ஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு கற்ற சமூகம் மற்றும் புத்திஜீவிகளின் வழிகாட்டலும் பங்களிப்பும் மிக மிக முக்கியமானதாகும். வளர்ச்சியடைந்த நாடுகளிலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் இந்த இரு பிரிவினரதும் அறிவுசார் திறன்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
எமது நாட்டிலும்கூட ஏனைய சமூகங்கள் இதனையே பின்பற்றுகின்றன. சகோதர சிங்கள சமூகத்தின் வழிகாட்டிகளாகவும் தலைமை கொடுப்பவர்களும் கற்ற சமூகத்தினராகவும் புத்தி ஜீவிகளாகவும் இருக்கின்றனர். அதேபோன்று வடக்கு, கிழக்கு பிரதேச தமிழ் மக்களின் வழிகாட்டிகளாகவும் அந்த சமூகங்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்துபவர்களாக கற்றவர்களாகவும், துறைசார் நிபுணர்களாகவும் புத்தி ஜீவிகளாகவும் இருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் இதுபோன்றதொரு நிலைமையே , காணப்படுகின்றது.
இந்த சமூகங்களின் அபிவிருத்திக்கு வழிகாட்டுபவர்களாகவும் திட்டங்களை வகுப்பவர்களாகவும் செயற்படுத்துபவர்களாகவும் தலைமையேற்று செயல்படுபவர்களாகவும் பெரும் கல்விமான்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் துறை பேராசிரியர்கள், வைத்திய கலாநிதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்ற நிபுணத்துவம் பெற்றவர்களே பணிகளை ஆற்றி வருகின்றனர்.
தவிர அந்தப் பிரதேசங்களில் செயற்படும் கட்சிகளும் இவ்வாறான நிபுணத்துவம் பெற்றவர்களை தமது கட்சிகளில் இணைத்துக்கொண்டு அவர்களது பங்களிப்பை பெற்றுக்கொள்வதுடன் அவர்களுக்கு உரிய கெளரவமளிக்கின்றன. நாளடைவில் அவ்வாறானவர்களே கட்சித் தலைமைப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
மட்டுமன்றி, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் நியமனம் பெறுகின்றனர். இவர்களது வழிகாட்டல்களின் கீழ் அந்த சமூகங்கள் உயர்வடைகின்றன.
ஆனால், மலையகத்தில் நடப்பது என்ன? மலையக சமூகத்தில் மட்டுமே இந்த நிலைமை எதிர்மாறாகக் காணப்படுகின்றது. மலையக சமூகத்துக்கு தலைமை தாங்குபவர்கள் மேற்கண்ட எந்தவொரு தகுதியையாவது கொண்டிருக்கின்றனரா?
மலையக கற்ற சமூகம் மற்றும் புத்திஜீவிகள் மலையக சமூகத்துக்கு தலைமை கொடுக்க முன்வராமல் ஒதுங்கி கொள்வது ஏன்? கல்வி கற்று பட்டம் பெற்றவுடன் ஒரு நல்ல தொழிலைப் பெற்றுக்கொண்டு குடும்பம், குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிக் கொள்வது ஏன் ? சமூகத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் இவர்களுக்கு பங்கு இல்லையா?
இது தொடர்பில் இவர்களுக்கிருக்கும் ஆதங்கத்தை தங்களது நட்புக்கள், உறவுகளோடு மட்டும் பகிர்ந்து கொள்வதால் மட்டும் என்ன நடக்கப்போகிறது?
ஒன்று மட்டும் உண்மை! உங்களில் எவரையும் தற்போதைய மலையகக் கட்சி,களின் தலைமைகள் தங்களுடைய கட்சிகளில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறு இணைத்துக் கொண்டால் அவர்களது தலைமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். எனவே ஒருபோதும் அவர்கள் கற்றவர்களையோ புத்தி ஜீவிகளையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இந்தத் தலைமைகளின் பிடியிலிருந்து மலையகத்தையும் மக்களையும் விடுவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மலையக இளைஞர்களை அணி திரட்டும் நடவடிக்கைகளில் (1970 – 1975களில்) அப்போதைய மலையக கல்விமான் அமரர் இரா. சிவலிங்கத்தின் தலைமையிலான கற்றவர்கள் புத்திஜீவிகள் ஈடுபட்டனர். மலையக இளைஞர் முன்னணி என்ற அந்த அமைப்புக்கு அப்போது பொதுமக்களிடம் செல்வாக்கு இருந்தது.
