Headlines News :
முகப்பு » , , » மலையக நாட்டார் வழக்காறுகளும்அதன் கூறுகளும் - இரா. கெத்தரின்

மலையக நாட்டார் வழக்காறுகளும்அதன் கூறுகளும் - இரா. கெத்தரின்

நாட்டார் வழக்காறுகள் என்று கூறுகின்ற போது ஒரு குறிப்பிட்ட இனக் குழுமமோ அல்லது மக்கள் கூட்டமோ தொண்டு தொட்டு மரபாக வழங்கிவருகின்ற வழக்காறுகள் அதாவது படைப்புக்களை கூறலாம். அந்தவகையில் நாட்டார் வழக்காறுகள் குறித்து பல்வேறு அறிஞர்கள் பலகருத்துக்களை கூறியுள்ளனர். 

'வாய்மொழிக் கலைகளே நாட்டார் வழக்காறுகள்' என்கிறார் வில்லியம் பாஸ்கம் எனும் மானிடவியலாளர்.

'நாட்டார் வழக்காறுகள் மக்களின்; வாய்மொழியே பல தலைமுறைகள் வாழ்ந்தனவாக இருக்க வேண்டும்' என்கிறார் ரிச்சட் எம் டார்சன். அதே போல் வில்லியம் பாஸ்க்கம் என்பவர் 'நாட்டார் வழக்காறுகள் எல்லாம் வாய்மொழியாக வெளிப்படுத்தப்பட்டன எனினும் வாய்மொழியாக வெளிப்படுத்தப்படுவன எல்லாம் நாட்டார் வழக்காறுகள் அல்ல' என்கிறார். 

நாட்டார் வழக்காறியல் பொருள் குறித்து அறிஞர்களிடையே கருத்தொருமை ஏற்படவில்லை என்றாலும் நாட்டார் வழக்காறியல் பழமையானது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். இது பரம்பரை சார்ந்தது, எழுத்து சார்பாக நிலைப் பெற்றிருப்பதைவிட நினைவாற்றல், வழக்காறு முதலியவற்றால் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். இவற்றுள் நாடகம், நடனம் பாடல், கதைகள், மரபுக்கதைகள், சடங்குகள், நம்பிக்கைகள,; மூடநம்பிக்ககைகள், பழமொழிகள் என்பவை அடங்கும்.

எனவே இனி மலையகத்தில் நாட்டாரியல் போக்கு எவ்வாறுள்ளது என்று நோக்குவோமானால் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் நிலவிய வறுமை, வரட்சி, சாதியக் கொடுமையின் காரணமாக உழைக்கும் மக்கள் கூட்டம் வெள்ளையர்களால் இலங்கைக்கு பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக அழைத்து வரப்பட்டனர். அதன் விளைவாக தம் உணர்வுகள், சங்கடங்கள், கசப்புகள் அடக்குமுறைகள் என்பவற்றை இவர்கள் தம் வாய்மொழி இலக்கிய வடிவில் மரபாக பேணிவருகின்றனர். இம்மக்கள் தமிழகத்தில் இருந்து வந்தமையால் அங்கு காணப்படும் நாட்டார் வழக்காற்றுப் பண்புகளை ஒத்திருப்பதையும் மலையகத்தில் அவை நிலைத்துவிட்டமையையும் அவதானிக்க முடிகின்றது.

இனி நாட்டாரியலின் பிராதான கூறுகளையும,; மலையகத்தில் காணப்படும் பல்வேறு வழக்காறுகளுடன் ஒப்பிட்டு நோக்குவோம்.

ரிச்சட் எம் டாசன் என்பவர் நாட்டாரியலை நான்கு பிரதான கூறுகளாக வகுத்துள்ளார். அவையாவன

1)வாய்மொழி இலக்கியங்கள் (Oral literature)
2)நிகழ்த்துக் கலைகள் ( Performing Arts)
3)சடங்குகள் (Rituals)
4)பொருள்சார் பண்பாடு (Material culture) 

வாய்மொழி இலக்கியம்
வாய்மொழியாக தொண்டு தொட்டு ஒரு தலைமுறையினரிடம் இருந்து இன்னொரு தலைமுறையினருக்கு பரப்பப்படுகின்ற கதைகள் பாடல்கள் போன்ற எழுதப்படாத படைப்புக்களை வாய்மொழி இலக்கியமாகக் கொள்ளலாம். இதனை பின்வரும் மூன்று உபகூறுகளாக பிரிக்கலாம்.  

அ) பாடல்கள்
1) கதைப்பாடல்கள் (Ballads) 
பாடல் வழியாக புராணங்கள் இதிகாசங்கள் என்பவற்றை கூறகின்றமையினையே கதைப்பாடல்கள் என்ற வரையிறைக்குள் உள்ளடக்கப்படுகின்றது. கதைப்பாடல் குறித்த ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் நா. இராமச்சந்திரன் 'குறிப்பிட்டதொரு பண்பாட்டில் குறித்த ஒரு சூழலில் வாய்மொழியாக ஒரு பாடகனோ அல்லது குழுவினரோ சேர்ந்து நாட்டார் முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தப்படும் கதைத்தழுவியப் பாடல் கதைப்பாடல்' என்கிறார்.  உலகில் பல்வேறு இன மக்களிடையே பாரம்பரியமாக இவ்வாறான கதைப்பாடல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கிரேக்க காவியமான ஒடிசி, பின்லாந்து நாட்டு தேசிய காவியமான கலெவாலா போன்றவையும் வாய்மொழி மரபில் இருந்து தோன்றியவையே.

மலையகத்திலும் காமன் கூத்து, அரிச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், இராமாயண புராணம், அல்லி அரசானி மாலை மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் தேவதாய் அம்மானைப் போன்றவையும் வழக்கில் உள்ளது. மலையகக் கதைப்பாடல்கள் பொதுவாக நாட்டர்h நம்பிக்கை சார்ததாகவே காணப்படுகின்றன. இந்த கதைப்பாடல்கள் தமிழக மரபுகளில் இருந்து பரவியிருந்தாலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு செயற்பாடுகள், வாழ்வியல் பண்பாட்டு அம்சங்கள், காலநிலை சூழலுக்கு ஏற்ப உள்ளடக்கத்திலும், நிகழ்த்து தன்மையிலும் பல்வேறு மாற்றங்கள் காலத்திற்கு காலம் ஏற்பட்டு வருகின்றன.

2) நாட்டார் பாடல்கள் (folk song)  
நாட்டார் பாடல்கள் என்கின்ற பொழுது ஒரு குறிப்பிட்ட குழும மக்களினால் மக்களுக்காக மரபாக  பாடபட்டு வருகின்ற வாய்மொழியான பாடல்களையே நாட்டார் பாடல்கள் என்று கூறலாம். இப்பாடல் கட்டப்படும் முறை அது பரப்ப படும் விதம் பாடப்படும் சூழல், விதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். 

மலையகத்தில் தலாட்டு, ஒப்பாரி, தெம்மாங்கு, தொழிற்பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், திருமண வாழ்த்துப்படல்கள், கும்மிப்படால், மாரியம்மன் தாலாட்டு போன்ற பாடல்கள் காணப்படுகின்றன. பொதுவாக பொழுதுபோக்கு, நம்பிக்கை சார்ந்த அம்சங்களை கொண்டிருந்தப் பொழுதும் மலையக மக்களின் தனித்துவமான சமூக, பண்பாட்டு, வரலாற்று, வழிபாட்டு முறைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக மலையக நாட்டார் பாடல்கள் காணப்படுகின்றன.     

ஆ) கதைகள்
1) நாட்டார் கதைகள் (Folk tales) 
நாட்டார் கதைகள் கற்பனையாக புனைந்து எடுத்துரைக்கப்படுபவையாக இருக்கும். அவை வரலாறு சார்ந்தோ, நம்பிகைசார்ந்தோ அல்ல மாறாக பொழுதுபோக்கு கதைகளாகவே அமைகின்றன. இக்கதைகளை பொருத்தவரையில் ஒரே கதை பல்வேறு வடிவங்களில் பல்வேறு இடங்களில் திரிபுபட்டும் காணப்படலாம். மலையகத்தில் அரசக் கதைகள், பறவைகளை, மிருகங்களை பாத்திரங்களாகக் கொண்ட நீதிக்கதைகள், தென்னாலி இராமன் கதைகள் போன்ற பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. இவை பொதுவாக வயதான பெரியவர்கள் பொழுது போக்காகவும், அதன் ஊடாக புத்தி புகட்டுவதற்காகவும் சிறுவர்களும் கதைகளை கூறுகின்ற தன்மைக் காணப்படுகின்றது.  

2) பழமரபுக் கதைகள் (Legend) 
பழமரபுக் கதைகளும் உரைநடை வடிவில் எடுத்துரைக்கப்படுகின்ற நாட்டார் வழக்காறுகளில் ஒன்றாக உள்ளது. இது எடுத்துரைப்போராலும் கேட்போராலும் உண்மையெனக் கருதப்படும். ஆனால் இவை புராணக் கதைகளைப்போன்று பழமையானவையன்று. இவை வாழ்ந்து இறந்த பழங்கால வீரர்கள், தலைவர்கள், அரசர்கள், புனிதர்கள் வாழ்க்கை, புதுமைகள், வீர செயல்கள் மற்றும் இடங்கள், கட்டிடங்கள் போன்றவற்றைப் பற்றிய உண்மை கதைகளாக இருக்கும்.

மலையகத்தில் தோட்ட துரைமார்கள், பெரிய கங்காணிகள், தொழிற்சங்க, அரசியல்வாதிகள்,  மதகுருக்கள் பற்றியக் கதைகள் மற்றும் மலைகள், தோட்டப் பெயர்கள், இடங்கள், கட்டிடங்களைப் பற்றிய பல மரபுக் கதைகளும் காணப்படுகின்றன. மலையக மக்களுடைய வரலாற்றுத் தேடலில் இப்பழமரபு கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

3) புராணக்கதைகள் (Myth)
புராண கதைகள் தொன்மம் என்றும் அழைக்கப்படுகி;றன. இவை பொதுவாக இவ்வுலகத்தை பற்றியதாக இல்லாது மக்களின் நம்பிக்கை சார்ந்த வேறொரு கற்பனை உலகத்தையும், தேவலோக மனிதர்களைப் பற்றியதாகவும் இருக்கும். இவை எக்காலத்தில் நடந்தன என்ற வரையறைகள் அற்ற மக்களுடைய நம்பிக்கையினை அடிப்படையாக கொண்டு அமையும். பொதுவாகவே மலையகத்தில் புழக்கத்தில் உள்ள புராணக்கதைகள் தமிழக கதைகளின் பரவாலாவே உள்ளது. இருந்த போதிலும் சிவனொளி பாத மலை, உலக முடிவு, சீத்தா எலிய போன்றவற்றைப் பற்றிய கதைகளும் உள்ளன. மேலும் தோட்ட மக்கள் அங்குள்ள மலைகள், ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களை புராணக் கதைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் மரபும் உள்ளது.

இ) நிலைத்தத் தொடர்கள்
தெரிந்து கொண்ட வரலாறு, சம்பவங்கள், படிபினைகளை அது குறித்த தகவல்களும் உண்மைகளும் மாறாமல் அப்படியே வழமையாக சொல்லிவருவது நிலைத்தத் தொடர்களாகும். அவை

1) பழமொழிகள்
ஓரிரு வரிகளில் நடந்த சம்பவங்களையோ, படிப்பினைகளையோ சொற் செறிவுடனும், பொருளுடனும் புத்திப் புகட்டும் வகையில் காணப்படுவதை பழமொழி எனலாம். மலையகத்திற்கே உரித்தான பழமொழிகளாக ஒரு சில பழமொழிகளை கூறலாம்.

'அடுத் வீட்டில பொன்னெடுக்காத, 
தொங்க வீட்டில குடியிருக்காத'

'யாரு பொண்டாட்டி யாரோட போன என்னா? 
லெப்பைக்கு நாலு பணம் கிடைத்தால் போதும்'

'கடிச்சப் பாக்கில காப்பாக்கு கொடுக்காத 
சித்தபே கடலுக்கு அங்கிட்டு போனோன 
போரியா மகனே போரியா மகனே என்பானா'

2)விடுகதைகள்
விடுகதை என்பது விடுவிக்கப் பட வேண்டியது என்பதே பொருள். இது ஒரு சொல் விளையாட்டாக இருப்பதுடன் அறிவுப் பூர்வமான பயிற்சியும் சொல் செறிவும் மிகுந்ததாக காணப்படும். தோட்டப் புறங்களில் மின்சார வசதிகள் இல்லாது இருந்த காலக்கட்டத்தில் உழைத்து கலைத்த மக்கள் இரவு நேரங்களில் தங்கள் பிள்ளைகள், சுற்றத்தாருடன் விடுகதைகளை கூறுகின்ற மரபு காணப்பட்டன. மேலும் பல சம்பிரதாய நிகழ்வுகளிலும் விடுகதைகள் போடப்படும். உதாரணமாக பெண்பார்க்க போகும் - போது மாப்பிள்ளையின் அறிவினை சோதிப்பதற்கு விடுகதைகள் போடும் வழக்கம் மலையகத்திலும் இருந்துள்ளது. இன்று இவ்வாரான மரபுகள் அருகி செல்கின்றன.

'ஓடோடும் சங்கிலி, உருண்டோடும் சங்கிலி,
பள்ளத்தைக் கண்டால் பாய்தோடும் சங்கிலி.'  அது என்ன - தண்ணீர்

மேலும் பல வரலாற்று அம்சங்களை சொல்லக் கூடிய நிலைத்தத் தொடர்களும் காணப்படுகின்றன.

'மாட்டு மந்திரி அண்ணாச்சி 
ஒங்க மாச சம்பளம் என்னாச்சி'

நிகழ்த்துக் கலைகள்
நிகழ்த்துக் கலைகள் மேடைகளில், தளங்களில், மக்கள் கூடும் பொது இடங்களில், கோவில்களில் நிகழ்த்தப்படுகின்ற நிகழ்வுகளையே கூறலாம். இவை இசையுடன் கூடிய பாடலாகவோ, ஆடலாகவோ, நாடகமாகவோ அமையலாம். இதனை ஒரு குறிப்பிட்ட குழுவினர் தொழில் முறை கலையாகக் கூட செய்யலாம்.

அ) நம்பிக்கை சார்ந்தவை
தோட்டங்களில் திருவிழா நாட்களில், ஒரு குறிப்பிட்ட தினத்தில் சடங்கியல் பூர்வமாக, அல்லது தெய்வக் கதைகள், பக்திக் கதைகளை தோட்ட மக்கள் கூடியிருக்க ஒரு சில குழுவினரால் நடத்தப்பட மக்கள் பக்தியுடன் கலந்துக் கொள்ளும் நிகழ்வுகளைக் கூறலாம். அவற்றுள் காமன் கூத்து, பொன்னர் சங்கர், மதுரைவீரன் நாடகம், அரிச்சுணன் தபசு, கும்பி, காவடி, பறவை காவடி, தப்பாட்டம், உடுக்குப்பாடல், வல்லித் திருமணம், மாரியம்மன் தாலாட்டு போன்றவற்றைக் கூறலாம். 

ஆ) பொழுதுபோக்கு கலைகள் 
பொழுது போக்கு கலைகள் சமயம் சார்பற்றதாக காணப்படுவதுடன் தோட்டங்களில் நடைபெறும் பொது நிகழ்வுகள், விழாக்களில் பொழுது போக்காக நிகழ்த்தப்படும் நிகழ்துக் கலைகளை கூறலாம். இவற்றில் கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்றவை அடங்கும். 

மேற்கூறிய வற்றுடன் சில கலைகள் நம்பிக்கை சார்ந்ததாகவும்,  பொழுது போக்காகவும் இடம் பெறும். உதாரணம் தப்பாட்டம், காவடி, கும்மி போன்றவற்றைக் கூறலாம். மேற்கூறிய கலைகளுடன் தொடர்புடைய தப்பு, உருமி, உடுக்கு, சங்கு, சேங்கண்டி, டோலக், நாதஸ்வரம், மேளம், ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகளையும் பயன்படுத்துவர்.
இ) விளையாட்டுகள்

1) பொழுது போக்கு விளையாட்டுக்கள்
உலகில் பல்வேறு இனக்குழும மக்களிடமும் பொழுது போக்காக சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடுகின்ற விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. அவை சூழல், பண்பாடு என்பவற்றுக்கு ஏற்ப மரபான விளையாட்டுக்களாக இருக்கும். மலையத்திலே கிளித்தட்டு, பிள்ளையார் பந்து, கிட்டி, ஜில் போல, ஓடுபுள்ள, சடுகுடு, சில்லா, தாயம், பாண்டி போன்றவற்றைக் கூறலாம்.

2) வீர விளையாட்டுக்கள்.
வீர விளையாட்டுக்களை பொருத்த மட்டில் இளைஞர்கள் உரிய பயிற்சிகளை பெற்றப்பின் நிகழ்துகின்ற ஒரு சில கலைகளை குறிப்பிடலாம். அவை தற்காப்பு கலைகலாக அல்லது சாகத விளையாட்டுகளாக இருக்கலாம். இவை பொது நிகழ்வுகளிலும் பொழுது போக்காக நிகழ்த்தப்படும். மலையகத்தில் வஸ்தா அல்லது கம்படி, சுருல் வாள்வீச்சி,  பிடிவரிசை, பொய்க்கால் குதிரையாட்டம் போன்றவற்றைக் கூறலாம். 
     
சடங்குகள்
மனிதனுடைய வாழ்க்கையில் நம்பிகை சார்ந்தும், புதியவற்றை வரவேற்பதற்கும், தூய்மை படுத்தவும், இயற்கையுடனான உறவுகளை அடிப்படையாக கொண்டும் பல்வேறு சடங்குகள், கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன. இவை தெய்வ வழிப்பாடுகள், வாழ்க்கை வட்ட சடங்குகள் என்ற இரண்டு வகைகளில் அடங்கும்.

அ) தெய்வ வழிபாடுகள்.
நாட்டார் தெய்வ வழிபாடுகள் ஒரு குறிப்பிட்ட குழும மக்களின் நம்பிகை சார்ந்த வழிபாடுகளை உள்ளடக்குகின்றது. இவை இயற்கை வழிபாடுகள், முன்னோர் வழிபாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொன்டதாக இருக்கும். பொதுவாக இந்த வழிபாடுகள் நிருவனமயப்படுத்தப்பட்ட பெருந்தெய்வ வழிபாடுகளில் இருந்து வேறுபட்டதாகவே காணப்படும். 

மலையகத்தில் வழிபாட்டு முறைகளை பொருத்தமட்டில் தோட்ட மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுகின்ற கோவில் திருவிழா, தொழில்முறை சடங்குகள், சில குறிப்பிட்ட சாதியினருக்குரிய சடங்குகளும் காணப்படுகின்றன. மாரியம்மன் திருவிழா, ஆடிப்பூசை, வழிபாடு சிறுதெய்வ வழிபாடுகளான மாடசமி, சிந்தாக்கட்டி, சுடலை மாடன், மதுரைவீரன் வழிபாடுகள், தொழில்முறை சடங்குகளான கவ்வாத்து சாமி, மருந்து சாமி, கொழுந்து சாமி, ரோதமுனி  போன்ற வழிபாடுகளும் உள்ளன.

ஆ) வாழ்க்கை வட்ட சடங்குகள் (Life circle ceremony ) 
ஒரு மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்புவரை நடக்கின்ற பல்வேறு சடங்குகளே வாழ்க்கை வட்ட சடங்குகளில் அடங்குகின்றன. மலையகத்தில் காதுகுத்து கல்யாணம், பிறப்புச் சடங்கு, பதினாறு, முப்பது, பூப்புச்சடங்கு, திருமணம், நலுங்கு, பரிசம், இறப்பு சடங்கு, கருமாதி போன்ற பல்வேறு சடங்குகள் காணப்படுகின்றன.

புங்கு பொருள் பண்பாடு (Material Culture) 
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஊடாட்டமே மனித வாழ்க்கையாக இருக்கின்றது. எனவே மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இற்கையில் கிடைக்கின்ற வளங்களை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல பொருட்களை உற்பத்தி செய்கின்றான். இப்பொருட்கள் மக்களின் மரபான தொழில்நுட்பங்கள், வாழ்வியல் சூழல், பண்பாட்டு அம்சங்கள், நம்பிக்கைகளை பிரதி பலிப்பதாக இருக்கும். எனவே மலையக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பல்வேறு புழங்கு பொருட்களும் அவர்களுடைய தொழிலுடனும், பண்பாட்டு அம்சங்களுடனும் தொடர்பு பட்டதாகவே காணப்படுகின்றன. நாட்டார் புழங்கு பொருள் பண்பாடானது கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள் என்ற இரண்டு உபப்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. 

அ) கைவினைப் பொருட்கள்.
நாட்டார் கைவினைப் பொருட்கள் என்பது மரபான தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஒரு குழுமத்தினரால் பரம்பரைத் தொழிலாக செய்யப்படுகின்ற பொருட்களை குறிப்பிடலாம். மலையகத்தினை பொருத்தமட்டில் கொழுந்து கூடை பின்னுதல், சுரண்டி கவ்வாத்து கத்திகள் தயாரித்தல், உரல், உழக்கை,  அம்மி போன்றவை தயாரித்தலைக் குறிப்பிடலாம்.

ஆ) கலைப் பொருட்கள்
கலைப் பொருட்கள் என்று கூறுகின்றப் போது கலை அம்சங்களை வெளிப்படுத்தும் வண்ணம் நாட்டார் மத்தியில் மரபாக உருவாக்கப்படுகின்ற படைப்புக்களை கூறலாம். இவற்றில் ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மலையகத்தினை பொருத்தவரையில் கோவில்களிலும், வீடுகளிலும் காணப்படுகின்ற பழமையான பொருட்களிலும் இவ்வாராண மரவேலைப்பாடுகள், ஓவியங்கள், போன்றவற்றை பார்க்களாம். மேலும் காமன் கூத்து, பொன்னர் சங்கர், அரிச்சுணன் தபசு போன்ற நிகழ்த்து கலைகளுக்கான ஓப்பனைப் பொருட்கள் தயாரிக்கும் முறைகளையும் நாம் மலையகத்தில் காணலாம்.   

முடிவுரை
மலையக மக்களுடைய சமூகவியல் ஆய்வுகள், தனித்துவமான பண்பாட்டு தேடல், வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கும் நாட்டார் வழக்காறியல் ஆய்வுகள் மிக அவசியமான ஒன்று. ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் பெரும் பகுதியினர் சமூக ரீதியிலும் பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தமையினால் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் கூட்டமாகவே இருந்தனர். மறுபுறம் நோக்குவோமானால் வாய்மொழி மரபின் அடிப்படையாக இருந்த சமூகம், இன்றுதான் கல்வியில் முன்னேறி வருகின்றது. எனவே மலையக மக்களின் மரபுகள் தொடர்பான தேடலுக்கு நாட்டார் மரபுகள் முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும் இன்றைய உலகமயமாக்கள் சூழலில் பல்வேறு இனக்குழுமங்கள் தங்களது அடையாளங்களை இழந்து வருகின்றனர். எனவே மலையக மக்களுடடைய பாரம்பரியங்களை பாதுகாக்கவேண்டிய தேவையும் உள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கான விரிவான ஆய்வுகளுக்கு மலையக நாட்டார் வழக்காறுகளின் கூறுகள் தொடர்பான இக்கட்டுரை அடிப்படையாக அமையும் என்பதே நோக்காக உள்ளது.

(இக்கட்டுரை 2007ஆம் ஆண்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடாத்தப்பட்ட மலையக தமிழ் இலக்கிய ஆய்வரங்கின் ஆய்வுக் கையேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.)
Share this post :

+ comments + 2 comments

6:21 AM

Supam

2:20 AM

உண்மையில் இவை கற்பதற்கு இலகுவாக இருக்கிறது.
நன்றி!
_@fathi_rizz_xc _

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates