மலையக மக்களின் மனங்களில் மாறாத வடுக்களை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது 2014 ஆம் ஆண்டு. புதிய உத்வேகத்துடன் மலர்ந்திருக்கின்றது புதிய 2015 ஆம் ஆண்டு. இந்த ஆண்டில் மலையக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் கல்வி மேம்பாட்டையும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு மலையக சமூகத்துக்கு இருக்கின்றது.
குறிப்பாக காணி, வீடு, கல்வி அரச தொழில் பொருளாதார முயற்சிகள் என்பவை தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மலையகத்தில் பாரம்பரியமாக தொழிற்சங்க அடிப்படையிலான பிற்போக்கு தலைமைகளே மக்களுக்கு தலைமை கொடுத்து அவர்களை அடக்கி ஆளும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தத் தலைமைகள் எமது சமூகத்திற்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுக்கொடுக்க போவதில்லை. எமது மக்களை தொடர்ந்தும் காணியுரிமையற்ற தனி வீடு,வீட்டுரிமையற்ற, லயத்து, அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றன.
இந்த பிற்போக்கான சிந்தனையுடன் பாரம்பரியமாக தொடர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ தொழிற்சங்க தலைமைகள் ஒருபோதும் விடுபட போவதில்லை. எனவே இவ்வாறான பிற்போக்கு தலைமைகளை மலையக மக்கள் தொடர்ந்தும் நம்பியிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.
லயன் தொடர்குடியிருப்புக்களினால் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. ஏற்பட்டுள்ளன என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அந்த முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தும் வருகின்றனர்.
அதாவது சமூக பொருளாதார புவியியல் ரீதியாக பாதிப்புக்கள் பற்றி பாமரன் முதல் பல்வேறு அறிஞர்கள் வரை ஆய்வுபூர்வமான காரணங்களுடன் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்தும் நிறுவி வருகின்றனர். ஆனால், இந்த பிற்போக்கு தலைமைகள் அதனை ஏற்க மறுத்து தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கின்றன.
எனவே இதனை மாற்றியமைக்கும் பொறுப்பை மலையகத்தின கல்விசார்் இளைஞர்களும் ஏற்க வேண்டும். இன்றைய மலையக சமூகம் தமது நிலைமை பற்றி நன்கு புரிந்து கொண்ட சமூகமாகவே காணப்படுகின்றது. இந்த சமூகத்தை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்பதை மலையக தலைமைகள் உணர வேண்டும்.
கடந்த வருடம் மலையக சமூகம் பாரிய இழப்புக்களை எதிர்கொண்டிருந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி கொஸ்லந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட மண் சரிவினால் பெரும் பாதிப்பு உண்டானது. தொழிலாளர்களின் லயன் குடியிருப்புத்தொகுதிகள் நிலத்தில் புதையுண்டன. எத்தனை பேர் மண்ணுக்குள் புதையுண்டனர் என்ற விபரம் தெரியாமலேயே அந்த கதையும் முடிக்கப்பட்டு விட்டது.
உயிர் தப்பியவர்கள் இன்றும் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு எப்போது வீடு கிடைக்கும், எப்போது புதிய வீடுகளில் குடியேறுவார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. பாடசாலை இயங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அங்கு வகுப்புக்கள் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக தங்கியிருக்கின்றனர். எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியவர்கள் யார் ? தோட்ட மக்களின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் தொழிற்சங்க தலைமைகள் தானே.
மீரியபெத்த மண்சரிவைத் தொடர்ந்தும் டயகமவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினாலும் மக்கள் பாதிப்படைந்தனர். இவ்வாறு பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கு தொடர் லயன் குடியிருப்பு முறையே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்ட போதும் அதை மலையக தலைமைகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தொடர்ந்து லயன் (மாடி) குடியிருப்புக்களையே வலியுறுத்தி வருகின்றன.
கடந்த வருட இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலையும் மலையக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மழை கடுங்குளிர் வெள்ளம் என்பவை காரணமாக தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் பல இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டன. உயிரிழப்புக்களும்கூட ஏற்பட்டன. ஆனால், இந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்காத இந்தத் தலைவர்கள் அந்த மக்களிடம்போய் வாக்கு கேட்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? அல்லது மனிதாபிமானம் இல்லையா ? என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் இன்றைய மலையக இளைய தலைமுறையினர் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்கள் மலையக அரசியல் நகர்வுகள் ,தலைவர்களின் செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். மட்டுமன்றி, நல்ல தெளிவும் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இதற்கு சாட்சியாகும். இந்த இளைஞர்கள் தமதுவாக்குச்சீட்டுக்கள் மூலம் இதற்கு பதிலளிப்பார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
சொந்தமாகக் காணி தனி வீடு என்ற கோஷம் மலையக மக்களிடையே வலுப்பெற்றுள்ளது. அதனை வென்றெடுப்பதற்கு மலையக மக்கள் அணி திரள வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள், இளைஞர்கள், கற்றவர்கள் புத்திஜீவிகள், வர்த்தகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த கோஷத்துக்கு மென்மேலும் வலுவூட்ட வேண்டும் அதன் மூலம் வெற்றி சாத்தியமாகும்.
அதுமட்டுமின்றி சமூக மேம்பாட்டுக்கு கல்விதான் ஒரே ஆயுதம். எனவே, கல்வித்துறையில் எமது சமூகம் மேம்பாடடைந்தால் அதுவே சமூகத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும். கல்வித்துறையில் மலையகம் இன்று குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. இதற்காக ஆசிரியர் சமூகம் செய்து வரும் அர்ப்பணிப்புடனான சேவை அளப்பரியது. இது இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும்.
தேயிலைத் தொழில் ஏற்கனவே வீழ்ச்சி பெறத்தொடங்கி விட்டது. அதனை மலையகத் தொழிற்சங்கத்தலைவர்களே பகிரங்கமாக மேடைகளில் கூறத்தொடங்கி விட்டனர். தேயிலைத்தொழிலுக்கான எதிர்கா லம் இல்லையென்பதையே தற்போதைய நிலைமைகள் கட்டியம் கூறுகின்றன. எனவே மாற்றுப்பொருளாதாரத்துறையில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய வருடத்தில் மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடை க்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஆண்டை சமூக மேம்பாட்டுக்கு உழைக்கும் ஆண்டாக கருத்திற்கொண்டு அதற்காக செயற்பட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...