இன்று மலையகத்தில் புதிய மாற்றங்களை உள்வாங்கவும், உருவாக்கவும் மலையக சமூகம் தயாராகியுள்ளது. மக்களின் வாழ்வியல் புத்தெழுச்சி பெறவேண்டும் என்றும், புதிய எதிர்பார்ப்புகளும், தேவைகளும் அதிகளவு இனங்காணப்பட்டு வருகின்றன
அந்த வகையில் காணி மற்றும் வீட்டு உரிமை பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்றும் 200 வருட லயன் வாழ்கைக்கான முடிவை பெற வேண்டும் என மலையக சமூகம் புரண்டெழுந்துள்ளது.
இவை மட்டும் மலைய மக்களின் பிரச்சினை அல்ல. முதலில் அவர்களுக்கு அரசியல் ரீதியான உரிமையை வென்றெடுத்தல், மற்றும் கல்வி, சுகாதாரம், தொழில் ரீதியான உரிமை, கலை கலாசார, பண்பாட்டு உரிமை, பொருளாதார வருவாய்களை அதிகரித்து கொள்வதற்கான உரிமைகள் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
இத்தகைதொரு சூழலில் கல்விரீதியான உரிமைகளை வென்றெடுப்பது ஒரு சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு ஏதுவானதும், நிகழ்கால வாழ்வியலை மேம்படுத்தி, அறிவு சார் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பிரதான பாத்திரமாகின்றது.
அந்த வகையில் தற்போதைய இலங்கையின் ஆட்சி மாற்றம் மலையக கல்வி வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ள சாதகமான சூழ்நிiலை தோற்றுவித்துள்ளது. காரணம் மாற்றத்தை நோக்கி புதிய சிந்தனையுடன் பயணிக்கும் அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தம் ஒருவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்துள்ளமை ஆகும்.
இச்சூழ்நிலையில் குறிப்பாக 1940 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இலவசகல்வி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மலையக மக்களை பொறுத்த வரை வரலாற்று காலம் தொடக்கம் முதல் வஞ்சிக்கப்பட்ட வரலாறாகவும், அவை அரசியல், பொருளாதார, சமூக பண்பாடு என்ற சகல விடயங்களிலும் அவர்களின் கனவுகள் எடடாக்கனியாகவே உள்ளது.
இங்கு மலையகத்தவர்கள் கல்வி ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது மறுப்பதற்கு இல்லை, குறிப்பாக இலங்கையில் தோட்டப்புற பாடசாலைகள் எந்தவகையான அபிவிருத்திகளையும், வளர்ச்சியினையும் கல்வியில் உயர் மட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளனர்.
பின்னர் அந்நிலையில் ஓரளவு தளர்வு ஏற்பட்ட இத்தோட்டப்புற பாடசாலைகள் அரசாங்கத்தின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.
இம்மாற்றத்தினைத் தவிர அவை கல்வி ரீதியான முழுமையான அடைவு மட்டத்தை இதுவரையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
பாடசாலை கல்வி நிலை இவ்வாறானதொரு நிலையிலிருக்க மலையக மாணவர்களின் உயர்கல்வி என்றதொரு அம்சம் இன்று ஒரு பிரச்சினையாக தலைத்தூக்கியுள்ளது.
உயர்தரத்தின் பின்பு இன்று அதிகளவான மலையக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற்று வருவதும், இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்;களிலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமது உயர்கல்வியை பெற்று வருகின்றனர்.
உயர்தரத்தில் பல்கலைக்கழகத்திற்கான அனுமதித்தகைமையைப் பெற்றிருக்கின்ற போதிலும் ஒரு குறிப்பிட்டத்தொகையான மலையக மாணவர்கள் மாத்திரமே இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதற்கு இலங்கையின் பல்கலைக்கழக தர நிர்ணயங்களும் காரணமாகின்றன.
அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்கு உள்வாங்கப்படாத ஏனைய மாணவர்களின் நிலை வெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இச்சூழ்நிலையகளில் மலையகத்திற்குகென ஒரு தனியான பல்கலைக்கழகத்திற்கான அவசியம் மலையக புத்திஜீவிகள் உட்பட அனைவர் மத்தியிலும் எழுந்துனள்ளது.
அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை இதுவரைக்கும் வெற்றியளிக்கவில்லை. இலங்கையின் 15 தேசிய பல்கலைக்கழகத்துக்குள் மலையகத்துக்கான பல்கலைக்கழகமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆயினும் இத் தேசிய பல்கலைக்கழகங்களுக்குள் அதிகளவான மாணவர்களும் தமது உயர்கல்வியை பெற்று வருகின்றனர்.
என்றாலும் மலையக தமிழர்களின் சதவீதத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே உள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடாக “மலையக மாணவர்கள் அனைவருக்கம் உயர்கல்வி” என்ற கோட்பாட்டுக்க ஒரு தனியான மலையக பல்கலைக்கழகம் என்ற அம்சமே பொருத்தப்பாடுடையதாகும்.
குறிப்பாக வட மாகாணத்தை பொறுத்தவரையில் அவர்களின் பல்கலைக்கழக அனுமதி வீதத்தை யாழ்ப்பல்கலைக்கழகமும், கிழக்கு மாகணத்தைப் பொருத்தவரையில் கிழக்கு பல்கலைக்கழகமும், கிழக்கு முஸ்லிம்களை பொருத்தவரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் உள்வாங்கிக்கொள்கின்றது.
ஆனால் மலையக மாணவர்களை பொருத்தவரையில் வரையறுக்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை தனியான மலையக தேசிய பல்கலைக்கழகம் இவ்வாறான காரணத்தினால் அதிகளவான மாணவர்களை உள்வாங்க முடியாதுள்ளது. இந்நிலை மலையக மாணவர்களை பொறுத்தவரை ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது.
இந்த கனவினை நினைவாக்க வேண்டுமென்றால் மலையகத்துக்கான பல்கலைக்கழகமொன்றினை உருவாக்குவது அவசியமாகும். தென்கிழக்கை பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பேரம்பேசும் சக்தியாக இருந்து அவ்வினத்திற்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
ஆனால் நம் மலையக தலைமைகள் இதுவரைக்காலமும் பேரம்பேசும் சக்தியாக இருந்து ஒரு தேசிய பாடசாலையைக்கூட பெற்றுத்தரமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அவலம்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பவாத சூழ்நிலையும், தகுந்த அரசியல் களமும் கைகூடியுள்ள நிலையில் மலையக தலைமைகள் மலையக தேசிய பல்கலைக்கழகமொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான சட்டமூலமொன்றை தகுந்த முறையில் உருவாக்கி சமர்ப்பிப்பதன் ஊடாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
அவ்வாறான பல்கலைக்கழகம் உடனடியாக எவ்வாறு உருவாக்கலாம் என்றால் இன்று மலையகத்தில் மூடப்பட்டுள்ள சகல தொழிற்சாலைகளையும் மாணவர்கள் தங்கும் விடுதிகளாகவும், பசறையில் கலாசார பீடத்தினையும், காவத்தையில் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுக்கான கற்கை நிலையத்தையும், உடபுஸல்லாவையில் சமூக உளவியல், மானுடவியல் தொழிற்சார் நோயியல் ஆய்வு பீடத்தை உருவாக்குதல் வேண்டும்.
அத்தோடு மாத்தளை, கேகாலை, பதுளை ஆகிய இடங்களில் கல்வியல் பீடம், மானுடவியல் பீட வளாகங்களையும் அமைத்தல் வேண்டும். அத்தோடு 10 மலையக மாவட்டங்களிலும் காலி மற்றும் மாத்தறையில் விஞ்ஞான கணித சிறப்பு பாடசாலைகளை அமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாத்தளையில் அனைத்து மொழியியற் பீடம் அமைத்தலும் குறிப்பாக சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சீனம், ருஸ்யன், பிரேஞ் மொழிகளை பாடமாக்குதல் வேண்டும்.
இக்கல்வி பீடங்களின் நிர்வாக தொகுதி பத்தனை கல்வியற் கல்லூரியிலும், கால்நடை விவசாய பீடம் கேம்பிறீட்ச் கல்லுரியிலும், கொட்டக்கலை பண்ணைத்தொகுதி வணிக பீடத்துக்காகவும், காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் கல்வியல் நிறுவனங்களாகவும், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் தகவல் தொழிநுட்ப பீடமாகவும், பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரி, மற்றும் பசறை கலைப்பீடத்தையும், நுவரெலியாவில் தொழிநுட்ப கல்லூரியில் விஞ்ஞான பீடத்தையும், இரம்பொட தொண்டமான் கலாசார நிலையத்தை நுண்கலைத்துறை மற்றும் அழகியல் கற்கைப்பீடத்தையும், பலாங்கொடையில் பட்டப்பின் படிப்பு கற்கை நிலையத்தையும் உருவாக்க முடியும்.
இவ்வாறு மலைகயத்தின் பல பாகங்களில் தேசிய பல்கலைக்கலகத்திற்கான பீடங்களை உருவாக்கப்படும் போது அவை ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசிய பல்கலைக்கழகமாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் பீடங்களுக்கான பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மற்றும் ஏனைய விரிவுரையாளர்களை இலங்கை அரசாங்கம் 10 ஆண்டுகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து கொண்டுவர வேண்டும். அதேவேளை மலையக பேராசிரியர்களையும் இதில் உள்வாங்குவது சாலச்சிறந்ததாகும்.
இப்பல்கலைக்கழகத்திற்கான நிதித் தேவைகளை உயர்கல்வியமைச்சின் நேரடி ஒதுக்கீடு செய்ய விதந்துரைக்க வேண்டும் இவ்வாறானதொரு ஆரம்ப அடித்தளத்தை மலையக பல்கலைக்கழகத்திற்கு இடுவோமானால் எதிர்காலத்தில் அவைகளின் வளர்ச்சியில் மிக பெரிய தேசிய பல்கலைக்கழகத்தை நாம் பெற்றுக்கொள்வோம் என்பது திண்ணம்.
மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல்துரைசார் அறிவு சமூகத்தை இவ்வாறானதொரு மலையக பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் நாம் பெறலாம்.
இத்திட்டங்களை இவ்வரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்வைத்து அவற்றைப்பெற்றுக்கொள்ள மலையக தலைமைகள் முன்வர வேண்டும். “மலையக மாணவர்கள் அனைருக்கும் உயர்கல்வி” என்ற இலட்சிய நோக்கை அடைந்து கொள்ள சமூக மட்டத்தில் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்
மலையகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...