Headlines News :
முகப்பு » , , » மலையக நாட்டுப்பாடல்களின் பன்முகப் பார்வை - கோ.திலிக்குமார்

மலையக நாட்டுப்பாடல்களின் பன்முகப் பார்வை - கோ.திலிக்குமார்

இலங்கையில் இன்று அனைத்து மாவட்டங்கலிலும் மலையக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். எனினும் இக்கட்டுரை பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் மூலம் தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்களையே குறித்து நிற்கின்றது. இவர்கள் இந்தியாவில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த போது வெறும் முள்ளும் சதையும் கொண்ட விலங்குகளாக அன்றி தமது கலை கலாசார பண்பாட்டு பழக்க வழக்க விழுமியங்களையும் தம்முடன் எடுத்து வந்தனர். இப்பண்புகளின் ஒரு கூறே 'மலைநாட்டுப் பாடலகளாகும்'. இம்மலைநாட்டுப் பாடல்களானது உலகலாவிய ரீதியில் ஒரு ஆய்வு கூறாக பரிணமிப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது.

இக்கட்டுரையில் மலையகமும் மலையக நாட்டுப்பாடல்கள் பற்றியும் மலையக நாட்டாரியல் பற்றிய விளக்கமும் அதன் தோற்றுவாய்க்கான சந்தர்ப்பங்கள், அதன் பண்புகள் என்பனவும் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் மலையக நாட்டுப்புறப்பாடல்களின் தோற்றுவாய்க்கு அடித்தளங்களாய் அமைந்த காரணிகளும் மலைநாட்டு மக்கள் பாடல்கள் குறித்தான ஒரு பன்முக பார்வையும் அதன் இன்றைய போக்குகள் பற்றியும் 'கண்டிச்சீமையிலே', 'மலைநாட்டு மக்கள் பாடல்' ஆகிய தொகுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட விடயங்களை விளக்குவதனை இக்கட்டுரை நோக்கமாக கொண்டுள்ளது.

மலையகமும் மலையக நாட்டுப் பாடல்களும்
இலங்கையில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மலையகத் தமிழர் வாழ்கின்றனர். என்றாலும் மலையகத்தவர் என்று குறிப்பாகக் குறிப்பிடுவது நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை முதலிய பெருந்தோட்டத் தேயிலைச் செய்கையை தொழிலாக கொண்ட மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவழி மக்களையாகும். பிரித்தானிய காலனித்துவ முதலாளித்துவத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இந்தியாவில் இருந்து கிராம மக்களைத் திட்டமிட்டு இங்கு கூலிகளாகக் கொண்டு வந்தனர். 

தாம் பிறந்து வாழ்ந்த இடத்தின் மண்வாசனையோடும் தமது சமய, கலை, கலாசார, பண்பாட்டு, அரசியல், பொருளாதார, விழுமிய. பழக்க வழக்கங்களையும்,  மதிநுட்பங்களையும் தம்முடனே கொண்டு வந்தனர். இதில் ஒரு கூறே மலைநாட்டுப்பாடல்களாகும். 

'தமிழ் இலக்கியத்தின் பார்வையும் பதிவும்' எனும் நூலில் கலாநிதி துரை மனோகரன் அவர்கள் 'மலையகம் என்பது இன்று வெறும் புவியியல் அர்த்தத்தை மாத்திரம் கற்பதன்றி தன்னளவில் தனித்துவமான மக்கள் வாழ்க்கை நிலைகளையும் அதற்குப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையையும் அதன் பக்க விளைவுகளான சிறு முதலாளாலித்துவத்தையும் சுரண்டல்களையும் புலப்படுத்தி நிற்கிறது' என்று கூறுகின்றார். எனவே மலையகத்தவர்களை வெறும் கூலிகளாக பார்ப்தைத் தவிர்த்து அவர்களிடையே உறங்கிக் கிடக்கும் மதி நுட்பங்களையும் ஆற்றல்களையும் நாம் கண்ணோக்கிப் பார்ப்பது இன்றியமையாதது. 

மேலும் 'மலையகத் தமிழரின் அரசியல் வரலாறும் இலக்கியமும்' என்ற நூலில் கலாநிதி அம்பலவானர் சிவராசா என்பவர் 'மலையகம் ஒரு தனித்துவமான சமுகம் என்ற அடிப்படையில் அச்சமுகத்தின் சமூக பொருளாதார வரலாற்றுத்துறையை ஆய்வுக்குட்படுத்துவதும் வரலாற்றுக் காரணிகளை இனங்காணக்கூடிய ஆவணங்களை முறையாகப் பராமரிப்பதும் தவிர்க்க முடியாததும் அச்சமூகத்தின் வரலாற்றுக் காரணியுமாகும்' என்று கூறுகின்றார். எனவே மலையக மக்களை அடையாளப் படுத்தும் காரணிகள் எண்ணற்றவை. குறிப்பாக தேயிலைச் செய்கை, கலை, கலாசார, நம்பிக்கைகள் முதலியவற்றைக் கூறலாம். இதில் மூத்ததாயும் முழுமையானதுமாக 'மலைநாட்டுப் பாடல்களை' நாம் கொள்வது சிறந்ததாகும்.

'பிரதேச வாழ்க்கையை அடிப்படையாக்க கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புக்களில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்கு காரணமாக உள்ள மலைநாட்டை மையமாக கொண்டு எழுதப்பட்டிருப்பவற்றிற்கு தனி இடமுண்டு' என்றும் கூறுவர். மேலும் 'இலக்கியப் படைப்புக்கு மலையகம் தங்க சுரங்கம்' என்றும் கூறுவர். இதனையே கலாநிதி க. அருணாசலம் வற்புறுத்தி இருக்கிறார். 

இவ்வாறு தனித்துவமான அரசியல், கலை, கலாசார, பண்பாட்டு, பொருளாதார, நம்பிக்கைகள், இலக்கியங்கள்;, தனித்துவமான புவியியல் பின்னணிகள், அதற்கே உரித்தான தேயிலைச் செய்கையையும் கொண்ட மலையக மக்களின் நாட்டுப்பாடல்களின் பன்முக ஆய்வும் இதன் தேவையும் இந்தத் தருணத்தில் மிகமிக அவசியமானது. 

கல்வி அறிவில்லாத எளிய பாமர மக்கள் தங்களுடைய இனிமையான பேச்சு மொழியில் தங்கள் இன்பத்துன்பங்களை இனிமையான பாடல்களாக பரிணமிக்கச் செய்தனர். உழைப்பாளிகளை பெரும்பான்மையாகக் கொண்ட மலையக சமகத்தில் இது தனி மனித உணர்வாக அனைத்து மக்களின் உணர்வையும் வெளிப்படுத்தும் பாங்கினையும் கொண்டமைந்துள்ளது. 

