முல்லோயா கோவிந்தன் இலங்கை வரலாற்றில் நீங்கா இடத்தில் இருப்பவர். அவரை மலையகத்தின் முதல் தியாகியாகத் தான் அறியப்பட்டிருக்கிறார். அவர் இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின் முதல் தியாகியும் கூட. கோவிந்தன் கொல்லப்பட்டு இந்த மாதம் ஜனவரி 10ஆம் திகதியோடு 75 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
முல்லோயாப் போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்றது கோவிந்தனின் கொலையோடுதான். இப்போராட்டம் இடதுசாரிகளைப்பற்றிய அச்சத்தை அய்ரோப்பியத் தோட்ட முதலாளிகள் மத்தியில் உருவாக்கியது. 1939 தோட்டப் பகுதிகளில் ஆங்காங்கு வேலை நிறுத்தம் இடம் பெற்று வந்தது. காலணித்துவத்தின் கீழ் தோட்ட நிர்வாகம் தோட்டத் தொழிலாளிகளை அடிமைகளாக அடக்கி வைத்திருந்தது. 1935 இல் லங்காசமசமாஜக் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் பின் நாடெங்கிலும் தொழிற்சங்க கிளைகளை ஆரம்பித்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டது. லங்கா சமசமாஜக்கட்சி 1939 டிசம்பர் 28 ஆம் திகதியன்று அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை மலையகத்தில் ஆரம்பித்தது. முல்லோயா தோட்டத்தில் பணிபுரிந்த 1200பேரில் 800 பேர் அந்த தொழிற்சங்கத்தில் அங்கம் வகித்தனர்.
போராட்டம் ஆரம்பம்
இப்படிப்பட்ட நிலையில்தான் முல்லோயா வேலைநிறுத்தப் போராட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு காரணிகள் தொழிற்பட்டிருந்த போதும் இதன் ஆரம்பம் ஒரு பாடசாலை ஆசிரியரான, ஜெகநாதன் விவகாரமே. தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜெகநாதன் கல்வியையும் அறிவையும் ஊட்டியது மட்டுமன்றி தொழிற்சங்கத்திலும் தொழிலாளர்களை இணைத்தார். இதனை பொறுக்காத தோட்டத் துரையான ஈ.ஸ்பாலிங் ஜெகநாதனையும் அவரது குடும்பத்தையும் இடமாற்றம் செய்தார்.
அப்போது மலையகமெங்கும் ஏற்கனவே ஆரம்பமாகியிருந்த சம்பள குறைப்பு, நலன்புரி குறைப்பு, வேலை அதிகரிப்பு, என்பவற்றை எதிர்த்து இடம்பெற்ற போராட்டங்களை அடக்கவென ஆங்கிலேய அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந்நிலையில் ல.ச.ச.க வின் தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதில் முன்னின்ற வேல்சாமியுடன் ஆசிரியரான ஜெகநாதனும் தன்னை ஈடுபடுத்தினார். தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அரிசி கொண்டு வந்து விநியோகித்தது. அதுவரை தோட்ட நிர்வாகமே அரிசியை இரட்டிப்பு விலைக்கு தொழிலாளர்களுக்கு விநியோகித்து வந்தது. இந்த சம்பவங்கள் எல்லாமே தோட்ட நிர்வாகத்துக்கு ஆத்திரத்தை ஊட்டிக்கொண்டே இருந்தது. அரிசி விநியோகிப்பவர்களை மிரட்டிப் பார்த்தனர். ஆனால் அதன் பின்னர் அரிசியை கொண்டு வந்து சேர்ப்பதற்கு தொழிலாளர்கள் காவல் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து வேல்சாமி கைது செய்யப்பட்டு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. ஜெகநாதனின் இடமாற்றத்துக்கு எதிரான போராட்டம் பின்னர் வேல்சாமியை விடுதலை செய்! என்ற கோரிக்கையும் சேர்ந்து கொண்டது. இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்த ஜெகனாதனுடன் பல தொழிலாளர்களும் சேர்ந்துகொண்டனர். அது பின்னர் 10 சதத்தால் சம்பள உயர்வு கோரிக்கையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கு முகமாக தோட்டத்தைச் சூழ இருந்த சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டுவந்து வேலையில் ஈடுபடுத்த நிர்வாகம் முயற்சித்தது. இதனை தொழிலாளர்கள் முறியடித்தனர். தோட்ட நிர்வாகியின் நண்பரான அரச சபையின் நுவரெலியா உறுப்பினர் ஈ.டபிள்யு.அபேகுணசேகர இதனை சிங்கள - தமிழ் வன்முறையாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரச்சாரம் செய்தார். ல.ச.ச.க தோட்டப்பகுதிகளில் சிறு சிறு கூட்டங்களை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் நடத்திப் போராட்டத்துக்கு ஆதரவு கோரியது. இப்போராட்டத்தில் ரொபர்ட் குணவர்தன, ரெஜி பெரேரோ , ரெஜி சேனநாயக்க, ஜே.சி. டி.கொத்தலாவல போன்ற தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டது. ஈ.டபிள்யு. அபேகுணசேகர இக்கூட்டங்களைத் தடை செய்யும்படி பொலிஸ் அதிகாரிகளுக்குத் தந்தி அனுப்பினார். அத் தந்திகளில் “ல.ச.ச.க வின் தலைமையில் அங்கு இடம்பெற்றுவரும் வேலை நிறுத்தத்தினால் இரத்தக்களரி இடம்பெற வாய்ப்புண்டு. அவர்களின் கூட்டம் பிரச்சாரப்படுத்தப்பட்டிருப்பதன் படி இரவு 7 மணிக்கு இடம்பெறாது. மாறாக 5 மணிக்கு இடம் பெற இருக்கிறது. புலனாய்வுப் பிரிவினரையும் பொலிஸாரையும் இந்த நேரத்துக்கு அனுப்புங்கள்” எனக்கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அக்கூட்டம் தடை செய்யப்பட்டாலும் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் நடந்தது. இதற்கிடையில் வேல்சாமி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முன்னைய கோரிக்கைகளோடு சம்பள உயர்வுக்கோரிக்கையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நிர்வாகம் பொலிஸ்காவல் நிலையம் ஒன்றை தொழிற்சாலையில் அமைத்துக் கொண்டது. வெளியிடங்களிலிருந்து சிங்களத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி ஒரு கலவரத்துக்கான முயற்சியில் ஈ..டபிள்யு.அபேகுணசேகர ஈடுபட்டார். தொழிலாளர்கள் இம்முயற்சிகளை எதிர்த்து நின்றனர்.
இப்போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிர்வாகம் இறுதியில் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது. 1939 ஜனவரி திகதியன்று நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டது. அதன்படி 16 சதம் சம்பள உயர்வு வழங்குவது, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழிவாங்காதிருப்பது, தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய தொழிற்சங்கத்தில் சேருவதற்கு உரிமையை உறுதி செய்வது என உடன்பாடு காணப்பட்டது. அதன்படி வேலை நிறுத்தமும் கைவிடத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இன்னொருபுறம் பிரச்சனை உக்கிரமடைந்து ஈ. டபிள்யு.அபேகுணசேகராவால் அன்றைய ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அவர் அளித்த அறிக்கையில் சமசமாஜிகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாகவும், அவர்களை உடனே கைது செய்யும் படியும் அதில் குறிப்பிட்டிருந்தார். இது போன்று அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிர்வாகத்துக்கு தெம்பைத் தந்ததுடன் பொலிஸாரும் தூண்டிவிடப்பட்டனர்.
ஜனவரி 10ஆம் திகதி 12.00 மணியளவில் தொழிலாளர்கள் மதிய உணவுக்காக வீடுகளை அடைந்து கொண்டிந்த நேரம், வேகமாக இரண்டு பொலிஸ் ஜீப்புகள் வந்து நின்றன. ஜீப்பிலிருந்து இறங்கிய பொலிஸார் கண்டவர்களையெல்லாம் திட்டிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளுடன் லயத்தை நோக்கிச் சென்ற பொலிசார் தோட்டத்தில் சங்கம் சேர்த்து குழப்புபவன் யாரடா ? எங்கே அந்தத் தலைவன் என்று கூறிக்கொண்டே எதிர்ப்பட்ட தொழிலாளர்களைத் தாக்கினர். அல்லோல கல்லோலப்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். அனைவரையும் விலத்திக் கொண்டு முன்னே சென்ற பெரியசாமி எனும் தொழிலாளி பொலிஸ் வாகனம் மோதி கொல்லப்பட்டார். ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் ஜீப்புகளுக்கு கல் எறிந்தனர்.
அவரையும் விலத்திக் கொண்டு கோவிந்தன் முன்னே வந்தார். பொலிஸாரும் தொழிலாளர்களும் நேருக்கு நேர் நின்று வாக்குவாதப்பட்டனர். சுரவீர எனும் பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு முன்னே வந்து கோவிந்தனை நோக்கிச் சுட்டான். கோவிந்தன் அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்து மடிந்தார். நடந்த கலவரத்தில் சிக்கிய பெரியசாமி படுகாயமுற்றார்.
ஐந்து தொழிலாளர்களைப் பிடித்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு பொலிஸார் பறந்தனர்.
விசாரணை
இந்த நிலைமை உக்கிரமடைந்த நிலையில் சம்பவம் குறித்து முறையாக விசாரணைக் கொமிஷன் நியமிக்கும்படி அரசாங்க சபையில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கொண்டுவந்த பிரேரணை எற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்தது. இவ் விசாரணைக் குழுவின் தலைவராக சி.குமாரசுவாமி நியமிக்கப்பட்டார்.கோவிந்தனின் மனைவி "பொட்டு" தரப்பில் வாதாடியவர் கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா. தோட்ட முதலாளிமார்களினதும் பொலிசாரினதும் கூட்டுக் கொலையை அவர் அம்பலப்படுத்தினார்.
இதற்கிடையில் இன்னுமொரு சம்பவம் இடம்பெற்றது. முல்லோயா சம்பவத்தின்போது கைது செய்யப்பட்ட 6 தொழிலாளர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது குறித்து விசாரணைக் கொமிஷன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கை நீக்கும்படி அரசாங்கசபை வரை கோரிக்கை சென்றது. பொலிஸார் இதற்கு இணங்காத நிலையில் நாடு முழுவதும் இதனை எதிர்த்து ல.ச.ச.க கூட்டம் நடத்தியது. லங்கா சமசமாஜ கட்சி, சிங்கள மகா சபை உள்ளிட்ட பல கட்சிகள் சேர்ந்து காலிமுகத் திடலிலும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிலும் கூட்டங்களை நடத்தின. அவற்றில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க உட்பட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றிருந்தனர்.
1940 இலேயே இந்த “ஜெக்சன் ஆணைக்குழு”வின் முடிவு அறிவிக்கப்பட்டாலும் கூட ஆணைக்குழுவின் படி சுரவீர துப்பாக்கிச் சூடு நடத்தியது நீதியானதில்லை என்று மட்டுமே தீர்ப்பாகியது. இந்தச் சம்பவத்துக்கு நிர்வாகத்தின் பங்களிப்பை விட ஈ.டபிள்யு.அபேகுணசேகரவின் பங்களிப்பே அதிகமானதென அந்த அறிக்கை கூறியது. நீதிமன்ற விசாரணை நடந்தபோதும் அந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கவில்லை. அது மட்டுமன்றி கொலைகார பொலிஸ் சுரவீரவுக்கு பதவி உயர்வுடன் டிக்கோயாவுக்கு பொலிஸ் நிலையத்துக்கு இடம்மாற்றப்பட்டது.
முல்லோயாப் போராட்டம் மலையகத்தில் ஊவா போன்ற பகுதிகளுக்கும் பரவியது. சமசமாஜ கட்சியை சேர்ந்த விலி ஜயதிலக்க, எட்மன்ட் சமரக்கொடி, வீ,சிற்றம்பலம் போன்றோர் இதனை தலைமை தாங்கினார். அது போல ஏனைய இடங்களுக்கும் துரிதமாகப் பரவியபோது பதுளையில் ஒரு தோட்டமொன்றில் அடக்குமுறைக்கு வந்திருந்த பொலிஸாரிடமிருந்து துப்பாக்கிகளை பறித்தெடுத்துவிட்டு பின்னர் நிராயுதபாணிகளாக்கி அனுப்பிவைத்தனர். மலையகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக இந்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஆனால் இது ஒரு சுதந்திரப் போராட்டத்தை தூண்டும் செயலென்று கணித்தது ஆங்கிலேய அரசு. எனவே இந்த போக்கை காரணமாக வைத்து ல.ச.ச.க 1940 ஜூன் 18 தடைசெய்யப்பட்டது. பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற தலைவர்கள் கண்டி போகம்பர சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சிறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு தப்பிச் சென்று தலைமறைவு அரசியலில் ஈடுபட்டனர். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் பங்கு பற்றினர். அங்கு கொல்வின் ஆர்.டி.சில்வா எஸ்.கோவிந்தன் என்கிற புனைப்பெயரில் பல கட்டுரைகளையும், பிரசுரங்களையும் வெளியிட்டார். கோவிந்தன் என்கிற பெயர் அந்தளவு இலங்கையின் இடதுசாரி போராட்ட அரசியலில் இரண்டறக் கலந்திருந்தது.
இப்படி முல்லோயாப் போராட்டத்துக்கு சரித்திரத்தில் முக்கிய இடம் உண்டு.கோவிந்தனில் தொடங்கிய உக்கிர அடக்குமுறை இன்றுவரை நீள்கிறது. அடிமைத்தனம் இன்னும் ஒழியவில்லை மலையகத்தில். அவ் அடிமைத் தளையை ஒழிக்க இன்று எத்தனையோ கோவிந்தன்கள் தன்னிச்சையாகவே தயாரானாலும் அதற்கு தலைமை கொடுக்க எந்த தலைமையும் மலையகத்தில் இல்லை. அதற்கு கடந்தகால வேலை நிறுத்தங்கள் நல்ல உதாரணங்கள்.
அந்த வகையில் கோவிந்தனின் தியாகம் என்றென்றும் மலையகத்தில் நிலைக்கும். தனது உயிரைப் பலி கொடுத்து உரிமைப் போராட்டத்தின் பலத்தை உலகறியச் செய்துவிட்டு தியாக வரலாற்றைத் தொடக்கி வைத்தவர் கோவிந்தன்.
கோவிந்தன் பற்ற வைத்த தீ பல அரசியல் விளைவுகளுக்கு வித்திட்டது. கோவிந்த சம்பவம் குறித்து அரசாங்க சபையில் நடந்த கடும் வாக்கு வாதத்தைத் தொடர்ந்து முழு டீ.எஸ்.சேனநாயக்க அமைச்சரவையும் 27.02.1940 அன்று ராஜினாமா செய்தது முக்கிய வரலாற்று நிகழ்வாகும். 27ஆம் திகதியிலிருந்து மார்ச் 14 வரை அமைச்சர்கள் எவரும் இன்றியே அரசாங்க சபை நடாத்தப்பட்டது. கோவிந்தன் தனது உயிரைத் தியாகம் செய்ததைத் தொடர்ந்து தொழிலாளர்களின் சம்பளம் 40 சதமாக இருந்ததை 16 சதத்தால் அதிகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின் தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு பெரிய அங்கீகாரமும் வரவேற்பும் கிடைத்தது. கோவிந்தன் சம்பவத்தின் பின்னர் சுயாட்சிக் கோரிக்கை வலுப்பெற்றது. அதன் விளைவாக சோல்பரி ஆணைக்குழுவுக்கு சுயாட்சிக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டது. இலங்கையின் வர்க்கப் போராட்டத்தில் உயிர் நீத்த முதலாவது தியாகியாக வரலாற்றில் கோவிந்தன் பதியப்பட்டுள்ளார். இன்றும் சிங்கள அரசியல் சக்திகள் மத்தியில் தவிர்க்க இயலாத நாயகனாக அறியப்பட்டுள்ளார்.
நன்றி - தினக்குரல் 11.01.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...