Headlines News :
முகப்பு » » ஒரு தேயிலை செடியை கூட பிடுங்க அனுமதிக்காத மகிந்தவும்! மாடிவீட்டுக்கு விளக்கம் தரும் தொண்டமானும்

ஒரு தேயிலை செடியை கூட பிடுங்க அனுமதிக்காத மகிந்தவும்! மாடிவீட்டுக்கு விளக்கம் தரும் தொண்டமானும்

 
ஒரு தேயிலை செடியைக் கூட பிடுங்க அனுமதிக்காத மகிந்தவும், மாடி வீட்டுக்கு புதிய விளக்கம் தரும் தொண்டமானும் மக்களை ஏமாற்ற முடியாது.  கொஸ்லாந்தை மீரியாவத்தை மண்சரிவுக்கு பின்னர் மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியில் வீடு காணிக்கான உரிமைக்குரல் ஒங்கி ஒலிக்கத் தொடங்கியது.

இதுவரை தமது உரிமைகள் தொடர்பாக குரல் எழுப்பும் பொறுப்பபை தமது தலைவர்கள் எனக் கூறிக் கொண்டிருப்போரிடம் விட்டு வைத்திருந்த இந்த மக்கள் இந்த அனர்த்தத்திற்கு பின்னர் தாங்களாகவே அணிதிரண்டு வீடு காணிக்கான உரிமையை முன்னிறுத்தி ஊர்வலங்கள், கூட்டங்கள் ,சுவரொட்டிப் பிரச்சாரம் ஆகிவற்றை முன்னெடுத்தது மட்டுமின்றி இனி எந்த ஒரு தேர்தலிலும் தம்மிடம் வாக்குக் கேட்க வருபவர்கள் தமது காணி வீட்டுக்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிகக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்த்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

இந்த பின்னணியில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு தமது முழு ஆதரவையும் வழங்குவதாக கூறிய பிரதி அமைச்சர்கள் திகாம்பரமும், இராதாகிருஸ்ணனும் தாங்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்னர் ஒருவருக்கு ஏழு பேர்ச் காணியுடன் சொந்த வீடுகட்;டித் தருவதற்கு உத்தரவாதம் பெறுவது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியதாகவும், ஆனால் ஒரு குடும்பத்திற்கு ஏழு  பேர்ச் காணி வழங்கினால் தேயில் தோட்டங்களை மூட வேண்டி வரும் என்று ஜனாதிபதி கூறி விட்டதாகவும் ஆனால் இது தொடர்பாக மைத்திரியிடம் பேசியபோது ஏழு பேர்ச் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்கள்.

அதன் பின்னரே மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக அவர்கள் கூறினர். .உண்மையில் இந்த வாக்குறுதி மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களுக்கு காணி தருவதாக இதுவரை எதுவும் கூறாதிருந்த ஜனாதிபதி மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டு விட்டதால் வேறுவழியின்றி அதனை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் இதேபோன்று வாக்குறுதிகள் முன்னைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைபடுத்தப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

அதுமட்டுமல்ல 2013ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஐம்பதாயிரம் வீட்டுத்திட்டத்திற்கு எதுவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதும் , 2014 வரவு செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக எதுவித குறிப்பும் இருக்கவில்லை.

இந்த பின்னணியில் மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்கவோ அல்லது காணி உரிமை வழங்கவோ ஜனாதிபதி மகிந்தவிற்கு எந்தவித அக்கறையும, விருப்பமும் இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

எனினும் தேர்தலில் வெல்ல மலையக மக்களின் வாக்கு கட்டாயம் என்ற நிலையில் இது வரை மலையகத்தை எட்டியே பார்க்காத கோத்தபாய ராஜபக்சவை மீரியாவத்தைக்கு கூட்டிவந்து அங்கு மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகட்ட அவசர அவசரமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொண்டமான தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.

அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் படி வீடுகட்டும் பணிகள் துரிதமாக நடத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று தெரிகிறது.

இந்த பின்னணியில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதாக கூறி அப்பகுதியிலும் பாதிக்கப்பட்ட மற்றப் பகுதியிலும் உள்ள மக்களுக்க செந்தில் தொண்டமான் மூலம் அவசர அவசரமாக கூரைத்தகடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சுரண்ட தொண்டமானும் இதொகாவும் இவ்வாறு வெளிப்படையாக ஊழல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவில் கடுமையான மழை, குளிரின் மத்தியிலும் தங்களுக்கு ஆதரவு இருப்பாதாக காட்டிக் கொள்வதற்கு நூற்றுக்கணக்கான பஸ்களில் மக்கள் பலாத்காரமாக கொண்டு வரப்பட்டு நடத்தப்பட ஜனாதிபதி பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதி தேர்தல் முடிந்த மூன்று மாதங்களுக்குள் வீடுகட்டித் தருவதாக உறுதிஅளித்தார்.

ஆனால் மக்களுக்கு காணி உரிமை கொடுப்பது பற்றி ஜனாதிபதி வாய் திற்ககவில்லை. அதேவேளையில் பெருந்தோட்டங்களில் தான் ஒரு தேயிலைச் செடியை கூட பிடுங்க அனுமதிக்க மாட்டேன் என்று அவர் ஆக்ரோஷத்துடன் கூறினார்.

இவ்வாறு கூறியதன் மூலம் அவரது வாக்குறுதி வெறும் போலித்தனமானது என்பது அவர் வாயாலேயே வெளிப்பட்டது. இதன் மூலம் மலையக மக்களைவிட தனது கவனமெல்லாம் தேயிலை செடியிலேயே உள்ளது என்பதை அவர் நேரடியாகவே கூறிவிட்டார்.

அவ்வாறானால் அவர் எங்கே வீடுகளை கட்டுவார்.?மேடையில் இருந்த தொண்டமான் வழமை போல எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல சலனமில்லாமல் வாய்பொத்தி இருந்தார்.

தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள பயிரிடப்படாத ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி இருப்பதையும், பெருந்தோட்ட தொழிலாளருக்கு குடும்பத்திற்கு 7 பர்சஸ் காணி வழங்கப்பட்டாலும் அடையாளம் காண்பட்ட வெற்றுக் காணிகளில் இருபத்தி ஐந்து சதவீத காணிகளைக் கூட பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்பதை தொண்டமான் ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

சாதாரன பெருந்தோட்ட தொழிலாளிக்கு கூட தெரிந்திருக்கும் இந்த விபரம். தொண்டமானுக்கும் மேடையில் அமர்ந்திருந்த இதொக தலைவர் சிவலிங்கம், செந்தில் தொண்டமான் ஆகியவர்களுக்கும் தெரியவில்லையா? அல்லது தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்ளா?

பெருந்தோட்ட தொழிலாளிக்கு விடுகட்ட ஒரு தேயிலை செடியை கூட பிடுங்க ஜனாதிபதிக்கு மனமில்லை. ஹற்றனில் இருந்து நுவரெலியாவிற்கு பாதை அமைப்பதற்காக மட்டும் நல்ல விளைச்சலைத் தரும் தேயிலை பயிரிப்பட்டிருந்த 400 ஏக்கரில் தேயிலை செடிகள் பிடுங்கப்பட்டது அவருக்கு தெரியாதா?

இது தவிர பெருந்தோட்ட பகுதிகளில் பிரதான பாதைகளை அமைக்க பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை செடிகள் பிடுங்கப்பட்டது தெரியாதா?  கடந்த காலங்களில் மகிந்தவின் ஆதரவளர்களால் பலாத்தாகரமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பலாத்காரமாக பிடிக்ககப்பட்டு தேயிலை செடிகள் பிடுங்கப்பட்டது தெரியாதா?

இவை எல்லாவற்றையும் விட இரத்தினபுரி கஹாவத்தை பகுதிகளில் இரு தோட்டங்களில் மகிந்தவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் “நில்பலகாய” என்னும ;அமைப்பினால் மாணிக்கக்கல் தோண்டுவதற்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் தேயிலை செடிகள் பிடுங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்ததுடன் அதனை இதுவரை நாமல் ராஜபக்சவோ அல்லது நில் பலகாயவோ உத்தியோகபூர்வமாக மறுக்கவில்லை.

இவ்வளவும் நடந்திருக்கும் போது தோட்டத்தை உருவாக்கிய, அதனை இதுவரை காத்து வருகின்ற அந்த தோட்டத்திற்காகவே உயிர் கொடுக்கின்ற தோட்ட தொழிலாளிக்கு வீடுகட்ட ஒரு தேயிலையை கூட பிடுங்க அனுமதிக்க மாட்டேன் என முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் பொய்யை கூறும் ஜனாதிபதியை நம்பி வாக்களிக்க கூறுவது எந்த அடிப்படையில் என்பதை தொண்டமான் மக்களுக்கு கூறவேண்டும்.

அடுத்தாக இதுவரை பெருந்தோட்ட மக்களுக்கு தனிவீடு அமைக்க முடியாது என்று கூறிவந்த தொண்டமான் இப்போது மாடிவீடு தொடர்பாக இப்போது புதுக்கதை விடுகிறார். .

மாடிவீட்டில் கீழ் பகுதியில் வரவேற்பு அறையும் சமையல் அறை போன்றவையும் இருக்குமாம், மேல் மாடியில் அறைகளுடன் கூடிய வசிக்கும் அறைகள் இருக்குமாம்.

இவ்வாறு மாடிவீடு அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொறாமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்.

தனிவீ:டு காணிக்கான உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் போது அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தொண்டமான் நிலைமையை சமாளிக்க விடும் புரளி இது.

மக்களை எவ்வளவு காலம் ஏமாற்ற முடியும்?

மலையக பெருந்தோட்ட மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை இந்தத் தேர்தலில் தொண்டமான் புரிந்து கொள்வார்.

ஆர்.உதயகுமார். 

நன்றி - தமிழ்வின்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates