பரிணாம வளர்ச்சி தோற்றுவித்த உயிரினங்களில், பகுத்தறிவு என்ற அளவு கோல் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகின்றது.
ஆனாலும் கூட தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட பொதுவான மனித குணாம்சங்களுக்கு அப்பால்தான் தனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழாமல் சமூகத்திற்காக வாழுகின்ற சிலர் மட்டுமே மனிதர்களில் மாணிக்கமாகின்றார்கள்.
இவ்வாறானவர்கள் இலக்கியவாதிகளாக, சுதந்திரப் போராட்ட தியாகிகளாக, அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாக, தொழிற்சங்கவாதிகளாக, அரசியல்வாதிகளாக ஏதாவது ஒரு துறையில் தம்மை அர்த்தப்படுத்திக் கொள்பவர்களே சமூக வழிகாட்டிகளாகின்றார்கள்.
வறுமை எம்மை விடாமல் துரத்திய போதும் பாரதியின் பாடல்களில் ஒரு வரியில் கூட தளர்ச்சி தெரியவில்லை.
சோகமோ பின்னடைவோ வெளிப்படவில்லை. ஆனால் துணிவும் தெளிவும் துடிப்பும் மட்டுமே கொப்பளிக்கிறது.
இது அவனது புரட்சி.
இரண்டே வரிகளால் சகலரும் ஏற்றுக்கொள்ளும் உலக தத்துவத்தினை போதிக்கும் திருக்குறளை வடித்த திருவள்ளுவராக இருக்கட்டும்...
அஹிம்சை வழியில் இந்திய சுதந்திரத் திற்கு வித்திட்ட மகாத்மா காந்தியாகட் டும்...
கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்கு வழிகாட்டிய நெல்சன் மண்டேலாவாகட்டும்...
இலங்கையின் சுதந்திரத்திற்கு வித்திட்டவர்களாகட்டும். இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வழியில் தங்களை தமது சிந்தனைகளை சமூகத்திற்கு அர்பணித்தவர்களாகவே ஆகிறார்கள்.
இவ்வகையில் புறக்கணிப்பால் புரையோடிப்போயிருந்த மலையகத்திற்கு 1980களில் புது இரத்தம் பாய்ச்சி விடியலுக்கான அரசியல் சிந்தனைக்கு அடித்தளம் இட்ட அமரர் பெ.சந்திரசேகரன் தனது தியாகம் நிறைந்த செயற்பாடுகளினால் மலையகம் தாண்டி, தேசியம் தாண்டி சர்வதேசத்திலும் தன்னை உறுதியாக அடையாளப்படுத்திக் கொண்டவராகிறார்.
2010ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தனது இறுதி மூச்சினை மாத்திரம் நிறுத்திக் கொண்ட இந்த சமூக வழிகாட்டி, தான் மறைந்த இத்தனை ஆண்டுகளிலும் தான் நேசித்த மக்களாலும் தன்னை நேசித்த மக்களாலும் ஒவ்வொரு நாளும் பாசத்துடனும் ஏக்கத்துடனும் நினைவு கொள்ளப்பட்டே வருகின்றார் என்பதிலிருந்து அவரது சேவைகளின் பெருமையும் இறப்பின் வெற்றிடமும் தெளிவாகப் புரிகின்றது.
சந்திரசேகரனின் துணிவான சேவைகளின் தேவைகள் இன்றும் அனைத்து தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் அவரது தியாகத்திற்கு சமூகம் வழங்கும் நெஞ்சம் நிறைந்த அங்கீகாரமாக அமைகின்றது.
நோயின் மூல காரணத்தினை கண்டறியும் மருத்துவர் ஒருவரால்தான் அதனை முழுமையாகத் தீர்ப்பதற்கான சிகிச்சைகளையும் வழங்க முடியும். அதன் அடிப்படையில் தனது சமூகம் இன்னும் அடுத்த கட்டத்திற்கு தன்னை முன்னேற்றிக்கொள்ள முடியாததற்கான காரணத்தினை இவர் கண்டறிந்தார். இதனை ஒட்டிய அவரது செயற்பாடுகள் காரணமாகவே அவரால் எமது சமூகப் பிணிக்கு தீர்வு காண முடிந்தது.
தோட்டத்தொழிலாளர்கள் தங்களின் தொழிலுக்காக மாத்திரம் தோட்ட நிர்வாகத்தின் கீழும் அது சம்பந்தப்பட்ட தொழில் பிணக்குகளுக்காக தொழிற்சங்கங்களிலும், ஏனைய அனைத்து தேவைகளுக்கும் அரச நிர்வாகத்துடனும் சம்பந்தப்படும் போதுதான் இவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்பதில் இவருக்கு இருந்த நம்பிக்கையின் விளைவுதான் இவர் பெற்றுக்கொடுத்த பெருந்தோட்டத்துறை கிராம சேவகர் நியமனமாகும்.
இந்திய வம்சாவளி தமிழர்களாக அடையாளம் இடப்பட்டிருந்த மக்கள் மலையக தமிழர்கள் என்ற சமூக அந்தஸ்தினையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு வித்திட்ட இவர், எமது சமூகத்தின் அரசியல், சமூக அங்கீகாரத்துக்காக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சக்தி மிக்க குரலாக ஒலித்ததை எவருமே மறக்கவோ மறுக்கவோ முடியாது.
தாங்கள் என்னென்ன அரசியல் உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என்பதனை ஒரு சமூகம் உணரும் போதுதான் அதனைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமது தலைமைகளுக்கு அழுத்தம் கொடுத்து அச்சமூகம் போராடும் என்று 1990 களில் அவர் கூறிய கருத்து, மீரியபெத்த அனர்த்தத்திற்குப்பின் இன்று மலையகமெங்கும் ஒலிக்கும் குரல்களின் மூலம் நிரூபணமாகிறது.
லயன் வாழ்க்கை முறையை மாற்றி தனக்கான தனியான வீட்டில் தனக்கான சொத்துக்களை சேர்த்து வாழ ஆரம்பிக் கும் போதுதான், தோட்டத் தொழிலாளி க்கு வாழ்க்கையின் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படும் என்று கூறி, மலையக வரலாற்றில் தனி வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி தான் கண்ட வெற்றியின் உதாரணத்துடன் மேல் கொத்மலை திட்டத்தினால் இடம்பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்களுக்கும் தனி தனி வீடுகளைப் பெற்றுக் கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.
மீரியபெத்த மண் சரிவு அனர்த்தத்தின் பின்னர் தற்போது மலையகத் தலைவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட மலையக மக்கள் இன்று தமக்குத் தாமே விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றார்கள்.
தான் துணிவாக இருந்ததால்தான் சந்திரசேகரனால் தனது சமூகத்திற்கு துணிவாகக் கூற முடிந்தது. காலமும் நேரமும் யாருக்காகவும் காத்துக்கொண்டிருக்கப்போவதில்லை. சுனாமியோ, வெள்ளமோ, மண் சரிவோ, தீ விபத்தோ இது அனைத்தையுமே அச ட்டை செய்து கொண்டு காலம் தன் கடமையை செய்து கொண்டே இருக்கும். நேற்று இன்றாகும். இன்று நாளையாகும். நாளை மறுநாளாகும்.
அதேபோல இன்றைய அவலம் நீங்கிய ஒரு வசந்த காலம் நிச்சயமாக எமது சமூகத்திற்கும் பிறக்கும். இவ்வாறான ஒரு நாளில்தான் சந்திரசேகரன் போன்ற சமூக வழிகாட்டிகளின் ஆன்மாவும் ஒரு சொட்டு ஆனந்தக் கண்ணீரை வடிக்கும்.
அதுவரையிலும் எமக்காக தன்னை தியா கம் செய்த இந்த தலைவனை நினைத்து அவரை நேசிக்க அனைத்து உள்ளங்களின் விழிகளும் நிச்சயமாக நித்தமும் ஈரமா கவே இருக்கும்.
நன்றி - வீரகேசரி - 28-12-2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...