ஜனாதிபதி தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்பதை மலையக மக்களில் கணிசமானோர் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர். சுமார்
ஐந்து இலட்சத்துக்கு அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள நுவரெலியா, பதுளை, கண்டி. மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாக்குகள்
தமக்கே வேண்டுமென்று ஜனாதிபதி இ.தொ.கா ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கூறியிருக்கின்றார்.
அதேவேளை, அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சியை வீழ்த்தி பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக
மலையக மக்களின் தேவைகள் பொய் பிரசாரமற்ற, ஊழலற்ற முறையில் தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்
பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன கூறுவதை ஏற்று, எதிர்த்தரப்பு வேட்பாளருக்கே மக்கள்
வாக்களிக்க வேண்டும் என்று இ.தொ.கா. அல்லாத ஏனைய மலையகக் கட்சிகள் கோரி வருகின்றன.
இந்நிலையில் கடந்த காலத்தில் என்ன நடந்தது
என்பதை மக்கள் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். முதலாவதாக தற்போதைய ஜனாதிபதி
2010 ஆம் ஆண்டு கொட்டகலையில்
நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பல உறுதி மொழிகளை வழங்கினார். அதில் முக்கியமானது
மலையக மக்களும் இந்நாட்டில் உள்ள ஏனைய மக்களைப் போல சகல உரிமைகளையும் சலுகைகளையும்
பெற்றுக்கொண்ட மக்களாக இருக்க வேண்டும் என்பதாகும். தான் அம்பாந்தோட்டைக்கு தங்கமும்
நுவரெலியாவுக்கு இரும்பும் கொடுக்கும் வகையிலான வேறுபாடு காட்டவில்லை என்றும், நான் சொல்வதை செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
இ.தொ.கா.வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் மக்கள் பெரும் ஆரவாரம்
செய்தனர்.
இப்போது நான்கு வருடங்களாகி விட்டன.
இப்போது என்ன நடந்துள்ளது. அம்பாந்தோட்டைக்கு தங்கம் தராவிட்டாலும் ஏன் இரும்பையே
இங்குள்ள மக்களுக்கு வழங்காவிட்டாலும் அவர்கள் வாழ்கின்ற இருப்பிடங்களையாவது அவர்களுக்கே
வழங்கி அவர்களது இருப்பை பாதுகாத்திருக்க முடியும் என்பதை சகல மலையக வாக்காளர்களும்
அறிவர்.
தோட்ட மக்களுக்கு வீடுகள் சொந்தமாக
வழங்கப்பட்டால் அவர்கள் அதனை வெளியாருக்கு விற்றுவிட்டு தோட்டங்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தோட்டத்தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது மலையக அரசியல் தலைவர்களின்
கவலையாகும்.
ஆகவே, தோட்டத் தொழிலாளர்கள் லயன் காம்பிராக்களிலேயே இருப்பது மிக நல்லது.
வேண்டுமென்றால் லயத்திற்கு மேல் இன்னுமொரு லயத்தினை கட்டி மாடிவீடு என்ற பெயரில்
வழங்கினால் தோட்டத்தில் மிக இறுக்கமாக இருப்பார்கள். அதனை விற்கவும் முடியாது.
தோட்டங்களை விட்டு வெளியேறவும் முடியாது. அப்படியானதொரு வீட்டை வெளியார்கள் வாங்கவும்
மாட்டார்கள். தொழிலாளர்கள் அங்கேயே இருப்பார்கள். தோட்டங்களில் வேலை நடக்கும்.
நம்ம பொழுதும் போகும் என்று கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் தெரிந்துக்கொள் வேண்டிய
விடயம் ஒன்று உள்ளது. 1990 இல் தோட்ட வேலைகளில் சுமார் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் இருந்தனர்.
இவர்களின் எண்ணிக்கை அரசியல் தலைவர்கள் விரும்பியவாறு லயத்திலேயே தொடர்ச்சியாக
இருக்க செய்து அல்லது மாடி வீடுகள் கட்டி அவர்களை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
இப்போது சுமார் 220,000 பேர் மட்டுமே உள்ளனர். ஏனையோர் தோட்டங்களை விட்டு வெளியேறி விட்டனர்.
மலையகத் தலைவர்கள் நினைத்தது போல் நடக்கவில்லை.
ஆகக்குறைந்து இப்போதுள்ள 220,000 தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் 110,000 குடும்பங்களுக்காகவது சொந்தவீடுகள்
வழங்குவதற்கு தீர்க்கமான முடிவுள்ள தேசிய அரசியலில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும்
வகையில் இதனை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கலாம். அவர்கள் இதனை பேரம் பேசி பெற்றிருக்கலாம்.
நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டனர்.
இந்நிலையில் முஸ்லிம் அரசியல் அமைப்புக்களிடம்
இருந்தும் இவர்கள் பாடம் கற்றுக் கொண்டவர்களாக இல்லை. முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்
தமது அமைச்சின் கடமைகளுக்கு மேலாக அந்த சமூகத்தின் வீடமைப்புத் திட்டங்களுக்கு
செய்த சேவைகள் அளப்பரியனவாகும். இதேபோல், முஸ்லிம் காங்கிரஸ் தமது மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாணத்தில்
தனியான நிர்வாக அலகிற்கு அரசாங்கம் உடன்படவில்லை என்பதால் அரசாங்கத்தை விட்டு வெளியேறியது.
இவர்கள் இருவருமே தமது மக்களின் நலன்கள் கவனிக்கப்படவில்லை என்பதனால் வெளியேறினர்.
அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு நிபந்தனையற்ற வகையிலான ஆதரவை வழங்கிய மலையக அரசியல்
கட்சிகள் இவர்களிடம் பாடம் படிக்க தவறிவிட்டனர்.
அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற ஆதரவை
வழங்கும் மலையக அரசியலில் தலைமைகளுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தையும் சுட்டிக்காட்ட
வேண்டியுள்ளது.
மலையகத்தின் பிரபல்யமிக்க பேராசிரியர்களான
சோ.சந்திரசேகரன், தை.தனராஜ், மூக்கையா போன்றோர் மலையகத்திற்கு ஒரு
பல்கலைக்கழகம் வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அது ஒருபுறமிருக்க
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றினை ஹட்டனில் அமைக்கவும் பேராசிரியர்
தனராஜ் அரும்பாடு பட்டார். பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆனால் இவற்றில் எதனையும் மலையக அரசியல் தலைமைகள் செய்யவில்லை. மாறாக, புத்தளத்தில் ஒரு கிளை அமைக்கப்பட்டது.
அம்மக்களுக்கு அது உயர் கல்வியில் பெரும் பங்காற்றி வருகின்றது.
வெளியார்கள் கூறுவதுபோல், மலையக மாணவர்கள் உயர் கல்வியே படிக்க
வேண்டியதில்லை என்று அரசுடன் ஒட்டியுள்ள மலையக அரசியல் தலைவர்கள் நியாயப்படுத்துவதே
இதற்கு காரணமாகும்.
இவ்வாறு பல வகையிலும் மலையகத்தின் ஒருசில
அரசியல் தலைமைகள் தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளவில்லை. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான
வே. இராதாகிருஷணன், பி.திகாம்பரம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் போன்றவர்கள்
ஒரு தீர்க்கமான முடிவுடன் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
மலையக மக்கள் தமக்கே உரிய பல்வேறு
தேவைகளுக்கு மேலாக தேசிய ரீதியாக சிந்திப்பவர்களாகவே காணப்படுகின்றனர். ஒரு ஜனநாயக
நாட்டில் பாராளுமன்றத்தில் மேலான அதிகாரம் தனியொருவரிடம் இருப்பது எந்தளவு
பிரச்சினைகளுக்கு காரணமாக என்பதை உணர்ந்துள்ளவர்களாக உள்ளனர்.
அவ்வாறான நிலையில் தேசிய நலன்களை கருத்திற்கொண்டு
புதிய அணுகுமுறையூடாக பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பாகும்.
எதிர்காலத்தில் மலையக இளைஞர்களால் உருவாகவிருக்கும் தலைமையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள்
தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...