புதிய ஆட்சிமாற்றம் தமிழர்களின் எதிர்கால அரசியலில் செலுத்தப் போகும் பாத்திரம் குறித்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அரசியல் களத்தில் 13வது திருத்தச்சட்டம் குறித்த வாதப்பிரதிவாதங்கள் தலைதூக்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டதிற்கூடாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்தை உறுதிசெய்வது இந்தியாவின் தலையீட்டுக்கான நோக்கங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் நிலைமைகள் இந்தியாவின் இறைமைக்கும் வல்லாதிக்கத்துக்கும் அவமானமாகவே இருந்தன. குறிப்பாக எதிர்பார்த்தபடி சகல இயக்கங்களையும் சரிகட்ட முடியாமல் போனமை, விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் கண்ட இழப்புகள், இந்திய அமைதி காக்கும் படை நற்பெயரை இழந்தமை, அன்றைய ஜனாதிபதி பிரேமதாச இந்தியப்படைகள் வெளியேறவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தமை போன்றவற்றை முக்கியமாக குறிப்பிடலாம். அது போலவே வரும்போது கொண்டுவந்த மாகாணசபையை 1990இல் போகும்போது இரண்டே வருடங்களில் அந்த மாகாணசபை கலைத்துவிட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இத்தனைக்கும் மேல் அடுத்த வருடமே தமது பிரதமர் ராஜீவ் காந்தியை இழக்கவும் நேரிட்டது.
இத்தனை நிகழ்வுகளும் இந்தியாவுக்கு அரசியல் பிரச்சினையாகவும், ராஜதந்திர பிரச்சினையாகவும் மாத்திரம் இருக்கவில்லை. அது ஒரு மானப் பிரச்சினையாகவும் தொடர்ந்து இருந்துகொண்டே வந்தது. இதற்காக எந்த விலையை கொடுத்தும் சரிசெய்வதற்கு எத்தனையோ முயற்சிகளையும் மேற்கொண்டது. விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் அழிப்பதும், தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வை அமுல்படுத்தி காட்டுவதும் இந்தியாவின் முன் இருந்த பணிகளாக இருந்தன.
ஆனால் தாம் அறிமுகப்படுத்திய மாகாணசபையை அமுல்படுத்துவது என்பதை விட புலிகளை இல்லாமல் செய்வது நிகழ்ச்சிநிரலின் முதன்மை இடத்திலேயே இருந்தது. ராஜீவ் காந்தியை இராணுவ அணிவகுப்பின் போது தாக்கியும், தமது படையை விரட்டிய செயலாலும் தென்னிலங்கை அரசாங்கத்தின் மீது இருந்த வெறுப்பு கூட இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு; புலிகளை அழிக்கும் விடயத்தில் இலங்கை அரசுடன் கைகோர்த்தது இந்தியா. புலிகளை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கான முதல் அடியை புலிகளை தடை செய்ததன் மூலம் எடுத்து வைத்தது. பின்னர் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு உலக அளவில் 30 நாடுகள் புலிகளை தடை செய்தன. ஆக அதன் மூலம் புலிகளின் அழிவுக்கான அத்திவாரத்தை இட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வின் பேரில் தென்னாசிய பிராந்தியத்துக்குள் அந்நிய நாடுகளின் ஊடுருவலை சகிக்கமுடியாத நிலையில் காலப்போக்கில் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், தீர்வு யோசனைகளிலும் தமது பாத்திரத்தையும் வகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியா. பேட்டையின் தலைவனாக தமது அனுசரணையின்றி இனப்பிரச்சினைக்கு விமோசனமில்லை என்கிற நிலையை உறுதிப்படுத்திக்கொண்டது. காலப்போக்கில் அரசு-புலிகள் பேச்சுவார்த்தையும் முறிந்தது. சமாதானத்தில் தமது பாத்திரம் எப்படியோ அதைப் போலவே போரிலும் தமது முழு ஆதரவையும், அனுசரணையையும் வழங்கி ஈற்றில் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது இந்தியா. விடுதலைப்புலிகளும் தோற்கடிக்கப்பட்டனர், பிரபாகரனும் கொல்லப்பட்டார்.
சரி, இனி அதன் அடுத்த இலக்கான தமது மாகாண சபை முறையை நிர்ப்பந்திப்பது என்கிற இடத்தை வந்தடைந்தது இந்தியா. அந்த இலக்கில் தொடர்ச்சியான நிர்ப்பந்தத்தை சகல வழிகளும் செய்துகொண்டிருந்ததை அனைவரும் அறிவோம். தற்போது இந்திய ஆட்சி மாற்றமும் இலங்கையின் ஆட்சிமாற்றமும் அதற்கான சாதகமான சூழலை திறந்துவிட்டிருக்கிறது.
இரு நாட்டு சமிக்ஞை
தற்போதைய பிரதமர் ரணிலும், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் மாகாண சபை அமுல்படுத்துவதில் தமிழர்களுக்கு சாதகமான நிலையில் இருப்பவர்கள். அதன் எல்லை எது என்பது தனியாக ஆராயப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் கடந்த மகிந்த ஆட்சியை விட சாதகமானவர்கள் என்று கொள்ளலாம். அதை விட தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மங்கள சமரவீரவுடன் நீண்டகாலமாக தனிப்பட்ட நட்பை கொண்டிருப்பவர். மங்கள சமரவீர பதவியேற்ற அன்றே சுஷ்மா மங்களவுக்கு தனது டுவீட் மூலம் “வாழ்த்துக்கள் என் நண்பனே!” என வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மங்கள சமரவீர 18 ஆம் திகதி தனது முதல் விஜயமாக இந்தியாவுக்கு விஜயம் செய்வதை அறிவித்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் செயித் அக்பருதீன் அன்றே டுவீட் மூலம் அறிவித்திருந்தார்.
அதன்படி தனது முதல் விஜயமாக இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட மங்கள இந்தியப் பிரதமர் மோடியுடனும், வெளிவிகார அமைச்சர் சுஷ்மாவுடனும் நீண்டநேர பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் 13வது திருத்தச்சட்டம், மற்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குறைப்பது, தமிழ் நாட்டிலுள்ள அகதிமுகாம்களின் வாழ்பவர்களை மீள இலங்கையில் குடியேற்றுவது உள்ளிட்ட விடயங்கள் உரையாடப்பட்டுள்ளன. இந்த சுமுகமான உரையாடலின் பின்னர் இலங்கைக்கு வரும்படி பிதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இலங்கை விஜயம் செய்யவிருப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அந்த விஜயத்தின் போது 13வது திருத்த சட்டம் குறித்து அழுத்தம் தெரிவிக்கவிருக்கிறார் என்று இப்போதே திவிய்ன பத்திரிகை உள்ளிட்ட பல சிங்கள ஊடகங்ககள் சிங்கள மக்களுக்கு பீதியை கிளப்பத் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் 23 அன்று டில்லியில் பிரதமர் மோடியை இரா.சம்பந்தன் சந்தித்து உரையாடிவிட்டு வந்ததன் பின்னர் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று அறிவித்தார் பிதமர் மோடி. அந்த அறிவித்தலை ஜேவிபி உள்ளிட்ட ஏனைய இனவாத சக்திகள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதோடு மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய NDTV தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஒற்றையாட்சிக்கு குந்தகமில்லாமல் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். பொலிஸ் அதிகாரம் குறித்து உள்ள அச்சத்தை நீக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார். 13வது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா தமிழர்களுக்கு ஒரு பலம். அதேவேளை மீண்டும் உள்நாட்டில் எதிர்நோக்கப் போகும் சவால்கள் ஏராளம்.
புதிய நெருக்கடிகள்
மகிந்த அணி கூட; நடந்துமுடிந்த தேர்தலில் மைத்ரிபால அணிக்கு எதிராக பயன்படுத்திய முக்கிய ஆயுதமே தமிழர்களுக்கு நாட்டை தாரை வார்க்கப் போகிறார்கள் என்பதே. இராணுவத்தை வெளியேற்றப்போகிறார்கள், புலிகள் பலமடையப்போகிறார்கள், தமிழீழம் அமைக்கப்போகிறார்கள் போன்ற பீதிகளை அவர்கள் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தார்கள்.
இப்போதும் கூட புதிய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை அப்படித்தான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகிறது மகிந்த அணி. இன்னும் ஒருசில மாதங்களில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள வாக்கு வங்கியை இலக்காக வைத்து அவர்கள் இந்த பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வாய்ப்புகள் அதிகம்.
மகிந்த தரப்பில் இருக்கும் விமல் வீரவங்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில போன்றோர் இப்படியான இனவாத பிரசாரத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கிறார்கள். கூடவே பொதுபல சேனா, ராவணா பலய போன்ற இனவாத அமைப்புகளும், நளின் டி சில்வா, தயான் ஜயதிலக்க போன்ற “சிங்கள புத்திஜீவிகளும்” களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.
மங்கள சமவீரவின் இந்திய விஜயம் குறித்து ஜனவரி 22ஆம் திகதி தயான் ஜயதிலக்க எழுதியிருந்த கட்டுரையொன்றில் “மாகாணசபையை கொடுக்கப்போகிறார்கள், இராணுவத்தை வெளியேற்றப் போகிறார்கள், திம்பு யோசனையை அடிபடையாக வைத்து சந்திரிகாவின் தீர்வுப்பொதியை கொண்டுவரப் போகிறார்கள். இதற்காகவா இத்தனை வருட கால போரை நடத்தி முடித்தோம், இதற்காகவா இத்தனை இராணுவத்தை பலிகொடுத்தோம்?” என்று இனவாதிகளின் வழமையான பிரச்சார மொழியை பயன்படுத்தியிருந்தார்.
மகிந்தவின் அரசாங்கத்தில் தான் 13வது திருத்தச்சட்ட யோசனை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதை கவத்தில் கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு பிரிப்பு, கண்துடைப்புக்காக மாகாணசபைத் தேர்தலை வடக்கு கிழக்கில் நடத்தியது, இராணுவ அதிகாரிகளை ஆளுநராக நியமித்தது, மாகாண சபை இயங்க முடியாதபடி ஆளுனருக்கூடாக முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டேயிருந்தது போன்றவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாண சபை தேர்தலோ, ஆட்சியோ நடக்கக்கூடாது என்பது குறித்து மகிந்தவின் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து வந்த அழுத்தங்களை விட அரசாங்கத்துக்குள்ளேயே இருந்த நிர்பந்தங்கள் தான் அதிகம். ஆனாலும் சர்வதேசத்துக்கு பதில் சொல்வதற்காக மகிந்தவுக்கு கிடைத்த கண்துடைப்பு உத்தி இதுவொன்றாகத் தான் இருந்தது. எனவே தான் ஆட்சியை கொடுத்து விட்டு அதிகாரத்தை பறித்து பாக்கெட்டில் வைத்துகொள்ளும் உத்தியைக் கையாண்டு வந்தது.
நல்லாட்சி அலை
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால தரப்பு விஞ்ஞாபனத்திலேயோ, 100 நாள் வேலைத்திட்டதிலேயோ 13வது திருத்தச் சட்டம் குறித்தோ அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ ஒன்றும் கூறவில்லை. ஆனால் மாறாக ஒற்றையாட்சிக்கு உத்தரவாதம் என்று அறிவித்தது. அது சிங்கள வாக்குகளின் மீதிருந்த அச்சத்தினாலேயே அப்படி கூறியது. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழர் வாக்கு வங்கியின் பலத்தை மீண்டும் நிரூபித்தது.
இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமை என்னவென்றால் “நல்லாட்சி அலை” நாளுக்கு நாள் வாக்கு வங்கியை பல கோணங்களிலும் பலப்படுத்திக்கொண்டே போகிறது. இந்த போக்கு சிங்கள வாக்கு வங்கியை இலக்காக வைத்து இனப்பிரச்சினை தீர்வை இனவாத தரப்புக்கு விட்டுகொடுக்கும் நிலை உருவாகுமா என்கிற அச்சம் தவிர்க்க முடியாதது. “நல்லாட்சி” அணியிலுள்ள சிங்கள பேரினவாத அணிகளின் அமைதி மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தற்போதைய இலங்கையின் அரசியல் நிகழ்ச்சிநிரலானது இலங்கைக்கு வெளியில் உள்ள சக்திகளாலேயே நகர்த்தப்படுகிறது என்கிற புரிதலின் படி, தற்போதைக்கு அது 13வது திருத்த சட்டத்துக்கு சாதகமானது என்று எடுத்துக்கொள்ளலாம்.
தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமை கோரிக்கைகளை சிறிதாக்கி வெறும் சலுகை கோரிக்கைகளாகவும், அன்றாட அத்தியாவசிய தேவைகளோடு குறுக்கி விட்டுள்ளது கடந்தகால போக்கு. பிரதான நிகழ்ச்சிநிரலை பின்தள்ளிவிட்டு, “லிகிதரை நியமிக்க கவர்னர் கடிதம் கொடுக்கிறார் இல்லை” என்பது போன்ற பிரச்சினைகளுக்குள் கவனக்குவிப்பை செலுத்த தள்ளப்பட்டிருக்கிறது மாகாணசபை அரசியல்.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் கடந்த கால தமிழீழ கோரிக்கை, தாயக கோட்பாடு, சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற பதங்கள் சமகால தமிழர் அரசியல் களத்தில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றாக மாறியிருப்பது தான். அவை ஆபத்து மிக்க பதங்களாகவும், இனவாதிகளை சீண்டி விடுமென்றும், இணக்க அரசியலுக்கு இடைஞ்சலாகிவிடும் என்றும் ஒரு சுயதணிக்கை நிலை வளர்ந்துவிட்டிருக்கிறது. இது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் கைதேர்ந்த வெற்றி என்றே கூற வேண்டும். இறுதியில் எப்போதோ நிராகரித்த 13வது திருத்த சட்டத்தை இப்போது தாருங்கள் என்று பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழர் அரசியல்.
சிங்கள பௌத்தர்களின் பொதுப்புத்தி தமிழர்களுக்கு எதிரான உளவியலாக கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறுவனமயப்பட்டுள்ளது. அரச அனுசரணையுடன் அது நடந்தேறியுள்ளது. இன்று அது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கூட இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. இன்று அரசே அதனை அனுசரித்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிறுவனமயப்பட்ட இந்த அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதென்பது சடுதியாக மாற்றக்கூடியதல்ல. நீண்ட கால வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அது சாத்தியமாகும். எந்த “நல்லாட்சியாலும்” இந்த நாட்டை இனவாதத்திலிருந்து குறுகிய காலத்தில் மீட்க முடியாது. இந்த புதிய “தேசிய அரசாங்கம்” அதற்கான ஒரு முன்னுதாரணமாக இருக்குமா அல்லது மைத்திரிபால அரசாங்கம் “மகிந்தபால” அரசாங்கமாக ஆகிவிடுமா என்பதே அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...