இரா. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், எஸ். கிருஸ்ணன் மற்றும் பலர் முன்னின்று உழைத்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த முன்னணி மறைந்து போனது. பின்னாளில் இரா. சிவலிங்கம் இ.தொ.கா. வில் இணைந்து செயற்பட்டார். அதேபோன்று மலையக வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக்கமும் தொடர்ந்து செயற்படாமல் போனது. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை போன்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற அமைப்புக்கள் உருவாகின. காலப்போக்கில் அவை இயங்காமல் போயின. பல அமைப்புக்கள் இயங்க விடாமல் செய்யப்பட்டன.
எனினும், சில அரசியல் கட்சிகள் தமக்கு தேவைப்பட்ட நேரத்தில் திடீரெனப் பிறக்கும் ஞானோதயத்தில் அல்லது தேர்தல் காலங்களில் கற்ற சமூகத்தினரையும் புத்தி ஜீவிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தும் கல்வி அபிவிருத்தி சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கருத்துக்களைக் கேட்டு பின்னர் ஓரிரு மாதங்களில் அதை மறந்து விடுகின்றன.
அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் கற்ற சமூகத்தின் ஆலோசனைகளுக்கு ஓரளவு சந்தர்ப்பம் வழங்கினார். ஆனால் அது முழுமையடையவில்லை.
எனினும், 1999களில் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி மீது கற்ற சமூகத்தினரும் புத்திஜீவிகளும் ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன் முன்னாள் செயலாளர் நாயகம் பி.ஏ.காதர், மறைந்த தலைவர் பி. சந்திரசேகரன், மறைந்த உப தலைவர் வி.டி. தர்மலிங்கம், மறைந்த எஸ். விஜயகுமாரன், தற்போதைய செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் போன்றவர்களே இதற்குக் காரணமாகும். எனினும் அந்தக் கட்சி மீது கற்ற சமூகம் ஆரம்பத்தில் வைத்திருந்த நம்பிக்கை பின்னர் படிப்படியாகக் குறைந்து போனது.
தற்போதைய நிலையில் கற்ற சமூகமும் புத்தி ஜீவிகளும் துணிந்து களத்தில் இறங்கி செயற்படுவதற்கு எந்தவொரு கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. இ.தொ.கா.விலும் பின்னர் தொ.தே.ச.விலும் இணைந்து செயற்பட்ட பி. இராஜதுரை எம்.பி. கூட தொடர்ந்து அந்த அமைப்புக்களில் இருக்காமல் வெளியேறி ஐ.தே.க. வில் இணைந்து கொண்டுள்ளார்.
கட்சிகளில் இணைந்து செயற்படும் போது அங்கு ஏற்படும் அவமரியாதைகள், உதாசீனங்கள் என்பன கற்ற சமூகத்துக்கு மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே இந்த நிலைமையில் சமூகத்துக்கான பங்களிப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வது முறையா?
அப்படியாயின் கற்ற சமூகம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயற்பட முடியாதா?
இன்று மலையகத்தில் தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை. புதுப்புது கட்சிகள், பெயர் புரியாத தொழிற்சங்கங்கள் என தோன்றிக் கொண்டிருக்கின்றன. முகவரி இல்லாத பலர் சங்கத்தை ஆரம்பித்து அதனூடாக முகவரியை தேடிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
எனவே, எமது சமூகத்திலுள்ள பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், டாக்டர்கள், கல்வியியலா ளர்கள், விரிவுரையாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் இணைந்து சமூக அபிவிருத்திக்காக ஓர் அமைப்பை அல்லது அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாமல்லவா?
அதில் இணைந்து செயற்பட ஆயிரமாயிரம் இளைஞர், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், தொழிலாள பெருமக்கள் என அனைவரும் தயாராக இருக்கின்றனர். மலையக அரசியல் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளினால் வெறுப்படைந்திருக்கும் மலையக சமூகத்துக்கு ஒரு அமைப்பு தேவை என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.அதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு கற்ற சமூகத்திடமும் புத்திஜீவிகளிடமுமே உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...