Headlines News :
முகப்பு » , » இனவாத சந்தையும், சந்தையில் இனவாதமும் - என்.சரவணன்

இனவாத சந்தையும், சந்தையில் இனவாதமும் - என்.சரவணன்


இலங்கையின் ஊடக சந்தையில் அதிக கேள்வியுள்ள சந்தைப்பொருள் இனவாதம். இலங்கையில் இனத்துவ தேசியவாதத்தை அனுசரித்துப் போகாத எந்தவொரு ஊடகமும் சந்தையில் வெற்றிபெற முடியாது என்பதை கடந்த சில தசாப்தங்களாக உறுதிசெய்யப்பட்டு வந்துள்ளது. யுத்த காலத்தில் இனவாத பாத்திரத்தை அதிகளவு செய்த பத்திரிகையான “திவிய்ன” அதிகம் விற்பனையான சிங்கள பத்திரிகை என்பது முக்கியமான செய்தி. சிங்கள மொழி ஊடகங்களைப் பொறுத்தளவில்  சிங்கள பௌத்த தேசியவாதமானது பேரினவாதமாகவும் அதன் நீட்சியாக பாசிசமாகவும் வடிவமாற்றம் பெற்றுக்கொண்டு தலைதூக்கி வந்துள்ளதை நாம் கண்டு வந்துள்ளோம். பேரினவாதமயப்பட்ட கட்டமைப்பை தூக்கி நிலைநிறுத்தி, தொடர்ந்தும் பேணிவருவதில் இந்த ஊடகங்களுக்கு பெரும்பங்கு உண்டு.

இனப்பிரச்சினை கூர்மையடைவதற்கும், சிங்கள சிவில் சமூகத்தில் ஏனைய இனங்கள் குறித்த எதிர்ப்புணர்ச்சி பேணப்படுவதற்குமான மிகப்பெரிய பாத்திரத்தை ஊடகங்களே ஆற்றிவந்துள்ளன என்பதில் எந்தவித சந்தேகமுமிருக்காது. சாதாரண மக்கள் தகவலறியவும், கருத்தறியவும் நம்பியிருப்பது இந்த ஊடகங்களைத்தான். அந்த இடைவெளியை இனவாத ஊடகங்களும், இனவாத சந்தையில் ருசிகண்ட முதலாளிகளும் மாசடைய செய்து வந்திருக்கின்றன.

இந்த இனவாத அலைவரிசையானது அரசியல் தட்ப வெட்பத்துக்கு ஏற்ப மேலும் கீழும் கூடி குறைகின்றதேயொழிய அதன் பண்பில் பெரிய மாற்றம் நிகழ்வதாகவும் தெரியவில்லை. முடிவுருவதற்கான சமிக்ஞைகளும் தென்படுவதில்லை.
சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய இனங்களுக்கு எதிரான ஐதீகங்ககளைப் பரப்புவதிலும், மாயைகளை தோற்றுவிப்பதிலும், சம்பவங்களையும், வரலாற்றையும் திரிப்பதிலும், அதற்குப் பதிலாக புனைவுகளை பிரதியீடு செய்வதிலும் தொடர் பங்காற்றி வந்துள்ளன இத்தகைய ஊடகங்கள். அந்த போக்கு சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பை மேலும் மேலும் பலப்படுத்தி வந்திருக்கிறது.

யுத்தம் நடந்த கால கட்டத்தில் எங்கேயோ ஒரு பாரிய சுற்றி வளைப்பை செய்யுமுன்பு அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் மூலம் “பயங்கரவாத பீதி” கிளப்பப்படும். “தற்கொலை குண்டுதாரி ஊடுருவல்” போன்ற செய்திகள்; அதற்கடுத்து நடத்தபோகும் பாரிய சுற்றிவளைப்பு கைது/கடத்தல் என்பவற்றுக்கான முன்கூட்டிய நியாயங்களும் சோடனைகளும் உருவாக்கப்பட்டுவிடும் போக்கை நாம் கண்டுள்ளோம்.

“ஒரே பொய்யை பத்து தடவை கூறும் பொது அது உண்மையாகி விடும் என்பது ஒரு பிரசித்தி பெற்ற பழமொழி” உதாரணத்திற்கு இலங்கை முழுவதும் சிங்கள நாடாக இருந்தது, தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள், வந்தேறிகள், கள்ளதோணிகள் என அடுக்கிக் கொண்டு போகலாம்.

எப்போதும் மதிப்பீடுகள் என்பது நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் தரவுகளையும் அடிப்படையாக வைத்தே முடிவுக்கு வரப்படுகிறது.  ஆனால் இன்னொரு தலைகீழ் போக்கும் உண்டு. அதாவது முடிவை ஏற்கெனவே எடுத்துக்கொண்டு அதனை நிருவுவதற்காக பிரயத்தனப்பட்டு தரவுகளையும், தகவல்களையும் திரட்டி திரிப்பது. சம்பவங்களிலிருந்து முடிவுக்கு வருவதற்குப் பதிலாக, முடிந்த முடிவை நிறுவதற்காக சம்பவங்களை அதற்கு இசைவாக கட்டமைப்பது என்பது இன்னொரு வகை.

யுத்த காலத்தில் தெற்கு சிங்கள மக்களின் மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசு ஊடகங்களையே நம்பியிருந்தது. தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஊடகங்கள் கூட தன்னியல்பாகவே மூளைச்சலவைப் பணியை ஆற்றியிருந்தன. நிருவனமயப்படல் என்பதன் அர்த்தமே அதுதான். அதாவது ஒரு நிலைக்கப்பால் நிறுவனமயப்பட்ட பேரினவாத செயன்முறை எதன் கட்டளைக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. அது பெற்றிருக்கிற சித்தாந்த பலத்தில் தன்னியல்பாகவே தனது பாத்திரத்தை ஆற்றும்.

இந்த ஊடக சண்டையில் தமிழ் – முஸ்லிம் தரப்பு மிகவும் பலவீனமாகவே இருந்து வந்துள்ளன. இந்த சண்டையில் தமிழ்-முஸ்லிம் தரப்பு தற்காப்பு நிலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது வெறும் தற்செயல் அல்ல.  பேரினவாதத்தை பாதுகாக்கும் பொறுப்பை மறைமுகமாக மேற்கொண்டுவந்த அரச அடக்குமுறை இயந்திரத்துக்கு தகவமைத்துக்கொண்டு இயங்க வேண்டிய நிலைக்கு உள்ளானது.

பொதுவில் சமகால ஊடகங்கள் எவ்வாறு சாதாரண மனிதரின் அன்றாட நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கிறது என்பதை இங்கு நாம் சற்று நோக்குவோம்.


நம்மை வழிநடத்தும் ஊடகம்
ஊடகங்களால் தாம் எவ்வாறு வழிநடத்தப்படுகிறோம் என்கிற  நுண்ணரசியலைப் பற்றி ஊடகங்களை நுகர்வோர் கூட போதிய புரிதலை உணர முடியாதளவுக்கு வைத்திருப்பது தான் இன்றைய ஊடக உலகம் கண்டுள்ள மகத்தான வெற்றி. 

ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்துகிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவதன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலை­நிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.

ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம் - அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று கூறலாம். ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடமே சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு. இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’ பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக்கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையாண்டு வருகின்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை, ஆதிக்க சிந்தனைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இந்த கைதேர்ந்த ஊடகங்களைக் கையாள்கின்றன.

ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற வகையில் அதன் சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவதுமாக அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஆதிக்க சித்தாந்தங்களை ஜனரஞ்சகமாக நிலைநாட்டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி வருகின்றன.

நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடாக மாபியா (Media Mafia) என்றும் ஊடக வன்முறை (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of power ) பயன்படுத்தப்படுகின்றன.

எனவே தான் உலகின் பல்வேறு புரட்சிகர சக்திகள் இன்று ஊடகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு காட்டுகின்றனர். அதுமட்டுமன்றி இன்றைய புரட்சிகர சமூக மாற்றத்துக்காக போராடும் சக்திகள் எதிரி கொண்டிருக்கும் இந்த ஊடக ஆற்றலை எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ஊடக வளங்களையும் ஆற்றலையும் கைப்பற்ற முனைகின்றன.

நவீன ஊடகங்களின் பன்முகத்தாக்கம் பற்றிய கரிசனையானது சமூக ஊடக - தகவல்தொழில்நுட்ப வியாபகத்தோடு அதிகரித்ததெனலாம். சிவில் சமூகத்தில் அது ஆற்றும் பாத்திரம், உற்பத்தி உறவுகள் குறிப்பாக மூலதனம் இதில் செலுத்தி வருகின்ற நிர்ப்பந்தங்கள், மூலதனத் திரட்சி ஊடகத்தில் காலூன்ற எடுத்துவரும் முயற்சி என்பன உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

இது வரையான ஆய்வுகள் பெரும்பாலும் ஊடகத்தின் உட்கட்டமைப்பு (Infraistructure) பற்றியே அதிகம் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அதன் புறநிலை தலையீடு, தாக்கம் எதிர்காலம் குறித்து தற்போதைய ஆய்வுகளில் கூடிய கரிசனை கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அடிமைத்துவத்தை நிலைநாட்டி அதற்கு அடிபணிய வைக்கவோ அல்லது அவற்றுடன் சமரசம் செய்து கொண்டு வாழவும், பழக்கவும் இன்றைய ஊடகம் ஆற்றல் மிகுந்ததாக உள்ளது. இன்றைய நவீன அரசுகள் தமது அடக்குமுறை இயந்திரங்களில் ஒன்றாக ஊடகங்களைக் கையாண்டு வருகின்றன.

அடக்கப்படும் மக்கள் பிரிவினர் முகம் கொடுக்கும் இன்னல்கள் வெகு சாமர்த்தியமாக மூடி மறைக்கும் ஆற்றல் இந்த ஊடகத்துக்கு உண்டு. அதுபோல இல்லாத ஒன்றையும் இருப்பதாக காட்டவோ அல்லது அதனை ஊதிப்பெருப்பிக்கும் ஆற்றலும் இன்றைய ஊடகங்களுக்கு உண்டு. இவ்வாறு மறைப்பதும், ஊதிப்பெருப்பிப்பதும் ஊடகத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் சக்திகளின் நலன்களிலேயே தங்கியிருக்கின்றன.

வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவற்றிற்கு நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். “மதத்தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.

இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்கறை கிடையாது.

ஒரு தொலைக்காட்சி நிறுவனம் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்துக்கு சராசரியாக எவ்வளவு அறவிடப்படுகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவோம். ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்படுகிறதென்றால் எத்தனை முறை குறிப்பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படியெனில் எவ்வளவு தொகை ஆகிறது? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விளம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது? என்ன விளைவை ஏற்படுத்துகிறது? 

இன்று சகல தளங்களிலும் தகவல்களுக்கும், தரவுகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அது போலவே தகவல்களை களஞ்சியப்படுத்துவதற்கும் அவற்றைத் சந்தைப்படுத்துவதற்காவும் உலக அளவில் பாரிய பல்தேசிய கம்பனிகள் இயங்குகின்றன. தரவுகள், தகவல்கள் பரப்பப்படுவதற்கு - சந்தைபடுத்துவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்பது இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஆக, தகவல் தொழில்நுட்பத்தின் மீது மூலதனம் பாரிய அளவு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.

தரவுகளையும், தகவல்களையும் சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற பணியை சகல ஆதிக்க சக்திகளும் மேற்கொண்டுவருகின்றன. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்கப்பட்டுவிடுகின்றன. இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த ஊடகங்கள் தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்கின்றது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து, உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து, திரிபுபடுத்தி, பெருப்பித்து, சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.

இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோபாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்குண்டு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தம்மால் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை கருத்தாக்கங்களை, புனைவுகளை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது, போதைகொள்ளச் செய்வது.

இந்த நூற்றாண்டின் அறிவைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (media) மாறியிருக்கிறது. சமீப காலமாக சமூக ஊடகங்களின் செல்வாக்கு பாரம்பரிய ஊடக போக்கை புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது. ஒரு வகையில் கட்டற்ற கருத்துப் பரிமாறலுக்கான வெளியையும், பஞ்சமற்ற தகவல் வெளியை ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை அது தருகிறது. அதேவேளை ஆதிக்க தரப்பிடமே அதன் நெம்புகோல் தொடர்ந்தும் இருக்கிறது. தகவல்களையும், தரவுகளையும் கருத்தாக்கமாக மாற்றித்தரும் செயன்முறை ஆதிக்க  மற்றும் அடக்குமுறை சக்திகளுக்கிடையேயான ஒரு போராக தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பின்புலத்துடனேயே இலங்கையின் வெகுஜன கருத்துநிலையை தீர்மானிப்பதில் ஊடகங்கள் வகிக்கும் ஆபத்துமிக்க வகிபாகத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நன்றி - தினக்குரல் 18.01.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates