பெருந்தோட்டப் பயிர்செய்கைக்கு கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தென்னிந்தியர்கள், பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தாண்டி 200 வருடங்களாக மலையக சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். தொடர் லயன் குடியிருப்பு முறையில் அமைந்துள்ள இவர்களது வாழ்க்கை முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அம்மக்கள் வரலாறு காணாத வகையில் இயற்கை அனர்த்தங்களால் கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரு நூற்றாண்டு கால பழமையான தொடர் லயன் குடியிருப்புகளும் அவற்றை அண்டிய சூழலும் தாங்கும் திறனை இழந்து வருவதை இடம்பெற்று வரும் தொடர் மண்சரிவு அனர்த்தங்கள் மூலம் அவதானிக்க முடிகின்றது. பதுளை மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை நீங்கி கடந்த வருட செப்டெம்பர் மாத இறுதி பகுதி முதல் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மிகப் பெரிய மண்சரிவு ஏற்பட்டதுடன் மனித பேரழிவும் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் உறவுகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டது.
மீரியபெத்த பேரழிவை கண்ட மக்கள் தொடர் லயன் குடியிருப்புகளில் அச்சத்துடன் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கின்றனர். பல மனித உயிர்களை காவு கொண்ட இயற்கையின் சீற்றம் சற்றேனும் தணியும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் நிலவி வந்தது.
அவர்களது எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் தொடரும் கடும் மழையுடன் கூடிய கால நிலை பதுளை மாவட்ட தோட்டப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை உலுக்கி எடுத்து தடம் புரட்டிப் போட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பித்த காற்றுடன் கூடிய அடை மழையின் காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ரில்பொல, தெமோதரை, கல்கந்தை, ஹேகொட ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளின் மீது மண் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் நிலம் தாழிறங்கியதன் காரணமாகவும் 29 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
நத்தார் பண்டிகை தினமான டிசம்பர் 25 ஆம் திகதி மாலை ஆரம்பித்த அடை மழை இடைவிடாது 12 மணித்தியாலங்களுக்கு மேலாக பெய்தது. இதன் காரணமாக மண்சரிவு அனர்த்த அபாயம் பல இடங்களிலும் ஏற்பட்டது. குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டதுடன் நிலப்பகுதிகளிலும் பாரிய வெடிப்புகள் பல தோட்டப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. பல தோட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் பாரிய மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.
அவசர அனர்த்த நிலைமையை தொடர்ந்து மண்சரிவு அனர்த்த அபாயத்தை எதிர் நோக்கிய மக்கள் பாடசாலைகளிலும் சன சமூக நிலையங்களிலும் ஆலயங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். கடந்த வாரத்தில் ஏற்பட்ட இவ்வனர்த்த நிலை காரணமாக நிர்க்கதிக்குள்ளான 8,100 இற்கும் அதிகமானோர் பதுளை மாவட்டத்தின் 86 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பிரதே செயலகங்களின் நிவாரண பொருள் உதவிகளுடன் பாராமரிக்கப்பட்டு வந்தனர். அனர்த்த அபாயம் காரணமாக முகாம்களில் தங்கியிருந்த பலர் மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர். எனினும் அவர்கள் வாழும் நிலப்பிரதேசம் மீண்டும் அனர்த்தத்தை எதிர்நோக்குமா என்ற அச்சம் அவர்கள் மனதில் குடிகொண்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள் அனர்த்தத்தை எதிர் நோக்கியுள்ள பிரதேசங்களில் மண் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்பித்து வருகின்றனர். பெரும்பாலான தோட்டப்பகுதிகள் அனர்த்த அபாயத்திலிருந்து விடுபட்டுள்ள போதிலும் நீண்டகால அடிப்படையில் மண் சரிவு அபாயம் நிலவும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்த சீரற்ற காலநிலை அடை மழை காரணமாக புதிய வீடமைப்பு திட்டங்களும் மண்சரிவு அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளன. பதுளை, தெளிவத்தை, தோட்ட கீழ் பிரிவு டயரபா போன்ற தோட்டங்களில் சுமார் 1 வருட காலத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் வெடிப்பு வீட்டு கூரைகள் கடும் காற்றுக்கு தூக்கி செல்லப்பட்டமை வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள மண் மேடுகள் இடிந்து வீழந்தமை என பல இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமது உழைப்பின் பெரும்பகுதியை கடனாக செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட புதிய வீடமைப்பு திட்டங்கள் அனர்த்தத்தை சந்தித்து இருப்பது அம்மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
பதுளை, பசறை, ஹாலி எல, எல்ல, பண்டாரவளை, அப்புத்தனை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலக பகுதிகளில் உள்ள தோட்டப்பகுதிகளே இம்முறை அனர்த்தம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பசறை யூரி தோட்ட தொழிற்சாலை பிரிவில் தொடர்ந்து மண்மேடுகள் சரிந்து வண்ணமுள்ளன. தோட்டங்களுக்கான பாதைகளும் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன.
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு தோட்ட நிர்வாகத்தின் அசமந்த போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. இதனை படிப்பினையாக கொண்டுள்ள அனேகமான தோட்ட நிர்வாகங்கள் சிறு அனர்த்த அபாயம் ஏற்பட்டாலும் அம்மக்களை பொது அரச கட்டிடங்களில் தங்க வைக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளன. பிரதேச செயலகங்களின் பராமரிப்பின் கீழ் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்கள் வந்தவுடன் தாம் பொறுப்பிலிருந்து தப்பித்துவிட்டதாக கருதும் வகையில் தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
பசறை பகுதியிலுள்ள சில தோட்டங்களில் உள்ள தொடர்குடியிருப்புகளில் வசித்து கொண்டு நகர்புறங்களிலும் வெளி மாவட்டங்களிலும் தொழில் புரிவோரின் பூட்டப்பட்டுள்ள வீடுகளை சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அகதிகளுக்கு கையளிக்கும் செயற்பாடுகளில் தோட்ட நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. இந்நடவடிக்கை மூலம் தோட்டங்களில் தொழிலாளர்களாக இல்லாதவர்களை முற்றாக தோட்டங்களை விட்டு வெளியேற்றும் முயற்சியில் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளன.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ?????வழங்கி தற்காலிக குடியிருப்புகளை அமைத்து கொள்ளுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் காரணமாக அகதிகளாக இருந்த அனுபவம் இல்லாத மக்கள் இத்திடீர் அனுபவத்தால் சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பு முகாம்களில் இருந்து கொண்டு தொழிலுக்கு செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்பவற்றின் காரணமாக தொழிலாளர் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளன. புதிய வருடத்தில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதிலும் பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதிலும் சிரமங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
மலையகம் வரலாறு காணாத இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய நிலையில் அவர்கள் வாழும் நில மற்றும் குடியிருப்பு பகுதிகளின் பாதுகாப்பு குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எட்டப்படவேண்டும். அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் முறையான குடியிருப்பு திட்டங்கள் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். இதுவே இன்றைய அவல நிலைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...