நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரை ஜனாதிபதி
தேர்தலில் உண்மையில் தோற்றது மஹிந்த சிந்தனை மட்டும் தானேயொழிய, இந்த மக்களின் வாழ்க்கை மாற வேண்டும்
என்ற உண்மையான சிந்தனையை கொண்டிருக்கும் மலையக கட்சிகள் அல்ல என்பதே யதார்த்த உண்மையாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின்
தீர்ப்பு குறித்து தேசிய ரீதியில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமானது மக்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள முடியாத
நிலையில், ஏன் மலையகத்தின்
பாரம்பரிய கட்சியான இ.தொ.கா செயற்பட்டது என்பதாகும். ஒரு கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்தகூட தனது மெதமுலன இல்லத்தில் வைத்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது
தனது தோல்விக்கான காரணங்களில் நுவரெலியா மாவட்ட மக்களையும் கூறியிருந்தார். காரணம்
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளால் தோல்வியுற்ற
தேர்தல் மாவட்டங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, திகாமடுல்லை, வன்னி ஆகியவற்றோடு நுவரெலியாவும் இணைந்து கொள்கிறது. நுவரெலியா மாவட்டத்தில்
மைத்திரிபால சிறிசேன ௧,௨௭,௨௬௭ மேலதிக
வாக்களால் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலையக பெருந்தோட்ட மக்கள்
செறிவாக வாழ்ந்து வரும் நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியுற்றதற்கான
காரணங்களை ஆராய்வது அவசியம். அவரை மட்டுமல்லாது அவருக்காக பிரசாரம் செய்த மலையகத்தின்
பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா.வையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
வாழ்க்கை மாற்றத்தை சிந்தித்த மலையக மக்கள்
ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன்
மாற்றம் என்ற வார்த்தையை முழு நாடுமே உச்சரித்தது,ஆனால் விதிவிலக்காக மலையக பெருந்தோட்ட மக்கள் நாட்டின் ஆட்சி மாற்றத்தை
விட தமது வாழ்க்கை மாற்றம் குறித்து மட்டுமே சிந்தித்தனர் என்பதே உண்மை. காரணம்
மகிந்தவின் ஆட்சி காலத்தில் பெருந்தோட்ட வாழ் மலையக மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய
மாற்றங்கள் அவர்களுக்கு பாதகமாகவே இருந்தன. அதாவது இந்த இடத்தில் நாம் உரிமைகள்
என்ற அம்சத்தை வைத்துப்பார்த்தால் அப்படி ஒன்றுமே இவர்களுக்குக்கிடைக்கவில்லை
எனலாம்.
௨௦௦௫ ஆம் ஆண்டு தனது முதலாவது தேர்தலில் மஹிந்தசிந்தனையில் மஹிந்தராஜபக் ஷ மலையக பெருந்தோட்ட
மக்கள் பற்றி முன்வைத்திருந்த 'கௌரவமான வாழ்க்கை' என்ற விடயம் அடுத்த தேர்தல் வரை சிந்தனையாக மட்டுமே இருந்ததை பல தடவைகள்
ஊடகங்கள் வாயிலாக பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதே போல் ௨௦௧௦ ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்த மக்களின் வீடு, காணி பற்றிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன.
அவை ஒன்றுமே தேர்தலுக்குப்பிறகு பேசப்படவே இல்லை.
காணி, வீடு உரிமை பற்றிய சிந்தனையை தோற்றுவித்த அனர்த்தம்
இச்சந்தர்ப்பத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற
மீரியபெத்த அனர்த்தமானது பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான
தனி வீடு குறித்த சிந்தனையை தோற்றுவித்திருந்தது. அந்த சிந்தனை, போராட்டமாக; மக்கள் எழுச்சியாக மலையகம் முழுதும் எதிரொலித்தது. ஆனால் இதை மலையகத்தின்
பிரதான கட்சிகளும் ஏன் அரசாங்கமுமே கூட கண்டு கொள்ளவில்லை மாறாக மலையகத்திற்கு
எந்த விதத்திலும் பொருத்தமற்ற மாடி வீடுகள் பற்றியே பேசப்பட்டன.
2013 இல் சொன்னது 2014 இல்
௨௦௧௩ ஆம்
ஆண்டு வரவு செலவு – திட்டத்தில் சொல்லப்பட்ட ௫௦ ஆயிரம் வீட்டுத்திட்டம் ௨௦௧௪ ஆம்
ஆண்டின் இறுதிப்பகுதிகளில் அவசர அவசரமாக மாடி வீடு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டமையை
தேர்தல் பிரசாரம் என்ற ரீதியிலேயே மலையக மக்கள் நோக்கினர். அதிலும் மிகவும் பாதிக்கப்பட்ட
மீரியபெத்த பிரதேச மக்கள் இறுதி நேரங்களில் கைவிடப்பட்டமையானது ஏனைய பெருந்தோட்ட
பகுதி வாழ் மக்களை சிந்திக்கத்தூண்டியது. மேலும் தரிசு நிலங்களில் இந்த மக்களுக்கு
வீடுகள் அமைத்துத்தரப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதிகள் காற்றில் கலந்து
சென்று விட்டமையையும் இந்த மக்கள் நன்கறிந்தே வைத்திருந்தனர்.
இந்திய வீடமைப்புத்திட்டம்
அதே வேளை இந்திய அரசாங்கத்தினால் மலையகப்
பெருந்தோட்டப்பகுதிகளில் அமைத்துத்தருவதாக கூறப்பட்ட நான்காயிரம் வீட்டுத்திட்டத்தையும்
தற்போது இந்திய அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிய முடிகிறது. தம்மூடாகவே
இத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தளர்வு போக்கை கடைப்பிடிக்காது
பிடிவாதமாக இ.தொ.கா இருந்தமையே இதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விடயம், தொழிலாளர்களுக்குத்தெரியாதது அல்ல.
ஆகவே இந்த விடயம் இ.தொ.கா மீது கசப்புணர்வு ஏற்பட வழிவகுத்தது.
இ.தொ.வின் பிரசாரம்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவாகவே இ.தொ.கா பிரசாரங்களை மேற்கொண்டது. ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளில் அதற்கு வரவேற்பு
இல்லை என்பதை ஆரம்பத்திலேயே அது உணர்ந்திருந்தது. எல்லா இடங்களிலும் இ.தொ.காவிற்கு
ஆதரவு இருந்தது ஆனால் மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு இல்லை என்பதே தொழிலாளர்களின்
முணுமுணுப்பாக இருந்தது. ஆய்வுகள் இதை உறுதி செய்திருந்தன. எனினும் இ.தொ.கா இதற்கு
செவி சாய்க்கவில்லை. சிறுபான்மை வாக்குகள் இந்தத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தாது
என்ற தப்புக்கணக்கும் இதற்குக்காரணம். மேலும் ௨௦௧௦ ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் நுவரெலியா
மாவட்ட மக்கள் மகிந்தவை நிராகரித்திருந்தனர் என்ற விடயத்தை இ.தொ.காவினர் மறந்ததற்குக்காரணம்
மத்திய மாகாண சபை தேர்தலில் அவர்களுக்கு இந்த மக்கள் வழங்கிய ஆதரவாகும். ௨௦௧௦ ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்த
மொத்தமாக ௧௫௧,௬௦௪ வாக்குகளைப்பெற அவரை எதிர்த்துப்போட்டியிட்ட
சரத்பொன்சேக்கா ௧௮௦ ,௬௦௪ வாக்குகளைப்பெற்றிருந்தார்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கும்
தேசிய ரீதியான தேர்தலுக்கும் மக்களின் உணர்வுகள் எப்படியானவை என்ற விளங்கிக்கொள்ளாத
தன்மையும் இதற்குக்காரணமாகும். மக்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள
முடியாத அதே நேரம் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத தலைமைத்துவம் என்ற விமர்சனங்களையே
இப்போது இ.தொ.கா எதிர்நோக்கியுள்ளது.
உரிமைகளும் சலுகைகளும்
மலையக பெருந்தோட்ட மக்களைப்பொறுத்தவரை
தற்போது உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் வித்தியாசத்தை அவர்கள் உணரத்தொடங்கி விட்டதை
ஒரு நல்ல முன்னேற்றம் எனலாம். தோட்டப்பகுதிகளுக்கு கொங்கிரீட் பாதைகள் போடுவதை அபிவிருத்தியாக
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நுவரெலியா வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டியதையும் அதற்கு
நமது பிரதிநிதிகள் தலையாட்டி மேடையில் அமர்ந்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டல்
அவசியமாகும். எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் பொறுத்தவரை அவரது மஹிந்த சிந்தனையானது
மலையக மக்களைப்பொறுத்தவரை வெறும் சிந்தனையாக மட்டுமே இருந்ததையும் அதை சிந்திக்காது
விட்ட இ.தொ.கா இழைத்த தவறுகளையும் மக்கள் சிந்திக்கத்தொடங்கி விட்டார்கள் என்பதையும்
இங்கு குறிப்பிடல் வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல்
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் நுவரெலியா
மாவட்ட பெறுபேறுகளில் மாற்றங்கள் இருக்கும். காரணம் இது தம்மிடையே உள்ள பிரதிநிதிகளை
தெரிவு செய்வதற்கான தேர்தல். ஆனாலும் இ.தொ.காவைப் பொறுத்தவரை இது சவாலான தேர்தலாகத்தான்
இருக்கும். காரணம் தற்போதைய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அது தங்கியுள்ளது.
தமது வாழ்க்கையில் மாற்றம் தேவை என்றால் மலையகத்தின் பாரம்பரிய கட்சிகளையே தூக்கி
எறியும் பக்குவத்தை இன்று மக்கள் பெற்றுள்ளனர். கல்வி கற்ற இளைஞர், யுவதிகள் இன்று மக்களை வழிநடத்தி
தேர்தல் மற்றும் உரிமைகளைப்பெற்றுக்கொள்ளல் தொடர்பாக வழிகாட்டி வருகின்றனர்.
நாம் கூறியபடி நீங்கள் நடக்கவில்லை
என்ற கோபத்தை இ.தொ.கா இந்த மக்களிடம் காட்ட முடியாது. அதே நேரம் தற்போதைய
அரசாங்கத்தின் இணைவதா இல்லையா என்பது குறித்த அடுத்த கட்ட சமயோசித நகர்வுகள்
குறித்தும் இ.தொ.கா சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான
உண்மையான வேலைத் திட்டங்களையும் அவர்களுக்குள்ள உரிமைகளைப்பெற்றுக்கொடுக்க தேவை
யான விடயங்களையும் ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாகும். காரணம் நுவரெலியா மாவட்டத்தை
பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் உண்மையில் தோற்றது மஹிந்த சிந்தனை மட்டும் தானே
ஒழிய இந்த மக்களின் வாழ்க்கை மாற வேண்டும் என்ற உண்மையான சிந்தனையை கொண்டிருக்கும்
மலையக கட்சிகள் அல்ல என்பதே யதார்த்த உண்மையாகும். ஏனெனில் மலையக மக்களின் வாக்குகள்
எந்த அரசாங்கத்திற்கும் முக்கியமானவை, பிரதிநிதிகளும் தான்...!
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...