற்றுக் காலத்தில் பெருந்தொகையான தொழிலாளர்கள் இந்தியாவோடு அவர்களின் தொடர்பை இழந்துவிட்டதால் இந்நாட்டில் நிரந்தரமாகக் குடியேறினார்கள். அவர்களின் சந்ததிகள் இந்த மண்ணிலே தோன்றினார்கள். நான்கைந்து தலைமுறையாகவும், அதற்கு மேலும் தொடர்ந்து தோட்டங்களிலே உழைத்து வருகிறார்கள். இச்சந்ததியினரிற் சிலர் தோட்டத்தின் எல்லைகளுக்கும் அப்பாலும் சென்று வர்த்தகத்துறையிலும், அரசாங்கத்துறையிலும், ஊழியர்களாகவும், நிர்வாகிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். 

தொடரும்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates