இலங்கையில் உள்ள சிங்கள- வடகிழக்கு மற்றும் முஸ்லிம் மக்கள் மலையக தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் தெரிவித்தார்.
மலையக சமூக ஆய்வு மையத்தின் ‘பெரட்டுக்களம்’ சஞ்சிகையின் ஒரு வருட நிறைவும் மலையக தேசியம் தொடர்பான கலந்துரையாடலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பலபிட்டி புனித பவுல் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக தேசியம் உருவாக ஒரு இனம் அவர்கள் வாழும் நாட்டில் பூர்வீகக் குடிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அப்படி நோக்கினால் இலங்கையில் வேடுவர்களைத் தவிர ஏனைய அனைவரும் வந்தேறு குடிகளே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய இனத்திற்கான வரையறைகளை சுட்டிக்காட்டிய அவர்- மலையக மக்களும் அவ்வகையான வரையறைக்கு உட்படுவதாகவும் இவற்றை ஏனைய சமூகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இங்கு உரையாற்றிய மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்பணி மா.சத்திவேல்- மலையக தேசியம் உருவாகவென மலையக சமூகம் தொடர்ச்சியாக செயற்படும் எனவும் இந்த செயற்பாடுகளில் மலையக இளைஞர்- யுவதிகள் பங்கேற்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் மலையக தேசியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஊடகவியலாளர் இரா.சடகோபன் கருத்து முன்வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் பெரட்டுக்களம் சஞ்சிகையின் ஆய்வுரையை அரசியல் ஆய்வாளர் ஆ.யோதிலிங்கம் நிகழ்த்தினார்.
அரசியல் பிரமுகர்கள்- சமூக ஆர்வலர்கள்- இளைஞர் யுவதிகள்- ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தி - பழனி விஜயகுமார்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...