Headlines News :
முகப்பு » » புதிய அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா? - ஏ.டி. குரு

புதிய அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா? - ஏ.டி. குரு


அதிகாரப் போட்டியின் உச்சமாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் புதிய ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 9 ஆம் திகதி அதிகாலை வேளையிலே ஆட்சி மாற்றத்திற்கு வழி சமைத்து அலரி மாளிகையிலிருந்து வெளியேறியிருந்தார்.

நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திருமதி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் ஒரு பிரிவினர் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் ஒருமித்து எடுத்த தீர்க்கமான மாற்று முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மலையக மக்கள் தொழிற்சங்க அரசியல் தலைவர்களின் வழிகாட்டலில் அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நம்பியே இத்தனை காலமும் செயற்பட்டிருந்தனர். எனினும் கடந்த ஒக்டோபர் மாதம் இறுதிப் பகுதியில் கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு அனர்த்தம், காவு கொள்ளப்பட்ட உயிர்கள், அதனைத் தொடர்ந்து மலையகமெங்கும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், தீ பரவல் விபத்துக்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி அவர்கள் பட்ட துன்பங்கள் இம் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

பொது எதிரணியில் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கிய தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணியின் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, முன்னாள் இ.தொ.கா. மாகாண சபை உறுப்பினர் உதயகுமார், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் எனப் பலரும் மக்கள் தீர்ப்பால் மகிழ்ந்து போயுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை பொறுப்பாளர் வீ. இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதம் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

மிக நீண்ட காலமாக இ.தொ.கா. வின் வசமிருந்த பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இத் தேர்தலின் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வசமாகியுள்ளது. மலையக அரசியல் கட்சிகள் தோட்டப் புற அபிவிருத்தி குறித்து அதிகம் பேசியே அரசியல் செய்யும் நடைமுறையை கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்துள்ளன. இதற்கான மூலம் கட்சி தாவலுக்கான நியாயமான கற்பித்தல் என்பதை எம் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

உதயமாகியுள்ள மைத்திரி யுகத்தில் 100 நாள் வேலைத்திட்டமே முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது மலையக மக்களைப் பொறுத்தளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு, தீர்வு காணப்படாமல் உள்ள காணி வீட்டுப் பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், போக்குவரத்திற்கான பாதைகளை சீர் செய்தல் என தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறையவே உள்ளன.

கடந்த 3 மாதங்களாக நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக தொடர் லயன் குடியிருப்புக்களில் பெரும்பாலானவை மலையக மக்கள் செறிந்து வாழும் அனைத்து மாகாணங்களிலும் அனர்த்த அபாயத்தை சந்தித்துள்ளன. தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினரின் மண் பரிசோதனைக்குப் பின்னர் அதிகளவான மக்கள் மீண்டும் அதே குடியிருப்புக்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் குடியிருப்புக்களில் வெடிப்பு, நில தாழிறக்கம் போன்ற அச்சங்களுடனே அவர்கள் குடியிருப்புக்களில் நாட்களை கழிக்கின்றனர்.

தேர்தல் கால வாக்குறுதியான 7 பேர்ச் காணியுடனான தனி வீடுகளை பெற்றுக்கொடுக்க பொது வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் மலையக அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி இவ் வீடமைப்பு திட்டம் தொடர்பான முறையான கொள்கை, திட்டத்தை வகுத்து செயற்பட வேண்டும்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் மலையகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு அதிகரித்து காணப்பட்டதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சமூகத்தின் நிலைமாற்றத்திற்காக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகின்றது.

மலையகத்திற்கு இம்முறை கல்வி இராஜாங்க அமைச்சும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சும் கிட்டியுள்ளன.
மலையக சமூகம் கல்வியில் இன்னும் நீண்ட தூர அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டுள்ளது. புதிய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தனது அமைச்சு மூலம் மலையக கல்வி அபிவிருத்தி குறித்து விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டு புதிய திட்டமிடல்களுடன் செயற்பட முன்வருவார் என புத்தி ஜீவிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு மூலம் மலையகத்தில் புதிய கைத்தொழில் முயற்சிகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மலையக இளைஞர், யுவதிகளை புதிய கைத்தொழில் முயற்சிகளில் உள்ளீர்க்க வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

20 வருட காலம் காத்திருந்து பெற்ற தேர்தல் வெற்றி மற்றும் ஆட்சி மாற்றம் என்பதால் சமூகத்திற்கு அத்தியாவசியமான பல நல்ல விடயங்களை இவ்வரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என பலரும் எதிர் பார்க்கின்றனர்.

எது எப்படியிருப்பினும் மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள பல தோட்டங்களில் போக்குவரத்து பாதை, பொழுது போக்கு, சனசமூக நிலையம், உட்கட்டமைப்பு அபிவிரு த்தி என தீர்க்கப்படாத பல இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை புதிய அரசாங்கத்துடன் இணைந்துள்ள மலையக தலைவர்கள் எடுப் பார்கள் என நம்பு வோமாக.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates