Headlines News :
முகப்பு » » மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக அமைந்துவிடக்கூடாது - பழனி விஜயகுமார்

மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக அமைந்துவிடக்கூடாது - பழனி விஜயகுமார்


மைத்திரி அலையில் எழுச்சியுடன் இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தை வெளிகாட்டும் வகையில் 24ம் திகதி சனியன்று கொழும்பு 10 பூக்கர் விடுதியில் மலையகத் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வொன்று இடம்பெற்றது. புதிய மாற்றம் புதிய ஆண்டு புதிய இலக்கு எனும் தொனிப்பொருளில் மேடை அமைக்கப்பட்டு அதில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஸ்ணன், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குருசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். 

மலையகத்தை சேர்ந்த கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் ஆயிரம்பேர்வரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். 

இங்கு உரையாற்றிய தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பழைய பேதங்களை மறந்து மலையக மக்கள் காணி வீட்டு உரிமையை வென்றெடுக்கவென மலையக தலைவர்களாகிய நாங்கள் இன்று ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்களுடைய இந்த கூட்டணி உடையாமல் பாதுகாப்பது மக்களுடைய பொறுப்பு என்றார். மேலும் மலையக மக்களின் லயன் வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்து அவர்ளுக்கு சொந்தமாக காணி மற்றும் வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். 

இது சம்பந்தமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தேர்தல் ரீதியில் தன்னை தோற்கடிக்க முடியாதவர்கள் தான் அநாவசிய வியாபாரத்தில் ஈடுபடுவதாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரங்களை செய்ததாகவும் ஆனால் தான் கொழும்பிற்கு வந்து செய்த வியாபாரம் என்ன என்பதையும் படிப்படியாக முன்னேறியது எப்படி என்பதையும் இங்கு அமர்ந்திருக்கும் வர்த்தகர்கள் நன்கு அறிவர் என்றும் அமைச்சர் திகாம்பரம் கூறினார். மேலும் இந்த புதிய அரசியல் கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்வர் என்றும் ஞாயிறு மாலை மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மின்னல்’ அதில் முன்னிலை பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

அடுத்ததாக உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால அணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தபோது வெல்வோமா தோற்றுவிடுவோமா என்ற அச்சம் இருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஸ எப்படியாவது ஏதாவது செய்து வெற்றிபெறுவார் என்று பலர் கூறியதால் அச்சம் ஏற்பட்டதாகவும் ஆனால் நாட்டிலும் மலையகத்திலும் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை கொண்டதாகவும் அதன்படியே பாரிய மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இன்று மலையகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அரசியல் கூட்டணி மிக முக்கியமானதெனவும் அதனை பிரிப்பதற்கு யாரும் முயற்சிகள் செய்யக்கூடாதெனவும் இராதாகிருஸ்ணன் கேட்டுக் கொண்டார். 

மேலும் மலையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கல்வி அபிவிருத்தி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக மலையகத்தில் விஞ்ஞான தொழிநுட்பம் கூடிய வசதியுடன் 10 பாடசாலைகள் தரமுயர்த்தப்படும் என்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆரம்ப கட்ட முயற்சியாக முதலில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 

தான் மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் விஞ்ஞான ஆசிரியர்களை இந்தியாவிற்கு அனுப்பி 3 வருட பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதுபோன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்து விஞ்ஞான ஆசிரியர்களாக வெளியேறுவோரை மீண்டும் விஞ்ஞான தொழிநுட்ப கல்லூரிக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு விசேட பயிற்சியுடன் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். 

இறுதியில் ஊசி-நூல் மற்றும் கத்தரிக்கோள் கதை கூறிய அவர், இந்த புதிய கூட்டணி ஊசி-நூல் போன்று இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர கத்தரிகோள் போன்று வெட்டுவதாக இருக்கக்கூடாதென கூறினார். 

இக்கூட்டத்தில் உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைக்காக மலையக தலைவர்கள் பழைய பகைகளை மறந்து ஒன்று சேர்ந்திருப்பதாகவும் இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் வாக்குபடி ‘அதோ என் மக்கள் போகிறார்கள் நான் அவர்களை பின்தொடர்கிறேன்’ என்ற அடிப்படையில் மலையக மக்கள் ‘அதோ என் தலைவர் போகிறார் பின் செல்வோம்’ என்ற காலம் முடிவுக்கு வந்து ‘அதோ என் மக்கள் போகிறார்கள் நான் அவர்களை பின்தொடர வேண்டும்’ என்ற செய்தியை மலையகத் தலைவர்களுக்கு தேர்தல் மூலம் மக்கள் அறிவித்திருப்பதாகக் கூறினார். 100 நாள் வேலைத் திட்டத்தில் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் கடமை தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தோட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அதன் பின்னர் அமைச்சர் திகாம்பரம் அதில் வீடு கட்டுவார் என்றும் இந்த நடவடிக்கையில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவற்றை எல்லாம் முறியடித்து மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறையை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். 

இக்கூட்டத்தில் இறுதியா உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் உரை சுவாரஸ்யமாவும் உணர்வுபூரவமாகவும் அமைந்தது. அவர் தனது உரையில் மலையக மக்களின் மூன்று முக்கிய உரிமைகள் பற்றி பேசினார். ஓன்று காணி உரிமை இரண்டு கல்வி உரிமை மூன்று ஆட்சி உரிமை. இலங்கையில் வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் தங்களுக்கென சொல்லிக் கொள்ள சொந்தக் காணி வைத்துள்ளனர். முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சொந்த காணி வைத்துள்ளனர். சிங்கள மக்கள் சொந்த காணி வைத்துள்ளனர். ஆனால் இந்த நாட்டில் வாழும் மலையக தமிழர்களுக்கு சொந்த காணி இல்லை. மலையகத்தில் இந்து கொழும்பு வந்த சில வசதி வாய்ப்பு ஏற்பட்ட பின் சொந்த காணி வாங்கியுள்ளார்களே தவிர மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயன் வாழ்க்கை வாழ்கின்றனர். 

வடக்கு கிழக்கில் சிங்கள பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கென பல்கலைக்கழகம் உள்ளது. ஆனால் மலையகத்திற்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லை. இலங்கை நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை உள்ளது. ஆனால் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு இரண்டு பிரதேச சபைகள் மாத்திரமே உள்ளன. ஆசியாவிலே இவைகள்தான் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய பிரதேச சபைகள். இதனை மாற்றி அமைக்க வேண்டும் நுவரெலியா பிரதேச சபையை ஆறாகவும் அம்பேகமுவ பிரதேச சபையை ஆறாகவும் பிரிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கை இணைத்து கேட்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் பிரதேசங்களை சேர்த்து கரையோர மாவட்டம் கேட்கிறது. ஆனால் நாங்கள் மலையகத்தில் சேர்த்து கேட்கவில்லை. பிரித்து கேட்கிறோம். சேர்த்தும் தர முடியாது பிரித்தும் தர முடியாது என்று கூறினால் அது இனவாதம் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம்.

சிங்கள மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். வடகிழக்கு மக்கள் அவ்வாறே கிராமங்களில் வாழ்கின்றனர். அங்கு மலையகத் தமிழர்களும் வாழ்கின்றனர். அவர்கள் சொந்த காணியுடன் கமத்தொழில் செய்து வாழ்கின்றனர். ஆக மலையகத்தில் தற்போது வழக்கில் இருக்கும் ‘தோட்டம்’ என்ற பதம் அகற்றப்பட்டு அங்கும் கிராமம் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும். நாட்டில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில் பிழை உள்ளது. இலங்கையில் உள்ள மொத்த தமிழர் சனத்தொகை 32 லட்சம். அதில் இலங்கை தமிழர் 16 லட்சம் இந்திய தமிழர் 16 லட்சம் என்பதே உண்மை. ஆனால் பல குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய தமிழர் சனத்தொகை குறைத்து கூறப்பட்டுள்ளது. இதனை நான் சம்பந்தனிடம் ‘நீங்கள் எங்கள் கணக்கில் ஓடிக் கெண்டிருக்கிறீர்கள்’ என்று நேரடியாகக் கூறியிருக்கிறேன். 

தேர்தல் காலங்களில் நான் வடக்கு கிழக்கு சென்று பிரச்சாரம் செய்வதால் எமது மக்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பர். ஆனால் கொழும்பில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சொன்னாலும் வடகிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் மலையக மக்களுக்கு பரந்த மனம் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில் வவுனியாவில் இருந்து வந்தவருக்கு வாக்களித்தனர். இங்கு ஊசி-நூல், கத்தரிக்கோள் கதை சொல்லப்பட்டது. அந்த கத்திரிகோள் வேறு யாருமல்ல. ‘மின்னல்’ நடத்தும் வேலையில்லாத நபர்தான். அந்த நிகழ்ச்சிக்கு ‘மின்னல்’ என்று அல்ல ‘கத்தரி’ என்று பெயர் வைக்கலாம் பொறுத்தமாக இருக்கும். அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸை உடைக்க வேண்டும். ஜனநாயக மக்கள் முன்னணியை உடைக்க வேண்டும். தொழிலாளர் தேசிய சங்கத்தை உடைக்க வேண்டும். வேறு வேலை கிடையாது. 

மற்றுமொரு விடயம்தான் மலையகத்தில் இரவு ஒரு மணிக்கு படுத்து பகல் ஒரு மணிக்கு எழும்பும் தலைவர் காணாமல் போய்விட்டார். இவருக்கு சூரியன் உதிப்பது தெரியாது. நாட்டில், உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. கொட்டக்கலையில் பகல் நேரத்தில் வாகனத்தில் விளக்கு ஒளிரவிட்டு செல்கின்றனர். ஏன் என்று தெரியாது. இவர்கள் சென்ற வாகன தொடரணியில் அப்பாவி மலையக மக்கள் மோதி பலியாகியும் உள்ளனர். 

புலிகள் அமைப்பு இந்தியாவின் முக்கிய புள்ளி மீது கை வைத்து இந்தியாவின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் இப்படி அழிவை எதிர்கொண்டதோ அதுபோல மஹிந்த ராஜபக்ஸ தூரத்தில் உள்ள சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனாவின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதால் இந்தியா கடும் சினம்கொண்டு மஹிந்தவின் ஆட்சியை கவிழ்க்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியது. அடுத்து இலங்கைக்கு மோடி வருகிறார் ஓடி வருகிறார். அவரிடம் மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற நாம் தயங்க மாட்டோம். அண்மைய காலத்தில் இந்திய தூதரகத்துடன் பேசினால் நாங்கள் மலையக மக்களுக்கு உதவத் தயார் ஆனால் தலைமை எங்கே. தலைமைக்கு தூர நோக்கம் இல்லை என்று கூறுகின்றனர். ஆக அந்த தலைவர் இன்று காணாமல் போய்விட்டார். எனவே மலையக மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க இந்திய அரசுக்கு-பாரத அசுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. எனவே மோடி வரும்போது நாம் நிச்சயம் எமது பிரச்சினைகளை அவருக்கு எடுத்துக் கூறுவோம்’ என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

சாராம்சம் 

மலையகத் தலைவர்கள் இவ்வாறு கூட்டணி சேர்வது இதுவொன்று புதுமையும் அல்ல முதல் தடவையும் அல்ல. வலராற்றில் பல கூட்டணிகள் உருவாகி இருக்கின்றன. மலையகத்தில் அல்லது மலையகத்திற்கு வெளியில் மலையகத்தையும் இணைத்துக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட முதல் கூட்டணி தமிழர் விடுதலை முன்னணி ஆகும். இதில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு தலைவராக இருந்தார். ஆனால் வட்டுக்கோட்டை பேச்சுவார்தையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தொண்டமான் கூட்டணியில் இருந்து வெளியேறினார். 

மலையகத்திற்கு உள்ளே பார்த்தால் 1998ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடி சங்கம், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து இந்திய வம்சாவளி பேரணி என்று ஒன்றை ஏற்படுத்தினர். அது பிற்காலத்தில் அகால மரணமடைந்தது. 

பின்னர் சதாசிவம், புத்திரசிகாமணி, சந்திரதேசகரன் ஆகியோர் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தக்கூட்டணி காணாமல் போய்விட்டது. மனோ கணேசன், திகாம்பரம், அருள்சாமி கூட்டணி வந்தது. சப்ரகமுவ தேர்தலில் இதொக-ஜமமு-மமமு கூட்டணி ஏற்பட்டது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையகத் தமிழ் கூட்டணி பின்னர் மலையக தேசிய கூட்டணி போன்றவை தோன்றி மறைந்த வரலாற்றை நாம் நன்கு அவதானித்து இருக்கிறோம்.  

இவ்வாறான கசப்பான வரலாற்று அனுபவங்கள் நிறைந்த மலையக சமூகம் இன்று மற்றுமொரு கூட்டணியை சந்தித்திருக்கிறது. திகாம்பரம்-மனோ கணேசன்-ராதாகிருஸ்ணன்-வேலாயுதம் கூட்டணி புதிதாக வந்திருக்கிறது. நுல்ல தருணத்தில் மலையக மக்களின் தேவைக்கு மிக அவசியமாக இக்கூட்டணி உருவெடுத்திருப்பதை அவதானிக்கலாம். எனவே வரலாற்று கூட்டணி போன்று இதுவும் வெறுமனே தேர்தல் கூட்டணியாக மாத்திரம் இருக்கக் கூடாதென்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். அததையும் மீறி இக்கூட்டணி மக்கள் கண்ணில் மண்தூவும் பாவகாரியத்தை செய்யுமானால் கண்ணில் பட்ட தூசி அகன்று தெளிவான பார்வை வரும்போது மக்கள் ஏமாற்றுத் தலைவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவர் என்பது மாத்திரம் அடித்துச் சொல்லக்கூடிய கடந்தகால வரலாற்று படிப்பினையுடன் கூடிய உண்மையாகும்.  
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates