மலையக தோட்ட மக்கள் கல்வியில் மட்டுமல்ல, அரசியலிலும் எழுச்சியும் தெளிவான ஞானமும் பெற்று வருகின்றார்களென்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு நல்ல உதாரணமாகும். என்றென்றும் அடாவடியரசியலின் ஆளுமைக்குட்பட்டு அடிமைகளாகவும் வாயில்லாப் பூச்சிகளாகவும் இருந்த காலம் மலையேறி விட்டதென்பதற்கு இந்த தேர்தலை விட நல்லதொரு உதாரணம் இருக்க முடியாது. தங்களின் சுகபோகமான வாழ்விற்காக சொந்த மக்களையே பலிக்கடாவாக்கி சொகுசு வாழ்க்கையை மேற்கொண்ட உயர்தட்டு அரசியல் தலைமைகள் இதன் மூலம் நல்ல பாடத்தினை கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினையான தனி வீடுகள் என்பது இன்னமும் கனவாகவே இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் முதுகெலும்பாக செயற்படும் இவர்களின் முதல் பிரச்சினையான வீட்டுக்கனவு, இதுவரையும் நிறைவேறாத ஆசையாகவே இருப்பதற்கு மலையக அரசியல் தலைமகள் சிலவற்றின் அலட்சிய போக்கே காரணமாகும். இந்த விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மலையக தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஏனையோர் முயற்சிகளை மேற்கொண்டாலும், அவற்றுக்கு முழு அளவில் சிலர் முட்டுக்கட்டைகளை போடுகின்றார்கள். தங்களுக்கு கிடைக்கக்கூடிய அற்ப சலுகைகளுக்காக சோரம் போகும் இப்படியான குறிப்பிட்ட சில மலையக அரசியல் தலைமைகளை ஓரம் கட்டி விட்டு, தங்களின் அபிலாசைகளெல்லாம் ஏற்றுக்கொண்டு தங்களுக்கு சரியான பாதையினை காட்டும் தலைமைகளின் வழி செல்வதே இன்றைய தேவையாக இருக்கின்றது.
இயற்கையின் சீற்றத்தால் மண் சரிவுகளில் தங்களின் சொந்தங்களையெல்லாம் இழந்து இன்றுவரை எந்தவித நிவாரணங்களும் கிடைக்காமல் நிர்க்கதியாக இருக்கும் மலையக சொந்தங்களின் கண்ணீரை உதாசீனம் செய்தவர்களின் செயற்பாடுகளின் அதிருப்தி கொண்டமையின் வெளிப்பாடுதான் இந்த தேர்தலின் பிரதிபலிப்பு.
தோட்டத் தொழிலாளர்களின் சந்தாவினாலும் அவர்களின் பெறுமதிமிக்க வாக்குகளை கவர்வதன் மூலமாகவும் தங்களின் அரசியல் வாழ்க்கையினை உயர்த்திக் கொண்டவர்கள் ஏற்றி விட்ட ஏணியை ஏறெடுத்தும் பார்க்காததனால் இன்றைய மலையக மக்களின் எழுச்சியினால் அவர் கள் அதிர்ந்து போயுள்ளனர். மேலும் தங்களின் அரசியல் நடவடிக்கைகளில் சாதியம் என்ற விடயத்திலும் அக்கறை கொண்டு செயற்பட்டமையினால் அவர்கள் இன்று நாதியற்றவர்களாக, மக்களால் வெறுக்கப்பட்டவர்களாக ஒதுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மலையகத்தை பொறுத்தவரையில் சில அடாவடி அரசியல் தலைமைகளினால் நேர்மையான ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களால் நேர்மையாக செயற்பட முடியாத நிலையில் ஒதுங்கியிருந்தனர். உண்மைகளை எழுத முடியாமல் ஊமைகளாக இருந்தவர்கள், இன்று மலையகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியினால் மறுபடியும் எழுந்து நிற்கத் தொடங்கி விட்டார்கள்.
ஏற்கனவே மலையகம் கல்வியில் எழுச்சி பெற்று வரும் வேளையில், இன்று அரசியலிலும் உயர்ச்சியடைந்து வருவது உண்மையிலேயே மலையகத்தின் மாற்றத்துக்கான நல்ல அறிகுறியாக கருதப்படுகின்றது. தோட்டத்தில் புல்லு வெட்டுபவர்களுக்கும் புத்தியிருக்கின்றது. அவர்கள் நினைத்தால் மலையையும் புரட்டிப்போட்டு விடுவார்களென்பதை மறக்கக்கூடாது.
பொதுவாகவே தோட்டத் தொழிலாளர் கள் மிகவும் சாதுவானவர்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் பொறுமையுடன் இருந்தனர். அடிப்படை வசதிகளில் அரைவாசி கூடக் கிடைக்காத நிலையில் காலம் கனியுமென காத்திருந்தனர். இயற்கை சீற்றத்தினால் நிலை குலைந்த போதும், நிலை தடுமாறாமல் இருந்தார்கள். ஆனால் தேர்தல் மூலமாக தங்களுக்காக சந்தர்ப்பம் கிடைத்தபோது வாக்குகள் மூலமாக தங்களின் பலத்தினையும் எதிர்ப்பார்ப்பினையும் காட்டி விட்டார்கள். சிறு துரும்பும் சீற்றமுற்றால் பெரும் நெருப்பாக மாறி சுட்டு பொசுக்கி விடுமென்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
எனவே, இனியும் தாமதம் செய்யாமல் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையான அக்கறையுடன் அர்ப்பணிப்புடன் மலையக அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும். குறிப்பாக அடிப்படை வசதிகளில் முக்கியமான தனி வீட்டுத் திட்டத்துக்கு முழு மூச்சுடன் செயற்பட்டு ஆவன செய்ய வேண்டும். ஏனென்றால் அடுத்ததாக பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருவதற்கான நேரம் நெருங்கி வருகின்றது. இம்முறையில் தோட்ட தொழிலாளர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாமல் படம் காட்ட முனைந்தால் அவர்கள் மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுத்து விடு வார்கள்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...