ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதோருக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு நடமாடும் சேவை நடத்தப்பட்டதாக செய்தியொன்று வெளி வந்திருந்தது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு நகர்களிலும் பரவலாக நடத்தப்பட்ட இந்த சேவை சம்பந்தமான விவரமான விளம்பரங்களும் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.
மிகப்பெரிய சேவைதான் இது. இச் சேவையை நடத்தியவர்கள் எவராயிருப்பினும் அவர்கள் இது குறித்து பெருமை கொள்ளலாம். திருப்தியுறலாம்.
ஆனால், இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது.
இவ்வாறு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாமலிருந்தோரின் தொகை சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் மிகப்பெரும்பான்மையானோர் பெருந்தோட்டத்துறையினராகத்தான் இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்பலாம். கிராமப்புற வாசிகளின் தொகை மிகக் குறைவாகத்தான் இருந்திருக்கும்.
இன்று கிராமப்புறவாசிகள் இந்த மாதிரியான விடயங்களில் அதிக அக்கறையுடையோராகவும் கவனமாகவும் இருக்கின்றார்கள். விதி விலக்காக ஏதோ சிலர் தான் அடையாள அட்டை பெறாதிருக்கின்றார்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் இந்தளவு பெருந்தொகையானோர் அடையாள அட்டை பெறாதிருந்தமைக்கான காரணம் என்ன என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.
கிராமப்புற வாசிகளுக்குப் போலல்லாது பெருந்தோட்டத்துறை வாசிகளுக்கு தோட்ட நிர்வாகம் மூலமாகவும் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும் ஏன் இவ்வளவு பேர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாமலிருந்திருக்கின்றார்கள் ?
இதையும் விட இன்று க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் பதினாறு வயது நிறைவடைந்த ஒரு மாணவன் பாடசாலை மூலமாக தனது அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. பதினாறு வயது பூர்த்தியடைந்த மாணவரொருவர் அவர் எந்த வகுப்பில் கற்றாலென்ன, பரீட்சை நெருங்கி வரும்வரை காத்திருக்காது உரிய காலத்தில் விண்ணப்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும்படி அதிபர்களுக்கு அறிவுறுத்தி ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் இது விடயத்தில் அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.
அரச புள்ளி விபரங்களின்படி இன்று பெருந்தோட்டத்துறை சார்ந்த பாடசாலை செல்லாத மாணவர்களின் தொகை மிக மிகக் குறைவேயாகும்.
மாணவர்கள் வருடந்தோறும் கிரமமாக அடையாள அட்டைகளைப் பெற்று வந்திருந்தால் இவ்வளவு பெருந்தொகையானோர் அடையாள அட்டை பெறாமலிருக்க வாய்ப்பு இல்லை.
இவைகளனைத்தினதும் அடிப்படையில் பார்த்தோமானால் தோட்டத் தொழிலாளர்களின் இயல்பான அக்கறையின்மையோடு தோட்ட அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் காட்டி வரும் பாரபட்சமும், அக்கறையின்மையும், உதாசீனப்போக்கும் இந்த நிலை தோன்றக் காரணமாகியுள்ளது என்ற முடிவிற்கு வரலாம்.
தோட்டம் என்று எடுத்துப்பார்த்தால் தோட்ட அதிகாரிகளை இவ்விடயத்தில் நேரடியாகக் குறை சொல்ல முடியாதெனினும், தோட்ட தலைமை எழுதுவினைஞர் உட்பட ஏனைய எழுதுவினைஞர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்றும் உதாசீனமாகவும், ஏனோதானோவென்றும் செயற்பட்டு வருகிறார்களென்றும் எப்போதும் பரவலாகக் குறை சொல்லப்பட்டு வருகின்றது.
தோட்டத்தில் வேலை செய்தால் மாத்திரமே அடையாள அட்டை பெற்றுத்தர முடியுமென்று சில தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன. இதனை நியாயமான ஒரு சாட்டாகக் கருத முடியாது. ஒரு நிலப்பரப்பில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையான மக்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே கிராம அலுவலர்களுக்கு சமதையான இந்த அதிகாரம் தோட்ட அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. தமது பொறுப்புணர்ந்து செயற்பட தோட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
எவ்வாறெனினும், தோட்ட நிர்வாகம் அடையாள அட்டையைப் பெற்றுத்தர மறுக்கும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியுமாவென்றால், நிச்சயமாக முடியும். முன்னர் தோட்ட நிர்வாகத்துடனான ஒரு கலந்துரையாடல் மூலம் (DISCUSSION) தொழிற்சங்கங்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வந்தன. ஆனால், கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின் தொழிற்சங்கங்கள் படிப்படியாக இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் சக்தியை இழந்து வருகின்றன.
சில கிராம அலுவலர்கள் காட்டும் கெடுபிடிகள் நம்மவர்கள் அவர்களை அணுகி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாக இருந்து வருகின்றன. இந்த இடத்திலே மலையகத்தின் ஏனைய பல விடயங்களைப் போன்றே அவ்வப்போது எழுந்தடங்கும் 'தமிழ்பேசும் கிராம அலுவலர்கள் நியமன' விடயமும் ஞாபகத்திற்கு வந்து போகின்றது.
சில பாடசாலைகளில் வகுப்பாசிரியர்களும் அதிபர்களும் தமது அசிரத்தையான போக்கினால் மாணவர்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்கத் தவறுகின்றார்கள் என்று தெரிய வருகின்றது. இது தமது சமூகத்திற்குத் தாமிழைக்கும் துரோகம் என்பதை உணர்ந்து அவர்கள் தம்மைத் திருத்தி செயற்பட முன்வர வேண்டும்.
பதினாறு வயதிற்கு முன்பதாகவே மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகலும் இதற்கு ஒரு காரணமாகும். ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக உணர்வுடன் செயற்பட்டு இத்தகைய இடைவிலகல்களைத் தடுக்க முன்வரவேண் டும்.
பெருந்தோட்டத்துறை மாணவர்கள் தமது பாடசாலைக் காலத்திலேயே அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதிலே ஒரு நன்மை இருக்கிறது. அதிலே தொழில் என்ற இடத்திலே மாணவர்கள் என்று குறிக்கப்படுவார்கள். ஆனால் தோட்டங்களிலேயோ அல்லது கிராம சேவகர்களிடமோ பெற்றுக்கொள்ளும்போது பெரும்பாலும் தொழிலாளி என்றே குறிப்பிடப்படும். அதனால் பாடசாலைகளிலேயே அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது இன்றைய சமூக அமைப்பில் நடைமுறை வாழ்வில் அவர்களுக்கு ஒரு சிறிய அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கும்.
ஒப்பீட்டளவில் நுவரெலியா மாவட்டம் கற்றோர்களும் சமூக சிந்தனைமிக்கோரும் நிறைந்த பிரதேசம். மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் கோலோச்சும் இராஜதானி. மலையகம் சார் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சுக்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என்று அரசியல் அதிகாரம்கொண்டோர் நிறைந்து வாழும் மாவட்டம். அங்கேயே இந்த நிலைமையானால் ஏனைய மாவட்டங்கள் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
தேர்தல் காலங்களில் நடமாடும் சேவைகள் நடத்தி இம்மக்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை மாற்றி ஏனைய சமூகப் பகுதியினருக்குப் போல வழமையான வழிமுறைகள் மூலம் கிரமமாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை மைத்திரி ஆட்சிக்காலப் பகுதியில் மலரும் என்று எதிர்பார்ப்போமாக.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...