ஒரு சமூகத்தின் மீது அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்ற போதும், அச்சமூகத்தின் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் நிறைவேற்றப்படாத போதும் அங்கு போராட்டங்கள் வெடித்து உரிமைகள் வென்றெடுக்கப்பட்டதாகவும் உலக வரலாறுகள் கூறுகின்றன. இப்போராட்டங்களுக்கு முன்னிலை வகித்து வழிநடத்தியோர் வரலாறு போற்றும் தலைவர்களாகவும் உருவாகியிருந்தனர்.
இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் 200வருட வரலாற்றை கொண்ட மலையக சமூகம் இயற்கை அனர்த்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. பாரம்பரிய கலை, கலாசார பின்னணியுடன் கூடிய சமூகத்தின் வரலாறும் அடையாளந்தெரியாமல் புதையுண்டு போயுள்ளது.
தோட்டங்களில் வாழும் மக்கள் தொடர் லயன் குடியிருப்புக்களில் வாழ்வதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். 150 சதுர அடி பரப்பு அறைக்குள் இவர்களது அபிலாஷைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மீரியபெத்த அனர்த்தத்திற்கு முன்னர் லயத்து வாழ்க்கை முறையின் துன்பங்களை இம்மக்கள் அறிந்திருக்கவில்லை.
இயற்கை அனர்த்தம், தீ பரவல், சூறாவளி போன்றவற்றால் சில கணப்பொழுதிலே தொடர் லயன் குடியிருப்புக்கள் உருத் தெரியாமல் அழிந்து விடுகின்றன. உயிர் பொருட் சேதங்களும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைய முறையான தங்குமிடங்கள் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலை மலையகமெங்கும் கடந்த ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து தீவிரமடைந்துள்ளது.
தொடர் லயன் குடியிருப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனி வீட்டு திட்டம் மலையகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு மலையக குடிமகனின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. இதன் காரணமாக தாமாகவே முன்வந்து காணி, வீட்டுரிமை கேட்டு வீதிக்கிறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1960– 80 காலப்பகுதிகளில் மலையகத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கொள்கையுடன் போராடும் மலையக மக்கள் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் மலையக மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்துப் போராட பல சந்தர்ப்பங்களில் மக்களை ஒன்று திரட்டியிருந்தனர். இப்போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளையும் பெற்றிருந்தனர்.
மீரியபெத்த மண் சரிவு அனர்த்தமும் டயகம மின்னொழுக்கு தீ பரவல் சம்பவமும் தொடர் லயன் குடியிருப்பு முறைக்கு எதிரான போராட்ட சிந்தனையை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளதெனலாம். மக்களோடு இணைந்து மலையக சிவில் அமைப்புக்கள் இக்கவனயீர்ப்பு போராட்டங்களில் பங்கு கொண்டு அவர்களது போராட்டங்களுக்கு வலுவூட்டி வருகின்றன.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பதுளை மாவட்ட கிளை ஒழுங்கு செய்திருந்த கவனயீர்ப்பு போராட் டம், கடந்த வாரத்தின் இறுதியில் பதுளை நகரில் இடம்பெற்றிருந்தது. இப்போராட்டத் தின் கருப்பொருளாக மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணி, வீட்டுரிமை வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
பதுளை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள வீல்ஸ் பார்க் மைதானத்தின் அருகில் ஆரம்பித்த போராட்ட பேரணி மணிக்கூட்டு கோபுரம், பசார்வீதி, லோவர்வீதி வழியாக சென்று பிரதான பஸ் தரிப்பு நிலையத்தினை அடைந்திருந்தது. இப்போராட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல மற்றும் லுணுகலை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகளும் நூற்றுக்கணக்கில் பங்கு கொண்டிருந்தனர்.
பதுளையை தளமாக கொண்டுள்ள ஊவா பிரஜைகள் ஒன்றியம், ஊவா சக்தி அமைப்பு, ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், எதிர்காலம் எமது கரங்களில் மற்றும் ஊவா வலம்புரி நிறுவனம் போன்ற சிவில் அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி இருந்தன.
உணர்வுபூர்வமான கோஷங்களுடன் நகருக்குள் பயணித்த ஆர்ப்பாட்ட பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. 7 பேர்ச் காணியுரிமை வேண்டாம். 20 பேர்ச் காணி வீட்டுரிமை வேண்டும். உள்ளூராட்சிமன்ற நிர்வாகத்திற்குள் தோட்டங்களை உள்வாங்குங்கள். எங்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார வசதி வேண்டும். தனி வீட்டுரிமை திட்டத்தை மீரியபெத்த டயகமவில் இருந்து ஆரம்பியுங்கள் போன்ற பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேவேளை, நிவ்பர்க் பகுதியில் செயற்பட்டு வரும் காணி உரிமை தனி வீட்டுரிமை கேட்கும் மக்கள் இயக்கம் கடந்த 18ஆம் திகதி நிவ்பர்க் தோட்ட ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. மீரியபெத்த மண் சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 50ஆவது நாளை நினைவு கூருமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வஞ்சலி நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களிலே தஞ்சமடைந்திருப்பதால் அவர்களுக்கு தனி வீடுகளை காணியுரிமையுடன் பெற்று கொடுப்பதற்காக மக்க ளின் கையெழுத்துக்களை திரட்டும் புத்தகம் திறக்கப்பட்டது. இக்கையெழுத்து புத்தகம் பதுளை போராட்டத்திலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பதுளை பஸ் தரிப்பு நிலையத்திற்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்க பொது செயலாளர் ஆ. முத்துலிங்கம், மீரியபெத்த மண் சரிவு அனர்த்தம் உறங்கி கொண்டிருந்த மலையக மக்களை லயத்து வாழ்க்கையிலிருந்து வெளியே வரச்செய்திருக்கின்றது. மலையக மக்களுக்கு மாடி வீட்டு திட்டம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் எம் மக்கள் மாடி வீடு என்னும் லயத்து வாழ்க்கைக்கு தள்ளப்படக்கூடாது. மலையகத்திற்கு 20 பேர்ச் காணியுரிமையுடன் தனி வீட்டுரிமை வேண்டிப் போராடுகின்றோம். ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. எமது போராட்டம் வெற்றியடையும் வரை போராடுவோம். இளைஞர், யுவதிகளின் பங்கு பற்றலால் மலையகம் விழிப்படைந்துள்ளதை காட்டுகின்றது என்றார்.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பிரதிநிதி மார்க்ஸ் பிரபாகரன் பேசுகையில், எமது அமைப்பு மீரியபெத்தயில் தொடங்கி மலையகம் முழுவதும் 20 பேர்ச் காணி, வீட்டுரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றது. பதுளை போராட்டம் எமக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில காலங்களில் மலையகம் அடக்கு முறைகளிலிருந்து விழித்தெழும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.
ஊவா பிரஜைகள் ஒன்றிய செயற்பாட்டாளர் சுரேஷ் நடேசன், மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் போராட்டங்களுக்கு நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். பல்வேறு வழிகளிலும் ஏமாற்றப்பட்டு வரும் எம் உறவுகளின் உரிமை குரலாக இருந்து தனி வீடுகளை பெற அழுத்தம் கொடுப்போம் என்றார்.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாவட்ட ஏற்பாட்டாளர் எஸ். சந்திரமோகன் இறுதியில் கருத்து வெளியிடுகையில், எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாகாண ஆளுனர், பதுளை மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளோம். எமது அமைப்பின் மூலம் தோட்ட வாரியாக 20 பேர்ச் காணி வீட்டுரிமை கேட்டு மக்களை தெளிவுபடுத்துவோம். இப்போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி களை தெரிவிக்கின்றேன் என்றார்.
நன்றி - வீரகேசரி - 28.12.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...