Headlines News :
முகப்பு » » தோட்டத்தொழிலாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படவேண்டும்

தோட்டத்தொழிலாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படவேண்டும்

முன்னாள் பிரதி கல்வியமைச்சரும் பதுளை ஐ.தே.க. அமைப்பாளருமான எம்.சச்சிதானந்தன் கூறுகிறார்

தோட்டத்தொழிலாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இதில் அரசு தலையிடுவதுடன் தொழிலமைச்சு, நிதியமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் என்பன இணைந்து நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை தீர்மானிக்க வேண்டும். அதன் மூலம் தொழிலாளருக்கு நன்மை கிடைக்கும் என்கிறார் முன்னாள் பிரதிக்கல்வியமைச்சரும் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான எம். சச்சிதானந்தன்.

அவர் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு

கேள்வி: மலையக மக்கள் ஒன்று திரண்டு புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த தன் மூலம் தெரிவித்திருக்கும் செய்தி என்ன?

பதில்: மலையக மக்கள் தேசிய ரீதியில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதை இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் தேசிய அரசியலில் மலையக மக்களும் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர். தொடர்ந்தும் பங்கு வகிப்பார்கள். எனவே மலையக மக்களை இனியும் எவரும் குறைவாக எடை போட்டு விடக்கூடாது. மலையக மக்களை ஏளனமாகப் பேசியவர்கள் இன்று வாயடைத்துப் போயிருக்கின்றனர். அரசியலில் மலையக மக்கள் தெளிவு பெற்றுள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும். அந்த வகையில் மலையக மக்களை ஏமாற்ற முனைந்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கின்றனர்.

மலையக மக்களின் நல்லெண்ணத்தையும், விருப்பத்தையும், தேவையையும் நன்கு புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பார் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதேபோன்று ஐ.தே.க. தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டை எப்போதுமே கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மலையக மக்களுக்கு இதன்மூலம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி: ஆட்சி மாற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது ஊவா மாகாண சபைத் தேர்தலென்று கூறப்படுகிறது. உண்மையா?

பதில்: ஆம், உண்மைதான்! ஒரு இக்கட்டான நேரத்தில்தான் ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலின் அடிப்படையிலேயே அடுத்ததாக நடைபெறவுள்ளது ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத்தேர்தலா என்பது தீர்மானிக்கப்படவிருந்ததாக அரசாங்கம் சார்பிலான தலைவர்கள் கூறினர். எனவே, ஊவா மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தேவை, அவசியம் அனைத்தும் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு இருந்தது. அதனால் அந்த அரசின் அமைச்சர்கள், பிரதியமைச்சர், எம்.பி. க்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் ஊவா மாகாணத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். அரச அதிகாரிகள் மற்றும் அரச வளங்கள் என்பன பிரசார நடவடிக்கைகளுக்கு மிகவும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன.

அதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு சவாலாக அமைந்தது. நாட்டின் ஆட்சி மாற்றம் ஊவா மாகாண சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற குறிக்கோள் எமது ஐ.தே.க. தலைவர்கள் முதல் அனைவரிடமும் இருந்தது. அதனடிப்படையில் ஐ.தே.க. தலைவர்கள் அனைவரும் இணைந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். பல பிரச்சினைகள், இடையூறுகளை எதிர்கொண்டோம். இந்த நிலையில் தேர்தல் நடைபெற்றபோது ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பில் 19 உறுப்பினர்களும், எமது கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஜே.வி.பி. தரப்பில் இருவரும் தெரிவு செய்யப்பட்டனர். எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பு மாகாண ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலை விட இம்முறை எமது கட்சி அதிக உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது. இதுவே எமக்கு பெரிய வெற்றியாகவும், மக்கள் மனதில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அந்த வெற்றியே தற்போதைய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது. ஐ.ம.சு.கூ. ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைந்ததுடன் எமது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் உள்ளது? வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் வறுமை நிலையிலேயே உள்ளனர். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. உணவுப்பொருட்களின் விலையுயர்வு என்பவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக ஊவா மாகாணத்தில் 72 வீதமான தோட்டப்புற மக்கள் மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர். மாகாணத்திலுள்ள பல தோட்டங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர் தொழில்களை இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக தொழிற்சங்கவாதிகளின் அடாவடித்தனமும், சாராய வியாபாரிகளின் அட்டகாசமும் தொடர்கின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விரக்தியில் இருக்கின்றனர். இதில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சிங்கள மக்களும்கூட அவ்வாறானதொரு நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலையிலேயே புதிய அரசு மலையக மக்களினதும், ஏனைய மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வந்துள்ளது.

கேள்வி: தோட்டத் தொழிலாளரின் காணி மற்றும் தனி வீட்டுப் பிரச்சினை இன்று முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. இதுபற்றி புதிய அரசு எவ்வாறான நடவடிக்கை எடுக்கவுள்ளது?

பதில்: இந்த விடயம் தொடர்பில் கூடிய கவனம் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக 'மைத்திரியின் 100 நாள் ஆட்சியின் வேலைத்திட்டத்தில்' தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 74ஆவது விடயமாக, மலையக மக்களை தற்போதைய லயன் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து காணி உரிமையுடன்கூடிய சகல வசதிகளும் கொண்ட நவீன மயமான கிராமிய சூழலில் தனி வீடுகளும் பொது வசதிகளும் அமைத்துக்கொடுப்பதுடன் இத்திட்டம் முழுமையாக தோட்ட நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பிரதேச சபைகளின் மூலம் சேவைகளைப் பெறக் கூடியவாறு உருவாக்கிக் கொடுத்தல் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே காணியுடனான தனி வீடு கிடைக்குமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த வீடமைப்புத்திட்டம் நிறைவேற்றுப்படுவதற்கு அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர், மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் இணைந்து ஆக்கபூர்வமாக செயற்படுவார்கள்.

இதற்கு முன்னர் இருந்த அரசோ அல்லது அருகிலிருந்த மலையக அமைச்சர்களோ இதய சுத்தியுடன் செயற்படாத காரணத்தினாலேயே அவர்கள் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். எனவே எமது அரசு இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.

கேள்வி: உங்களது அரசியல் பிரவேசம் எவ்வாறு ஆரம்பமானது?

பதில்: நான் 1977 ஆம் ஆண்டு பண்டாரவளை நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முதன் முதலாகப் போட்டியிட்டேன். பின்னர் 1986 ஆம் ஆண்டிலும் போட்டியிட்டேன்.எனினும் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்டு நானும் மறைந்த எஸ்.எம்.சுப்பையாவும் வெற்றி பெற்றோம். 1992 இல் நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் மாகாண தமிழ்க் கல்வி இந்து காலாசார சுற்றுலா கூட்டுறவு வர்த்தக அமைச்சராக நியமனம் பெற்று மக்களுக்கு சேவையாற்றினேன். மீண்டும் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் தமிழ்க் கல்வி இந்து கலாசார பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றேன்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். 2004 முதல் 2006 வரையிலான காலப் பகுதியில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக பதவி வகித்தேன்.

பின்னர் 2006 முதல் 2010 வரை பிரதிக்கல்வியமைச்சராகவும் கடமையாற்றினேன். அந்த வகையில் ஊவா மாகாணத்துக்கு சேவையாற்றியது மட்டுமின்றி தேசிய ரீதியிலும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளேன். தற்போது பண்டாரவளை ஸ்ரீசிவசுப்பிரமணிய கோவில் நிர்வாக சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினராகவும் இந்து இளைஞர் சங்க உறுப்பினராகவும் கால்பந்தாட்ட சங்க உறுப்பினராகவும் இருக்கிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளராகவும் இ.தே. தோ. தொ. சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டு வருகிறேன்.

கேள்வி: இந்தக் காலப்பகுதியில் நீங்கள் ஆற்றிய சேவை சிலவற்றைக் குறிப்பிட முடியுமா?
பதில்: தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஒத்துழைப்புடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் அரச வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊவா மாகாணத்திலுள்ள பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புக்களுக்கு 92 வீதமான மின்சார இணைப்புக்களைப் பெற்றுக்கொடுத்துள்ளேன்.

உலக வங்கி சீடா நோர்வே அரசு மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் நிதியுதவியுடன் பல பாடசாலைக் கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளேன். கலாசார மத்திய நிலையங்கள் சனசமூக நிலையங்கள் தோட்டங்களில் நிர்மாணித்துக் கொடுத்துள்ளேன். ஊவா மாகாண சபை மூலம் 10 சாஹித்திய விழாக்களை நடத்தியுள்ளேன்.

கலைஞர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களை கௌரவித்தேன். ஊவா மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ததுடன் மோட்டார்கார் மோட்டார் சைக்கிள் பந்தயங்களை நடத்தியதோடு சுற்றுலா கண்காட்சிகளையும் நடத்த நடவடிக்கை எடுத்தேன். முன்னாள் ஐ. தே. செயலாளர் கொபி அனானின் நிதியுதவியுடன் ஊவா வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் பேர்ஸி சமரவீர இதற்கு பெருந்துணை புரிந்தார். மாகாண சபை கட்டிடம் பொல்காதென்ன பயிற்சி நிலையம், பதுளை நூலகம், நூலக மண்டபம், ஹாலி எல விஞ்ஞான பாடசாலை போன்றவையும் நிறுவப்பட்டன.

கேள்வி: தோட்டத்தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்பதில் உங்களது நிலைப்பாடு என்ன ?
பதில்: வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துள்ள நிலையில் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தொழிலாளார்கள் இல்லை. காலங்காலமாக சம்பள விடயத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். தொழில் அமைச்சு, நிதியமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் என்பன இணைந்து தொழிலாளரின் சம்பளத்தை தீர்மானிக்க வேண்டும். அதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதனூடாக தொழிலா ளர் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண முடி யும் என்பது எனது நம்பிக்கையாகும்.



நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates