இலங்கையின் வரலாற்றில் நடந்து முடிந்த வகுப்பு கலவரங்கள் இறுதியில் இனப்பிரச்சினையை பிரதான பிரச்சினையாக நிலைபெறச் செய்யுமளவுக்கு பாத்திரம் வகித்து வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையின் முதலாவது மதக் கலவரம் எதுவென்று கேட்டால் நாம் 1883இல் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் நடந்த கொட்டாஞ்சேனை கலவரத்தை குறிப்பிடுவோம். அதுபோல இலங்கையில் முதலாவது இனக்கலவரமாக 1915இல் சிங்கள-முஸ்லிம் கலவரமான கண்டிக் கலம்பகத்தை குறிப்பிடுவோம். இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரம் எது என்பது இன்றும் பலருக்கு நினைவிருக்காது. 1939இல் நாவலப்பிட்டியாவில் நிகழ்ந்த இனக்கலவரமே முதலாவது தமிழர்-சிங்கள கலவரமாகக் கொள்ளப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து இந்த வருடத்தோடு 76 வருடங்கள் ஆகின்றன. இந்த கலவரம் பற்றிய குறிப்புகளும், எழுத்துக்களும் கூட போதிய இல்லை என்பதே உண்மை.
இலங்கையின் சமூக முரண்பாடுகளாக இருக்கக்கூடிய இன, மத, சாதி, வர்க்க, பிரதேசவாரியாக இந்த கலவரங்களை ஆராய்வதற்கு முடியும். இலங்கையின் இன வெறுப்புணர்ச்சி வன்முறை வடிவம் பெற்ற வரலாற்றுச் சம்பவங்களில் நாவலப்பிட்டி கலவரம் ஒரு முக்கிய புள்ளி. அதன் பின்னர் வரிசையாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தாலும் 1956, 1958, 1977, 1981, 1983 காலங்களில் நிகழ்ந்தவை கரை படிந்த இனவாத அத்தியாயங்களாக பதிவு பெற்றது இலங்கை வரலாறு.
இதைத் தவிர இலங்கையில் தமிழர்கள் இன ரீதியில் ஒரு கலவரத்தை எதிர்கொள்ளும் முன்னரே தமிழர்கள் தமக்குள் குறிப்பிடத்தக்க 4 சாதிய கலவரங்களை நடத்தியிருக்கிறார்கள் என்கிற ஒரு வாதமும் பரவலாக வைக்கப்படுகிறது. அவற்றை இப்படி பட்டியலிடலாம்.
1871இல் வெள்ளாளர் சாதிக்கும் வண்ணார் சாதிக்கும் இடையில் மாவிட்டபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கலவரம்.
1923இல் “பரம்ப” சாதியினர் தமது மரணச் சடங்குக்கு பறையர் சமூகத்தை பறை மேளம் அடிப்பதற்காக அழைத்ததை பொறுக்காத வெள்ளாளர் அவர்களை தாக்கியதை தொடர்ந்து சுதுமலையில் நிகழ்ந்த சாதிய கலவரம்.
1929இல் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களை பாடசாலைகளுக்கு அனுமதித்ததால் அதனை எதிர்த்து வெள்ளாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல், தீ வைப்பு.
1931 இல் அதுபோலவே பள்ளர் சமூகம் பறையர் சமூகத்தை பறையடிக்க அமர்த்தியதால் பள்ளர் சமூகத்தின் மீதான வெள்ளாளர் சமூகத்தின் தாக்குதல்.
1939 காலச் சூழல்
1939 கலவரம் நிகழ்ந்த காலகட்டத்தில் சமூக அரசியல் சூழலை புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கலவரத்தின் தன்மையையும், அதன் அரசியல் அரத்தத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
இலங்கையின் இனத்துவ வரலாற்றில் 1930கள் மிகவும் முக்கியமான காலம். நிறைய அரசியல் திருப்பு முனைக்கான பல நிகழ்வுகளை கொண்ட காலமது. 1931 டொனமூர் சீர்திருத்தத்தின் அறிமுகம், இடதுசாரிக் கட்சிகளின் தோற்றமும் முன்னேற்றமும், சிங்கள மகா சபையின் தோற்றம், பிரஸ்கேடில் சம்பவம், மலையாளிகளுக்கு எதிரான தாக்குதல்கள், முல்லோயோ கோவிந்தன் படுகொலை, நேருவின் வருகை, என சொல்லிக்கொண்டு போகலாம்.
1931இல் டொனமூர் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையானது இந்திய வம்சாவளியினருக்கும் கிடைக்கச் செய்வதன மூலம் அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றனர். கூடவே இந்திய வம்சாவளியினர் மத்தியில் செல்வாக்கு பெற்றுவந்த இடதுசாரி சக்திகளும் பலமடைந்துவிடுவர் என்று அன்றைய சிங்கள பேரினவாத தலைமைகள் எதிர்த்தனர். இந்த தொடர் நிர்ப்பந்தத்தின் விளைவாக 1937இல் “உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டத்தை அமுல்படுத்தினார்கள். இதன் விளைவாக உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்க முடியாத வகையில், அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் தோட்டத் தொழிலாளர்கள் தமது குடியிருப்புகள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.
இதுவும் போதாததற்கு 1940இல்“வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்” சட்டத்தை கொண்டு வந்தார்கள். இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த அச்சங்களின் காரணமாக அப்போதைய இந்திய வம்சாவளி பிரதிநிதிகளான வைத்தியநாதனும், பெரய்ராவும் இந்த நிலமைகள் குறித்து மகாத்மா காந்தியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் விளைவாக மகாத்மா காந்தி தனது பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை அனுப்பி வைத்தார், நேரு இலங்கை வந்து டீ.எஸ்.சேனநாயக்க போன்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் போதிய திருப்தியளிக்காத நிலையில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதன் விளைவாக 25 ஜீலை 1939ல் இலங்கை இந்திய காங்கிரஸ் தொடக்கப்பட்டது. இனவாதம் இந்தியா வம்சாவளியினருக்கு எதிராக திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அந்த நெருப்பு பற்றவைக்கப்பட்டது.
1939 கலவரம்
1939ம் ஆண்டு நாவலப்பிட்டி நகரில் 'முஸ்லீம் இளை ஞர் சங்கம்' (Y.M.M.A) கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ஜி.ஜி.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல்... விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே" எனக் கூறினார். கூடவே மகாவம்சத்தையும் அவர் விமர்சித்திருந்தார். “சிங்களவர்கள் நம்பகமானவர்கள் இல்லை” என்றார். இது சிங்கள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் தூண்டிவிட்டது அது இறுதியில் இனக்கலவரத்திற்கு இட்டுச் சென்றது. இதன் காரணமாக இந்திய மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளான 'பசறை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, நுவரெலியா பகுதிகளி ல் வாழும் அப்பாவி இந்திய வம்சாவளிகள் தாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வரை கலவரம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
முதலாம் உலக யுத்தம் ஆரம்பித்திருந்த சமயம் என்பதால் இந்த உள்நாட்டு கலவரத்தை வேகமாகவே இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள் ஆங்கிலேயர்கள். இதுபற்றி விபரமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த “ஹிந்து ஓர்கன்” (Hindu Organ -1939 யூன் 22) பத்திரிகையில் விரிவாக வெளியாகியிருந்தது.
“வாய் மூல குண்டைப் போட்டு தெற்கில் நெருப்பை பற்ற வைத்துவிட்டார் பொன்னம்பலம்’’ என்று எழுதியது அந்தப் பத்திரிகை.
ஆனால் 1939இல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசுக் கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தை (சிங்களவருக்கு 50%மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) முன்வைத்து ஆற்றிய பிரசித்திபெற்ற நீண்ட உரையைத் தொடர்ந்து சிங்கள தரப்பில் எழுந்த எதிர்ப்பு தொடர்ச்சியாகவே பற்றியெரிந்து கொண்டிருந்த வேளை அது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கருத்துகளை கண்காணித்தபடியும், எதிர்வினை புரிந்தபடியும் சிங்கள தலைவர்களும் பேரினவாத சக்திகளும் முனைப்புடன் இருந்த சமயம் அது. இலங்கையில் இனவாத கருத்துக்கள் அதிகம் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த காலமும் அது தான்.
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை ஒரு இனவாதியாகவும், இனக்கலவரத்தை தூண்டிய ஒருவராகவுமே இது குறித்து சித்திரிக்கப்பட்ட பல சிங்கள நூல்களில் காணக் கூடியதாக இருக்கிறது.
இலங்கை தொழிற்கட்சி தலைவரான ஏ.ஈ.குணசிங்க கூட அதுவரை ஏனைய இனத்தவர்களையும் சேர்த்துக்கொண்டு தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தவர் பின்னர் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்.
பண்டாரநாயக்கவின் செல்வாக்கு
1925இல் இங்கிலாந்திலிருந்து கல்விகற்று திரும்பிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க வந்த வேகத்தில் கத்தோலிக்க மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறினார். தன்னை ஒரு சிங்கள பௌத்தராக காட்டும் பிரயத்தனத்தின் விளைவாக தனது மேற்கத்தேய கோர்ட் சூட் போன்ற ஆடைகளை கைவிட்டு சிங்கள தேசிய உடையை அணிந்துகொண்டார். ஒரு சில மாதங்களிலேயே கொழும்பு மாநகர தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை தேசிய காங்கிரஸ் கூட பண்டாரநாயக்கவின் தீவிர சிங்கள போக்கு குறித்து அச்சமடைந்திருந்ததை தேசிய காங்கிரஸ் அறிக்கைகளில் இருந்து காணலாம்.
பண்டாரநாயக்க 1934இல் “சிங்கள மகா சபை”யை தோற்றுவித்து இனவாத பிரசாரங்களை முன்னெடுத்தார். குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவாதத்தைக் கக்கினார். இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்தார். காலனித்துவத்துக்கு எதிரான தேசியவாதத்தை முன்னெடுத்த போதும், அந்த தேசிய வாதம் ஏனைய இனங்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தேசியவாதமாக காலப்போக்கில் ஆகியது. இலங்கை தேசிய காங்கிரசில் சிங்கள மகா சபை குறித்து நிகழ்ந்த முறுகல் நிலையைத் தொடர்ந்து தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தன்னை பலப்படுத்துவதற்கு வழி தேடிக்கொண்டிருந்த பண்டாரநாயக்கவுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உரை வாய்ப்பாக அமைந்தது. இதன் விளைவாக நாவலபிட்டிய கலவரம் நிகழ்ந்து ஒரு சில நாட்களில் பண்டாரநாயக்க அங்கு சிங்கள மகா சபையின் கிளையை திறந்து பீதி கிளப்பினார்.
“தமிழர்களுக்கு எதிராக பேசுவது எனது நோக்கமல்ல. பொன்னம்பலத்துக்கு பதிலளிப்பதே எனது ஒரே நோக்கம்.” என்றார் பண்டாரநாயக்க.
இன்னொரு கூட்டத்தில் பேசும் போது "நாவலப்பிட்டி சிங்கள மகா சபை பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபையின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்... இலங்கையை தமிழர்களுக்கு உரிமை கொண்டாடவே பொன்னம்பலம் முயல்கிறார். இந்த நாடு சிங்களவர்களுடையது என்பதையும், தமிழ் மற்றும் இதர சக்திகளின் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிக்க போராடிய வரலாற்றை கொண்டவர்கள் சிங்களவர்கள் என்பதையும் அவர் மறக்ககூடாது" என்றார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனக்கலவரங்கள் அனைத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா வம்சாவளி – மலையகத் தமிழர்கள் தான். ஆனால் இந்த கலவரங்களுக்கான ஊற்று மலையகத்திலோ மலையகத்தவர்களாலோ தொடக்கப்படவில்லை என்கிற உண்மையை கணக்கில் எடுக்கவேண்டியது. கலவரத்தின் காரணமாக அதிகளவு இடம்பெயர்ந்தவர்களும் அவர்கள் தான்.
1939 நிகழ்வானது ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் சாணக்கியமற்ற, தூரநோக்கற்ற, வீராவேச பேச்சின் விளைவென்றே பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து வளர்ந்த இந்திய வம்சாவளி எதிர்ப்புணர்வின் வளர்ச்சி அவர்களின் குடியுரிமை பறிப்பு வரை கொண்டு நிறுத்தியதை நாமெல்லோரும் அறிவோம். அந்த குடியிரிமை பறிப்புக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆதரவளித்து தமிழர் அரசியல் வரலாற்றை அவர் பங்குக்கு திருப்பி விட்டதையும் வரலாறு பதிவு செய்தது.
நன்றி - தினக்குரல் - 04.01.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...