ஜாக் வின்சே என்ற ஆங்கில திறனாய்வாளர் கூறுவது போல் 'நாட்டுப் பாடல்கள் உண்மையான தேசிய வரலாற்றைப் பிழம்புருவாகக் காட்ட வல்லன.' இந்த உண்மையை மலைநாட்டுப் பாடல்கள் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. இவ்வாறு தனித்துவத்தையும் சமூக பிரதிபலிப்பையும் படம் பிடித்துக் காட்டும் மலைநாட்டுப் பாடல்கள் வெறும் உற்பத்தி உறவுகளின் வெளிப்பாடல்ல. அவை மக்களின் உணர்ச்சிப் போராட்டம், சமுதாய நோக்கு, ஏக்கம், இன்பம், துன்பம், உளவியல், இலட்சியங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதி கூறுவதாவது 'நாட்டுப் பாடல்கள் மேல் நாட்டு மக்களை கிண்டல் செய்வது உலகமெங்கும் காணப்படுகிறது. இதன் மரபுக்கு சமுக உணர்வு இருந்தது நியாயமானது' என்றாகும். எனவே இம்மலைநாட்டுப் பாடல்களை உற்று நோக்கி ஆராய்ந்து அவைகளை  வெளியுலகிற்கு எட்டச் செய்வது எமது கடமையாகும். இதனை இவர்களது நாட்டுப் பாடல்களைக் கொண்டு மேலும் அணிச் செய்யலாம். 

நாட்டாரியலும் மலையக நாட்டார் பாடல் பற்றியதோர் விளக்கமும்.
நாட்டாரியலானது மொழியியல், மானிடவியல் ஆகிய துறைகளின் ஒரு பகுதியே ஆகும். ஆனால் தற்போது நாட்டாரியல் தனித்துவமான தனியானதொரு துறையாக விளங்குகின்றது. இந்நாட்டாரியலை ஆய்வுக்குறிய துறையாக்கியவர் ஜேக்கப் கிரீம் என்னும் ஜெர்மன் மொழியியளாலர் ஆவார். இந்நாட்டாரியல் பற்றி பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். ஆய்வு செய்தும் வருகின்றாரகள். 

folk lore என்னும் சஞ்சிகையின் ஆசிரியர் சங்கர் சென் குப்தா 'நாட்டுப்புற பண்பாட்டியல் என்பது அனுபவத்தின் பொக்கிசம் மனிதனோடு மனிதனை இணைத்து வைக்கின்றது. இதயத்தோடு இதயத்தை இணைத்து வைக்கிறது. அவர்களது தனித் திறமைகளை வெளிக்காட்டி அவர்களை ஒற்றுமைப் படுத்துகின்றது. இயற்கையோடு அமைந்து வாழ்வேரின் ஒட்டுமொத்த அல்லது தனிப்பட்ட உணர்வுகளை அது பிரதிபலிக்கின்றது' என்பர்.

மேலும் டாக்டர் சக்திவேல் அவர்கள் 'ஒரு நாட்டு மக்களின் நாகரீகத்தில் பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை உண்மையாக படம் பிடித்துக் காட்டுவதே நாட்டாரியலாகும். பழங்கால பண்பாட்டு உச்சம் நாட்டுப்புறவியலாகும். நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புகள் எனலாம். நாட்டுப்புறவியல் சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி எனலாம்' என்கின்றார்.   

folk lore ஆய்வு செய்த அறிஞர்களான கெரலியோ,  எம். எல். டினோசா என்போர் 'நாட்டுப் புறவியலானது எதைக் கற்றதோ எதை சேமித்து வைத்ததோ அவற்றை சேமித்து வைக்கும் சேமிப்பு அறையாகும்.' என்கின்றனர். 

நாட்டுப்புறவியலை ஆராய்ந்த அறிஞர்கள் யாவரும் ஒரே விதமான கருத்துக்களையே கூறுகின்றனர். இது எல்லா நாட்டுக்கும், எல்லா நாட்டுப்புற பாடலுக்கும் பொதுவானதாகும். இதற்கு வரலாறு தழுவிய வர்க்க முரண்பாடுகள் செல்வாக்குச் செலுத்தலாம். 

இவ்வாறு காணப்படும்  நாட்டுப்புறவியலின் ஒரு கூறே நாட்டுப்புறப் பாடலாகும். இந்நாட்டுப்புற பாடலானது உலகில் எல்லா இடங்களிலும் பொதுவான தோற்றுவாயையும் பண்புகளையும் கொண்டு காணப்படுகின்றது. நாட்டுப்புற பாடலானது அந்தந்த பிரதேசத்தின் பிரச்சினைகள், உணர்வுகள், நம்பிக்கைகள், சமுதாய உணர்வுகள் முதலியவற்றைப் பறைசாற்றி நிற்கின்றன. மேலும் வே. அந்தனி ஐயன் அழகராசன் அவர்கள் 'நாட்டுப்புறப் பாடலில் இடம் பெறும் சொற்கள் அன்புணர்ச்சியை புலப்படுத்தும் வார்த்தைகள் ஒரு நிலமையை உணர்வதற்கு அவை உதவுகின்றன' என்கின்றார். அவற்றோடு 'எழுத்து வாசனையே அறியா மக்களினால் பாடப்படும் வாய்மொழிப் பாடல்கள் ஒரு நாட்டின் நாகரீகத்தையும் பண்பாட்டினையும் மேம்பாட்டினையும் அறிவதற்குத் துணை செய்யும்' என்று கூறுகின்றார்.

இவ்வாறு காணப்படும் வாய்மொழிப் பாடல்கள் பல்வேறு விதமாக வழங்கப்படுகிறது. கிராமிய இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், நாடோடிப்பாடல்கள், பாமரப்பாடல்கள், எழுதாத கவிதைகள், வாய்மொழி இலக்கியம், நாட்டுப்புற பாடல்கள், மக்கள் மரபியியல், பொதுப் புராணவியல் எனப் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு அழைக்கப்பட்டு வரும் நாட்டுப் பால்களில் மலைநாட்டுக்குரிய பண்பையும் அவதானிப்பது இன்றியமையாதது. மலைநாட்டுப் பாடல்கள் அவை எழுந்த காலத்தின் குரலாகவும் தமது காலத்தின் பிரதிபலிப்பாகவும் தமது மக்களின் அபிலாசைகளையும் இலட்சிய துடிப்புகளையும் ஜனநாயக உயிரோட்டங்களையும் சித்தரிப்பவையாக அமையப்பெற்றவை குறிப்பிடத் தக்கது. சி.வி. வேலுப்பிள்ளையின் 'மலைநாட்டுப் பாடல்',  'கண்டிச் சீமையிலே' போன்ற தொகுப்புக்களிலுள்ள பாடல்கள் எமக்கு ஆதாரமாகும்.

