Headlines News :
முகப்பு » » தெளிவு பெற்றுள்ளார்களா மலையக மக்கள்? - பானா. தங்கம்

தெளிவு பெற்றுள்ளார்களா மலையக மக்கள்? - பானா. தங்கம்


நாட்டில் சீரற்ற காலநிலை, மண்சரிவு அனர்த்தம், இயற்கையின் சீற்றத்தால் உயிர்கள், உடைமைகள் இழப்பு என்று கண்ணீர் மல்க வைத்த 2014ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்ல 2015ஆம் ஆண்டு பிறந்துள்ளது. காலநிலை சீரடைந்து புதிய வருடம் பிறந்து ஒரு வார காலத்தில் நாட்டு மக்கள் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியுள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்கள் மாத்திரமே இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், எதிரணியில் மைத்திரிபால சிறிசேனவும் பிரதான இரண்டு வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். மலையகத்தைப் பொறுத்த வரையில் இ.தொ.கா. பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நிபந்தனையற்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்திலேயே கூறிவிட் டார்.

நாட்டின் முக்கியமான தேர்தல் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது. இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போல கடந்த வாரத்தில் அந்த இரண்டு அமைப்புகளும் மைத்திரியை ஆதரிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணி அரசியல் துறைத் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோர் தமது கட்சிகளின் முடிவுக்கமைய ஜனாதிபதிக்கு வழங்குவதாக முன்னர் தெரிவித்திருந்த கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு, எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாகத் தெரிவித்து தமது பிரதியமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்து விட்டார்கள்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் முடிவை அவரது அங்கத்தவர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டாலும், மலையக மக்கள் முன்ன ணியில் இரு வேறு கருத்துகள் ஏற்படத் தொடங்கின. கட்சியின் தலைவராக இருக் கும் சாந்தினிதேவி சந்திரசேகரன், தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே ஆதரவு தெரிவிக்கப் போவதாகக் கூறிவிட்டார். அதே நேரத்தில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், தாம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று கூறி மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்து அதற்கான பிரசார நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

இ.தொ.கா. விலிருந்து வெளியேறி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொ ண்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜ துரை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அக்கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டு பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்து கொண்டார்.

அதேபோல், இ.தொ.கா.வின் உப தலை வர்களில் ஒருவராக இருந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார் கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார் ஆகியோர் இணைந்து அட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவிலான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலும் மலையக அமைப்புகளும்
நாட்டின் தேசியக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் தேர்தல் போட்டிக்கு மத்தியில் மலையக அமைப்புகளும் பலப் பரீட்சையில் களம் இறங்கியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையக மக்கள் முன்னணியின் சாந்தினிதேவி சந்திரசேகரன் அணி, தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாதுரை தலைமையிலான அணி ஆகியவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணியின் வீ. இராதாகிருஸ்ணன் தலைமயிலான அணி, பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் தலைமையிலான அணிகள், தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம். செந்தில்ராஜ் அணியினர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றன.

தேர்தல் தொடர்பாக பிரசாரங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவால் மட்டுமே மலையகத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். அவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்றார் என்று இ.தொ.கா பிரசாரம் செய்து வருகின்றது.

ஆனால், இதற்கு எதிராகவும் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த பத்து ஆண்டுகளாக நிறைவேற்று அதிகார பலத்துடன் ஆட்சி செய்து மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுகின்றார். அதற்கேற்ற வகையில், இரண்டு முறை மாத்திரமே ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அரசியலமைப்பை பாராளு மன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மாற்றியமைத்து மீண்டும் போட்டியிட முன்வந்துள்ளார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே ஆகும்.

அந்த அதிகாரத்தின் உதவியோடுதான் யுத்தத்தை வெற்றி கொண்டார். இன்று வடபகுதிக்கு யாழ்தேவி புகையிரதம் ஓடுவதற்கும் காரணமாக உள்ளார். இவ்வாறு சகல அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஜனாதிபதி மலையக மக்களைப் பற்றிச் சிந்தித்திருந்தால், அவர்களின் காணி உரிமைக்கும் வீடமைப்புத் திட்டத்துக்கும் சரியான தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம். என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜனாதிபதி நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டங்களின்போது மலையக தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார்கள். 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டம் கருத்திற் கொள்ளப்படவில்லை

மைத்திரிபாலவுக்கு ஆதரவான பிரசாரங்கள்
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எதிரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுத்துள்ள பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆவார் அவர் பதவிக்கு வந்த பிறகு 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கு காணி உரிமையுடன் வீடுகளைக் கட்டிக் கொடுக்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமை பற்றி முதன்முதலாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளவரும் அவர்தான். மலையகத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை முதலான பகுதிகளில் பெருந்தோட்ட மாணவர்களின் உயர் கல்விக்கு ஏற்ற வகையில் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகள் அமைத்துக் கொடுக்கப்படும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு காணிகளில் அல்லது வீடுகளில் அத்துமீறி குடியேறியவர்கள் வேலை இழந்திருந்தால் அவர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததை மாத்திரம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும், நாட்டுத் தலைவர் என்ற ரீதியில் அதைச் செய்ய வேண்டிய கடமை என்பதை மறந்து விட முடியாது. இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் செய்து காட்டுகிறேன் என்பது தேர்தல் தந்திரம் என்றே கருதமுடிகிறது என்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தால் அவர் நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் மைத்திரிபாலவை ஆதரித்து பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெளிவு பெற்றார்களா மக்கள் ?
கடந்த ஒரு மாத காலமாக ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் மலையகமெங்கும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அமைப்பும் தமது அங்கத்தவர்கள் மத்தியில் விளக்கங்களைக் கொடுத்துள்ளன. அவற்றில் மலையக தோட் டத் தொழிலாளர்கள் எந்தளவு தெளிவு பெற்றுள்ளார்கள். அவர்களின் வாக்களிப்பு எவ்வாறு இருக்கும், தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? மஹிந்த ராஜபக் ஷவா அல்லது மைத்திரி பால சிறிசேனவா? மலை யக மக்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள்? எந்தக் கட்சிக்கு மலையகத்தில் செல்வாக்கு அதிகரித் துள்ளது? இவற்றுக்கான விடை யை அடுத்த சனிக்கிழமை நாம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்!

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates