இதன் மூலமே மலையக பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்த முடியும்
என்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்
மலையகப் பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களைக் கற்பிக்க போதிய பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே வெளி மாவட்டங்களிலிருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு அதனூடாக விஞ்ஞானப் பாடங்களை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:
கேள்வி: "மைத்திரியின் 100 நாள்" வேலைத்திட்டத்தின் கீழ் மலையகப் பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றீர்கள்?
பதில்: மலையகப் பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாக மத்திய மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் 1–A,B பாடசாலைகள் தற்போது 15 மட்டுமே உள்ளன. இந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 20 ஆக, உயர்த்துவதற்கு உடன் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் விஞ்ஞானம் கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை உயர்வடையும். ஏற்கனவே மத்திய மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பாடசாலைகளில் விஞ்ஞானம் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தான் இல்லை. எனவே, அந்தப் பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய பாடசாலைகளுக்கு இந்தப் பாட ஆசிரியர் மிகவும் அவசியமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அதுமட்டுமன்றி, சப்ரகமுவ, ஊவா மாகாண பாடசாலைகள், களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கும் விஞ்ஞான ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படும்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகள் பல பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், விஞ்ஞான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அந்தப் பாடசாலைகளில் அவை கற்பிக்கப்பட முடியாமல் போனமையும் இடம்பெற்றுள்ளது.
கேள்வி: விஞ்ஞானம், கணித பாடங்களை கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர்கள் போதியளவு இல்லை. இதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்?
பதில்: இது தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். நாட்டில் எங்கெங்கு விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய பட்டதாரிகள் ஆசிரியர்கள் இருக்கின்றனரோ அவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருமாறு கூறினேன். அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்கள் மலையக பாடசாலைகளில் கற்பிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் குறிப்பிடும் பாடசாலைகளுக்குச் சென்று அவர்கள் கற்பிக்க வேண்டும். அவ்வாறான விஞ்ஞான, கணித பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம் கற்பிப்பதற்கான வசதியுள்ள பாடசாலைகளில் மீண்டும் அந்தப் பாடங்களை மாணவர்கள் கற்கக்கூடியதாக இருக்கும்.
கேள்வி: ஏற்கனவே 3,100 ஆசிரியர்களை மலையகப் பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களுக்கான நியமனம் எப்போது வழங்கப்படவுள்ளது?
பதில்: இவர்கள் எழுதிய தேர்வின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதியளவில் வெளியாகவிருக்கின்றன. அந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதியளவில் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கு 6,000 ரூபா சம்பளமாக வழங்கப்படுவதென முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தத் தொகை 9,000 ரூபாவாக உயர்த்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த ஆசிரியர்களுக்கான நியமனங்களும் கூட மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
கேள்வி: மலையகத்துக்கென்று பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது?
பதில்: மலையகத்தில் மலையகம் சார்ந்த கற்கைகளை கற்பிக்கக்கூடிய ஒரு வளாகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்துள்ளோம். எனவே இது தொடர்பில் ஆலோசனைச் சபை ஒன்றை ஏற்படுத்தி அந்தச் சபையின் மூலம் வளாகத்தை நிறுவுவதற்கான ஆலோசனைகள் முதலில் பெற்றுக்கொள்ளப்படும். மலையக சமூக, பொருளாதார பயிர்செய்கை, சுற்றாடல், கலை, கலாசார, பண்பாட்டு பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பக் கற்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும். அமைவிடம், மாணவர்கள் உள்வாங்கல், அதற்கான வளங்ளைப் பெற்றுக்கொள்ளல் என்பன பற்றியும் இந்த ஆலோசனைச் சபை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கும்.
இந்த அறிக்கை கிடைத்ததும் அதனடிப்படையில் மேற்படி வளாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வளாகத்தை நுவரெலியா மாவட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆலோ சனைச் சபை வழங்கும் முழுமையான அறிக்கையின் அடிப்படையிலேயே வளாகம் அமையும். இது மலையகத்தில் உயர்கல்வியை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எனவே இது தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்வதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கேள்வி: 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படவிருக்கின்றது?
பதில்: இந்த வேலைத்திட்டத்துக்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன. வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரைவில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஏற்கனவே தோட்ட வீடமைப்புக்கென காணிகளை வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால், கால்நடை அபிவிருத்தி அமைச்சு அதனைக் கொடுக்க விடாமல் தடைசெய்து விட்டது. இது போன்ற பல்வேறு தடைகள் காரணமாக தோட்டங்களிலிருந்து காணிகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. எனவே இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு என்னவிதமான தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு புதிதாக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். இதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு, வீடமைப்பு அமைச்சு போன்றவை இணைந்து நடவடிக்கை எடுக்கும். எனவே இந்த வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும். இந்தத் திட்டம் முழுமையடைவதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
கேள்வி: மலையக மக்கள் முன்னணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? கட்சியின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது?
பதில்: மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு வுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. மத்திய குழு எடுக்கும் தீர்மானமே இறுதி முடிவாகும். நாம் மத்திய குழுவின் முடிவுக்கமையவே செயற்படுகின் றோம். இதேவேளை கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கு எதிராக செயற்பட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதங்களை அனுப்பியுள்ளோம். அவர்களிடமிருந்து கிடைக்கும் பதிலை ஆராய்ந்த பின்னர்தான் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுபற்றி கட்சி தீர்மா னிக்கும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...