மலையக நாட்டுப்பாடல்களின் தோற்றத்திற்கான சந்தர்ப்பங்கள்
வாய்மொழி இலக்கியமானது நமது மொழியின் இருப்புக்கும் வாழ்வுக்கும் சான்றாய் விளங்குவன. இவ்வாய்மொழிப் பாடலானது உலகின் பழைய இலக்கிய வகையைச் சார்ந்;தன. இதனை பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'மனுகுலத்தின் பெரும் பகுதி அறிந்த இலக்கிய வகை இதுவேயாகும்' என்பார். இன்று வரையிலும் இவை நிலைபேறு உடையதாய் இருப்பதற்கு இவை ஆதி காலத்திலிருந்தே அடி மக்களைப பேசி வந்தமையாகும். வாய்மொழிப் பாடல்களுக்கு தோற்றுவாயாக அமைந்த காரணிகளில் முக்கியமானது அடிமட்ட மக்களின் தொழிலையும் அதனுடன் இணைந்த சுரண்டலையும் அடக்கு முறைகளையும் ஏமாற்றங்களையும் விரக்தியையும் கொண்டமைந்தமையாகும்.

மலைநாட்டுப் பாடலின் உயிர்ப்புக்கு மலையக தோட்டப் புறங்களில் வாழும் மக்களின் தேவைகளை ஒட்டி எழுந்த தொழில் முயற்சிகள், குடும்ப உறவுகள், சடங்கு, சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள், விழுமியம், பண்பாடு மதலானவற்றை அடியொட்டி மலைநாட்டுப் பாடலானது தோற்றுவிக்கப் பட்டுள்ளது எனலாம். 

வாய்மொழிப் பாடல்களில் பொதுப் பண்புகளில் ஒன்று உலக நாட்டுப் பாடல்களின் தோற்றத்திற்கான காரணங்கள் எல்லாப் பிரதேசப் பாடலுக்கும் பொருத்தமுடையதாய் அமைவதாகும். கீழ்வரும் பண்புகள் பொதுவான நாட்டுப் பாடல்களுக்கும் பொருத்தமுடையதாய் அமையப் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.

01.இப்பாடல்களில் தனிமனிதர்களின் அவல மனோபாவத்துக்குப் பதிலாக கூட்டு வாழ்க்கையின் உறுதிப்பாட்டையும் நம்பிக்கையும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் தோன்றியுள்ளன. பொதுவாக மலைநாட்டுப் பாடல்களில் பெரும்பாலான பாடல்களில் அப்பண்புகளை நாம் அவதானிக்கலாம்.

02.பிறரது துன்ப துயரங்களில் பங்கேற்று அவர்களது துன்பத்தைக் குறைத்தல் இவ்வகைப் பாடல்களில் ஒப்பாரி குறிப்பிடத் தக்கதாகும். இதனூடாக மக்களது ஒற்றுமை, புரிந்துணர்வு, ஆசாபாச உறவுகளின் தன்மை வெளிப்படும்.

03.தொழில் புரியும் இடங்களில் தொழிலின் கடினத்தன்மை, சோர்வு, களைப்பு என்பன நீங்குவதற்கும் உடல் உழைப்பில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கும் தொழில் முயற்சியில் உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கும் தொழில் பாடல்கள் பிறப்பெடுக்கின்றன.

04.கூட்டு வாழ்க்கையில் ஈடுபடும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் காதல், தாலாட்டுப் பாடல்கள் உருவாகின்றன. காதல், பாசம், தாய் பிள்ளை உறவு முதலியன குறிப்படத்தக்க அமசங்களாகும். 

05.மக்களிடையே ஒற்றமை நாட்டுப்புற நடப்புக்கள் என்பவற்றை வளர்த்துக் கொள்வதற்கும் பரஸ்பர உறவை பேணுவதற்கும் சமுக நீதி சமுக சீராக்கத்திற்கும் உதவும் வகையில் பக்திப் பாடல்களும் விளையாட்டுப் பாடல்களும் தோற்றம் பெறுகின்றன. 

06.நம்பிக்கைகள், சடங்கு, வழிபாட்டு முறைகள் இதன் மூலம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உருவாகுவதற்கு பாடல்கள் தோன்றுகின்றன. இதில் பக்திப் பாடல்கள் குறிப்பிடத்தக்கன.

07.பேராற்றல், வீரம், புனிதத்தன்மை போன்றவற்றை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகவும் கலையாகவும் நாட்டுப் பாடல்கள் தோற்றம் பெறுகின்றன. மேலும் பொழுதுபோக்கு, கேலி, மகிழ்ச்சி, சுதந்திரம், உரிமைமீறல்கள் என்பன காரணமாகவும் பாடல்கள் தோற்றம் பெறுகின்றன. குறிப்பாக கதைப் பாடல், நடனப் பாடல், விடுதலைப் பாடல் என்பன இதற்குள் அடங்குகின்றன.  

மேற்கண்ட மலையக நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றுவாய்க்கான சந்தர்ப்பங்கள் பொதுவான நாட்டு பாடல்களுக்கு நிகரான முறையில் பரிணமித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மலையக நாட்டுப் பாடல்கள் கூட்டு வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் சமூக ஒற்றுமை, உணர்ச்சிகள் முதலானவற்றைக் குவித்து வைத்திருக்கின்றது.

மலையக நாட்டுப் பாடல்களின் பண்புகள் 
'ஒரு சமூகம் எவ்வாறு பொருள் உற்பத்தி இல்லாமல் இருப்பது சாத்தியமின்மையோ அது போல கலை இலக்கிய உற்பத்தி இல்லாமலும் இருக்க முடியாது. இந்த இலக்கிய உற்பத்தி பொருள் உற்பத்தியின் ஒரு அங்கமாக திகழ்கின்றது' எனகின்றார் மார்க்ஸ். உற்பத்தி முறையோடு தனித்துவமான சமூக அமைப்பாகவும் தொழிற்படும் மலையக நாட்டுப் பாடல்கள் தனக்கே உரித்தானதும் தனித்துமானதுமானதுமாக பண்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.   மலையக சமுதாய அமைப்போடு தொடர்புடையதும் நேரடியானதுமான வெளிப்பாடுகளை இந்நாட்டார் இலக்கிய பாடல்களின் பண்புகளை நோக்குவதன் மூலம் இவர்களின் தொழில், சமூக, உள நிலைமைகளை அறிந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கும். 

மலைநாட்டு மக்களின் பாடல்கள் அம்மக்களின் நிலைமைகளை உயிர் துடிப்புடன் காட்டும் சொல் ஓவியங்களாகவும் இருப்பதினை உணரலாம். கீழ் வரும் பண்புகள் இதனை பறைசாற்றி நிற்கின்றன. 

01.ஆரம்பத்தில் வாய்மொழி இலக்கியமாகவும் தற்போது ஏட்டு இலக்கியமாகவும் பரிணமித்திருக்கின்றது.

02.நாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் ஒருவர் பாட இன்னொருவர் கேட்டுப்பாடும் பாடலாகவே காணப்படுகின்றது. இதனாலேயே இதனை வாய்மொழிப் பாடல்கள் என்கின்றனர்.

03.வாய்மொழிப் பாடல்கள் பரம்பரைப் பரம்பரையாக மரபு வழிப் பட்டு காணப்படுகின்றது.

04.பல்வேறு சூழலுக்கு ஏற்ப திரிபடைந்து காணப்படுவதால் குறிப்பாக வௌ;வேறு பிரதேசங்களிலிருந்து வந்த மக்கள் ஒரே இடத்தில் கூட்டு வாழ்க்கையை மேற்கொண்டதால் இவை திரிபு பெற்று காணப்படுகின்றன. என்றும் பரம்பபை; பரம்பரையாக வருவதாலும் இவை இவ்வாறு காணப்படுகின்றன. 

05.இப்பாடல்கள் ஏதாவதொரு வாய்ப்பாட்ட நிலைக்கும் இலக்கண வரம்புக்கும் உட்பட்டதல்ல. எனினும் எளிமையும் சிறப்பும் கொண்டு காணப்படுகின்றமை வியக்கத்தக்கதாகும்.

06.இப்பாடலின் ஆசிரியர் இவர்தான் என்று அறுதியிட்டு கூற முடியாத  நிலை காணப்படுகின்றது. அத்துடன் தோன்றிய காலத்தையுயும் உறுதியாக கூறமுடியாது. 

07.பிரதேசத்தின் தனித்துவம் மற்றும் சமூக அமைப்பின் நேரடி பிரதிபலிப்பாய் அமையப் பெற்றிருப்பதை காணலாம்.

08.கருத்துக்களை நேரடியாக ஒழிவு மறைவின்றி சொல்லும் பாங்கு, எளிய மொழிநடை, தெளிவான கருத்து அணிகள் போன்ற சிறப்புகளை தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது.

09.ஒருவர்க்காக ஒருவரும் தங்களுக்காக தங்களும் என்ற தன்னுணர்ச்சிளாலும் உறவு முறைகளை விளக்கும் பாசம், காதல், அன்பு முதலானவற்றை படம் பிடித்துக் காட்டும் தன்மையைக் கொண்டுள்ளது. 

10.மக்களது வரலாற்று ஆளுமையின் பதிவு சின்னம், வாழ்க்கை முறை, மதிநுட்பம், ஆக்கத்திறன், கற்பனை, பழக்க வழக்க முறைகள் முதலானவற்றைப் பிரதிபலிக்கின்றது. 

11.தனி இசை, கூட்டு இசை, கொண்ட பாடல்களாக அமைந்திருத்தல். குறிப்பாக ஒப்பாரி, தாலாட்டு, தொழில,; விளையாட்டுப் பாடல்கள் குறிப்பிடத் தக்கன.

12.பாடல்களின் சொல்லும் பொருளும்  திரும்பத் திரும்ப வருதல் என்னும் இப் பண்பு பாடலின் அழகுணர்ச்சியைக் கூட்டுவதோடு உணர்ச்சி செறிவையும் அளிக்கின்றது.

மேற்கண்ட பண்புகளினூடாக வாய்மொழிப்பாடல்கள் உயிர்த்துடிப்புள்ள உணர்ச்சி பூர்வமான பண்டைய வாழ்க்கை முறை, போரியல் முறை, சமூக, பொருளாதார, சூழல் பற்றிய தெளிவை ஏற்படுத்துகின்றது.

எனவே மலைநாட்டுப்புற பாடல்களின் பண்புகள் பொதுவான நாட்டுபுறப் பாடல்களுடன் ஒத்தமைவு பெற்றிருப்பதனை நாம் அறியலாம். எனவே இது பற்றியதோர் ஆழமான அகலமான பார்வையை செலுத்துதல் என்பது நுணுகி நோக்கத் தக்க விடயமாகும்.

மலையக நாட்டுப்பாடல் தோற்றத்திற்கான சந்தர்ப்பங்களுக்கு ஏதுவான காரணிகள்
மலையக இலக்கியத்தை விளங்கிக் கொள்வதற்கு மலையகம் பற்றிய தெளிவு இன்றியமையாததாகும். இலக்கியம் தோன்ற தளமாக இருந்த சமூக, பொருளாதார, பண்பாடு மற்றும் வரலாற்று சக்திகள் யாவை?  இவ்விலக்கிய உற்பத்திக்கு காரணம் என்ன? என்பவற்றை நாம் தெரிந்துக் கொள்வது மலையக நாட்டார் பாடல் மீதான பன்முக பார்வைக்கு உதவியாக அமையும். மலையகத்தில் வாழும் தேயிலைச் செய்கையை அடிப்படையாகக் கொண்ட இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பற்றி பலரும் பலவிதமாக கூறியுள்ளார்கள். 

பொதுவாக பேராசிரியர் கைலாசபதி, கலாநிதி க. அருணாசலம், கலாநிதி துரைமனோகரன், சாரல் நாடன், கலாநிதி அம்பலவானர் சிவராசா, பேராசிரியர் சோ.சந்திர சேகரன், லெனின் மதிவானன், சு. முரளிதரன் முதலியோர் குறிபிபிடத் தக்கவர்களாவர். இவ்விடத்தில் இவர்கள் எப்போது வந்தார்கள் என்பது பற்றி ஆராயப்படவில்லை. அது சம்பந்தமான விடயங்களை பேராசிரியர் அம்பலவானர் சிவராசா போன்றோர் தெளிவுப்படுத்தியிருக்கின்றனர்.

பிரித்தானியர் தேயிலைச்செய்கையை இலங்கையில் அறிமுகப்படுத்திய போது உள்நாட்டு மக்கள் அத்தொழிலில் ஆர்வமின்றி காலப்போக்கில்  தமது தேசிய தொழிலில் ஈடு;படலாயினர். இதனால் தொழிலாளர்கள் தேவை கூடுதலாக காணப்பட்டது. இதனால் இலங்கையின் அருகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடாக காணப்பட்ட இந்தியாவிலிருந்து மக்களை இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் பிரித்தானியர் ஈடுபட்டனர். இம்முயற்சியின் வெற்றியே மலையகம் என்றால் அது மிகையாகாது. 

இம்மலையகத்தை உருவாக்க இந்திய தேசம் எவ்வாறான அடித்தளத்தை இட்டது என்பதை சற்று நோக்குவோமாயிருந்தால் 19ம் 20ம் நூற்றாண்டுகளில் காலனித்துவத்தின் கீழ்பட்டிருந்த இந்தியா பெரும் வருமை நாடுகளுள் ஒன்றாகும். அங்கிருந்து மக்கள் இயல்பாகவே புலம் பெயர்ந்தனர். இந்நிகழ்வு முதலாளிதத்துவ சமூகத்திற்கு வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக கல்வி, போக்குவரத்து, வெளி அறிவு போன்றன இல்லாத மிகவும் பின்தங்கிய சூழலிலுள்ள மக்களையே தமக்கு தேவையாக்கிக் கொண்டனர். இந்தியாவின் திருச்சினாப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், மதுரை, கிரமந்தபுரம், புதுக்கோட்டை, வட ஆர்காடு, தென் ஆர்காடு, திருநெல்வேலி போன்ற சேரிப்புரங்களிலிருந்தே ஆட்களைத் கட்டி வந்தனர். இதனை புதுமைப்பித்தனின் துன்பக்கேணியிலும் சுப்பையாவின் தூரத்துப் பச்சையிலும் காணக்கூடியதாய் உள்ளது. 

ஆட்களைக் கட்டுவதற்கு ஆங்கில இனத்தவர் மூன்று முறைகளைக் கையாண்டனர். அவை கங்காணிமுறை, ஒப்பந்த முறை, துண்டு முறை என்பனவாகும். இதனை பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கலாநிதி க. அருணாச்சலம் போன்றோர் முன்வைத்துள்ளனர்;. இம்முறைகளுள் கங்காணி முறையிலேயே அதிக மக்கள் திரட்டப் பட்டதாக கூறப்படுகிறது. 'இக்கங்காணிகள் இந்தியாவில் மேற்குறிப்பிட்ட பிரதேசஙகளில் வாழ்ந்த மக்களை இலங்கையின் தேயிலைத் தூரில் தேங்காயும் மாசியும் இருக்கின்றதென்றும் கோப்பிமரத்தினடியில் சவர்க்காரம் இருக்கின்றதென்றும் கூறி ஏமாற்றி கொண்டுவந்தனர்' என பேராசிரியர் துரைமNhகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக கலாநிதி அருணாச்சலம் அவர்கள் கூறுகையில் 'இவ்வாறு பல்வேறு வழிகளிலும் சுரண்டப்பட்டும்   ஒடுக்கப்பட்டும்  திட்டமிடப்பட்டும் சமூக, பொருளாதார அடக்கு முறைகளுக்கு உட்பட்டே அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் மீதான கொடூரம் கங்காணிமாரால் அக்கரையிலேயே தொடக்கி வைக்கப்பட்டது' என்றுரைக்கின்றார். 

இவர்கள் உடலுழைப்பை வித்திடும் தொழிலாளிகளாகவும் இழப்பதற்கு ஒன்றுமே இல்லாத கூலிகளாகவும் ஆடுமாடுகள் போல் நடாத்தப்பட்டு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்குட்பட்டு விடிவுக்காய் இலங்கை வர எண்ணம்  கொண்டவர்களின் தன்மை பற்றி கலாநிதி அருணாசலம் இவ்வாறு கூறுகின்றார்.  'நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போன கதை'. அதாவது பல்வேறு கஸ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்து உறவையும் நட்பையும் இழந்தவர்கள் மீதான ஒடுக்கல் சுரண்டல் மட்டுமன்றி பெண்ணின் கற்பையும் சூரையாடல் போன்ற வன்முறைகள் அக்கரையிலேயே நின்றுவிடாமல் கப்பலிலும் தொடரப்பட்டது. வரும் போதே பாதி பேர் இறந்து போயினர். இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து எஞ்சியிருந்த மக்கள் இலங்கையை அடைந்த போது இவர்களின் நிலை இன்னும் மோசமாகியது. 

இவர்களின் வாழ்வில் தொடர்ந்து ஏமாற்றமும் போராட்டமுமே புடை சூழ்ந்தது. இலங்கையின் கரையை அடைந்த போது இவர்கள் நாட்டின் மத்திமத்திற்கு சுமார் 212 மைல் தூரம் நடந்தே வந்தனர். வரும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. புசி, பட்டினி, நோய், என்று பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை அனுபவித்தார்கள். இவர்கள் வரும் போதும் வந்த பின்னும் பட்ட துன்பங்களெல்லாம் துன்பக்கேணியும் தூரத்துப் பச்சையும் மிகத் தெளிவாய் எடுத்தியம்புகின்றது. 

இவை மட்டுமன்றி வேலைக்கமர்த்தப்பட்டு ஒவ்வொரு நாளும் கங்காணி, ஆட்சியாளர்கள், ஏனையோரால் ஏற்பட்ட இழப்புகள், அநீதிகள், கொடுமைகள், இவற்றுடன் அடிப்படை உரிமை மீறல்கள், வீரதீரமிக்க போராட்டங்கள், தொழிற்சங்க கெடுபிடிகள், உரிமைமறுப்பு ஒப்பந்தங்கள் குறிப்பாக 1979, 1981, 1984, 1995 எனபவற்றைக் கூறலாம்.  இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு உள்ளாகினர். 

தொகுத்து பார்க்கும் போது இந்தியாவில் அவர்களது நிலைமை ஒருவிதமாகவும் இலங்கையில் அவர்களது நிலமை ஒரு விதமாகவும் காணப்படுவதை அவதானிக்கலாம். இரண்டு இடங்களும் வௌ;வேறான சமூக, பொருளாதார காரணிகளைக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வாறான சூழ்சிலையில் இலக்கிய உற்பத்தி உயிர்துடிப்பானதாயும் சமுதாய உணர்வு, ஏக்கம் சுக துக்கங்கள் கலந்திருப்பதனையும் உணரலாம். இதனை இக்காலங்களில் தோற்றம் பெற்ற நாவல்களிலும் சிறுகதைகளிலும் பரிணமித்திருப்பதனை காணமுடியும். இதனை நாட்டப்பாடல்கள் மூலம் தெளிவாக அறியலாம். கலாநிதி க. அருணாசலம் 'மலையகத் தொழிளாலர்களின் தேவைகள், வேதனைகள், சோதனைகள் மிகுந்த வரலாறுகளையும் நிகழ்கால நிலைமைகளையும் அவர்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் வாழ்வியல் அம்சங்களையும் பிரதிபலிப்பது நாட்டுப் பாடல்' என்கிறார். எனவே மலையக மக்களின் தலையாய சமூக வரலாற்று சான்றுகளாக திகழும் மலை நாட்டுப் பாடலகளை தொகுப்பதும் பல்வேறுப்பட்ட நிலைமைகளில் அதனை நெறிப்படுத்துவதும் அவசியப் பாடுடையதாய் இருக்கின்றது.

மலையக நாட்டுப்பாடல்கள் குறித்தான ஆய்வுகள் 
எந்தவொரு இலக்கிய ஆக்கத்திற்கும் அடிநாதமாக திகழும் நாட்டுப் பாடல்கள் அமையப் பெற்ற நாட்டாரியல் இன்று தனித்துரையாக ஆய்வு செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மொழியியல் ஆய்வில் இது முதன்மையாக விளங்குகின்றது. இவ்வாறாக ஆய்வு பணிக்கு உதவும் நாட்டாரியலின் மலையக நாட்டுப்பாடல்களை பல்வேறு ஆசிரியர்கள் ஆய்வுக்குட்படுத்தி இருந்தாலும் மலையக நாட்டுப் பாடல்களை பரந்த நோக்கிலும் பார்வையிலும் ஆய்வு செய்ததில் குற்ப்பிட்டு; கூறக்கூடியவர்கள் யாரும் இல்லை. வெறுமனே சி. வி வேலுப்பிள்ளையின் தொகுப்பையும் கண்டிச்சீமையிலே எனும் தொகுப்பையும் வைத்துக் கொண்டு ஆராய்ந்த கதையாகத்தான் மலையக நாட்டுப் பாடல்கள் குறித்தான பார்வைகள் இருக்கின்றன. 

பேராசிரியர் சோ .சந்திரசேகரன்,  கலாநிதி. அம்பலவாணர் சிவராசா, லெனின் மதிவாணன், சாரல்நாடன்,  சி.வி வேலுப்பிள்ளை, அந்தனி ஜீவா, சு.முரளிதரன,; க.சரசோதி, ஏ.வி.பி கோபால் வேல்முருகு, மாத்தளை வடிவேலன், மற்றும் பல இளம் எழுத்தாளர்களும் கலையருவி, லயம், குன்றின் குறள்,; கண்டி தமிழாராய்ச்சி மாநாடு சஞ்சிகைகள் போன்றவற்றில் மலையக நாட்டுப்பாடல்கள் குறித்தான பார்வைக்கு வித்திட்டிருப்பதனை அவதானிக்கலாம். எனினும் அவ்வாய்வுகளும் கட்டுரைகளும் முழுமையான பார்வைகளுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தப்பட்டிருக்கன்றதா? என்பது கேள்விக்குறிதான். இத்தருணத்தில் மலையக நாட்டுப்பாடல்கள் முழுமையான தொகுப்பாக இன்றும் தொகுக்கப்படவில்லை. மேலும் இவ்வகையில் மலைநாட்டார் பாடல்கள் தொகுப்பும் கண்டிச்சீமையிலே என்னும் தொகுப்பும் பாராட்டக்குறியதே. மேலும் அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டியதும் அவசியமானதொன்றாகும்.

தொகுத்து நோக்கம்போது மலையக நாட்டார் பாடல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறவும் அப்பாடல்களில் பொதிந்துள்ள மலையக மக்களின் வாழ்வியல் கோலங்களை அலசி ஆராய்வதற்கு அவற்றை ஆய்வுக்கும் தேவைக்கும் பயன்படுத்த வேண்டியது அவசியபாடுடையதாய் காணப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

மலைநாட்டு மக்கள் பாடல்களும் அது குறித்தான பார்வையும்
மலையக வாய்மொழி இலக்கியம் உயிர் துடிப்புள்ள இலக்கியமாகும். இவ்விலக்கியத்தின் ஒரு கூறான வாய்மொழிப் பாடல்களானது உணர்ச்சி பூர்வமானதும் பண்டைய வாழ்க்கை முறை, போரியல் முறை, சமூக, பொருளாதார, சூழல் பற்றியதும் ஆகும். சி. வி வேலுப்பிள்ளையின் 'மலைநாட்டு மக்கள் பாடல்கள்', 'கண்டிச்சீமையிலே' என்னும் தொகுப்புக்கள் பல்வேறு விதமான பாடல்களை சுமந்திருக்கின்றன. குறிப்பாக இத்தொகுப்புக்களிலே தாலாட்டுப் பாடல், திருமண வாழ்த்துப் பாடல்இ மாரியம்மன் பாடல்இ மாரடிப் பாடல் ஒப்பாரிப் பாடல்இ உடுக்குப் பாடல்இ காதல் பாடல் முதலிய பாடல்கள் பரிணமித்துக் கிடக்கின்றன. இப்பாடல்கள் ஒரு மனிதன் பிறப்பு தொடக்கம் இறப்பு வரையிலான மக்கள் வாழ்க்கையின் படிமங்களை அப்படியே காட்டுகின்றது.

இப்பாடல்கள் நாளாந்தம் பேசும் வார்த்தைகளையும் அன்றாடம் சந்திக்கின்ற நபர்களையும் மேலும் அவர்களது பிரச்சினைகள், உணர்சிசிகள், விழாக்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சமய அனுட்டானங்கள், விழுமியங்கள்,; உயர்ந்த உன்னத எண்ணங்கள்,  சமுதாய உணர்வுகள் முதலியன பற்றி எடுத்தியம்புகின்றன. மேலும் மலையக மக்களது மொழி வளம், கலை கற்பனை, பண்பாடு, மத, நம்பிக்கைகள், மதிநுட்பங்கள், அணி சிறப்புக்கள், ஆற்றல் ஆளுமைகளையும் எடுத்துச்சொல்லும் வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.

இப்பாடல்கள் வெறுமனே பொழுது போக்குக்கோகவோ உதவாக்கரை கதைகளாகவோ வியாபார நோக்கத்திற்காகவோ தோன்றவில்லை. மாறாக மலையக மக்களது வரலாற்று பிரச்சினைகள், சமுக, பொருளாதார, சமய, அரசியல் பிரச்சினைகள், அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகள், அவர்கள் வாழ்வின் இன்ப துன்பங்கள், ஏக்கம், ஏமாற்றம், நம்பிக்கை, வேதனை, விரக்தி முதலியவற்றை பறை சாற்றி நிற்கின்றன. 

'மலை நாட்டு மக்கள் பாடல்' என்ற தொகுப்பில் 'கோப்பி காலம் ஆள்கட்டிய போது' என்னும் தலைப்பில் இருக்கும் பாடல்

'கண்டி கண்டி எங்காதிங்க 
கண்டி பேச்சி பேசாதிங்க 
கண்டி படும் சீரழிவே
கண்டி பேரு சொல்லாதிஙக'

இப்பாடலானது இக்கட்டுரையின் முழுமையினையும் 'துன்ப கேண', 'தூரத்துப் பச்சை' 'நாடற்றவர் கதை' முதலிய நாவல்களிற் கூறப்பட்டுள்ள பாதி பிரச்சினைகளை அப்படியே படம் பிடித்துள்ளது. அத்தோடு எதுகை, மோனை, அணி சிறப்புக்கள், அன்றாடம் வழங்கும் வார்த்தைகள், சொந்த நாடான இந்தியா மீதான பற்று மேலும் சமூக உணர்வு என்பன இழையோடி காணப்படுகின்றது. மேலும் பின்னாட்களில் சினிமா சதஸ்திரி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களால் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட போகும் பிச்சினைகளுக்கு அரை கூவல் விடுவது போல தோன்றுகிறது.

'கண்டிக்கு வந்தமினு 
கனத்த நகை போடமினு 
மஞ்ச குளிச்சமினு
மனுச மக்கள் தெரியலையோ?'
எனும் பாடலும் கண்டிக்கு பயணித்த போது வந்து சேர்ந்த கப்பலில் கீழ்கானும் பாடல் உணர்த்துகின்றது.

'வாடையடிக்குதடி 
 வாடக்காத்தும் வீசுதடி
சென்னல் மணக்குதடி நம்ம 
சேந்து வந்த கப்பலிலே'

இப்பாடல்களிலிருந்து ஒரு உண்மை வெளிப்படுகிறது. இவர்கள் வரும்போது நாட்டார் பாடல்களை எடுத்து வந்திருக்கின்றனர் என்பதாகும். இவ்வாறான பாடல்கள் இந்திய சமுகத்திலிருந்து முற்றும் வேறான சமூக, பொருளாதார, அரசியல், புவியியல், பண்பாடும் மலையகத்தில் காணப்பட்டதால் இங்கு தனித்துவமான பாடலகள் தோற்றம் பெற இவை பெரிதும் காரணமாயின. மேலும் வௌ;வேறு இடங்களிலிருந்து வந்த மக்கள் ஒரே இடத்தில் கூட்டாக சேர்ந்தமையினாலும் ஒரு புதுப் பொழிவுடன் இப்பாடல்கள் உருவாக காரணமாயின. மேலும் கூட்டு மனப்பான்மை உடைய பாடல்களை சீரான முறையில் தொகுப்பதும் இவற்றை சமூகவியல், உளவியல், மானுடவியல் அணுகு முறைக்கும் உட்படுத்துவதும் அவசியமாகும்.

'கூனி அடிச்ச மலை 
கோப்பி கன்னு போட்ட மல 
அண்ணன தொலச்ச மல 
அந்தா தெரியுது'

என்ற பாடலானது தம் உறவுகள் மீதான அன்பையும், தொரை, கங்காணி, கண்டாக்கு, கணக்கப்பிள்ளை போன்ற அன்றாடம் சந்திக்கின்ற  நபர்களையும் உட்பொருளாக கொண்டுள்ளது. மேலும் இதனை அடிப்படையாகக் கொண்ட எதிர் தொணியை இக்கால சிறுகதை, நாவல், கவிதை இலக்கியங்களிலும் காணலாம். குறிப்பாக சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகளில் காணலாம்.

தொழில் களத்தில் மக்களது தொழில் மீதான பிடிப்பையும் பக்தி உணர்வை அதிகரிக்கவும் களைப்பு நீங்கவும் சுய துக்கங்களை மறந்து தொழில் செய்வதற்கும் வேலை செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளை நாசுக்காகவும் கிண்டலாகவும் கேலியாகவும் கூட்டுப்பொறுப்புடன் தெரிவிக்கும் பாடல்களையும் காணலாம்.

'கொழுந்து வந்திருச்சி 
கூட போட்டு நாளாச்சி
சேந்து நெரே புடிச்சா
சிட்டா பறக்குறாளே'

என்னும் பாடல் நிருவாக பொறுப்புக்களையும் நிருவாகிளின் தோற்றம், அவர்கள் எற்படுத்தும் பிரச்சினைகள், அவர்களின் தேவை போன்றவற்றையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. துரை, பங்களா, இஸ்டோரு பற்றியும்  பெரிங்கங்காணி, கண்டாக்கு, கணக்குபிள்ளை போன்றோர் பற்றிய செய்திகளையும் மேரிவளை, மாணிக்கவத்தை, கல்லாறு முதலிய இடங்கள் பற்றியும் கூறுகிறது.

'மாணிக்கவத்த தோட்டத்திலே
மயிருவத்த கண்டாக்கையா 
உருலோசு அடகு வச்சி
உருட்டுறாரே ஜின்னு போத்த'
என்ற பாடலும்

'கங்காணி மாராளே 
கனபிரளி ஆகுதையா'
என்ற பாடலும் 

'ஆதரிச்சி பேரு போடும் 
ஐயா கணக்குபுள்ள'
என்ற பாடலும் குறிப்பிடத்தக்கன.

மேலும் இப்பாடல்களில் உறவுகள் மீதான அன்பும் வெளிகாட்டப் படுகிறது. குறிப்பாக தாலாட்டுப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், காதல்பாடல்கள், திருமண வாழ்த்துப் பாடல்கள் முதலானவற்றில் இதனை காணலாம். பெற்றோர் - பிள்ளைகள், கணவன் - மனைவி,  காதலன் -  காதலி முதலிய பாத்திரங்களை உள்ளடக்கி பாடல்கள் எழுப்ப்பட்டுள்ளன. அத்துடன் உறவுமுறைகள், அவர்களது பழக்கவழக்கம், ஆடை, அணிகலன் என்பவற்றை பாடியமை கூட்டு சமூகத்தின் பொதுவான தன்மைக்கு ஆவணமாக திகழ்கின்றது.

'சவுக்கு மரம் போல' 
'விசும்பு சிலை போல' 
'கடல பருப்பு போல' 
'அஞ்சு கிளியழகே'
'ஈரம் பிளக்காயோ'
'வன்னி நாட்டு வதாச்சிக்காயே' 
'வட்டு கருப்பட்டியே'

முதலிய பாடலடிகள் உவமை, உருவக அணிச்சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றன. இவை இயற்கையோடு இணைந்ததும் அன்றாடம் பயன்படுத்தும் பொருளையும் மையப்படுத்தயுள்ளன. உறவு முறைப் பாடல்களிலே காதல் பாடல் ஒருதலை காதலாகவும் பொது காதலாகவும் தர்க்க அடிப்படையில் அமைந்தும் இன்ப துன்பங்கள் முதலியன பற்றியும் எடுத்தியம்புகின்றன.

ஆண்:  'கூட மேல கூட வச்சி 
கொழுந்தெடுக்க போற புள்ள 
கூட எறக்கி வச்சி 
குளுந்த வார்த்த சொல்லிப் போடி'

பெண்:  'என் புருசன் கங்காணி
என் கொழுந்தன் கவ்வாத்து
எலய கொழுந்தனுமே 
இஸ்டோரு மேல் கணக்கு'
என்ற பாடலும் 
'கல்லுருக கடலுருக
காண்பார் மனமுருக
நானும் சடங்காகி 
நாப்பத்தஞ்சி நாளாச்சி'
என்ற பாடலும் 
'கருத்த முத்து செவந்த முத்து 
கடலொரம் வெளஞச முத்து 
இங்கிலிசு பேசும் முத்து 
வெசிலெடுத்து கொஞ்சுறாளே'
என்ற பாடலும் குறிப்பிடத் தக்கன. தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த சாடை, கேலி, கிண்டல் என்பன பாடல்களில் செறிந்து காணப்படுகின்றன. கீழ்வரும் பாடலிலும் இதனை காணலாம்.  

'காலே கருத்தக் காலே 
கண்ணாடி மயில காளே
தாளம் போட்ட வெள்ளக் காளே 
சுத்துதடி மத்தியானம்' 

குழந்தையை தூங்க வைக்க தாலாட்டுப் பாடலகள் உருவாகின. இதில் குழந்தைகளின் அழகு, புகழ், அணிகலன், எதிர்காலத்தில் அக்குழந்தையின் தொழில், குழந்தைகளை எதுவும் தீண்டாதிருத்தல், உறவு முறைகளைக் கூறிப்பாடுதல் மற்றும் குழந்தை இல்லாதவர்களின் நிலையைக் கூறிப் பாடுதல், குநை;தைக்காக நன்றி கூறிப் பாடுதல் ஆகிய பண்புகளையும் இப்பாடல்களில் காணலாம். 

'ஆரிரரோ ஆரிரரோ கண்ணே
ஆரிரரோ ஆராரோ'

'குளங்களங்க தலை முழுகி 
கோடி போல ராமமிட்டு 
மலை முழங்க பாடி வரும் 
மலை பழனியாண்டவருக்கு'
என்ற பாடலும் 

'குழந்தை இல்லையினு - எங்க அய்யாநாங்க 
கோடி தவமிருந்தோம்
கோடி தவமிருந்து - எங்கண்ணே நாங்க 
குழந்தை வரம் கேட்டு வந்தோம்'
என்ற பாடலும் 
'அத்தை அடிச்சாலோ 
அல்லி மலர் செம்பாலே
மாமன் அடிச்சானோ 
மல்லிகைப்பூச் செண்டாலே'
என்ற பாடலும் குறிப்பிடத் தக்கதாகும்.

ஒப்பாரிப் பாடல்கள் பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, சகோதரர், ஊரிலுள்ளோர் ஆகிய இறந்த சொந்தங்களை முதன்மைப்படுத்தி அவர்களின் சிறப்புகள், வாழ்க்கை முறை, மோட்ச வாழ்வு என்பவற்றைக் குறித்துப் பாடப் படுகின்றன. இவை சமூக உணர்வு, கூட்டு வாழ்வு ஆகியவற்றை உணர்த்துகின்றன.

'மட்டப்பானை ஓலை
என்ன பெத்த தாயே
கத்தரிக்காய் பச்ச நிறம்
என்னப் பெத்த அப்பா
காசி விசிறி வரும்
கைலாச தீர்த்தம் வரும்
காசி மத ராசருடன்-நான் 
கலந்திருந்து வாழலியே'

இதனை விட கும்மி, கோலாட்டம், மாரியம்மன் பாடல், ஒயிலாட்டம், கோடஙகி, குரு வணக்கம், குறிஞசி கொய்தல், சிறு தெய்வ வழிபாடு, காமன் கூத்து, பொன்னர் சங்கர் பாடல் முதலியனவும் காணப்படுகின்றன. 

மேலே கூறப்பட்ட ஒரு சில பாடல்கள் மலையக மக்களின் வாழ்வினை படம் பிடித்துக் காட்டுகின்றது. அவை காலத்தின் குரலாகவும் தமது கால வாழ்வின் பிரதிபலிப்பாகவும் தமது மக்களின் உயர்ந்த அபிலாசைகளையும் ஜனநாயக உணர்வோட்டங்களையும் சித்தரிப்பவையாக உள்ளன என்பதற்கிணங்க அன்றும் இன்றும் ஒரு ஒப்பீட்டை செய்யும் வகையில் இம்மலையகத்தில் இன்றும் இப்பாடல்கள் காணப்படுகின்றன. அன்றைய பிரச்சினைகள் இன்றும் மலையகத்தில் உள்ளன. மலையக நாட்டுப்பாடல்களின் தெளிவுணர்வை ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வுக்குட்படுத்துவதற்கு 'மலையக சமுகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களையும் அவற்றின் பரஸ்பர உணர்வுகளையும் அவற்றின் திறமைகளையும் அவற்றின் தன்மைகளையும் மனோவியலையும் கற்கவேண்டும்.' இதற்கு இந்நாட்டுப்பாடல்கள் தகுந்த சாதனம் என்பது புலனாகும்.

மலையகத்து தொழில், சடங்கு, சம்பிரதாயம், நம்பிக்கை போன்றவற்றை உள்ளடக்கியுள்ள பாடல்களை அவதானிக்கும் போது தமிழகத்துடன் தொடர்பு பட்டிருப்பதை அவதானிக்கலாம். எனினும் மலையகத்தின் தனித்துவ பண்புகள் எதிரொலிப்பதனையும் காணலாம். 

'நாட்டுப்புறவியல் என்பது வாழும் உயிர் சுவடு என்றும் அது மரணமடைய மறுப்பதாகவும்' சார்ல்ஸ் பிரான்ஸிஸ் பொட்டர் கூறுகின்றார். இதில் நாட்டுப்பாடல் மக்களின் வாழ்வியல் அம்;சங்களோடு பிணைந்து காணப்படுவதை இவ்விடத்தில் வலியுறுத்தலாம். பொதுவாக இந்நாட்டுப்பாடல்களில் செதுக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் இன்று மெருகு பெற்று காணப்படுகின்றது.

'சம்பளமுனா சம்பளம்
சனிக்கிழமை சம்பளம்
செக்குரோலை வாசிச்சுப் பார்த்தா
ஒத்தரூவா சம்பளம்'

என்ற பாடல்  குறிப்படத் தக்கதாகும். மேலும் நிர்வாகிகளின் கொடூரத்தன்மை, பாலியல் சுரண்டல்கள், இன்னும் சொல்ல முடியாத வேதனைகளையும் மையப்படுத்தி பாடல்கள் காணப்படுகின்றன. 

'கங்காணினா கங்காணி 
கறுப்புசட்டை கங்காணி 
நாளாளு ஓடிப்போனா 
நக்குவாயா கங்காணி'

மலையக நாட்டார் பாடல்களை வைத்து நோக்கு போது அவற்றை பன்முக பார்வைக்கும் தேவைக்கும் உட்படுத்த வேண்டும் என்பதுபுலனாகும்.

மலையக நாட்டுப்பாடலும் இன்றைய நிலைமையும்
மலையக மக்களின் தலையாய ஆவணமாக திகழும் நாட்டுப்பாடல்கள் இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் நாட்டுப் பாடல்களுக்கான தேவையோ அதற்கான வருவாயோ இல்லாது குறைந்து போகின்றமையால் இப்பாடல்கள் பெருவாரியாக அழிந்து போகின்றன. குறிப்பாக இயந்திர தொழில்நுட்பம,; தொடர்பாடல் விருத்தி, சினிமா, நாடகம், கவிதை போன்ற இன்னோரன்ன வருகையினால் நாட்டுப்பாடல்களுக்கான தேவை குறைந்துள்ளது. மேலும் நகரமயமாக்கல், தொழில்துறை விருத்தி என்பன இதன் அழிவுக்கு காரணமாகின்றன. இன்றைய கால கட்டத்தில் மாரியம்மன் பாடல்கள் மட்டும் ஓரளவிற்கு நிலைத்து நிற்பதைக் காணலாம். எனவே இவற்றை தொகுத்து வெளியிட வேண்டியது அவசியமாகின்றது.

இக்கட்டுரையை தொகுத்து நோக்கும் போது ஒன்று புலனாகின்றது. அதாவது மலையக நாட்டுப்பாடல்களை பன்முக பார்வைக்கும் தேவைக்கும் உட்படுத்த வேண்டும் என்பதாகும். இதற்கு இக்கட்டுரையின் ஒவ்வொரு உப பிரிவும் ஆய்வுக்குரிய பார்வையையும் தேவையையும் விளக்கி நிற்கின்றது. என்றாலும் இது ஒரு முழுமையானதும் குறிப்பிட்ட அணுகு முறையில் ஆராயப்பட்டுள்ளது என்று கூறவில்லை. எனினும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது என்றே கூறத்தகும்.

(இக்கட்டுரை 2007ஆம் ஆண்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடாத்தப்பட்ட 'மலையக தமிழ் இலக்கியம்' ஆய்வுக் கையேடு எனும் நூலில் வெளியிடப்பட்டுள்ளது.)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates