இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக ஊவா மாகாணசபைத் தேர்தலும் பூர்த்தியடைந்துள்ளது. 2013இல் சப்ரகமுவ, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் தொடங்கிய தேர்தல்கள் படிப்படியாக ஒன்பது மாகாணங்களிலும் நடத்தப்பட்டு, ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆறாவது மாகாண சபைத் தேர்தல் இலங்கையிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கும் பல்வேறு படிப்பினைகளையும், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த போதும், இங்கு கட்டுரையாசிரியர் மேற்படி கட்டுரையை இந்நாட்டின் நான்கு பிரதான தேசிய இனங்களில் ஒன்றான மலையக தமிழ் மக்கள் தொடர்படுத்தப்பட்ட வகையிலேயே எழுதுகின்றார்.
இறுதியாக நடத்தப்பட்ட ஊவா மாகாணசபைத் தேர்தல், இலங்கையில் தற்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தல் ஆகிய மகா தேர்தல்களை (மெகா தேர்தல்களை) நடத்துவதற்கான கருத்து கணிப்பாகவே நடத்தப்பட்டது. அதற்காக ஆளும் எதிர் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையக கட்சிகள் என பலரும் களத்தில் முனைப்பாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, தமது சக்தியை காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
இலங்கையின் தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளை எவ்விதம் முன்வைப்பது, அதற்கு இந்தத் தேர்தல்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆராய்வதற்கும், நாடாளுமன்ற தேர்தல்களில் பிரதான ஆளும், எதிர்க்கட்சி தேர்தல் விஞ்ஞாபனங்களில், மலையக தமிழ் மக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அளுத்தத்தை கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
அதுபோன்றே ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், மலையக தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்கு அளுத்தம் கொடுக்கும் வகையில,; மலையக தமிழ் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதான கட்சிகளுக்கு இப்போதிருந்த தமது அளுத்தத்தை கொடுக்க, அதற்கான நியாயப்படுத்தல் வேலைகளை தொடங்க வேண்டும். அரசியல் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மலையக தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளை; இனம் கண்டு அவற்றை அரசியல் கட்சிகளினதும், ஜனாதிபதி வேட்பாளர்களினதும,;; தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் பெறச் செய்வதோடு அதனை ஒரு கால அட்டவணையில் செயல்படுத்த தூண்ட வேண்டும்.
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினையை வென்றெடுக்க சகல தரப்பு ஆதரவு பெறப்படவேண்டும்.
கடந்த காலங்களில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தல்களும் எவ்விதம் நடந்தன, அதில் என்னென்ன கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன என்பது முக்கியமல்ல. இனி எதிர்வரும் காலங்களில் மலையக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சரியாக இனம் காணப்பட்டு, அவற்றை ஆளும் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் முன் வைத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அளுத்தம் கொடுக்க வேண்டும். அது போலவே வெகு விரைவில் நடக்கவிருக்கின்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கும் எதிர் கட்சிகளுக்கும், இடதுசாரி கட்சிகள் என பல தரப்பட்ட பகுதியினருக்கும் எமது அடிப்படை பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவை உள்ளடக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும்.
மேலும், எமது அடிப்படை பிரச்சினைகள் இனம்காணப்பட்டு அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்வைக்கப்படுகின்ற அதேவேளை, மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு இந்நாட்டில் இருக்கும் ஏனைய அடக்கியொடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தார்மீக ஆதரவை நாம் கோர வேண்டும். குறிப்பாக வட கிழக்கு தமிழ் மக்கள் எமது நெருங்கிய நண்பர்களாகவும் நேச சக்தியாகவும், கலாச்சார நீதியில் பல்வேறு ஒற்றுமைகளை கொண்டுள்ள படியாலும் அவர்களுடைய ஆதரவும், இந்நாட்டில் இன்னொரு தேசிய இனமாகிய முஸ்லிம் மக்களினதும் முஸ்லிம் கட்சிகளினதும் தார்மீக ஆதரவை பெற்று எமது அடிப்படை பிரச்சினைகள் முன்னெடுக்க வேண்டும்.
மேலும், பெரும்பான்மை தேசிய இனத்தவர்கள், அதாவது சிங்கள மக்கள் மத்தியில் எமது அடிப்படை பிரச்சினை தொடர்பாக தெளிவேற்படும் வகையில், சிங்கள இடதுசாரி அமைப்புகள், முற்போக்கான கொள்கையுடைய சிங்கள சிவில் அமைப்புகள், மனிதாபிமான அடிப்படையில் செயற்படும் அமைப்புக்கள், இவர்களை எமது நேச சக்தியாக கொண்டு எமது அடிப்படை பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும்.
மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நாம் ஏனைய சமூகங்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கு முன் மலையகத்தில் செயற்படும் மலையக கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், செல்வாக்கு பெற்ற தனி நபர்கள் மலையக மக்களின் பிரச்சினைகளை சரியாக அடையாளம் காண வேண்டும். தாம் அடையாளம் கண்ட பிரச்சினைகளில் மிக அத்தியாவசியமானதும், பிரதானமானதும் மிக மிக ஆரம்ப நிலையிலுள்ள பிரச்சினையை சரியாக அடையாளங் கண்டு, மலையகத்தில் சகல அமைப்புகளும், இந்த விடயத்தில் கட்சி, தொழிற்சங்க மற்றும் அமைப்பு ரீதியான பேதங்களை மறந்து ஒரு கால அட்டவணைக்குள் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்தப் பிரதான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் இக்கால கட்டத்தில் குரல் கொடுக்க வேண்டும். ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும்.
மலையக தமிழ் மக்களுக்கு பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றன. கீழே மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறிப்பிடப்படுகின்றன. இவ் அடிப்படைப் பிரச்சினைகளில் முன்னுரிமை பட்டியல் அல்லது பிரச்சினைகளை முன்னுரிமை படுத்துவதில் பலருக்கும் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையாக மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் என்று கணிப்பிடப்படுகின்றவைகளே அட்டவணைப் படுத்தப்படுகின்றது. இந்த அடிப்படை பிரச்சினைகளில் எல்லோரினதும் கவனத்தையும், முக்கியத்துவத்தையும், பெற்றுள்ளதும் மிக மிக அடிப்படையானதும், ஆரம்ப நிலையிலுள்ள பிரச்சினையும், இன்று மலையகத்தில் பல பகுதிகளிலும் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் பிரச்சினையாக, மலையக மக்களை லயன் முறையில் இருந்து மாற்றுவதும், தனித்தனி வீடுகள் அமைப்பதும்தான் முக்கிய கவனம் பெற்றுள்ளது. அந்த வகையில் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வரிசைப் படுத்தினால் அது சுருக்கமாக பின்வருமாறு அமையும்.
மலையக மக்களின் அடையாளம் காணப்பட்ட அடிப்படை பிரச்சினைகள்
- 200 வருட காலம் பழமை வாய்ந்ததும், வாழ்வதற்கு பொறுத்த மற்றதுமான காலனித்துவ சின்னமாய் விளங்கும் லயன்முறை இல்லாதொழிக்கபடலும், தனித் தனி வீடுகள் அமைத்தலும். இது இன்று சகலரினதும் மிக மிக அடிப்படையான முன்னுரிமையாக மாறியுள்ளது. இலங்கையின் சகல இன மக்களினதும் கண்டனத்திற்கும் கொஸ்லாந்தை மீறியபெத்த பிரச்சினையின் பின் சர்வதேச கவனத்தையும் ஈர்க்கும் முக்கியமான பிரச்சினையாகும் – லயன்முறை மாற்றம், காணி பிரச்சினை, தனிவீடு அமைத்தல்.
- மலையக மக்களில் கிட்டத்தட்ட முழுச் சமூகமுமே நில உரிமையற்று காணப்படுவதால் மலையக மக்களுக்கு குறைந்தது 10 பேர்ச் தொடக்கம் 20 பேர்ச் வரை காணி உரிமையாக்கப்பட வேண்டும் – காணிப் பிரச்சினை
- மலையகத்தின் குடியிருப்புகளும் அதனை சூழ உள்ள பகுதிகளும் உள்ளூராட்சி பராமரிப்புக்குள் வர வேண்டும். தோட்டப் பகுதிகளுக்குச் சேவை வழங்குவதற்கு தடையாக இருக்கும் பிரதேச சபை சட்டத்தின் 33ஆவது சரத்தும் அது தொடர்பான சட்ட சரத்துக்களும் நீக்கப்பட்டு, உள்ளூராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – அரச சேவைகளை பெறுவதில் காணப்படும் சட்டப் பிரச்சினை.
- மலையக மக்களுக்கு சேவை வழங்கும் வகையிலும், அவர்களுக்கு உள்ளூராட்சி நிறுவனங்களில் பங்கு பற்றி தீர்மானம் எடுக்கும் வகையிலும், மலையக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்களின் சனத்தொகை, வாக்குகளுக்கேற்ப உள்ளூராட்சி நிறுவனங்கள் மிக மிக குறைவாகக் காணப்படுகின்றமை. புதிய உள்ளூராட்சி நிறுவன உருவாக்கத்தின் தேவை காணப்படுகின்றமை. நுவரெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை பாரிய சனத்தொகை, வாக்காளர்களை கொண்டிருப்பதால் அவை தலா 03 பிரதேச சபைகளாக எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய பிரச்சினை – உள்ளூராட்சி நிறுவனங்கள் மிக மிக குறைவாக காணப்படும் பிரச்சினை.
- மலையக பெருந்தோட்ட மாவட்டங்களில் சனத் தொகை, இன விகிதாசார அடிப்படையில் கிராம அலுவலர் பிரிவு, பிரதேச செயலாளர் பிரிவு காணப்படாத பிரச்சினை – தமிழ் கிராம அலுவலர் நியமனம் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கும் பிரச்சினை.
- மலையக மக்களின் சனத்தொகை இன விகிதாசாரத்திற்கேற்ப நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினை – நாடாளுமன்ற பிரதிநிதித்துவப் பிரச்சினை.
- இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் மலையக தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளடக்கப்படாமை. இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் ஊடாக வட கிழக்கு தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தீர்வு வழங்கப்படும் போது மலையக தமிழ் மக்களுக்கு ஒரு அதிகார பகிர்வு அலகு வழங்கப்பட வேண்டும் – இனப்பிரச்சினை தீர்வில் மலையக மக்கள் பிரச்சினை உள்ளடக்கம்.
- மலையக பகுதிகளில் காணப்படும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், சமூக பொருளாதார பிரச்சினைகள், இப்பிரச்சினை கையாளுவதற்கான நிரந்தர அமைப்பு – மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தேவைப்பாடு தொடர்பான பிரச்சினை. மலையகத்திற்கான அபிவிருத்தி அதிகாரசபை
- மலையக கல்வியின் பின் தங்கிய நிலை, மலையகத்திற்கான தனியான கல்விப் பிரிவு தொடர்பான பிரச்சினை – தனியான கல்விக்கல்லூரி/ தொழிநுட்பக் கல்லூரி
- மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதில் காணப்படும் பிரச்சினை – மலையகத்திற்கான பல்கலைக்கழகம்
- மலையக இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பிரச்சினை மாற்று வருமான வாய்ப்புக்கள் – இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை.
- பெருந்தோட்ட பொருளாதாரத்தை காலத்திற்கேற்ப நிலைத்து நிற்க கூடிய இலாபமீட்டக் கூடியதாக மாற்றி அமைப்பதில் உள்ள பிரச்சினை – பெருந்தோட்ட பொருளாதாரத்தை பாதுகாத்தல் பிரச்சினை.
பிரதான தேர்தல்களில் மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், பேசு பொருளாக மாற வேண்டும்.
கடந்த 200 வருடங்களுக்கு மேல் மலையக தமிழ் மக்கள் பிரித்தானிய காலனித்துவ வாதிகளால் அவர்களை “தற்காலிகமாக தக்க வைப்பதற்கானது” என்று சொல்லப்பட்ட லயன் அறைகளிலேயே கடந்த இரு நூற்றாண்டுகளாக சுதந்திரத்திற்கு முன்பும், அதன் பிறகும் வந்த சகல அரசுகளும் முடக்கி வைத்துள்ளன. அது மாத்திரமன்றி, அவர்கள் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து ஒதுக்கப்பட்டு, தேசிய நீரோட்டத்தில் புறம் தள்ளப்பட்டு தொடர்ந்தும் இந்த லயன் அறைகளிலேயே தமது வாழ்நாளை கடத்த வேண்டியுள்ளது. மலையக தமிழ் மக்களில் ஏறத்தாள முழுச் சமூகமுமே காணி உரிமை அற்றவர்களாக வாழ்கின்றனர். இதில் மலையகத் தமிழ் மக்களின் மிக மிக அடிப்படையானதும், பிரதானமானதும் ஜீவாதார பிரச்சினையுமாக அமைவது வீடு, காணிப் பிரச்சினைதான். இரண்டு கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் மலையக மக்கள் தவிர்ந்த சிங்கள பெரும்பான்மை மக்களும், வட கிழக்கு தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் காணியுரிமையோடு கூடிய தனித்தனி வீடுகளிலேயே கௌரவமாக வாழ்கின்றனர். அவர்கள் ஏழைகளாகவோ, பணக்காரர்களாவோ இருந்தாலும் தற்தமது வசதிக்கேற்ப தனி வீடுகளில் காணியுரிமையுடன் கௌரவமாக வாழ்கின்றனர். எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தலும் எதிர்காலத்தில் நடைபெற எதிர்பார்க்கப்படும் பிரதான தேர்தலிலும் மலையக மக்களின் காணியும், வீடமைப்பு பிரச்சினைகளும் பிரதான தொனிப்பொருளாக, பேசும் பொருளாக மாற்றப்பட வேண்டும்.
இன்று இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் “நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு” சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் பிரதான கோரிக்கையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட மலையக மக்களில் 3 இலட்சம் குடும்பங்கள் அல்லது 10 இலட்சம் மக்கள் மாத்திரமே லயன் அறைகளில் வாழும் தலைவிதியை பெற்றுள்ளனர்.
அரசு, பயங்கரவாதம் தலைத்தூக்கும், அதற்காக ஜனாதிபதி முறை தொடர வேண்டுமென்று கூறினாலும், அவர்களுக்கு ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி முறை சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்துள்ளது என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த நிலையில், இது இறுதி ஜனாதிபதி முறைத்தேர்தலாக அமையலாம். எனவே, இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை முடிவுறுமானால் நிச்சயம் இந்த இறுதி ஜனாதிபதி வேட்பாளர்களின் காலத்திலாவது, இந்த வேட்பாளர்களுக்கு மலையக அரசியல் சக்திகளும், பொது மக்களும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது தனிப்பட்ட நலன்களை கோரிக்கையாக முன்வைக்காமல் மலையக தமிழ் மக்களின் காலம் காலம் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளையும் அதுவும், குறிப்பாக அந்த அடிப்படை பிரச்சினைகளில் ஜீவாதார பிரச்சினையாகிய காணிப் பிரச்சினையும் வீட்டுப்பிரச்சினையும் முன் நகர்த்தப்பட வேண்டும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் பல திடீர் திருப்பு முனைகளை கொண்டு வந்துள்ளது. மூன்று ஆண்டுகள் ஆளும் கட்யின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் தற்போதய ஜனாதிபதி அவர்களின் ஆட்சியையும் தற்போதுள்ள அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் பொது வேட்பாளராக தற்போதுள்ள ஆளும் கட்சியிலுள்ள மைதிரிபால சிறிசேன பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நேரத்தில் பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளூராட்சி உறுப்பினர்களும் எதிர்த்தரப்பிற்கு தாவி வருகின்றனர். மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதியமைச்சர்களும் கூட ஆளும் தரப்பிலிருந்து மாறியுள்ளனர். இந்த சூழல் மிக வித்தியாசமானது. எனவே, இந்த புதிய அரசியல் சூழல்கள் பயன்படுத்தப்பட வேண்டும். பல புதிய திருப்பங்கள் ஏற்படலாம்.
அடிப்படை பிரச்சினைகளில் வீடமைப்பும், காணியுரிமையும், ஏகபிரச்சினையாகவும், பிரதானமான கோரிக்கையாக மாறியுள்ளது.
அண்மையில் நடந்த கொஸ்லாந்தை மீறியாபெத்தை இயற்கை அனர்த்தத்தின் பிறகு மலையக மக்களில் குறிப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்களும் சிவில் அமைப்புக்களும் தமது தனி வீட்டுக் கோரிக்கைக்காகவும், காணியுரிமைக்காகவும் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த பல வருடங்களாக ஆட்சியிலிருந்த சகல அரசுகளும் இது விடயத்தில் பாராமுகமாகவும், அசட்டையாகவும், இருந்துள்ளப்படியால் மக்கள் தாமாகவே சுயமாக முன் வந்து போராடும் அளவுக்கு அவர்கள் மத்தியில் லயன் முறை தொடர்பான விழிப்புணர்வும், போராட்ட உணர்வும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மீரியாபெத்தை இயற்கை அனர்த்தத்தில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும், மலையக மக்களினதும், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களினதும், லயன் பிரச்சினை, வீடமைப்பு பிரச்சினை தொடர்பாக கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களையும், ஏனைய சமூகங்களையும், அரசையும் விரும்பியோ, விரும்பாமலோ மலையக மக்களின் காணிப் பிரச்சினையிலும் வீடமைப்பு பிரச்சினையிலும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய நிலையையும், அதனையே அவர்களது ஒரே இலக்காக மாற்றும் அளவுக்கு நிலைமை வளர்ச்சியடைகின்றது.
தற்போதைய ஜனாதிபதியும், இ.தொ.காவும், மாடி வீடு பற்றியே வலியுறுத்தி வந்தாலும் அவர்களுள் தவிர்க்க முடியாதபடி தனி வீட்டு கோரிக்கை பற்றி பேச வேண்டிய நிர்பந்தமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை எழுதப்படும் போது மீறியாபெத்தையில் தொண்டமானும், கோட்டாபயவும் தனிவீட்டுத் அடிக்கல் நாட்டுவதாக பொதுத் தொடர்பு சாதனங்களில் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி டயகம பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. எனவே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் ஆட்சி மாற்றம், நல்லாட்சியை கொண்டுவரவேண்டுமென்று எதிர்பார்ப்பது போல் மலையக தமிழ் மக்களின் வீடற்றோர். காணியற்றோர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொண்டு வரும் தேர்தலாக மாற்றப்படவேண்டும். மலையக மக்களின் காணி வீட்டுப் பிரச்சினை மலையகத்தில் ஜனாதிபதித் தேர்தலின் தொனிப் பொருளாக மாற வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதில் இ.தொ.காவும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்தவும் முன்வைக்கும் வீட்டுத் திட்டம் தெளிவாக நிராகரிக்கப்பட வேண்டும்.
மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று காலத்திற்கு காலம் பிரதான பிரச்சினையாக முன்வைக்கப்பட வேண்டும்.
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினை இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே அடையாளப்படுத்தப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வடிப்படை பிரச்சினைகளைப் பொறுத்தவரை அவை காலத்திற்கு காலம் இயற்கையாக மலையக மக்களால் தனித்தோ அல்லது இந்நாட்டின் ஏனைய சமூகங்களின் உதவியோடோ பிரதான பிரச்சினையாக ஒவ்வொரு காலத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளமை மலையக வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு புலப்படும்.
மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினையை, அதன் விளைவாக ஏற்பட்ட நாடாளுமன்ற, உள்ளூராட்சி அரசியல் பிரதிநிதித்துவ பிரச்சினை முற்று முழுதாக தீர்க்கப்படா விட்டாலும், 1947ஆம் ஆண்டு எமக்கிருந்து இல்லாமல் செய்யப்பட்டு, எட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது போலவே இன்று எமது மக்களின் லயன் வாழ்க்கை முறையும், காணியுரிமையும், தனி வீட்டுரிமையும், எமது மக்களின் பேசு பொருளாக அல்லது மறு வார்த்தையில் கூறுவதானால் இன்று காணியுரிமை, வீட்டுரிமை மலையக நிகழ்ச்சி நிரலில் பிரதான பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வழங்கப்படாதபோது, இது இடம்பெறுமா என்பதற்கு பெரிய ஒரு உத்தரவாதம் கிடையாது. ஆகவே, இன்று விரும்பியோ, விரும்பாமலோ இந்த ஜனாதிபதி தேர்தல் மலையக தமிழ் மக்களின் காணி வீட்டுரிமை பிரதான பிரச்சினையாக மாறியுள்ளது.
எமது வரலாற்றில் எவ்விதம் 5 தசாப்தங்கள் பிரஜா உரிமை பேசும் பொருளாக இருந்ததோ அவ்விதம் இல்லாமல் மலையக மக்களின் வீட்டுரிமை பிரச்சினை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆட்சி காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். இதற்காக இன்னொரு 50 வருடங்கள் மலையக சமூகம் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அடுத்து, எமது பிரதான பிரச்சினையாக எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டியது, மலையக மக்களை இந்த தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருக்கும் கிராம அலுவலர் பிரிவுகளை, பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்குவதாகும். இது தொடர்பாகவும் ஏற்கனவே குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, மலையக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் எதிர்காலத்தில் ஒரு கால அட்டவணையில் மலையகத்தில் சகல சக்திகளையும் ஒன்றுப்படுத்தி, ஏனைய தேசிய இனங்களின் உதவியோடும், இதனையும் அடுத்த பிரதான பிரச்சினையாக முன்னெடுக்க வேண்டும். இவ்விதமே நாம் அடையாளம் காட்டியுள்ள அடிப்படை பிரச்சினைகள் காலத்திற்கு காலம் பிரதான பிரச்சினையாக மாற்றப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் தீர்வு காணப்படும்.
அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அதிகாரச்சபை உருவாக்கப்பட வேண்டும் (Plantation Community Development Authority)
மலையக மக்களின் அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கொள்கை வகுப்பதற்கும், அக்கொள்கை அடிப்படையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு நிறுவனத்தின் தேவைப்பாடு அவசியமாகின்றது (Institutional Arrangements). குறிப்பாக மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினை, காணியுரிமை அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி கலாச்சார பிரச்சினைகள், வீதி, குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளை காலம் காலமாக தீர்க்கப்படாமல் தொடர்வதற்கு அனுமதிக்காமல், அதனை தீர்ப்பதற்கு ஒரு நிறுவன மையமான செயற்பாடு அவசியமாகின்றது. இந்த அடிப்படை பிரச்சினைகளை தொடர்ச்சியாக ஒரு கால அட்டவணையில் 5 ஆண்டு அல்லது பத்தாண்டு திட்டம் மூலம் தீர்த்துவைக்கலாம். இதனை நிறுவனமயப்படுத்தி அதனை திட்டமிட்டு செயற்படுத்த பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும் (Plantation Committee Development Authority).
இலங்கை அரசியலில் அல்லது எமது நாட்டில் இவ்விதமான அமைப்புக்கள் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு செயற்படுகின்றன. 200 வருடங்களுக்கு மேல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு விசேட வேலைத்திட்டம் தேவைப்படுகின்றது. இது இம்மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு Affirmative Action Positive Action நடவடிக்கைகளில் ஒன்றாக அமையும்.
இன்னும் இதற்கு நிகரான நிறுவனங்கள் இலங்கையில் விசேட தேவைகள் காரணமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை Southern Development Authority இது முழுக்க முழுக்க காலி மாத்தறை அம்பாந்தோட்டை மாவட்டங்களை விசேடமாக அபிவிருத்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இது போலவே பொருளாதார காரணங்களுக்காகவும், இலங்கையில் வரண்ட பகுதிகளில் நெற்பயிர்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கிலும்மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டது. இதுபோல பெருந்தோட்ட பகுதிகளை அன்டிய கிராமங்களையும் பெருந்தோட்ட பகுதி கிராமிய குடியேற்றங்களை உருவாக்கும் நோக்கில் ஜனவாசா கமிசன் நட்சா (Janawasa Commission, NATSHA) போன்றவை குறிப்பிடதக்கன. ஆகவே, இந்த வகையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அதிகாரசபையின் தேவை உணர்த்தப்படுகின்றது.
ஆகவே, மலையக மக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இவ்வகையான அதிகார சபைக்கு இந்நாட்டின் ஏனைய சமூகங்களும் அரசியல் சிவில் அமைப்புக்களும் தமது தார்மீக ஆதரவை வழங்க வேண்டும். மலையகத்தில் உள்ள சகல அரசியல் சிவில் அமைப்புக்களும் இதற்காக ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும். இதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை ஒரு மேடையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
இறுதியாக மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பல்வேறு அரசியல் சமூக அமைப்புகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படை பிரச்சினைகள் யாவும் ஒரே நேரத்தில் சமாந்திரமாக முன்வைப்பதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. எனவே, அடிப்படை பிரச்சினைகளில் ஒவ்வொரு பிரச்சினையை காலத்திற்கு காலம் பிரதானப்படுத்தி, அதனை தீர்க்கும் வகையில் யுக்திகள் வகுக்கப்படவேண்டும். அவ்விதமான அடிப்படை பிரச்சினைகளையும், பிரதான பிரச்சினைகளையும் நிறுவன ரிதியில் தீர்ப்பதற்கு மலையக பெருந்தோட்ட அதிகாரசபை போன்ற நாடாளுமன்றத்தில் சட்ட அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு புறம்பாக அமைச்சுக்கள் அமைப்பது அரசு மாறும் போது இல்லாமல் போய்விடும். இதற்கு சிறந்த உதாரணமாக தோட்டப்புற வீடமைப்பு அமைச்சு, தோட்டப்புற அடிப்படை வசதிகள் அமைச்சு போன்றவை சிறந்த உதாரணங்களாக காட்ட முடியும். ஆகவே, நிலையான ஒரு அபிவிருத்திக்காக ஒரு அமைப்பு இந்த மலையக சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
நன்றி - மாற்றம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...