Headlines News :
முகப்பு » » வறுமையே சாதனைக்கு காரணம் - அதிகம் சம்பளம் பெற்ற பெண் கருத்து

வறுமையே சாதனைக்கு காரணம் - அதிகம் சம்பளம் பெற்ற பெண் கருத்து


ஒரு சாராசரி மனிதனின் வாழ்க்கையில் தொழில் என்பது எத்தகைய முக்கியத்து வம் வாய்ந்தது என்பதை விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தொழில் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையெனலாம். அந்த வகையில் தோட்டங்களிலிருந்து தொழில் வாய்ப்புக்களுக்காக பலர் தற்போது வெளியிடங்களுக்குப் படை எடு த்துள்ளனர். படித்து விட்டு தொழில் வாய்ப்புக்காக பலர் காத்திருக்கின்றனர்.

இவர்களில் சிலர் தோட்டங்களில் தொழிலாளர்களாக தொழில் புரிந்து வருகின்றனர். தோட்டங்களில் தொழில் புரியும் ஆண் தொழிலாளர்கள் காலையில் வேலைக்குச் சென்றால் பகல் ஒரு மணிக்கு வீடு திரும்பி விடுவார்கள். இவர்கள் தோட்டங்களில் பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டும். பொதுவாக ஆண்கள் கடுமையான வேலைகளைச் செய்பவர்களென்று குறிப்பிடப்படுகின்றனர்.

பெண் தொழிலாளர்கள் காலையில் கொழுந்து பறிக்கச் சென்றால் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவார்கள். இடையில் பகல் உணவிற்காகவும், குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காகவும் வீடு வந்து செல்வார்கள்.

தோட்டங்களில் இவர்களுக்கு குடியிரு ப்பு வசதி, சுகாதாரம், தாய் சேய் பராமரி ப்பு மற்றும் தொழிலாளர் சம்பந்தமான பல வசதிகள் வழங்கப்படுகின்றன. மேற்கூறியவற்றில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் ஓரளவாவது கிடைக்கின்றன. தினமும் ஒழுங்காக வேலைக்குச் சென்றால் சம்பள ஒப்பந்தத்தின்படி உரிய சம்பளமும், ஓய்வின் பின்னர் அவர்களுக்கு கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இதனூடாக தோட்டத் தொழிலாளருக்கு நிரந்தரத் தொழில் வாய்ப்பும், எதிர்கால சேமிப்புத் தொகையும் கிடைக்கக் கூடியவையாக இரு க்கின்றன. இதன்மூலம் தொழிலாளருக்கு சமூக பாதுகாப்பும் அந்தஸ்தும் கிடைக்கின் றன.

தற்போது தோட்டத் தொழில் செய்வோ ரின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றன. இதற்குக் காரணம் தொழிலாளர்கள் வெளிநாடு செல்கின்றமை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களுக்கு தொழிலுக்காக வெளியேறுகின்றமை, அதிக சம்பளம் தேடி வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்கின்றமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

ஆனால், இதன் காரணமாக மலையகத்தில் தற்போது பல சமூக பிரச்சினைக ளும் தோன்றியுள்ளன. வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லும் பிள்ளைகள், பெண் கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற னர். அத்துடன் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி நாடு திரும்புகின்றனர். உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. இந்த நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் தோட்டங்களிலேயே வேலை செய்து தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொண்டு நல்ல நிலைமையில் எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி வாழும் பெண்களும் தற்போது மலையகத்தில் உள்ளனர். அதேவேளை, தோட்ட வேலையை விட்டு விட்டு வெளிநாடு சென்ற பலர் இன்று தொழில் எதுவுமின்றி வீதியில் நிற்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த 10.06.2014 அன்று சாதனை படைத்த தோட்டத் தொழிலாளியான பெண் ஒருவர் தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட மக்களினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்த கௌரவம்? பத்தனை மவுண்டவேர்ணன் தோட்டத்தை சேர்ந்த திருமதி தனலட்சுமி (வயது 37) என்ற தொழிலாளி இலங்கை தோட்ட வரலாற்றில் ஒரு மாதத்திற்குரிய சம்பளமாக 57,395/ ரூபாவை பெற்றுக்கொணடுள்ளமைதான். இவர் தினமும் முறையாக வேலைக்குச் சென்று தனது ஒருநாள் சம்பளத்திற்காக 18 கிலோ கொழுந்து பறித்துள்ளார். தொடர்ந்து மேலதிகமாக மே மாதம் முழுவதும் 1899 கிலோ கொழுந்து பறித்துள்ளார். இதனாலேயே இவரின் நாட் சம்பளம் உட்பட மேலதிக இறாத்தல் கொடுப்பனவு அடங்களாக 57, 395/ சம்பளம் பெற காரணமாக இருந்துள் ளது.

இவருடன் வேலை செய்த ஏனைய பெண்களும் 20,000/ தொடக்கம் 30,000 வரையிலான சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக தோட்ட முகாமையாளர் ஆர்.ஜீ.எம்.ரோஹண எட்வேர்ட்டை தொடர்புகொண்டு கேட்டபோது கடந்த காலங்களில் அதிக வரட்சி காரணமாக தேயிலை கொழுந்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேயிலை கொழுந்து உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. இதனாலேயே திருமதி வி.தனலெட்சுமி கூடிய கொழுந்தினை பறித்து சாதனை படைக்கக் காரணமாக இருந்துள் ளார் என்றார்.
சாதனை தொழிலாளி திருமதி வி.தனலெட்சுமியிடம் வினவியபோது நான் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக் கில் கொழுந்து பறிக்கவில்லை. எனது கண வர் சுகவீனமுற்றிருக்கின்றார். அவரால் தொழிலுக்கு செல்ல முடியாது. அதனால் நான் உழைக்க வேண்டிய நிலையிலிருக்கின்றேன். அதனை மனதிற் கொண்டே கொழுந்து பறித்தேன்.

எனக்கு 02 பெண் பிள்ளைகளும் 1 மக னும் இருக்கின்றார்கள். எனது கணவர் 12 வருடங்களாக கால்வீக்கம் காரணமாக சுகவீனம் அடைந்துள்ளார். வறுமை எங்களை வாட்டி வதைக்கின்றது. தற்போது ஒரு மக ளும் ஒரு மகனும் வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திவிட்ட னர். ஒரு மகள் மாத்திரம் படிக்கிறாள். இந்நிலையில் எனது கணவரையும் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதினாலேயே கொழுந்து பறித்தேன் என சந்தோஷத்துடனும் சற்று அழுகையுடனும் கூறினார்.
உண்மையாகவே இந்தத் தாயின் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனாலும் இந்த வருமா னம் தொடர்ந்து வரும் காலங்களிலும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே. இருந்தும் இவரின் முயற்சியை மலைய கத்தின் ஏனைய தொழிலாளர்களும் ஒரு முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டும். அதேபோல் தேயிலைத் தோட் டத் தொழிலை விட்டு விட்டு வெளிநாடு மற்றும் இதர இடங்களில் வேலைக்குச் செல்வோருக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். தோட்டத்தில் முறையாக வேலை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

எது எவ்வாறாயினும் தனலெட்சுமி குறி த்து தற்போது இலங்கையில் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவருகின்றன. இது அவருக்கு விளம்பரமாக அமை யாமல் அவரின் குடும்பப் பிரச்சினைக்கும், குடும்ப வறுமை ஒழிப்பிற்கும் ஒரு பாலமாக அமைய வேண்டும். வறுமையே அவரது இந்த சாதனைக்குக் காரணமாகும். ஒரு தோட்டப் பெண் இந்த அளவுக்கு சாதனை செய்துள்ளார் என்றால் அதனை வரவேற்று அனைத்துத் தரப்பினரும் அவரைப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டும். உதவி புரிய முன்வர வேண்டும். இந்த சம்பளம் இவருக்கு தொடர்ந்து வரும் மாதங்களிலும் கிடைக்குமா என்பது கேள் விக்குறியே. ஆனாலும் இவரின் வறுமை எதிர்காலங்களில் அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் மாற்றம் இருக்காது.

கிடைத்த தொழிலை முறையாகச் செய் தால் முன்னேறலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பாரதி கண்ட பெண் யுகம் தற்போது மலையகத்தில் காணக்கூடியதாக உள்ளது. மலையக பெண்கள் தற்போது இவ்வாறு பல துறைகளில் சாதனை செய்து வருகின்றனர் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அவர்கள் முதுகில் சுமக்கும் சுமையான கொழுந்து கூடைகளே இன்று நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாக உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

பா.திருஞானம்

நன்றி - வீரகேசரி - 22.06.2014

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates