நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த இருபத்தோராம்
நூற்றாண்டில் உலகம் விஞ்ஞான ரீதியாக பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. உலகின் எந்த மூலையிலும்
வாழும் ஒருவருடன் நினைத்த மாத்திரத்தே தொடர்புகொள்ளும் விதத்தில் மனிதனின் நாளாந்த
வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு
இன்டர் நெட் யுகம் என வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த நாட்டில் வாழும் தோட்டத் தொழிலாளர்களில் கணிசமான தொகையினரின்
வாழ்வில் காலத்திற்கேற்ற மாற்றம் ஏற்படவில்லை. பொருளாதார மேம்பாட்டிற்காக தமது
குருதியை வியர்வையாக்கி உழைத்து ஓடாக தேய்த்துக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு
நாட்டில் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகால வரலாறு உண்டு.
உண்மை இதுவாக இருந்தும்கூட தோட்டத்
தொழிலாளர்கள் ஆரம்ப காலந்தொட்டு இன்றுவரை பல தரப்பினர்களினாலும் ஏமாற்றப்பட்டும்
வஞ்சிக்கப்பட்டும் வருகின்றனர்.
இந்த நாட்டில் தோட்டத் தொழிலாளர்களை
பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கங்கள் உள்ளன. இருந்தும்கூட அந்த தொழிற்சங்கங்களினால்
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய வாழ்க்கை செலவுகளை சமாளிக்கக்கூடிய விதத்தில்
சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவோ அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு லயன் அறைகளை
விடுத்து தனித்தனி காணியில் தனித்தனி வீடுகளை அமைத்துக்கொடுத்து அவர்களை அந்த வீடுகளில்
குடியமரச் செய்ய உரிய நடவடிக்கைகளையோ எடுக்க முடியவில்லை.
ஆனால், துரதிஷ்டவசமாக நாட்டில் செயற்பட்டுவரும் எந்தவொரு தோட்டத் தொழிற்சங்கமும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்ல வாழ்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை போன்ற பொதுவான
பிரச்சினைகளிலாவது வேற்றுமைகளை புறந்தள்ளி ஒற்றுமையுடன் செயல்பட்டுள்ளனவா என்றால்
அதுவும் இல்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இரண்டு
வருடங்களுக்கு ஒரு தடவை தோட்டத்துரைமார் சம்மேளனத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்கும்
இடையில் கைச்சாத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுவருகிறது. கடந்த தடவை தோட்டத் தொழிலாளர்களின்
சம்பளம் தோட்டத் தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் பேசப்பட்டு, தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விடயமாக
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தும் தொழிற்சங்கங்கள் ஏனைய
தோட்டத் தொழிற்சங்கங்களுடனும், தோட்டத் தொழிலாளர்களுடனும் சம்பளம் விடயமாக கலந்துரையாடுவதில்லை.
ஆனால், இந்த மலையக கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களின் பொது பிரச்சினைகளிலும்
ஒருமித்து செயல்பட்டதாக வரலாறு இல்லை. இந்த மலையக கட்சிகளும் சுயநலம், சுக போகம் ஆகிய இரண்டையும் முன்நிறுத்தியே
செயல்பட்டுவந்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2014 ஆண்டிற்கான
வரவு – செலவு திட்டத்தை
சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு 50,000
மாடி வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என அறிவித்தார். ஆனால், அந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கும்
மேலான காலம் கடந்துள்ளபோதிலும் அந்த திட்டத்திற்காக அவர் ஒரு சதமேனும் ஒதுக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்களில் அநேகமானோர்
மேட்டு நிலங்களில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மாடி வீட்டுதிட்டம் பயனளிக்காது.
இந்திய அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு
4,000 தனித்தனி வீடுகள் அமைக்க 510 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் அந்த வீடமைப்பு
திட்டம் இதுநாள்வரை அமுல் நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தோட்டங்களில் 37 ஆயிரம் ஏக்கர் தரிசுக்
காணி இருப்பதாக தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதிக்கு அறிவித்து
இரு வருடங்களுக்கு மேலாகியும், அந்த காணிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட நடவடிக்கை
எடுக்கப்படவில்லை.
எனவே, இவ்வாறு பல பிரச்சினை தோட்டத் தொழிலாளர்களுக்கு இருக்கின்றன. அரசாங்கத்துடன்
ஒட்டி உறவாடி, அமைச்சுப்
பகுதிகளில் பெற்றுக்கொண்டுள்ள மலையக தொழிற்சங்கத் தலைமைகள் இந்த விடயங்கள் பற்றி
பேசாமல் வாய்மூடி மெளனம் சாதிக்கின்றன. தொழிலாளருக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்க
அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறும் இந்தக் கட்சிகள், மலையக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வ ராததன்
காரணம் என்ன? தங்களது
சுயந லத்துக்காக அரசு வழங்கும் சலுகைகளுக் காக தொழிலாளர்களின் உரிமைகளை பெற்
றுக்கொடுக்க முன்வராத இந்த மலையகத் தலைமைகளுக்கு மனசாட்சி இல்லையா என்றே கேட்கத்
தோன்றுகிறது.
எனவே, இந்த தொழிற்சங்க முறையை மாற்றியமைக்க நாம் திடசங்கற்பம்கொள்ள
வேண்டும். அதன்மூலமே காலம்காலமாக தொழிற்சங்கத் தலைமைகளால் அடி மைகளாக நடத்தப்படும்
தோட்டத் தொழி லாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்ப டும் என்பதே உண்மை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...