நுவரெலியா, அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலக பிரிவுகளில் கடும் மழை பெய்து வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிடுகின்றார்.
பலத்த மழை பெய்து வருவதால் டிக்கோயா பிரதேசத்தில் வெள்ள நிலைமை காணப்படுவதுடன், வீடுகள் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஃபோர்சைட் பகுதியில் ஐந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன், பொகவந்தலாவையிலும் சேதம் ஏற்பட்ட வீடொன்றிலிருந்து ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடும் மழையினால் அனர்த்தங்கள் ஏற்படலாம் என அடையாளம் காணப்படுகின்ற பகுதிகளில் உள்ளவர்கள் அந்தந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு பாதுகாப்பான நடைமுறைகளை பிற்பற்றுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் கேட்டுள்ளார்.
மலையக பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருவதால், நீர்ரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இறக்குவானை, கங்கொட தோட்டப் பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியொன்றும் மண்ணில் புதையுண்டுள்ளதாக கங்கொட தோட்ட கிராம உத்தியோகத்தர் கே.டபிள்யூ.தர்மபால தெரிவிக்கின்றார்.
அனர்த்தத்தினால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர், அந்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதால் நான்கு குடும்பங்களை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்தவர்கள் தத்தமது உறவினர் வீடுகளில் தற்போது தங்கியுள்ளனர்.
அவர்களுக்கான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு தோட்ட அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...