"துன்பக்கேணி" சிறுகதை தமிழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. இலங்கையின் மலையக மக்கள் குறித்து எழுத்தப்பட்ட அந்த கதை நீக்கப்பட்டதற்கு எதிராகவும். அது மோசமான கதை ஆகவே அது நீக்கப்படலாம் என்கிற கருத்துக்களுடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் தலித் முரசில் வெளியான இந்த கட்டுரை முக்கிய கருத்துக்களை வெளிக்கொணர்கிறது.
மாண்புரிமையைச் சிதைக்கும் கருத்துரிமை - தலித் முரசு
சென்னை பல்கலைக் கழகம், 2013 – 14 ஆம் கல்வியாண்டில் இளங்கலைப் பட்டப்படிப்புகளின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இணைத்திருந்த இரண்டு கதைகள், தலித் மக்களின் சுயமரியாதையையும் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தன: 1.புதுமைப்பித்தன் எழுதிய "துன்பக்கேணி' (1935) என்ற சிறுகதை 2. வண்ணநிலவன் எழுதிய "கடல்புரத்தில்' (1977) என்ற நெடுங்கதை. இவ்விரு கதைகளும் தலித் மக்களைப் பற்றிய உயர்வான மதிப்பீடுகளை உருவாக்கும் எண்ணத்தோடு எழுதப்பட்டவை அல்ல. மாறாக, தலித் பெண்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளன.
இத்தகைய இலக்கியப் பதிவுகள்தான் தலித்துகள் மீதான தவறான மதிப்பீடுகளை சமூகத்தில் நீடித்து நிலைக்கச் செய்கின்றன. எனவே, இவ்விரு கதைகளையும் பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று – சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஜெய்சாம்யாக் என்பவர் – சென்னை உயர்நீதிமன்றத்தில் 14.8.2013 அன்று வழக்குப் பதிவு செய்தார் (இது தொடர்பான விரிவான கட்டுரையை கடந்த "தலித் முரசு' – ஆகஸ்ட் 2012 – இதழில் காண்க).
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி அச்சு ஊடகங்களில் வெளியான பிறகு, "தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர், எழுத்தாளர் பேரவை', "ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்', "தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் பேரவை' ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை 20.11.2013 அன்று சென்னையில் நடத்தின.
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை பல்கலைக்கழகக் கல்விக்குழு தலைவரின் பரிந்துரையின் பேரில் – ""புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி'க்கு மாற்றாக புதுமைப்பித்தனின் வேறு ஒரு சிறுகதையையும், வண்ணநிலவனின் "கடல்புரத்தில்' நெடுங்கதைக்கு மாற்றாக வண்ணநிலவனின் வேறொரு புதினத்தையும் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என 7.1.2014 அன்று முடிவெடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றத்தில் இச்செய்தி தெரிவிக்கப்பட்டதன் பேரில் 20.3.2014 அன்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், உயர் நீதிமன்றத்தில் மேற்கூறிய அறிவிப்பு வருவதற்கு முன்பே (23.2.2014) சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர், புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி' கதையையும் "பொன்னகரம்' கதையையும் ("பொன்னகரம்' கதையை நீக்கக்கோரி வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது) நீக்குவதாக அறிவித்திருந்தார்.
அதற்கடுத்த நாளிலிருந்து தமிழகத்தின் முற்போக்குவாதிகள் என அறியப்பட்ட எழுத்தாளர்கள் சிலர் கருத்துச் சுதந்திரத்திற்கு ஊறு நேர்ந்துவிட்டதாக அலறத் தொடங்கினர். இவர்களின் கூற்றில் உண்மையில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவும் தலித் பெண்களை "விபச்சாரி'களாக சித்தரித்து எழுதப்பட்ட கதைகளை கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகக் கற்றுக் கொடுப்பதைத் தவறு என்று உணர்த்துவதற்காகவுமே – "தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர், எழுத்தாளர் பேரவை' எதிர்வினையாற்ற விழைகிறது.
புதுமைப்பித்தனின் கதைகள் சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தி நாளேடுகளில் வெளிவரும்போதே அவ்வாறு நீக்கப்பட்டதைக் கண்டித்து அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை மட்டுமே சில நாளேடுகள் வெளியிட்டன. எந்த ஒரு செய்திக் கட்டுரையை வெளியிடும்போதும் இரு தரப்பிலும் கருத்து கேட்டு வெளியிடுவதே இதழியல் அறமாக இருக்கையில், இந்நாளேடுகள் இப்பிரச்சினையில் முற்றிலும் பக்கச்சார்புடன் செய்திகளை வெளியிட்டன.
இக்கதைகளை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்த ஜெய்சாம்யாக்கின் வழக்குரைஞர் சு. சத்தியச்சந்திரன், "தி இந்து' பக்கச் சார்பாக வெளியிட்ட செய்திக் கட்டுரையை கண்டித்தும் அதற்கு விளக்கமளிக்குமாறும் அவ்வேட்டின் "வாசகர்களுக்கான ஆசிரியரு'க்கு 24.2.2014 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இவ்வாசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் இதற்கான விளக்கத்தை அளிப்பதற்கு மாறாக, அவர் பங்குக்கு கருத்துச் சுதந்திரம் பற்றி விரிவுரையாற்றியிருந்தார் ("தி இந்து' – 3.3.2014). "கருத்து யுத்தத்தை' நிகழ்த்தும் "தி இந்து' தமிழ் ஏடு, கவிஞர் யாழன் ஆதி எழுதிய எதிர்க்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தது.
தலித் மக்களை இழிவாக சித்தரிப்பதை கருத்துச் சுதந்திரம் என்று கூறும் நாளேடுகளையும் அதில் சுதந்திரமாக தங்களது கருத்துகளை சொல்லிக் கொண்டிருப்போரிடமும் கேட்கிறோம். தலித்துகளுக்கு ஒரு விஷயத்தின் மீது தங்களது கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறதா, இல்லையா? அதிலும் குறிப்பாக, அவ்விஷயம் அவர்களது சுயமரியாதை மற்றும் உரிமை தொடர்பானதாக இருக்கும்போது அவர்களது கருத்துகள்தான் கேட்கப்பட வேண்டும். ஆனால், எதிர்க்குரலாகக் கூட அவற்றைப் பதிவு செய்ய இங்கே வாய்ப்பும் வெளியும் இல்லை.
புதுமைப்பித்தன், வண்ணநிலவன் மட்டுமல்ல; தலித் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் சாதிய சமூகத்தால் கொண்டாடப்படும் அனைத்து வகையான படைப்புகளையும் தலித் மக்கள் மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இலக்கியம் என்ற பெயரில் எழுதி வைக்கப்பட்டவை மனித மாண்புகளுக்கு எதிரானதாக இருக்குமெனில், அவற்றை அழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
புதுமைப்பித்தன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்றும், அவர் எக்காலத்திற்கும் ஏற்றதோர் எழுத்தாளர் என்றும், கதை சொல்லும் முறையில் புதிய போக்கினை உருவாக்கியவர் என்றும், அவர் எழுதிய கதையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டது என்றும் சிலர் (ரவிக்குமார், ராஜ்கவுதமன், ஆ.ரா. வேங்கடாசலபதி, வீ. அரசு, ஞானி, அ. ராமசாமி) கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்ணில் பிழைக்க வழியில்லாத ஒடுக்கப்பட்ட மக்கள், இலங்கை தேயிலைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்த கதை "துன்பக்கேணி' என்றும், பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதன் மூலம் அந்த வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பை பல்கலைக்கழகம் தடுத்துவிட்டது என்றும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, பாடத்திட்டத்திலிருந்து "துன்பக்கேணி' சிறுகதையை நீக்கியதால் கருத்துச் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாகவும், இப்படியே கதைகளை நீக்கிக்கொண்டு போனால் தமிழில் ஒரு பழைய கதையும் மிஞ்சாது என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கூறுவதுபோல "துன்பக்கேணி' கதையில், பாதுகாக்கப்பட வேண்டிய எந்த வரலாற்றுக் குறிப்பையும் புதுமைப்பித்தன் பதிவு செய்யவில்லை. மனம்போன போக்கில் முன்னுக்குப்பின் முரணான கதைப் புனைவுகளுடன் எழுதப்பட்டுள்ள அக்கதையில், தலித்துகள் கூலிகளாக இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றதைக்கூட கேலியும் கிண்டலுமாகத்தான் அவர் பதிவு செய்கிறார்.
புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் சொல்வதானால், ""விஸ்வாமித்திரரும் வியாசரும் மலைக்குச் செல்வதற்குக் காரணம் ஒன்று. மிஸ்டர் ஸ்டோடாட், அய்.சி.எஸ். மலைக்குச் செல்வதற்குக் காரணம் வேறு. சிறீமதி மருதியம்மாள் மலைக்குச் செல்வதென்றால் அதற்குக் காரணமிருக்கிறது.
ரிஷிகளின் பூர்வாசிரமத்தைப் பற்றி ஆராய்வது நாசூக்கில்லை என்று கூறுவார்கள். மருதியம்மாள் மலைவாசத்தைப் பற்றியும் அப்படித்தான்.'' பிழைக்க வழியின்றி வேலைதேடி நாடுவிட்டு நாடு சென்ற கூலிப் பெண்கள் மீது புதுமைப்பித்தன் கொண்டிருந்த சமூகக் கரிசனையின் லட்சணம் இதுதான்!
தலித் மக்கள் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட சமூகச்சூழ்நிலை குறித்தோ, தங்கள் உழைப்பினால் அந்த நாட்டின் தேயிலைத் தோட்டங்களை அவர்கள் வளப்படுத்தியது குறித்தோ, ஆனாலும் அவர்கள் மிகக் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கும் வன்கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்பது குறித்தோ சமூக அக்கறையோடு புதுமைப்பித்தன் எதையும் பதிவு செய்யவில்லை.
சமகால தொலைக்காட்சித் தொடர்களைப்போல, கதையில் வரும் அனைத்து மாந்தர்களையும் பாலியல் ஒழுக்கங்கெட்டவர்களாக அவர் உருவகப்படுத்துகிறார். கதையில் பறங்கிப் புண் நோயாளியாக மருதியைச் சித்தரிக்கும் புதுமைப்பித்தன், அவளது மகள் வெள்ளச்சியிடமிருந்தும் முதிர்ந்த "விபச்சாரி'யின் பேச்சுகள் வெளிப்பட்டதாகப் பதிவு செய்கிறார்.
பல பேருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வரும் நோய்க்குப் பெயர்தான் பறங்கிப் புண். தலித் பெண்ணாகிய மருதி வேலைக்குச் சென்ற இடத்தில் உழைத்துப் பிழைக்காமல் "விபச்சாரம்' அல்லது "கள்ளத்தனமான' பாலுறவு மூலம் வாழ்க்கை நடத்தியவள் என்ற கருத்தைத்தான் தனது கதையில் புதுமைப்பித்தன் சொல்லி வைத்துள்ளார்.
"துன்பக்கேணி' சிறுகதையை வாசிக்கும் எந்தவொரு வாசகனிடத்திலும் தலித்துகள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் என்ற கருத்தையும், தலித் பெண்கள் பாலியல் ஒழுக்கங்கெட்டவர்கள் என்ற எண்ணத்தையுமே அது உருவாக்கும். இலக்கியத் தர அளவீடுகளின் அடிப்படையிலும்கூட "துன்பக்கேணி' மதிப்பிற்குரிய படைப்பு அல்ல. சூழலுக்கு மாறான மொழிநடையும் கதை மாந்தர்களிடையே நடைபெறும் உரையாடல்களும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத சொல்லாடல்களும் கதை சொல்லல் முறையும் "விட்டேத்தியான பாணி'யிலேயே அமைந்திருக்கின்றன.
இந்த இடத்தில் புதுமைப்பித்தன் தன் கதை பற்றி தானே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை அவருடைய ரசிகர்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறோம்: "என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்த விதத்தை சொல்வதென்றால் ரிஷிமூலம் நதிமூலம் காணுகிற மாதிரிதான். சில, ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம்.
சில, குரோத புத்தியின் விளைவாகப் பிறந்திருக்கலாம்; வேறு சில, அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத ஒரு காரியம் கை கூடாதபோது எழுதப்பட்டிருக்கலாம். இதனால், சுயமாகக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறவனுக்கு இன்னதான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது என்று சொல்வது எளிதல்ல. கேட்டால், "என்னமோ தோணித்து, எழுதினேன்' என்றுதான் சொல்ல வேண்டும்'' ("என் கதைகளும் நானும்' கட்டுரையில் புதுமைப்பித்தன்).
தரம் தாழ்ந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் தனது கதைகள் எழுதப்பட்டன என்று புதுமைப்பித்தன் தனக்குத்தானே சான்றிதழ் அளித்துக் கொள்கிறார். அவரது படைப்புகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை அவர் வார்த்தைகளே நிரூபிக்கின்றன. ஆசை வேட்கையுடனும் வன்மத்துடனும் கதைகளை எழுதி வைத்துவிட்டுச் சென்ற புதுமைப்பித்தனின் ஆபாச, வக்கிர கற்பனையில் பிறந்ததுதான் "துன்பக்கேணி' சிறுகதை என்பதை திட்டவட்டமாகச் சொல்ல முடியும். ஆனாலும் அவர் மீது நாம் தனிப்பட்ட விமர்சனம் எதையும் வைக்கவில்லை.
தலித் மக்களை அருவெறுப்பூட்டும் இழிந்தவர்களாகச் சித்தரித்து எழுதப்பட்டுள்ள "துன்பக்கேணி' போன்ற ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும் நூற்றுக்கணக்கிலான நெடுங்கதைகளையும் நம்மால் ஒழித்துவிட முடியாது. ஆனால், அப்படிப்பட்ட சிறுகதைகளை கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகக் கற்றுக்கொடுக்க ஏன் முயல்கிறார்கள் என்பதே நமது கேள்வி.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளைப் பாருங்கள் :
1."துன்பக்கேணி'யில் மருதியின் பாத்திரப் படைப்பை விளக்குக (5 மதிப்பெண்களுக்கான வினா)
2. "கடல்புரத்தில்' பிலோமி பாத்திரப் படைப்பை ஆய்க (10 மதிப்பெண்களுக்கான வினா).
மருதி மற்றும் பிலோமி பற்றிய கதையாசிரியர்களின் பார்வை இவ்வளவு எதிர்மறையாக – ஆணாதிக்கத்துடன் இருக்கும் நிலையில் (தலித்/தலித் அல்லாத) மாணஸ்க்கர்களின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். இத்தகைய ஆபத்துகளை முன்னுணர்ந்துதான் இதுபோன்ற கதைகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்கிறோம்.
கல்வி என்பது மாணவர்களின் சிந்தனையையும் ஆளுமையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். சமூகம் சொல்லிக்கொடுத்த சாதிய சிந்தனையோடு கல்வி நிலையத்திற்கு வருபவரை சாதியற்ற மனித நேயமுள்ளவராக மாற்றியனுப்ப வேண்டும். மூடநம்பிக்கைகள் மிகைந்து வரும் ஒரு மாணாக்கரை அறிவியல் உந்துதல் உள்ளவராக மாற்றி அமைக்க வேண்டும்.
நாம் அழிந்துவிட்ட ஒன்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் மூளையிலும் உயிர்ப்போடு இருக்கும், சிறு சேதாரமும் இன்றி அடுத்தத் தலைமுறைக்கு கடத்தப்படும் ஒன்றைப் பற்றித்தான் நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம். ஆம், ஜாதி என்பது பாகுபாடாகவும் தீண்டாமையாகவும் வன்முறையாகவும் கலவரமாகவும் வல்லுறவாகவும் கவுரவக் கொலையாகவும் பலரையும் காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், "துன்பக்கேணி' போன்ற கதைகள் சாதிய ஆதிக்க உள்ளுணர்வை தீவிரப்படுத்தும் என்பதே நிச்சயம்.
இந்நிலையில், தலித் பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற கதைகளை வாசிக்க நேரும்போது, அது ஆதிக்க சாதி மாணவரின் மனதில் சக தலித் மாணவியைப் பற்றி எத்தகைய மதிப்பீட்டை உருவாக்கும்? அக்கதையை வாசிக்கும் தலித் மாணவியோ / மாணவனோ எத்தகைய மன உளைச்சலுக்கும் சுய மதிப்பிழப்பிற்கும் ஆளாவார்கள் என்பதுதான் எங்களின் கவலை, அக்கறை.
கல்விக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் எப்படி சாதி மனநிலையை விட்டொழித்து வர வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோமோ, அதே போல கல்வி நிலையங்களில் உள்ள பாடநூல்களிலும் சாதிக்கு இடமிருக்கக் கூடாது. சாதியை வீழ்த்துமிடமாக கல்விக் கூடங்கள் இருக்க வேண்டுமெனில், சாதி இழிவை கேள்விக்குட்படுத்தாமல் கேளிக்கையாக்கும் படைப்புகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். மாணவர்களின் சமத்துவ மனநிலையை சீர்குலைக்கும் எதையும் நாம் அனுமதிக்க முடியாது.
புதுமைப்பித்தனின் கதையும் வண்ண நிலவனின் நாவலும் தமிழ் இலக்கியமாகக் கருதப்பட்டும் பரவலாக வாசிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. இவற்றையெல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. கருத்துச் சுதந்திரவாதிகள் பதறுவது போல அவற்றைத் தடை செய்ய வேண்டுமென எவரும் கேட்கவில்லை. இக்கதைகள் அவற்றின் கருப்பொருளுக்காகவும் அவை எழுதப்பட்ட விதத்திற்காகவும் அவை கல்விக் கூடங்களுக்குள் நுழையும் தகுதியை தாமே இழந்து நிற்கின்றன.
pudumipeethan-stories 400புதுமைப்பித்தனின் சிறுகதைகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதை ரவிக்குமார் கண்டித்திருப்பதை வரவேற்பதாக கே. சந்துரு கூறியுள்ளார்("தி இந்து' தமிழ் 2.3.2014). ரவிக்குமாரின் விமர்சனங்கள் சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடுகளே என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
அறிவு நேர்மையற்ற அவரது கருத்துகள் மதிப்பிழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ரவிக்குமாரின் எதிர்ப்புக் குரலை வரவேற்றுள்ள கே. சந்துரு, அதே கட்டுரையில் சி.பி.எஸ்.இ. வெளியிட்ட பாடநூலில் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரத்தை வரவேற்றுள்ளார்.
ஆனால், ரவிக்குமார் அக்கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்பதை சந்துரு வசதியாக மறந்துவிட்டார்.
"துன்பக்கேணி' சிறுகதையை பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை "அடிப்படைவாத செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுள்ளார்' சந்துரு. "இலக்கியம் படைக்கப்பட்ட காலம், இலக்கியவாதியின் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் விடுக்கப்படும் எதிர்வினைகள் ஆரோக்கியமானதல்ல' என்கிறார் அவர்.
தலித் பெண்களை இழிவானவர்களாக, "விபச்சாரி'களாக, "வைப்பாட்டி'களாகப் புனையும் இலக்கியக் கொடுமைகளை எதிர்த்து எழும்பும் மனித உரிமைக்குரலை அடிப்படைவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசுமளவிற்கு முன்னாள் நீதிபதி எதிர்மறையான சமூகப்பார்வையைக் கொண்டிருக்கிறாரா?
பெண்களைப் பற்றி மிகவும் இழிவான கருத்துகளைக் கொண்டிருக்கும் ராமாயண, மகாபாரதக் கதைகளும் மநுஸ்மிருதியும் இலக்கியம் என்ற பெயரில்தான் இன்றளவும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. படைக்கப்பட்ட காலச் சூழல், படைத்தவர்களின் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் பெயரால் ராமாயண, மகாபாரதக் கதைகளையும் மநுஸ்மிருதியையும் எதிர்ப்போரை அடிப்படைவாதிகள் என்று சந்துரு சொல்வாரா?
காலங்காலமாக சாதியப் பண்பாட்டின் வன்முறையில் தங்களின் வாழ்வாதாரங்களையும் மனித உரிமைகளையும் இழந்து நிற்கும் மக்களின் விடுதலைக் குரலை "அடிப்படைவாதம்' என்று கூறுவோர், சாதிய சமூகத்தின் ஆதரவாளர்களாகத்தானே இருக்க முடியும்?
படைப்பிலக்கியங்கள், அவற்றின் எல்லைகளை மீறி சாதியைக் காப்பாற்றும் வேலையைச் செய்து கொண்டிருப்பது குறித்து கே. சந்துரு சற்றும் கவலை கொள்ளவில்லை. தனிமனிதத் தன்மான உணர்வின் மீதும், குறிப்பிட்டதொரு சமூகத்திரளின் மீதும் இலக்கியங்கள் என்ற பெயரில் உமிழ்ந்து வைக்கப்பட்டிருக்கும் நச்சுக் கருத்துகளைப் பற்றியும் அந்த நச்சுக் கருத்துகள் பாடமாக – தலைமுறை தலைமுறையாக – சொல்லித்தரப்படுவதைப் பற்றியும்கவலை கொள்ளாமல் படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்று முன்னாள் நீதிபதி எழுப்பும் முழக்கங்கள் சமூக நீதியின் பாற்பட்டதல்ல.
ரவிக்குமாரைப் போல் அல்லாமல் ராஜ்கவுதமனின் எதிர்ப்புக்குரல் கவனத்திற்குரியது. "தி இந்து' நாளேட்டில் (மார்ச் 1, 2014) அவர் எழுதிய கட்டுரையில், "தலித் மாணவர்கள் முதலில் சாதி மனோபாவத்தை விட்டு விடுதலையாக வேண்டும். அப்போதுதான் போகவேண்டிய பாதை துலக்கமாகத் தெரியும்'' என்கிறார். "சாதிய மனோபாவம்' என்றால் என்ன என்பதை ராஜ்கவுதமனுக்கு நாம் விளக்க வேண்டியதில்லை. அது குறித்து அவர் ஏராளமாக எழுதியிருக்கிறார்.
ஆனால், தலித் பெண்களைப் பாலியல் ஒழுக்கங்கெட்டவர்களாகச் சித்தரிக்கும் "துன்பக்கேணி' போன்ற கதைகளை பாடங்களாகப் படிப்பதன் மூலம் தலித் மாணவர்களின் சாதி மனோபாவம் எப்படி ஒழியும் என்று விளங்கவில்லை. "தங்களின் சமூக வரலாற்றைக் கற்பது மாணவர்களுக்கு இன்றியமையாதது. அதற்கு படைப்பிலக்கியம் பெரிதும் உதவும்' என்கிறார் ராஜ்கவுதமன்.
நாம் அவருக்கு இப்படிச் சொல்ல விரும்புகிறோம்: அம்பேத்கரின் நூல்களைக் கற்றறிவதன் மூலமே தலித் மாணவர்கள் தங்களின் சமூக வரலாற்றை அறிந்துகொள்ள முடியும்; புதுமைப்பித்தன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்களில் இருந்தல்ல.
புதுமைப்பித்தனை "சிறுகதை மன்னன்' என்று புகழ்ந்து தள்ளுபவர்கள், "துன்பக்கேணி' படைக்கப்பட்ட காலச்சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள். எந்தவொரு இலக்கியப் படைப்பிற்கும் "காலச்சூழல்' என்ற சலுகை கேட்டு கெஞ்சுவது, அந்த படைப்பாளிக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும். எந்த ஓர் இலக்கியமும் தன்னளவிலேயே காலத்தைக் கடந்து நிற்க வேண்டும். அதேபோல, எவர் படைத்ததாக இருப்பினும் மனித மாண்புகளுக்குப் பொருந்தாதவற்றை விலக்கி வைப்பதுதான் அறிவுடைமை. அவற்றை இலக்கியம் என்றோ இதிகாசம் என்றோ, காலமெல்லாம் தூக்கிச் சுமப்பது வெட்கங்கெட்ட செயலன்றி வேறென்ன!
நாம் நீக்கக்கோரிய புதுமைப்பித்தனின் கதை,"பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்' என்று "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்' கையெழுத்து இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறது. உழைக்கும் தலித் பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் ஒரு கதையை மாணவர்கள் பாடமாகப் படிப்பதன் மூலம் எப்படிப்பட்ட சமூக மாற்றம் உருவாகும் என்று "தமுஎகச' விளக்க வேண்டும்.
அப்படிப்பட்ட கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதை சேர்க்கக் கோரும் தமுஎகசவின் மார்க்சியப் பார்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. தீண்டாமையின் குறியீடான உத்தப்புரம் சுவரை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சாதியவாதிகளின் கூக்கூரலாகவே இருக்கிறது தமுஎகசவின் கையெழுத்து வேட்டை.
நான் படித்த பள்ளியில் ஒரு ஆசிரியர், ""இந்தத் துலுக்கன்களைப் பாருங்கடா நாம எது சொன்னாலும் அவன் தலை கீழாய்ச் செய்வான். நாம எரிச்சா, அவன் புதைப்பான். நாம கிழக்கே கும்பிட்டால் அவன் மேற்கே கும்பிடுவான். நாம வேட்டிய திறந்து கட்டினால் அவன் மூட்டிக் கட்டுவான்'' என்றெல்லாம் விலாவாரியாகப் பேசிக்கொண்டே போவார். பெரிய நகைச்சுவை போல நாங்களெல்லாம் விழுந்து விழுந்து சிரிப்போம்.
இப்போது நினைத்துப்பார்க்கிறேன் என்னுடன் முகைதீன் என்று ஒரு முஸ்லிம் மாணவன் படித்தான். அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார் ("இந்துத்துவத்தின் இருள்வெளிகள்' – பக்கம் 17).
முகைதீன்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உளவியல் துன்புறுத்தல்களைப்போலவே, இந்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் துன்புறுத்தல்களின் தொகுப்பை தோழர் அதியன் கவிதையாக்கியுள்ளார். கருத்துச் சுதந்திரம்தான் முக்கியம் என முழங்குபவர்கள் முன் இக்கவிதையை வைக்கிறோம்:
""மாட்டுக்கறி
தின்றவனெல்லாம்
கையைத் தூக்குங்கன்னு
சொன்னபோது
நான் மட்டும் கையைத் தூக்கி
பாதிவரை
தூக்கி நிறுத்திவிட்ட
சக நண்பர்களும்
சேர்ந்து சிரிச்சி
என்னை அழவைத்த
நாராயணசாமி வாத்தியாரு
ஏன்டா அவன் வரல
தெரியலை அய்யா
ஒரே ஊர் தான்டா
அவன் வேற தெரு
நான் வேற தெரு அய்யா
அப்படின்னா
அப்படின்னா என
விடாம கேட்டு
அவன் ஊர்த்தெரு
நான் பறைத் தெருன்னு சொல்ல வச்ச
வேதாசலம் வாத்தியாரு
சங்க இலக்கியத்தில்
வரும் தலைவன்
சென்றுவரும்
பரத்தையர் வீடு
எல்லாம் இன்றைய
பறைச்சி வீடு என்றபோது
சங்க காலத்தை நடத்தி
என் மனசை
இருண்ட காலமாக்கிய
லட்சுமி அம்மாள்
இலவச நோட்டு
இலவசப் புத்தகம்
வாங்கப்போறவன் எல்லாம்
போங்கடான்னு
சொல்லிப்புட்டு
நோட்டும்
புத்தகமும்
வாங்கி வருவதற்குள்
கரும்பலகை முழுக்க
தன் சாதிக்கணக்கைப் போட்டுட்டுப்போன
மோகன் வாத்தியாரு...
யார் யார்
இன்னிக்கு
என்னென்ன சாப்டிங்க
எல்லோரும் போல்
இட்லி தோசை சொல்லாம
கூழி குடிச்சன் அய்யா
அதென்ன கூழி
அதென்ன கூழி
பலமுறை இளித்து
என்பெயரையே
வகுப்பில்
கூழியாக்கிய
கோபால் சுவாமி வாத்தியாரு
தீபாவளி முடிஞ்சி
முதல் நாள்
கலர் துணிப் போட்டு வாங்கன்னு சொன்னபோது
பொத்தான் இல்லாத
தங்கராசு மாமா
கால்சட்டையை
இருக்கி கட்டி வைத்திருந்ததை
அவுத்துவுட்டு
பொம்பள பசங்க எதிர
அம்மணமாக்கி
அவமானப்படுத்திய
முருகேசன் வாத்தியாரு
எல்லா வாத்தியார்களும்
அதிகாரியாய்
மேலே போனார்கள்
எப்போதும்
அவர்களின்மேல்
ஏணிப்போட்டு அமர்ந்து கொள்கிறது
என் அம்மணக்குஞ்சு!
எல்லா வாத்தியாருமா இப்படியென கேட்பவர்களுக்கு இக்கவிதை
சமர்ப்பணம்!
– என்பதாக முடிகிறது அக்கவிதை. மேற்கண்ட நாராயணசாமி வாத்தியாரு, வேதாசலம் வாத்தியாரு, லட்சுமி அம்மாள், மோகன் வாத்தியாரு, கோபால் சுவாமி வாத்தியாரு, முருகேசன் வாத்தியாரு முதலான வாத்திகளிடம் தப்பிப் பிழைத்த மாணவர்கள் கல்லூரிக்குள் வரும்பொழுது, பட்டியல் வகுப்பினருக்கான கல்வி உதவித் தொகை பெறுவதில் பெயர் அளிப்பது தொடங்கி, தாங்கள் தங்கிப் பயிலும் விடுதியின் பெயர், அவற்றைப் பற்றி சகமாணவர்களின் புரிதல், அவர்களுடனான உறவுச் சிக்கல் ஆகியவற்றை கருத்துச் சுதந்திரவாதிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியுமா?
கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் இங்கு இயங்கிவரும் சாதி நிறுவனங்களில் – முகைதீன்கள் மீது அ. மார்க்ஸ் கொண்டிருக்கும் இரக்கத்தில் துளியூண்டு தலித்துகள் மீது கொள்ள முடியாமல் போனதன் முரணை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை!
"துன்பக்கேணி'யை நீக்கக் கோருபவர்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையையும் நீக்கி விடுவார்களா?' என்று வீ. அரசு கேள்வி எழுப்புகிறார். நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும் இங்கு விவாதிக்கப்படும் இரு நவீனப்புனைவுகளும் – பறையர் சமூக மாந்தர்களை முக்கியப் பாத்திரமாகக் கொண்டுள்ளன என்பதாலேயே – நந்தன் சரித்திரத்தை துணைக்கு அழைப்பது, ஒப்பாய்வு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதல்ல.
அடுத்து, நந்தன் ஒரு பவுத்த மன்னன் என்றும் சிதம்பரம் கோயில் அவனது அரண்மனை என்றும் வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் எதிராகப் போராடியவன் நந்தன் என்றும் பண்டிதர் அயோத்தி தாசர் நந்தனைப்பற்றி எழுதியவை பாடமாக எங்கும் வைக்கப்பட வில்லை. மாறாக, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நந்தனை இந்து பண்பாட்டின் அடிமைக் குறியீடாகச் சித்தரிக்கிறது. அதற்காகவே அது பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட புளுகுமூட்டைகளை அம்பேத்கரிஸ்டுகள் தீ வைத்துக் கொளுத்தவே விரும்புவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்த வழக்கு குறித்து அறிந்ததும் பொங்கியெழுந்த முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் வண்ண நிலவனின் நாவல் பற்றி ஒரு கருத்தும் உதிர்க்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. இவர்களின் கருத்துச் சுதந்திர எல்லைகளும் அக்கறையும் புதுமைப்பித்தனோடு நின்றுவிட்டது ஏன்? புதுமைப்பித்தனை பதிப்பிப்பதால் வரும் கொள்ளை லாபம் ஒரு காரணமாக இருக்கலாமோ என்ற அய்யம் எழுகிறது.
தலித் மக்களின் சுயமரியாதைக்கான எதிர்வினையை வீ. அரசு சற்றும் கூசாமல் "பண்பாட்டு பாசிசம்', "பண்பாட்டு வன்முறை' என்கிறார் ("ப்ரண்ட்லைன்' 4.4.2014,"இந்தியா டுடே' 12.3.2014). காலங்காலமாக சாதி இழிவுகளையும் வன்கொடுமைகளையும் சுமந்து, ஏற்றத்தாழ்வுகளாலான இச்சமூகத்தைச் சமன்படுத்தி, பண்படுத்த விழையும் – சாதிய சமூக அமைப்பிற்கு பலியாக்கப்பட்ட – மக்களைப் பண்பாட்டு பாசிஸ்டுகள் என்று சித்தரிப்பதற்குப் பெயர்தான் தீண்டாமை.
"தி இந்து' குழுமத்தின் மற்றுமொரு இதழான "ப்ரண்ட்லைன்' இதழ் வீ.அரசின் கருத்தைப் பதிவு செய்ததைப் போல, பல்கலைக் கழகத்தில் வேறு பேராசிரியர்களிடத்திலும் மாற்றுக் கருத்துகளை கேட்டுப் பதிவு செய்திருக்க வேண்டும். "டைம்ஸ் ஆப் இந்தியா', "இந்தியா டுடே' இதழ்களும் இதே தவறை செய்தன. சென்னை பல்கலைக் கழகம் என்பது கிராமங்களில் உள்ளது போன்ற ஓராசிரியர் பள்ளிக்கூடமல்ல.
இக்கதைகளை "செனட்' கூட்டத்தில் விவாதித்துப் பின் நீக்கியதைக் கண்டித்து வீ. அரசு குரல் எழுப்பியதைப் போலவே, நீக்கத்தை ஆதரித்தும் சில பேராசிரியர்கள் அங்கு குரல் எழுப்பியுள்ளனர். ஆனால் அக்குரல்கள் எந்த ஊடகத்திலும் ஒலிக்கவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் எதிர்காலம் உள்ளடங்கிய இச்சிக்கலை மாணவர்களிடம் பேசாமல் போனதுதான் இப்பிரச்சனையில் ஊடகங்கள் செய்த அநீதியிலேயே மிகப் பெரிய அநீதி.
அடுத்து, "காலச்சுவடு' (ஏப்ரல் 2014) இதழில் கண்ணன், "புதுமைப்பித்தனை சாதியத்தால் வாசித்தல்' என்று தலித் விமர்சகர்களை சாதியவாதிகளாக்கி இருக்கிறார். "தலித் பார்வை'யை சாதியம் என்று அடையாளப்படுத்தும் பார்ப்பன காலச்சுவடின் அவதூறு புதிதல்ல. அதே இதழில், ஸ்டாலின் ராஜாங்கம் "பிரச்சினை பிரதியில் இல்லை' என்று அவருக்கு இருக்கும் நெருக்கடிகளையே மிகுந்த குழப்பத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏதோ இப்பொழுது கல்விப்புலத்தில் தலித் இலக்கியம் கோலோச்சுவதாகக் கற்பனை செய்துகொண்டு, இதுபோன்ற பிரதிகளை நீக்கக்கோரும் வழக்குகளை சாக்கிட்டு தலித் இலக்கியத்தையே கல்விப் புலத்திற்குள் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்கிறார் (கவிஞர் மதிவண்ணனின் "நமக்கிடையிலான தொலைவு' மற்றும் எழுத்தாளர் பாமாவின் "கருக்கு' பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக கருத்துச் சுதந்திரவாதிகள் இதுநாள்வரை ஒரு கருத்தையும் சொன்னதில்லை).
முதலில் தலித் இலக்கியம் ஜாதி இலக்கியமல்ல. அது பிற சாதியினரை எங்கும் இழிவும்படுத்தவில்லை. இந்நிலையில் அதை நீக்கிவிடுவார்களோ என்பதற்காக, நம்மீது சுமத்தப்படும் அநீதியை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று இவர் சொல்ல வருகிறாரா?
ஸ்டாலினுக்கு இருக்கும் நெருக்கடியால் இவ்வழக்கை சாக்கிட்டு "பிள்ளை கெடுத்தாள் விளை' பிரதியை அவர் மீட்க முயல்கிறார். கதையில் வருபவள் தலித் பெண் அல்ல; அவர் நாடார் சமூகத்தைச் சார்ந்த பெண் என்கிறார். நாடார் பெண் இழிவுபடுத்தப்பட்டாலும் எதிர்வினையாற்றுவதற்குப் பெயர்தான் தலித்தியம். பார்ப்பனர்களின் மடியில் அமர்ந்து கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்களை (பார்ப்பனர் அல்லாத தலித்துகள் மட்டும் விதிவிலக்கா என்ன?) விமர்சிப்பதுதான் ஸ்டாலின் ராஜாங்கத்தின் பிழைக்கத் தெரிந்த உத்தி.
இலக்கியமென்பது மனித சிந்தனையை வளப்படுத்துவதாகவும், மானுடத்தை ஒன்றிணைப்பதாகவும், பண்பாட்டைப் புனரமைப்பதாகவும் குறிப்பாக, இந்தியச் சூழலில் பன்னூற்றாண்டுகளாக நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் கேள்வி கேட்பதாகவும் இருக்க வேண்டும். மாறாக, சமமற்ற சமூக அமைப்பை நகலெடுத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி, வாசகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கக்கூடாது.
சமூகத்தில் நிலவும் அநீதிகளைகேள்விக்குட்படுத்தாத எழுத்தை இலக்கியம் என்று சொல்வது அறியாமை. ஆணாதிக்கம், சாதியாதிக்கம், மதவாதம் போன்றவற்றை இலக்கியம், புனைவு, கலை, பண்பாடு, மரபு என்ற எவற்றின் பெயராலும் அனுமதிக்கக் கூடாது. இவற்றின் ஊற்றுக் கண் எங்கிருந்தாலும் அவற்றைத் தேடி அடைக்க வேண்டும். இச்செயல்பாடு ஒன்றே பண்பட்ட சமூகத்தை உருவாக்கும்.
– ஜெய் சாம்யாக், சு. சத்தியச்சந்திரன், யாக்கன், புனித பாண்டியன், யாழன் ஆதி, மீனாமயில், எழில் இளங்கோவன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, தமிழேந்தி
நன்றி - தலித்முரசு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...