Headlines News :
முகப்பு » , » தகவத்தின் கதைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வும் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை நினைவுரையும்

தகவத்தின் கதைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வும் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை நினைவுரையும்


சிறுகதைகளையும் வளர்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு செயற்படும் ‘தமிழ்க் கதைஞர் வட்டத்தினரின்’ (தகவம்) பரிசளிப்பு விழா 15-06-2013 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. வருடந்தோறும் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள், இலக்கிய சஞ்சிகைகளில் வெளியாகிய சிறுகதைகளுள் சிறந்தவற்றை தெரிவு செய்து அவற்றுக்கு பரிசு வழங்குவது தகவம் அமைப்பினரின் பணி. அந்த வகையில் 2012-2013 ஆம் ஆண்டுகளில் வெளியான சிறுகதைகளை ஒவ்வொரு காலாண்டுக்குமாகத் தெரிவு செய்து கதைஞர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இம்முறையும் இடம்பெற்றது. அத்தோடு இந்த வருடம் தனது நூறாவது ஜனன தினத்தை எய்தும் மக்கள் கவிமணி அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் சிறப்புரையும் இடம்பெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களின் மங்கல விளக்கேற்றல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வுக்கு தகவம் குடும்பத்தைச் சேர்ந்த மு.தயாபரன் தலைமை வகித்தார். அமரர் இராசையா மாஸ்டர் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்ற தகவம் ஏறக்குறைய நாலு தசாப்தங்களாக தனது பணியினை செய்து வருகிறது. தனிப்பட்டவர்களாக இருந்து செயற்படும் கதைஞர்கள் போட்டிக்காக எழுதுகின்ற போது எழுகின்ற மனநிலையை வேறு. தாமாக இயல்பாக எழுதுகின்ற போது எழுகின்ற மனநிலை வேறு. அவ்வாறு அவர்கள் இயல்பாக எழுதி பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகளை நாம் தெரிவு செய்து ஒவ்வொரு காலாண்டிலும் சிறந்த கதைகள் என கருதம் மூன்று கதைகளுக்கு பரிசு வழங்கி வருகிறோம். இதில் கதைஞரின் எழுத்து பார்க்கப்படுகின்றதே தவிர எழுத்தாளன் யார் என பார்க்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஒரு எழுத்தாளனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பரிசுகள் கிடைத்து விடுகின்றமையானது சர்ச்சைகளையும் உருவாக்கி விடுகிறது. தகவம்  நடுவர் குழு விதிமுறைகளுக்கு அமைவாகவே தங்களது பணியினைச் செய்திருக்கிறது என மு.தயாபரன் அவர்கள் தலைமையுரையில் தெரிவிததார்.
அடுத்ததாக இந்த ஆண்டு நூறாவது ஜனன தினத்தை எய்தும் மறைந்த எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. கவிஞர். சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வியார் திருமதி ஜீன் விமலசூரிய அன்னாரின் நிழற்படத்திற்கு மாலை அணிவிக்க சபையோர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தி அன்னாருக்கு கௌரவமளித்தனர்.

எழுத்தாளரும் உளவளத்துறை ஆலோசகருமான திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களது எழுத்துப்பணிகளுக்காக தகவம் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார். அவருக்கான பாராட்டுரையை வழங்கிய ஊடகவியலாளர் தெ.மதுசூதனன் அவர்கள் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் இலக்கியப்பணி மற்றும் உளவளத்துறை தொடர்பான பணிகளுக்காக அவரை கௌரவம் செய்வதில் தகவம் பெருமைகொள்கிறது என தெரிவித்தார். 

ஏற்புரை வழங்கிய திருமதி கோகிலா மகேந்திரன், பாராட்டுக்களையும் கௌரவங்களையும் தேடிச்செல்லக்கூடாதே தவிர அவை வழங்கப்படும்போது அதனை ஏற்று கௌரவப்படுத்துவது அதனை வழங்குபவர்களுக்கு செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன். குறிப்பாக தகவம் போன்ற சீரிய பணியில் சிறியதாகவேனும் தொடர்ந்து இயங்கும் அமைப்புக்கள் மீது நான் அதிகம் மதிப்பு வைத்திருக்கிறேன். அமரர் ராசையா மாஸ்டர் காலத்தில் சிறுகதைக்காக தகவத்தில் நான் பரிசும் பெற்றிருக்கிறேன். இன்று பரிசு பெறுபவர்கள் பலர் இளம் எழுத்தாளர்களாக அறியப்பட்டாலும் அவர்களின் விசிறிகளாக நாங்கள் இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டும். புதியவர்கள் புது மாதிரியாக கதைச் சொல்லும் விதத்தை நான் என்னுடைய ஆலோசனை வகுப்புகளில் மேற்கோள் காட்டுவதுண்டு. மாணவர்கள் பாடசாலை நாட்களிலேயே வாசிக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அங்கிருந்தே படைப்பாளிகள் உருவாகிறார்கள் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 2012/2013 ஆண்டுகளுக்கான ஒவ்வொரு காலாண்டிலும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகள் தொடர்பான கருத்துரையை எழுத்தாளரும் வைததியருமான எம்.கே.முருகானந்தம் அவர்கள் வழங்கினார். வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் தாங்கள் எழுதிய சிறந்த சிறுகதைகளுக்காக பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் சபா ஜெயராஜா எழுத்தாளர்கள் திருமதி. கோகிலா மகேந்திரன், திரு. தெளிவத்தை ஜோசப், சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.அன்னலெட்சுமி ராஜதுரை ஆகியோர் பரிசுகளை வழங்கி வைத்தனர்.

நிறைவாக இந்த ஆண்டு நூறாவது ஜனன தினத்தை எய்தும் மறைந்த எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பற்றிய நினைவுரையை எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர் ஆற்றினார். சி.வி.வேலுப்பிள்ளை பிறந்து வளர்ந்த நுவரெலியா மாவட்டத்தின் மடகொம்பரை தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவரான மல்லியப்புசந்தி திலகர் தமது மண் பற்றிய விவரணங்களுடன் சி.வியின் வாழ்க்கை வரலாற்றை ‘சி.வி.வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும்’ எனும் தலைப்பில் சுவைபட வழங்கினார். கால ஒழுங்கிலும் கலைத்துவ வடிவிலும் சுருக்கமாகவும் சுவாரஷ்யமாகவும் சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் ஐம்பதாண்டுகால இலக்கிய மற்றும் பொதுவாழ்வுப் பணிகளையும் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவரது ஆளுமை எவ்வாறு திட்டமிடப்பட்டு மறைக்க எத்தணிக்கப்படுகிறது போன்ற விடயங்களையும் ஆதாரங்களுடன் உரையில் சேர்த்துக்கொண்டமை சபையோரை கவர்வதாக அமைந்திருந்து. சி.வி. வேலுப்பிள்ளை பற்றிய பல்வேறு தகவல்களையும் இந்த நூற்றாண்டு நினைவு நாளில் மீட்டுத்தந்த உரையாக மல்லியப்புசந்தி திலகரின் நினைவுரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவம் குடும்பத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் முறையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  எழுத்தாளர் திருமதி. வசந்தி தயாபரன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவான நிகழ்வாக விழா நிறைவடைந்தது.                                   – ஜீவா சதாசிவம் 
நன்றி: வீரகேசரி (21/6/2014)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates