Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 1 - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 1 - இரா சடகோபன்


இரா.சடகோபன் சமகால மலையக ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரின் கோப்பி கால வரலாறு நூலிலிருந்து ஒரு பகுதியை புது விசை வெளியிட்டுள்ளது. பலரையும் சென்றடையும் நோக்கில் நமது மலையகத்தில் வெளியிடுகிறோம். தொழில்நுட்ப காரணங்களினால் பகுதி பகுதியாக வெளியிட நேரிட்டதற்காக வருந்துகிறோம்.

இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டச் சொந்தக்காரரான ஹென்றி பேர்ட் (1823) தனது சின்னப்பிட்டிய தோட்டத்தில் வேலை பார்த்த கண்டக்டரிடம் ஒரு தொகை தொழிலாளரைப் பெற பணித்தபோது அவர் திருகோணமலைக்குச் சென்று தனது தமிழ் நண்பர் ஒருவரை அணுகி அவரை தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைத்தார்.

அந்த நண்பர் தென்னிந்தியாவிலிருந்து முதற் தடவையாக 14 பேரை கோப்பித்தோட்டத்தில் வேலைசெய்ய அழைத்து வந்தார் என இலங்கை துரைமார் சங்கத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது... கோப்பித் தோட்டங்களின் தொடர்ச்சியான அதிகரிப் புடன் தொழிலாளர்களின் தேவை மிக அதிகரித்தது. தொழிலாளர்கள்ளை பெற்றுக்கொள்ள தோட்டத் துரைமார்கள் கங்காணிகளுடன் போட்டாபோட்டி போடவேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1 ரூபா, 2 ரூபாவாக இருந்த ஒரு தொழிலாளிக்கான முன் பணம் 9 ரூபா, 10 ரூபா என அதிகரித்தது. எழுத்தா ளரும் தோட்டத்துரையுமான பி.டி.மில்லி தொழிலாளர் தேடும் படலம் தொடரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: அநேகமாக கம்பளைக்கப்பால் அட்டபாகே கணவாயில் வேட்டைத்தொப்பி தலையிலும், அட்டை கடிக்காத கவச பாதணியை காலிலும் அணிந்த தனித்த பிரமச்சாரி துரைமார்கள் ஒருவராகவோ, சிலருடன் இணைந்தோ கண்டியை நோக்கி நொந்து போன முகத்துடன் போவார்கள்.

அவர்களின் அந்த பிரயாணத்துக்கு இரண்டு காரணிகள் மட்டுமே இருக்கும். ஒன்று நிதி தேடு வது. மற்றது தொழிலாளரைப் பெற்றுக்கொள்வது.

கோப்பி பெருந்தோட்டங்கள் பெருகப்பெருக துரைமார்கள் மேலும் மேலும் தொழிலாளர்கள்ளை தேடி அலைந்து துன்பப்பட்டனர். என்னதான் விளைச்சல் அதிகரித்தாலும் அறுவடை செய்ய தொழிலாளர் பற்றாக்குறையால் பெருந்தொகையான கோப்பி மரத்தில் பழுத்து வீணாகிப் போயின. தமக்கு போதுமான தொழிலாளரைப் பெற்றுத்தராமை தொடர்பில் தோட்டத் துரைமார் அரசாங்கத்தின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தினர். 1856ஆம் ஆண்டு தொலஸ்பாகை, கெல்வின் தோட்ட உரிமையாளரான ஹியூ மெக்லீனை என்பவர் துரைமார் சங்கத்தினர் தொழிலாளரை பெற்றுக் கொடுக்க ஒரு முகவர் நிலையத்தை அமைக்கவேண்டுமென்றும் தான் அதற்கு உதவுவதாகவும் விதந்துரை செய்தார். அதன் கிளைக் காரியாலயம் இந்தியாவின் மண்டபம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு அங்கு ஒரு பிரதி நிதியை நிரந்தரமாக நிறுத்த வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதன் பிரகாரம் தொழிலாளர் தேவைப்படும் தோட்டத் துரை மார்கள் தமது தேவை குறித்து துரைமார் சங்கத்துக்கு அறிவித்து உரிய செலவுத் தொகையை செலுத்தினால் அவர்கள் மண்டபத்தில் இருக்கும் தமது பிரதிநிதி வாயிலாக தொழிலாளர்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.
எனினும், இத்திட்டத்தினை துரைமார் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதேபோல் 1864ஆம் ஆண்டு மே மாதம் டிம்புல்ல, சென்கிளேயர் தோட்ட உரிமையாளர் பெட்ரிக் ரயான் என்பவர் கூலித்தொழிலாளர் புலம் பெயர்வுக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த விவகாரத்தைக் கையாளலாம் என்றும் கூறி இவ்வமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான முழு திட்ட வரைவையும் முன்வைத்தார். இத் திட்டத்தையும் துரைமார் சங்கம் நிராகரித்தது. தொடர்ந்தும் தோட்டத்துரைமார் தாமாகவே தென்னிந்திய பிரதேசங்களுக்கு சென்று தொழிலாளரைத் திரட்ட முற்பட்ட போதும் அவர்கள் தென்னிந்தியாவில் அந்நியராகக் கருதப்பட்டதால் அவர்களின் பிரயாணம் வெறுமனே உல்லாசப் பிரயாணமாகவே அமைந்ததென "டைம்ஸ் ஓப் சிலோன்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

1864ஆம் ஆண்டு இது தொடர்பில் விபரங்களைத் திரட்ட சிரேஷ்ட தோட்டத் துரைமார் களில் ஒருவரான டபிள்யூ. ஏ.ஸ்வான் தென்னிந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இவரின் விசாரிப்பின்படி இலங்கை கோப்பித் தோட்டங்களில் இருக்கும் வேலைவாய்ப்புத் தொடர்பில் அங்குள்ளவர்களுக்கு போதுமான விபரங்கள் தெரிந்திருக்கவில்லையென்றும் அவர்கள் இங்கு வர அச்சம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்த நிலைமை உக்கிரமடைந்த போதும் இடைத்தரகர்களாக இருந்த கங்காணிகள் துரைமாரை நன்கு சுரண்டப் பழகிக்கொண்டனர். இவர்கள் தொழிலாளர்கள்ளை பெற்றுத் தருவதாகக் கூறி துரைமாரிடம் இருந்து ஒன்றுக்கு மூன்றாக பணம் வசூலித்தனர். இதற்கு துரைமார் கள் மத்தியில் நிலவிய தொழில் போட்டியும் ஒரு காரணமாகும். இது தொடர்பில் 1865ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் துரைமார் சங்கம் துரைமார்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வழங்கியது. அதில் அதிகபட்சம் தொழிலாளி ஒருவருக்கு தலைக்கு 10 ஷில்லிங்குகளுக்கு மேல் கொடுக்கவேண்டாமென்றும் கங்காணிகளிடமிருந்து தகுந்த உத்தரவாதம் பெற்றுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தியது.

இவ்விதம் துரைமாரிடம் இருந்து பெற்ற பணத்தை இந்த நோக்கத்துக்காக இல்லாமல் தமது சொந்தத் தேவைகளுக்கே செலவிடுகின்றனர் என்றும் அல்லது ராமன் செட்டியாரிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க செலவிடுகின்றனர் என்றும் டபிள்யூ.டி. கிபொன் என்ற துரை கருத்து தெரிவித்துள்ளார்.

***
தோட்டத்துரைமார்கள் தொடர்ந்தும் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பில் புகார் தெரிவித்தபோதும் அரசாங்கம் அது தொடர்பில் அக்கறை காட்டாதிருப்பது தொடர்பில் கவலை தெரிவித்தனர். தோட்டத் துரைமாரும் கங்காணிகளும் தாமே தொழிலாளர்கள்ளைத் தேடித்தேடி மிகுந்த சிரமங்களுக்குள்ளானார்கள். மறுபுறத்தில் இரண்டு, மூன்று தொழிலாளர்களின் வேலையை ஒரு தொழிலாளர் செய்ய வேண்டியிருந்தது. அறுவடைக்காலத்தில் தொழிலாளர்கள்ள் இரவுபகலாக கஷ்டப்பட்டனர். அவர்கள் உழைப்பை பெற்றுக்கொள்ள ஒரு பணத்துக்குப் பதில் இரண்டு பணம் கூலியாக வழங்கப்பட்டது. இத்தகைய சந்தர்ப்பத்தில்தான் சேர். ஹென்றி வார்ட் (1855 - 1860) கவர்னர் பதவியேற்று இலங்கைக்கு வந்தார். இவர் கோப்பித் தோட்டங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை உடனேயே புரிந்துகொண்டார்.

அத்துடன் கோப்பிப் போக்குவரத்தின் பொருட்டு பெருந்தெருக்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். அவர் கிரமமாக தொழிலாளர்கள்ளை தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரவும் அவர்களை கோப்பித் தோட்டங்களுக்கு மட்டுமல் லாது பெருந்தெருக்கள் அமைக்கவும் ரயில்வே மற்றும் பொது வேலைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டார். அதன் மூலம் இலங்கையின் முதல் புகையிரதப் போக்குவரத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமையையும் பெறுகின்றார். இலங்கையின் முதல் ரயில் பாதையான கொழும்பு கண்டி பாதையை அமைப்பதற்கென லண்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பெவியல் என்ற நிறுவனத்துடன் வார்ட் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.

கோப்பிப் பயிர்ச் செய்கை பிரேஸில் மற்றும் ஜாவா ஆகிய நாடுகளி இருந்து பாரிய வர்த்தகப்போட்டியை எதிர்நோக்குவதால் இலங்கையை ஒரு கோப்பி ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டுமாயின் ரயில்வே போக்குவரத்து மிக அத்தியாவசியமானது என இவர் வாதிட்டார். மறுபுறத்தில் இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளரை வீதி அபிவிருத்திக்கு பயன்படுத்தினால் மேலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுமென்றும் அவர்களுக்கு அதிக கூலி கொடுக்கவேண்டி வரும் என்றும் தோட்டத்துரைமார் பயந்த னர். ஆனால் அப்படி நடக்காதென வார்ட் உறுதியளித்ததுடன் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்றையும் அமைத்து அதன் கிளைகளை தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அமைக்கச்செய்தார். இதற்கான செலவை ஈடுகட்டும் பொருட்டு ஒரு தொழிலாளிக்கு தலா 3 ஷில்லிங் முதலீட்டு வரி விதித்தார். இதன் வாயிலாக 1,20,000 தொழிலாளரை வரவழைத்து 18,000 பவுண்களை திரட்ட திட்டம் போட்டார்.

தொழிலாளர்கள்ள் மன்னாரில் இருந்து கண்டிக்கு நடந்தே வர நேர்ந்ததால் அவர்களின் மரண வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பைத்தடுக்க ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு நீராவிப்படகுகளை ஏற்பாடு செய்தார். ஆனால், அவரது பல திட்டங்கள் பலிக்கவில்லை.

1859ஆம் ஆண்டளவில் இந்தியாவின் தென்மாநிலங்களில் சாதகமான காலநிலை பொருளாதார அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்பன ஏற்பட்டதால் இலங்கைக்கு தொழிலாளர் வருவது குறைந்து போய்விட்டது. 1860ஆம் ஆண்டு ஹென்றி வார்ட் மெட்ராஸ் மாநிலத்தின் கவர்னராக நியமனம் பெற்றுச் சென்றபோதும் அதற்கு அடுத்த வருடமே கொலரா நோய்க்கு இலக்காகி இறந்துபோனார். கோப்பி பயிர்ச் செய்கை ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டது.

***
பெருந்தோட்டங்களில் தொழில் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட இந்திய கூலித்தொழிலாளர்களின் சமூக நிலைப்பாடு தொடர்பில் பல்வேறு சமூக, பொருளாதார ஆய்வாளர்கள்ள் ஆய்வு செய்து கருத்துத் தெரிவித்தனர். ‘கூலி’ என்ற பதத்துக்கும் ‘அடிமை’ என்ற பதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காணப்பட்டது என்பதை ஆராய்ந்து அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ‘கூலி’ என்ற பதப் பிரயோகம் இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள்ளை மாத்திரம் குறிக்கும் ஒரு சொல்லாகவே இனங்காணப்பட்டுள்ளது. மொறீசியஸ், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இவர்களை கூலிகள் என்றே இனங்கண்டுள்ளனர்.

பண்டைய ரோம அடிமைகள், 17ஆம் நூற்றாண்டின் கறுப்பின அடிமைகள் ஆகியோர் எந்தவித உரிமைகளும் வழங்கப்படாத, சந்தையில் விலைக்கு விற்கப்படும் அடிமை நிலையிலேயே இருந்தனர். ரோம அரசில் அதிக அடிமைகளை வைத்திருப்பவன் செல்வந்தனாகக் கருதப்பட்டான். இவர்கள் அடிமைகளையும் பண்டங்களாகவே கருதினர். இத்தகைய அடிமை நிலையிலிருந்து 19ஆம் நூற்றாண்டில் இந்தியத் தமிழ் ‘கூலி’கள் சிறிதளவிலேயே வேறுபடுகின்றனர். 1872 ஆம் ஆண்டில் கூலித்தொழிலாளர் தொடர்பில் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த தோட்டத்துரை ஒருவர் அடிமைகளிலிருந்து கூலித்தொழிலாளர்களின் நிலை மிகச்சிறியளவிலேயே வேறுபடுகின்றது என்று தெரிவித்துள்ளார். இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து சுதந்திரமாக வருவதற்கும் போவதற்கும் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்களின் சுதந்திரம் கங்காணிகளாலும் கடனாலும் கட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளரை அரையடிமைகள் அல்லது கொத்தடிமைகள் என்று அழைப்பது என்பது, இலங்கையில் அவர்களின் வரலாற்றுக்காலம் முழுவதும் இடம் பெற்றுள்ளது. எனினும், ஐரோப்பிய நாடுகளில் இருந்த முறைபோல் இவர்கள் அடிமை எஜமான் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை.

1833ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்றிய அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தால் பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் இருந்த 7,70,000 அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்தச் சட்டம் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எட்டவில்லை. எனினும், 1844ஆம் ஆண்டின் கிழக்கிந்திய கம்பனிச் சட்டத்தின் ஒரு பிரிவின் மூலம் இந்நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. எது எப்படி இருந்தபோதும் கங்காணி, கன்டாக்கு, ஏனைய தோட்டத்து அதிகாரிகள், துண்டு முறை, பத்துச் சீட்டு, பிரஜாவுரிமை ஒழிப்புச் சட்டம் போன்றவற்றால் 1980கள் வரையில் ஏதோ ஒரு வகையில் இவர்கள் மத்தியில் அடிமைத்தனம் இருந்து கொண்டுதான் இருந்தது.

அதன் எச்சசொச்சங்களே இன்றும் இவர்களை சமூக உயர்வு நோக்கிய அசைவியக்கத்தில் இருந்து தடுத்து வருகின்றது.

இலங்கையின் பெருந்தோட்ட வரலாற்றில் கங்காணிமாரின் காலடிச்சுவடுகள் மிகக் கொடூரமாக பதிந்து கிடக்கின்றன. இவர்கள் இதயமே இல்லாத படுபாதகர்களாக இருந்திருக்கின்றனர். இச்சமூகத்தை இறுக்கமாக ஒட்டிக்கொண்ட இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் இவர்கள். இச்சமூகத்தினர் மீது மிகுந்த கட்டுப்பாட்டை இவர்கள் கொண்டி ருந்தனர். தொழிலாளர் எல்லாவகையிலும் கங்காணிமாரில் தங்கியிருந்ததால் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் தொழிலாளர்கள்ள் இவர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவித் தனர். தென்னிந்திய மாவட்டங்களில் இருந்து கூலித் தொழிலாளர்கள்ளை தொகையாக அழைத்து வந்து தோட்டங்களில் விடுவது, தோட்டங்களில் அவர்களை மேற்பார்வை செய் வது, துரைமாருக்கும் தொழிலாளருக்கும் இடையில் தரகராகப் பணிபுரிவது, தொழிலாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் சுகதுக்க நிகழ்வுகளில் ஈடுபடுவது முதலான பல்வேறு பணிகளை கங்காணிகள் மேற்கொண்டனர்.

எனினும், இத்தகைய பணிகளின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்கள்ளை ஏமாற்றி அவர்களின் உழைப்பையும் சேமிப்பையும் சுரண்டினர். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கங்காணிமார் தொழிலாளர்கள்ளுக்கு கடன் கொடுத்தனர். அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாத தொழிலாளி வாழ்நாளெல்லாம் கங்காணிக்கு உழைக்கும் கொத்தடிமையாக மாறிவிடுவான்.

தோட்டத்தில் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு தொழிலாளியின் சார்பிலும் தலைக்கு இவ்வளவென கங்காணிக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. வேறு பல விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. ஆரம்ப காலங்களில் தோட்டத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதத்துக்கு கங்காணிக்கு ஒரு ‘பென்ஸ்’ வீதம் வழங்கப்பட்டது. இதனை ‘பென்ஸ் மனி’ என்றார்கள்.

அவர்கள் அன்றாடம் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவருக்கிருந்தது. பல சந்தர்ப்பங்களில் தொழிலாளி வேலை செய்திருப்பதாகக் கணக்குக்காட்டி அதற்கான கொடுப்பனவை கங்காணி துரையிடமிருந்து திருட்டுக் கணக்குக்காட்டி பெற்றுக்கொள்வார். மறுபுறத்தில் அவ்விதம் வேலை செய்வதாகக் காட்டியதால் பொய்ப்பெயர் போட்டதற்காக தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையைக் கழித்து அதனையும் பிடுங்கிக் கொள்வார்.

தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்வதாகக் காட்டி தனது வேலைகளை செய்ய வைப்பார். தொழிலாளி வேலை செய்யாமல் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கங்காணி ‘அவன் கம்பளி வாங்கப் போயிருக்கிறான்’, ‘திடீர் சுகவீனம் வந்து விட்டது’ என்று கூறி அவர்களைத் தப்புவிப்பார். அதற்காகவும் கங்காணி பின்னர் காசு பறித்துக் கொள்வார். தொழிலாளிகள் செய்யும் தவறுகளுக்கு பல்வேறு தண்டனை முறைகள் அமுல்படுத்தப்பட்டன. அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்பட்டது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தமக்கு முதுகில் அடித்தால் பரவாயில்லை என்றும் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும் தொழிலாளர்கள்ள் மன்றாடிக் கேட்டுக்கொண்டனர்.

***
கோப்பிப் பெருந்தோட்டங்கள் பரவலாக ஆரம்பிக்கப்பட்ட போது தொழிலாளர் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது. என்ன முயற்சி செய்தபோதும் உள்நாட்டு சிங்களவர்களை பெருந்தோட்டங்களில் வேலை செய்ய ஈடுபடுத்த முடியாமல் இருந்தது. இதற்கு என்ன காரணம் என பல விவாதங்கள் எழுந்தன. இலங்கையை அவ்வப்போது நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநர்கள், இராஜாங்க செயலாளர்கள்ள், தோட்டத் துரைமார்கள் இங்கிலாந்தில் இருந்து அதிகாரிகளுடன் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றங்களில் இது பற்றி தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுவான காரணமாக சிங்களவர்கள் வேலை செய்ய மிகச்சோம்பேறிகள் என்றே அநேகர் தெரிவித்தனர். ஆனால், அதற்கும் மேலாக இதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று பலர் ஆராய்ந்து பார்க்காமல் இல்லை. ஏனெனில் கோப்பித் தோட்டங்களில் ஒருநாள் வேலை செய்வதற்கு ஒன்பது பென்ஸ் அல்லது ஒரு ஷில்லிங் வரை கூலி வழங்கப்பட்டது. இது அக்காலத்தில் ஒரு நாளில் கிடைக்கக்கூடிய உயர் வருமானமாக கருதப்பட்டது. அப்படி இருந்தும் சிங்களவர்கள் தோட்டங்களில் வேலைக்குவர மறுத்தனர். ஆரம்ப காலங்களில் இலங்கையின் வருவாய்த்துறை ஆணையாளராக இருந்த வில்லியம் பொய்ட் என்பவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் வாழ்க்கையில் பணரீதியில் முன்னேற வேண்டுமென்ற அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை.

தமது விளைநிலங்களில் ஒரு தடவை விதைத்து, அறுவடை செய்து அடுத்த அறுவடை வரை உண்ணுகிறார்கள். இடையில் அவர்களுக்கு பணத்தேவைகள் இருக்கவில்லை என்று கூறியுள்ளார். ரால்ப் பீரிஸ் என்பவர் சிங்களவர்களுக்கு பணம், உழைக்க வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. சொத்து சேர்க்கவேண்டும் என்றும் அவர்கள் கருதவில்லை. அவர்களின் வாழ்க்கை எதிர்பார்ப்பு மிகக்குறை வானதாக இருந்தது. இதற்கு அவர் 1660 முதல் 1679ஆம் ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தில் சிறைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ரொபர்ட் நொக்ஷின் வார்த்தைகளை உதாரணமாகக் காட்டுகிறார். ரொபர்ட் நொக்ஷின் கூற்றுப்படி அவர்களுக்கு வாழ்க்கையில் உணவும் அன்றாடத் தேவைகளையும் தவிர வேறு தேவைகள் இருக்கவில்லை. சொத்துகள் அதிகரித்தால் அதற்கு கப்பம் கட்ட வேண்டிய வரிகளும் அதிகரித்தன என அவர்கள் கருதினர்.

இக்காலத்தில் வேலை செய்ய மறுப்பவர்களுக்கு தண்டனையாக கசையடிகள் வழங்கப்பட்டன. பிரித்தானியர் இத்தண்டனையை அடிக்கடி வழங்கினர். 1828 ஏப்ரல் 28 ஆம் திகதி அப்போதிருந்த பிரதம செயலாளர் ரொளபர்ட் அர்புத்நொட், அழைத்தபோது வேலைக்கு வர மறுப்பவர்களுக்கும், பாதிவேலையில் விட்டுச் செல்பவர்களுக்கும் 30 கசையடிகள் வரை வழங்கப்படவேண்டுமென்று சட்டம் ஒன்று கொண்டுவந்தார். ஒருசமயம் மத்திய மாகாணத்தின் வலப்பனை என்ற இடத்தில் 100 பேர் வேலை செய்வதற்கு ஒப்பந்தப்படி அமர்த்தப்பட்டிருந்தபோதும் வேலைக்கு வரவில்லை. அவர்கள் வேலைக்கு வராததால் கசையடி வழங்க உத்தரவிடபட்டது. முதலில் அவர்களின் தலைவனுக்கு கசையடி வழங்கப்பட்டது. வழங்கப்பட விருந்த 30 கசையடி களில் 16 கசையடிகள் நிறைவேற்றப்பட்ட போது அவர்கள் அனைவரும் தாம் ஒழுங்காக வேலை செய்வதாக ஒத்துக் கொண்டதை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.

பொது வேலைகள் செய்வதற்கு உள்நாட்டுத் தொழிலாளர் கிடைக்காமையால் முதன்முறையாக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்கள்ளை தருவித்தவர் ஆள்பதி பிரட்டரிக் நோர்த் (இலங்கையின் முதல் பிரித்தானிய ஆள்பதி) 1798- 1805 இவர் மேற்கொண்ட கண்டிப் படையெடுப்பின்போது இராணுவத்துக்கு உதவுவதற்காக 5,000 தென்னிந்திய கூலித்தொழிலாளர்கள்ள் கொண்ட உப படையொன்றை இவர் அமைத்தார்.

நாளை தொடரும்...
Share this post :

+ comments + 2 comments

வலைச்சரத்தில் சிகரம் பாரதி மூலமாக தங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

வலைச்சரத்தில் சிகரம் பாரதி மூலமாக தங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates